Tuesday 26 September 2017

74% இந்திய இளைஞர்கள் புறக்கணிப்பு..!


வேலை வாய்ப்புக்களில் 74% இந்திய இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆம்,  இப்படித்தான் மேர்டேகா ஆய்வு மையம் தனது கருத்துக் கணிப்பில் கூறுகிறது. நமது நாட்டில் நிறுவனங்கள் ஆள் பார்த்து, இனம் பார்த்து செயல்படுகின்றன என்பதற்கு இது சான்று.

ஒரு பக்கம் அரசாங்கத்துறைகளில் நாம் புறக்கணிக்கப் படுகிறோம். அங்கும் அரசாங்கம் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இன்னொரு பக்கம் தனியார் துறை. இங்கும் நாம் புறக்கணிக்கப் படுகிறோம். இது தான் இன்றைய இந்திய இளைஞர்களின் நிலை!

முன்பு ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்றார்கள். அந்தக் கதை இன்னும் தொடர்கிறது. ஆனால் அரசாங்கம் ஆங்கிலப் பயிற்சிகளுக்காக நிறையவே செலவு செய்கிறது. எப்படி? யாருக்கு  ஆங்கிலம் பேச வரவில்லை  என்கிறோமோ அவர்களை வைத்தே ஆங்கிலம் பேச வைக்கிறார்கள்! ஆக, இங்கும் ஒரு அரசியல் நாடகம்! ஆனாலும் உயர்கல்வி கற்கும் நமது இந்திய மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது ஒன்று ஒதுக்கிவிட முடியாது. 100% விழுக்காடு என்று சொல்ல முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 70% அவர்களால் பேச முடியும். அது போதுமே! ஜப்பான், கொரியா, சீனா போன்ற நிறுவனங்கள்  அதைவிட பெரிதாக அவர்கள் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. 

நமது இளைஞர்களுக்குத் திறன் உண்டு. ஆங்கிலம் பேசும் திறமை உண்டு. சிறந்த கல்வியும் அவர்களிடம் உண்டு. 

இப்போது நாம் என்ன சொல்ல வருகிறோம்? ஆம், மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் முன்மொழிவது போல நாமும் அதே கருத்தை வழிமொழிகிறோம். இன அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகின்றன வென்றால்  இனி நாம் இனவிகிதாச்சார (கோட்டா) முறையை அமலக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே சரியான வழியாய் இருக்கும். வேறு வழியில்லை! அரசாங்கம் வெறுமனே பார்த்து ரசித்துக் கொண்டிருக்க முடியாது. இந்தியர்களை அரசாங்கத்தில் பிரதிநிதிப்பவர்கள் சும்மா இருக்கலாம். அது அவர்களுக்குப் பதவியைக் கொண்டு வரும். ஆனால் பொது மக்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மலேசியாவின் மூன்றாவது பெரிய இனம் வேலை வாய்ப்பு இல்லாமல் சுற்றித் திரிவதும், தவறானப் பாதைகளில் செல்லுவதும் அரசாங்கத்திற்கு நல்லதல்ல.

இதுவும் நாட்டிற்கு முக்கிய பிரச்சனை என்பதால், அவசரமான பிரச்சனையும் என்பதால், அரசாங்கம் தலையிட்டு ஒரு முடிவு காண வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். வாழ்க தமிழினம்! வாழ்க மலேசியா!

Saturday 23 September 2017

மலாய்ப் பெயர் தானே? என்ன குழப்பம்?


இப்போது பெயர்களிலே பல குழப்பங்கள்! இதனை வைத்து இஸ்லாமிய இலாக்கா கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

சமீபத்தில் ஒரு மனிதர் இறந்து போனார். அவர் மலாக்கா பாபா  நோன்யா வம்சாவளியைச் சேர்ந்தவர்.  நாம் பெரும்பாலும் அவர்களைச் சீனர் என்போம். அவரின் மனைவியோ ஓர் தமிழ் இந்துப் பெண்மணி. இவர்களின் வழிபாடு என்பது  ஆதிமுதல்     பௌத்தம், இந்து சமயத்தைச் சார்ந்தவை.

