Thursday 18 April 2024

அசிங்கப்படுத்தாதீர்கள்!

 

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு  நமது இந்திய குடும்பங்கள் பல்வேறு  துன்பங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.  சுருக்கமாகச் சொன்னால்:  வேலையில்லா திண்டாட்டம்.

பல பெண்களுக்கு வெளியூர் போய் வேலை செய்ய இயலாத நிலைமை. அதனால் வீட்டு அருகிலேயே  எதையாவது செய்து பிழைக்க வேண்டிய நிலைமையில் உள்ளனர்.  அதன் காரணமாகத்தான்  ஆங்காங்கே சிறு சிறு வியாபாரங்களைச் செய்கின்றனர்.  ஒரு கட்டாயச் சூழல் தான் அவர்களை  இந்த நிலைக்குத் தள்ளியது.  கட்டாயம் என்று சொன்னாலும்  தாங்கள் செய்த வேலையைவிட  இங்கு நிலைமை இன்னும் நன்றாக இருப்பதையும் புரிந்து கொண்டார்கள்.

இந்திய சமூக மகளிர் இது போன்று சிறு சிறு சாலை ஓர வியாபாரங்கள் செய்வதை  நாம் வரவேற்கிறோம்.  சீன இனப் பெண்கள் இது போன்ற வியாபாரங்களைப்   பல ஆண்டுகளாகவே செய்து வருகின்றனர்.  அதனால் தான்  சீனர்களின்  பொருளாதார பலத்தோடு  நம்மால் ஈடு கொடுக்க முடியவில்லை  என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் சகோதரி ஒருவர் ஒரு புகாரை மக்கள் முன்பாகக் கொண்டு வந்திருந்தார். சிலர்  டிக்டாக்கில்  இது போன்ற சிறு வியாபாரங்களைச் செய்யும் சகோதரிகளைப் பேட்டி எடுப்பதும், அவர்களின் உணவுகளைப் பற்றி தரமற்று இருப்பதாக  சொல்லுவதும் = iஇது போன்ற அவதூறு செய்திகளைப்பரப்ப வேண்டாம் என்று அவர் குமுறியிருந்தார்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  உணவுகளை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் பெரிய பெரிய உணவகங்களுக்குச் சென்று ஆய்வு செய்யுங்கள்.  பெரிய நிறுவனங்கள் என்றால் பலதரப்பட்ட மக்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு.  அந்த விமர்சனங்களைப் பார்த்து அங்கு செல்வோரும் உண்டு.  உண்மையில் சமீபத்தில் நாட்டிற்குள் புதிதாக  நுழைந்த  சில  பன்னாட்டு உணவகங்கள் தரமற்று தான் இருக்கின்றன.  ஏன் விமர்சனம் செய்வதில்லை?

இவைகளையெல்லாம் விட்டுவிட்டு  சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் நம் இன சகோதரிகளைச் சிறுமைப்படுத்துவது  இரக்கமற்ற செயல்.  யார் கண்டார்? நாளை ஒரு வேளை உங்களுக்கும் இது போன்ற சூழல்கள் வரலாம்.  குடும்பத்தைக் காப்பாற்றவது கட்டாயம் என்கிற நிலை ஏற்படும்போது யாரும் இது போன்ற சிறிய வியாபாரங்களுக்கு வரத்தான் செய்வார்கள்.  அவர்களைக்  கேலி, கிண்டல்கள் செய்து  மனதைப் புண்படுத்துவது  இரக்கமற்றது என்பதைத் தவிர  வேறு என்னவென்பது?

அவர்களைக் கேலி செய்வது நம்மை நாமே அசிங்கப்படுத்துவது தான்!

Wednesday 17 April 2024

தொழிலாளர் பற்றாக்குறை!


 தொழிலாளர் பற்றாக்குறை என்பது இன்று நாட்டில் அடிக்கடி  பேசப்படுகிற  ஒரு விஷயமாக மாறிவிட்டது.  அதே சமயத்தில் உள்ளூர் மக்கள் வேலை இல்லாமல் வெளிநாடுகளுக்குப் போகிற ஒரு கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.

நமது நாட்டில் பேரங்காடிகளில் முழுநேர வேலை, பகுதி நேர வேலை  என்று பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன.  இப்போது அவைகளெல்லாம்  உள்ளூர் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு வெளிநாட்டவர்க்குப் போய்விட்டன.   அதற்குப் பல காரணங்கள் முதலாளிகளால் தொடர்ந்து ண்டுபிடிக்கப்படுகின்றன.

நமது சிகையலங்காரக் கடைகளில் தொடர்ந்தாற் போல ஆள் பற்றாக்குறை  என்பதாகச் சொல்லப்படுகிறது.  பற்றாக்குறை என்று  சொல்லுவது எளிது. ஆனால் அவர்களை வேலைக்கு வைக்கும் போது  அவர்களின் நலனைப்பற்றி  கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை.  அவர்களுக்கு ஒழுங்கான முறையில் சம்பளம் கொடுப்பதில்லை.  கொஞ்சம்  ஏமாந்தவனாக இருந்தால் அவனை மிரட்டிப் பார்ப்பது - இவைகளை எல்லாம் செய்துவிட்டு  ஆள் பாற்றாக்குறை என்று அரசாங்கத்திடம் மனு கொடுப்பது!