இங்கு ஏற்பட்ட குழப்பம் அவர்களின் பெயர்கள். இறந்தவரின் தந்தையார், இறந்தவர்,  இப்போது அவரின் பிள்ளைகள் - இவர்கள் அனைவரின் பெயர்களும் இஸ்லாமியப் பெயர்கள். ஆனால் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல. அது தான் இங்கு உள்ள பிரச்சனை. அவர்கள் இந்து சமயத்தை வழிபடுகின்றனர். இப்போது அவரின் பிள்ளைகளும் இஸ்லாமியப் பெயரோடு இந்து சமயத்தை வழிபடுகின்றனர்.

ஒரு காலக்கட்டத்தில் இவர்களுடைய தாத்தா - அதாவது இறந்தவரின் தந்தையார் - சீனப்பெயரைக் கொண்டிருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகள் சீனர்களைக் கொன்றொழிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள - இந்த நோன்யா பாபாக்கள் - தங்களுடைய பெயர்களை மலாய்ப் பெயர்களாக மாற்றிக் கொண்டார்கள்.  இது தங்களைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே. மற்றபடி அவர்கள் இஸ்லாமியராக மதம் மாறவில்லை. இதுவே இப்போது இவர்களுக்குக் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இவர்களைப் பொறுத்தவரை இது மலாய்ப் பெயர் மட்டுமே, அவ்வளவு தான்!

 இவைகளெல்லாம் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகள் தான்.  இப்போதும் கூட பல கிறித்துவ பெயர்கள், இந்து பெயர்கள் முஸ்லிம் பெயர்களாக மாற்றம் கண்டுள்ளன. பல சமயத்தினர் வாழ்கின்ற நாட்டில் பெயர்கள் மாற்றம் காணத்தான் செய்யும்.  ஒருவரின் சமயத்தை அடையாளம் காண்பதற்கு அவரின் பின்னணியைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதனை விட்டு குறுக்கு வழியை நாடுவது சமயத்திற்கு எதிரான செயல். அதைத்தான் இஸ்லாமியத் துறை செய்கிறது! ஒரு இந்துவை, அவர் இறந்த பிறகு, ஒரு இஸ்லாமியராக மாற்றி, அவரை இஸ்லாமிய முறைப்படி  அவரை மையத்துக் கொல்லையில் அடக்கம்  செய்வது - ஒரு பயங்கரவாத செயலுக்குச் சமம்! இறந்த பிறகு ஒரு மனிதரை சமய சாயம் பூசி அவரின் இறப்பிற்குப் பின்னரும் அவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் நிம்மதியை இழக்க வைப்பது மிகவும் வருந்தத்தக்க செயல்.

ஆமாம்,இறந்தவரின் பெயர் தான் என்ன? மகாட் சுலைமான். (மலாய்ப் பெயர்)  மனைவின் பெயர் பார்வதி சுப்பையா. (இந்துப் பெயர்) மகாட் சுலைமானின் குடும்பத்தினர் தாங்கள் பௌத்த - இந்து சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என்று விளக்கம் கொடுத்து விட்ட பிறகும் கூட - அவர் இஸ்லாமியர் - என்று படிப்பற்றவர் சொல்லலாம். ஆனால் இவர்கள் சொல்லலாமா?


வருத்தமே!

ஏழு சந்தேகப்பேர்வழிகள் கைது...!


சமீபத்தில் டத்தோ கிராமாட்,  சமயப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் 23 பேர் மாண்டனர்.  அவர்களில்  21 மாணவர்களும், 2 வார்டன்களும் அடங்குவர்.

இதன் தொடர்பில் ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அனைவரும் 11 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள மாணவர்கள். குறைந்த வயதினராய் இருப்பதால் இவர்களுக்குத் தூக்குத் தண்டனை என்பது சாத்தியமில்லை என்பதாக பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்லினா ஓஸ்மான் கூறியிருக்கிறார்.

ஒன்றை நாம் கவனிக்கிறோம். தீ விபத்து நடந்ததிலிருந்து தீ வைத்தது யார் என்பதில் போலீசார் கவனம் செலுத்தினர். உடனடியாகவும் அதில் வெற்றியும் கண்டனர். 

ஆனால் வேறு ஒரு கோணத்தையும் நாம் பார்க்கிறோம். முதலில் இந்தப்பள்ளியை நடத்துவதற்கு அரசு அனுமதி இல்லை. காரணம் போதுமான பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு இல்லாத பள்ளியை நடத்துவதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு யார் அனுமதி தந்தது? அனுமதி எழுத்தில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயமாக அது வாய்மொழி வழியாக இருக்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் இந்தப்பள்ளி கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்படி இயங்க முடியும்? போதுமான பாதுகாப்பு இல்லாமல் ஒரு பள்ளி நடத்த முடியும் என்றால் ..... அங்குக் கையூட்டும்... ஒரு காரணமாகத்தானே இருக்க வேண்டும்!

காவல்துறை வெகு சீக்கிரத்தில் நடவடிக்கை எடுத்து மாணவர்களைக் கைது செய்திருக்கிறது. பாராட்டுகிறோம். ஆனால் முக்கிய குற்றவாளிகளை இன்னும் வெளியே விட்டு வைத்திருக்கிறது என்பது நமக்கு வருத்தத்தை அளிக்கிறது. இந்த மாணவர்களை விட முதல் பெரிய குற்றவாளிகள் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சட்டத்தை மதிக்காத அமலாக்க அதிகாரிகள் தான்.  மாணவர்களைக் கைது செய்யலாம் காரணம் அவர்களது குடும்பத்தினர் ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர்.  ஆனால் தெரிந்தும் தவறு செய்திருக்கிறார்களே அவர்களை ஏன் வெளியே விட்டு வைக்க வேண்டும்? தவறு செய்தவர்கள் யார்?  சமயக்கல்வியைக் கற்றுக் கொடுப்பவர்கள். ஒழுக்க நெறிகளைப் போதிப்பவர்கள்! இவர்களே கையூட்டை வளர்ப்பவர்கள் என்றால் இந்த வருங்கால மாணவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருப்பார்கள்? அப்படியென்றால் சமயமே கையூட்டை வளர்க்கிறது என்று தானே மாணவர்கள் நினைப்பார்கள்?

ஏழு சந்தேகப்பேர்வழிகள் கைது சரி. மற்றவர்களை இன்னும் வெளியே விட்டு வைத்திருப்பது சரியல்ல!

Friday 22 September 2017

71 - வது ஆண்டு தேசியப் பேராளர் மாநாடு


ம.இ.கா.வின் 71 - வது ஆண்டு  தேசியப் பேராளர் மாநாடு  வருகிற சனி, ஞாயிறு இரண்டு நாள்களுக்கு புத்ரா உலக வாணிப மையத்தில்   நடைபெறுகிறது.  தேர்தல் எந்த நேரத்தில் நடைபெறும் என்று உறுதி ஆகாத நிலையில் - ஆனால் வெகு சீக்கிரத்தில் நடைபெறும் - என்று எதிர்பார்ப்போடு இந்த ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெறுகிறது..

நாம் எல்லாரும் அனுமானிப்பது போலவே இது தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநாடு என்பதில் ஐயமில்லை. வழக்கம் போல பேராளர்கள் வருவார்கள், போவார்கள் என்பதைத் தவிர அவர்கள் ஒரே ஒரு பிரச்சனையில் மட்டும் கவனம் செலுத்துவார்கள் என்பதே நமது கணிப்பு.

யாருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கிடைக்கும் என்பதில் தான் முழுக் கவனமும் இருக்கும். இதனாலேயே பேராளர்கள் தங்கள் வாயைத் திறப்பதற்கு அஞ்சுவார்கள் என நம்பலாம். தலைவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்றால் அமைதியாகத்தான் இருக்க வேண்டும். வேறு வழியில்லை! அவர்களுக்குத் தொகுதிகள் கொடுக்கப்பட்டு தோற்றுபோனாலும் அது பாதகமில்லை.  தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் அது அவர்களுக்கு ஒர் அனைத்துலக         கடப்பிதழக்குச் சமம்!  தோற்றுப் போனால் என்ன?  அவர்கள் மேல்சபையில் செனட்டர் ஆகலாம். மந்திரி பெசாரின் செயலாளர் ஆகலாம். மேல்சபை சபாநாயகர் ஆகலாம்,        டத்தோ, டான்ஸ்ரீ ஆகலாம், அரசாங்க நிறுவனங்களில் பதவிகள் கிடைக்கலாம், நகரசபைகளில் வாய்ப்புக்கள் கிடைக்கலாம் .....இப்படி நிறைய...லாம்...லாம்கள் உண்டு! அதனால் அவர்கள் கொஞ்சம் அடக்கித் தான் வாசிக்க வேண்டும். வேறு வழி? இதற்கெல்லாம் தாங்கள் லாயக்கில்லை என்று நினைப்பவர்கள் மட்டும் தான் கொஞ்சம் சத்தமாக வாயைத் திறப்பார்கள்! அது கணக்கில் வராத வெறும் காலி டப்பாக்கள்!