கொரோனா பெருந்தொற்று காலத்தில்  வேலை செய்தார்களே அந்தத் தொழிலாளர்களை அவர்கள் கவனித்தார்களா?   அவர்களில் பெரும்பாலானோர் தமிழகத் தொழிலாளர்கள்.   அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாவிட்டாலும்  சாப்பாடாவது கொடுக்க ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.  ஆனால் எதனையும் அவர்கள் செய்யவில்லை. எனக்குத் தெரிந்த ஒரு  நிலையத்தில் இருவருக்கு இந்த நிலை.  சம்பந்தமில்லாதவர்கள் தான் உதவி செய்ய வேண்டி வந்தது!

வேலைக்கு ஆளில்லை என்கிற குறை ஒரு பக்கம்.  இதோ வங்காளதேசிகள் ஆங்காங்கே  முடிவெட்டும் கடைகளை ஆரம்பிக்கின்றனர்.    உங்களுக்கோ ஆளில்லை என்கிற குறை.  அவர்களோ எந்தக் கவலையும் இல்லாமல் தொழிலைச் செய்கின்றனர். எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை!

போகிற போக்கில் ஆள் பற்றாக்குறை  என்று சொல்லி முணகிக் கொண்டே இருக்க வேண்டியது தான்!  வங்காளதேசிகள் இந்தத் தொழிலையும்  தங்களது கட்டுப்பாட்டில்  கொண்டுவந்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது!

செய்கின்ற தொழிலையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள், நண்பர்களே!

Tuesday 16 April 2024

இது தேவை தானா?


 வெகு விரைவில்  நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு  இடைத் தேர்தலில் ஜ.செ.க.  வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கை எந்தப்பக்கம்  சாய்கிறதோ  அந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கணிக்கப்படுகிறது.  அதனால் இந்தியத் தலைவர்களின் குரல் கொஞ்சம் அதிகமாகவே ஒலிக்கிறது!   

ஆனால் அவர்கள் தலைவர்களா  தறுதலைகளா என்றும் ஊகிக்க முடியவில்லை. தலைவர்கள் என்றால் "எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்!" என்பார்கள்.  தறுதலைகள்  தேர்தலை புறக்கணியுங்கள்!!  என்பார்கள்.  ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.  வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை.   புறக்கணியுங்கள் என்று சொல்பவர்கள் துரோகிகள்.

நமது எதிர்ப்பைக் காட்டுவதற்கு வாக்களிப்பதன்  மூலமே காட்டுவதற்கு வழி உண்டு.  அது தான் ஜனநாயகம். புறக்கணியுங்கள் என்று சொல்லுவது கீழறுப்புவாதிகள்.  இனத் துரோகிகள்.  அவர்களின் சுயநலத்திற்காக  எதையும் பேசுவார்கள்.  முதலில் புறக்கணியுங்கள் என்று பேசுபவர்கள் "நாம் படிக்காத சமுதாயம்!"  என்று  மெய்பிக்க நினைப்பவர்கள்.

நடைபெறும் இந்த இடைத் தேர்தல் நாடாளுமன்றத்திற்கானது அல்ல. அது பிரதமர் அன்வாரின் பலத்தைக் கூட்டுவதோ குறைக்கவோ   செய்யாது. அது சட்டமன்றத் தொகுதிக்கான  ஓர் இடைத்தேர்தல்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் இது பற்றி கொஞ்சம் சிரத்தை எடுத்து சிந்திக்க வேண்டும்.  நமக்குத் தெரிந்தவரை - இந்தியர்களைப் பொறுத்தவரை -  நல்ல பல காரியங்களை  சிலாங்கூர் அரசாங்கம்  செய்திருக்கின்றது.   குறிப்பாக கல்வி சம்பந்தமான உதவிகள் நிறையவே கிடைத்திருக்கின்றது.  பள்ளி பேரூந்து கட்டணங்கள்,  உயர்கல்வி நிதி, இறந்தவர்கள் அடக்கம் செய்ய நிதி  - இப்படிப் பல உதவிகள் இந்தியர்களுக்குக் கிடைத்திருக்கின்றது.  அதனை மறுப்பார் இல்லை.  மற்ற மாநிலங்களில் இவைகள் கிடைத்திருக்கின்றனவா என்று யோசித்துப் பாருங்கள்.

இவ்வளவு செய்திருந்தும் அதில் உங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றால்  யாருக்கு வாக்களிப்பது  என்று  நீங்களே முடிவு எடுக்கலாம்.  அதற்காக புறக்கணிப்பைச் செய்யாதீர்கள்.  இரண்டு கட்சிகள் தான் போட்டியிடுகின்றன.  யாரால் உங்களுக்கு இலாபம் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.  ஆனால் தேர்தலைப் புறக்கணியாதீர்கள்.

தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சொல்லுபவர்களப் புறக்கணியுங்கள்.  புறக்கணிப்பு தேவையற்றது. நமது உரிமையை  விட்டுக்கொடுக்க வேண்டாம்.