"சமூக நலம், பொருளாதாரம், கல்வி" இவைகளில் ஆதிக்கம் செலுத்தும் வியூகங்களை வகுக்க வேண்டும் என்றால் - இந்த வியூகங்களை எல்லாம் சாமிவேலு காலத்தில் காது குளிர கேட்டு விட்டோம்! -  புதிதாக வியூகங்கள் அமைப்பதை விட்டுவிட்டு இதுவரை அமைத்த வியூகங்கள் எந்த அளவுக்குப் பலன் தந்திருக்கின்றன என்று ஆய்வு செய்ய வேண்டும். காலாகாலாத்திலும் வியூகங்கள் என்று சொல்லி பேராளர்களை ஏமாற்ற வேண்டாம்! அல்லது சமீபத்தில் பிரதமர் அறிமுகப்படுத்திய  இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கான நீண்டகால பெருந்திட்டம் இதுவரை எந்த அளவுக்குப் பலன் தந்திருக்கிறது என்பதைப் பேராளர்களுக்கு விளக்க வேண்டும்.

எது எப்படியோ! நல்லது நடக்க வேண்டும்! அப்படி நடக்கவில்லை என்றால் அது இந்த சமுதாயத்தின் குற்றமல்ல! அதனை நீங்கள் புரிந்த்த்து கொண்டால் போதும்! வாழ்த்துகள்!

Wednesday 20 September 2017

200 ஆண்டு கால வரலாறு..!


மலேசிய தமிழ்க்கல்வி 200 ஆண்டு கால வரலாற்றப் பெற்றிருக்கிறது என்பதை அறிய  நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே. ஒரு பக்கம் கல்வி அமைச்சு அதனை ஊக்குவிப்பது போல நடந்து கொண்டாலும் இன்னொரு பக்கம் தமிழை அழிக்கும்  முயற்சியிலும் அது ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.  அழிப்பதற்குத் தலைமை ஏற்றிருப்பவர் வேறு யாருமல்ல.  தமிழுக்காக, தமிழின் வளர்சிக்காக, தமிழ்ப்பள்ளிகளின் தரத்திற்காக, தமிழ்ப்பள்ளிகளின் உயர்விற்காக  அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதியாக வீற்றிருக்கும் மாண்புமிகு துணையமைச்சர் கமலநாதன் அவர்கள் தான்!

என்ன செய்வது?  கல்வி அமைச்சு அவரைப் போன்ற பொம்மைகள் தான் துண அமைச்சராக தங்களுக்கு வேண்டுமென்று அடம் பிடிக்கிறார்கள்! ஒரு பிரச்சனையும் இல்லை. ம.இ.கா. வில் மேலிருந்து கீழ் வரை எல்லாருமே பொம்மைகள் தான்! கமலநாதனும் அதற்கு விதிவிலக்கு அல்ல!

அவரால் என்ன நேர்ந்தது? ஒன்றுமே நேரவில்லை! அது தான் அவரது திறமைக்குச் சான்று! தமிழ்ப்பள்ளிகளுக்கென்று அரசாங்கம் கோடி கோடியாக பணம் செலவழித்ததாக சொல்லப்படுகின்றது. ஆனால் எந்தப் பள்ளிக்கூடத்திற்காக பணம் செலவிடப்பட்டது என்றால் அந்த இரகசியம் வெளியே சொல்ல மறுக்கப்படுகின்றது. நாம் என்ன நினைப்போம்? அந்தப் பணத்தை அம்னோவும்,  ம்.இ.கா.வும் பங்குப்போட்டுக் கொண்டதாகத்தான் நினைப்போம். ஒரு விளக்கமும் இல்லை என்றால் நாமாகவே ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டியது தான். இப்போது கூட ஒரு செய்தி. பட்டாணி பாரா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேற்கூரையைக் கறையான் அரித்து விட்டதால் அந்தக் கூரை எந்த நேரத்திலும் விழும் அபாயத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாயிருக்கின்றன. இது கல்வி அமைச்சுக்கும் தெரியும். துணை அமைச்சருக்கும் தெரியும். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை! இது ஒன்றே போதும், துணை அமைச்சர் கமலநாதனின் தமிழ்க்கல்வியின் மேல் உள்ள கரிசனமும் அபிமானமும்!

இந்தத் துரோகம் ஒரு பக்கம் என்றால் தமிழ்ப்பள்ளிகளில் இரு மொழித்திட்டத்தைக் கொண்டு வந்து தமிழை முற்றிலுமாக அழிக்கும் புது வகையான அழித்தல் முறை. இதன் மூலம் தமிழ் ஒரே பாடம் மட்டுமே! மற்றவை அனைத்து பிற மொழிகளில் - மலாய், ஆங்கில மொழிகளில்! அப்படி என்றால் தமிழ்ப்பள்ளிகளில் ஓரிரு தமிழாசிரியர்கள் போதும்! தமிழ் ஆசிரிய்ர்கள் இல்லாத தமிழ்ப்பள்ளிகள்! இந்தத் மொழித் திட்டத்தை சீனர்கள் வரவேற்கவில்லை.  ஆனால் தமிழ்ப்பள்ளிகளில் கோடரிக்காம்புகள் நிறைய இருக்கின்றனரே!  அதுவும் நமது துணை அமைச்சரே சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் சென்று நெருக்கதல் கொடுப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதாவது அடுத்த கல்வி துணை அமைச்சர் ஆவதற்கு இப்போதே பதியம் போட்டுக் கொண்டிருக்கிறார்! 

இப்படியெல்லாம் தமிழுக்கு ஒரு பக்கம் துரோகம். இன்னொரு பக்கம் 200 ஆண்டு கால வெற்றி விழா! அடாடா! என்னமாய் நடிக்கிறார்கள்! துரோகிகளுக்குத் தான் இந்த நடிப்பு வரும்!

Monday 18 September 2017

நாட்டுப் பற்றா...?


Vanakkam Malaysia

மேலே மாமாக் உணவகத்தின் ஊழியர்கள் தங்களது நாட்டுப் பற்றை  வித்தியாசமான முறையில் காட்டியிருக்கிறார்கள்! தேசியக் கொடியினைப் போன்று துணிகளைப் பயன்படுத்தி   தங்களது நாட்டுப் பற்றினைக் காட்டியிருக்கிறார்கள்!

நிச்சயமாக அந்த உணவகத்தில் தேசியக் கொடியினைப் பறக்க விட்டிருப்பாகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் தங்களது நாட்டுப்பற்றைக் காட்ட ஊழியர்களும் இப்படி ஒரு வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கைகளில் அழுக்குப் படியும் போது தேசியக்கொடியைச் சமயலுடையாகப் பயன்படுத்துவார்களே என்னும் போது தான் அங்கே கொஞ்சம் நெருடல். அழுக்குகளைத் துடைக்கவா தேசியக்கொடி? ஆனாலும் இந்த ஒரு நாளைக்காவது அழுக்கைத் துடைக்க தனியாக துணிகளைக் கொண்டிருப்பார்கள் என நம்பலாம்!

நமக்குத் தெரிந்தவரை மேற்கு நாடுகளில் இதெல்லாம் ஒரு பிரச்சனை அல்ல. அவர்களது தேசியக்கொடியில் நீச்சல் உடைகள், உள்ளாடைகள், சட்டைகள் - இப்படி எதையாவது தைத்துப் போட்டுக் கொள்ளும் பழக்கம் அங்கு உண்டு.  இங்கு நாம் நாட்டுப்பற்றையும் தேசியக்கொடியையும் ஒன்றாகப் பார்க்கிறோம். ஊழல்களைக் கூட நாம் புறந் தள்ளுகிறோம்.

இதனை நாம் நாட்டுப்பற்றாகவே எடுத்துக் கொள்ளுவோம். தவறு என்றால் இனிமேல் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்ளுவோம். ஒன்று படுவோம்! ஒற்றுமைக் காப்போம்! வாழ்க மலேசியா!

Sunday 17 September 2017

எம்.ஜி.ஆர். செல்வாக்கு சரிகிறதா...?


இப்போது தமிழகமெங்கிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

தமிழக மக்களிடையே எம்.ஜி.ஆரின் செல்வாக்கு எப்படி உள்ளது என்பது பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழகத்தில்  - அவர் உருவாக்கிய அ.தி.மு.க. அரசியல்வாதிகளிடையே - அவர் செல்வாக்கு எப்படி உள்ளது என்று பார்த்தால் அவர்கள் செய்வதெல்லாம் கண்துடைப்பு வேலை! அவ்வளவு தான்! பாராட்டும் விதமாக ஒன்றுமில்லை. 

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது கூட அவரும் எம்.ஜி.ஆரை கண்டு கொள்ளவில்லை. சென்னையில் எம்.ஜி.ஆர். குடியிருந்த வீடு, கேரளாவில் அவரின் பூர்வீக வீடு - எதைப்பற்றியும் அவரே கண்டு கொள்ளவில்லை. ஜெயலலிதாவுக்கே செய்நன்றி இல்லை என்றால் அவரின் அடிவருடிகளான இன்றைய அமைச்சர்களுக்கு என்ன பெரிய நன்றியுணர்ச்சி இருக்கப் போகிறது?

இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா என்பது வெறும் கண்துடைப்பு நாடகம் தானே?

அத்தோடு நாம் நிறுத்திவிட முடியாது. எம்.ஜி.ஆர். தனது படங்களில் நல்ல பல செய்திகளைச் சொல்லியிருக்கிறார். கண்ணதாசன், பட்டுகோட்டையார், வாலி இன்னும் சில கவிஞர்களின் பாடல்களுக்குத் திரையில்  வாயசைத்து நல்ல பெயர் வாங்கியிருக்கிறார்.  தனது படங்களில் பல நல்ல கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார். 

ஆனால் அவரை ஓர் அரசியல்வாதியாகப் பார்க்கும் போது நமக்கு - தமிழர்களுக்கு - ஏமாற்றமே மிஞ்சும். அவரை நாம் குறைத்து மதிப்பிட வேண்டும் என்பது நோக்கமல்ல. அவர் முதலமைச்சராக பதவி வகித்த போது தமிழ் நாட்டுக்கு அவர் செய்ய வேண்டிய தனது கடமைகளை அவர் செய்யவில்லை. அவர் செய்ய வேண்டியவை அனைத்தும் நாடோடி மன்னன் வசனமாகவே போய்விட்டது!  தமிழனுக்கு அதுவே போதும் என்று நினைத்தாரோ, என்னவோ! அவர் காலத்தில் சாராயக்கடைகளை அவர் அப்படி ஒன்றும் குறைத்து விட வில்லை. தாராளமாகத் தான் ஓடிக் கொண்டிருந்தது!  அரசு பள்ளிகளுக்கு எந்த மேம்பாட்டையும் கொண்டு வந்து விட வில்லை. ஆங்கிலப்பள்ளிகள் அதிகமாகத் திறக்கப்பட்டன. நிறைய மலையாளிகள் உள்ளே நுழைந்தனர். வேறு மறைமுக வேலைகளும் நடந்திருக்கலாம். விவசாயிகளை அவர் தூக்கி நிறுத்தி விட வில்லை. அவர் காலத்தில், அவர் செய்த மிகப்பெரிய கொடுமை ஜெயலலிதா என்னும் நச்சுக்கிருமியை தமிழக அரசியலுக்குக் கொண்டு வந்தது தான்! ஆக, கருணாநிதியின் தொடர்ச்சியாகத் தான் எம்.ஜி.ஆர் விளங்கினாரே தவிர மற்றபடி தமிழகத்தை உயர்த்த வேண்டும் என்னும் எந்த உயரிய  நோக்கமும் அவர்க்கு இருந்தது  இல்லை!

கருணாநிதியும் சரி, எம்.ஜி.ஆரும் சரி, சினிமாவில் தான் தங்களது திறனைக் காட்டினார்களே தவிர, தமிழ் நாட்டு மக்கள் என்று வரும் போது, அவர்கள் சுழியம் தான்!

இன்று நாம் அவரைப் பற்றி பேசுவதெல்லாம் அவருடைய சினிமா சாதனைகள் தான். மற்றபடி அரசியல் சாதனைகள் அல்ல. அவருடைய செல்வாக்கு என்பது சரிய ஆரம்பித்திருக்கிறது! இன்னும் சரியும்! அவர் நல்லவன் என்று தான் பெயர் எடுத்தாரே தவிர வல்லவன் என்று பெயர் எடுக்கவில்லை! 

தமிழகத்தின் ஒரு முதலமைச்சர் தமிழ் நாட்டிற்குப் பயனாக அமையவில்லை என்னும் போது அவரை நினைவு கூறுவதற்கு என்ன இருக்கிறது!

Friday 15 September 2017

சமயப்பள்ளியில் தீ..


பள்ளிகளில் தீ சம்பவங்கள் என்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  அதுவும் பிள்ளைகள் தங்கிப் படிக்கும் பள்ளிகள் என்றால் இன்னும் அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். தீ சம்பவங்கள் நடந்து விட்டப் பிறகு யார் யார் மேலோ குற்றம் சொல்லுவது வழக்கமாகி விட்டது. அதிலும் கடவுள் மேல் குற்றம் சொல்லுவது நமது இயல்பாகி விட்டது!

கடைசியாக, டத்தோ கிராமாட் சமயப்பள்ளியில் நடந்த தீ விபத்து மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய தீ விபத்து என்று சொல்லலாம். 21 மாணவர்களும் 2 வார்டன்களும் உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் அதிர்ச்சியான செய்தி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் ஒரே நேரத்தில் பலியாகி இருக்கின்றனர். 10 வயது, 11 வயது, 13 வயது. தகப்பனை இழந்த பிள்ளைகள். தாயாரின் வேதனை .....வார்த்தைகள் இல்லை சொல்ல.




பொதுவாக சமயப்பள்ளிகள்  என்றாலே பல விஷயங்களை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை. அதையும் அவர்கள் ஒரு சலுகையாகவே எடுத்துக் கொள்ளுகின்றனர். முதலில் அந்தச் சமயப்பள்ளியின்  கட்டடம் கல்வி கற்பதற்கான ஏற்ற இடமல்ல என்று நிர்வாகத்தினருக்கு எடுத்துச் சொல்லப்பட்டுவிட்டது. இருந்தும் பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள்!  கற்க முடியாது என்று சொல்லிவிட்ட பிறகு அங்கு எப்படி தங்கிப் படிக்க முடியும்? ஆனாலும் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறுகிறது. தீ ஏற்பட்டால் அதற்குப் போதுமான பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு இல்லாததனால் தான் 23 பேர் கருகி மாண்டிருக்கின்றனர். 

சமயப்பள்ளிகள் என்னும் போது பெற்றோரிடையே ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு.  அங்குப் படித்துக் கொடுப்பது வெறும் சமயக்கல்வி மட்டும் அல்ல. மாணவரிடையே ஒழுக்கம், கட்டொழுங்கு, சட்டத்தை மதித்தல் பெரியவரைப் பேணுதல், நல்ல குடிமக்களாக வாழுதல் ... என்று இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவைகள் அனைத்தையும் படித்துக் கொடுக்கும் பள்ளியில் அவர்களே சட்டத்தை அணுசரிக்கவில்லையே என்னும் போது - இது சரியாகப் படவில்லை. நிர்வாகத்தினரே சட்டத்தை மதிக்கவில்லை என்றால் இவர்கள் எப்படி மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க முடியும்?

இது ஒரு மிகவும் சோகமான சம்பவம் என்பதில் ஐயமில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது முக்கியம். அப்பள்ளியின் தலமை ஆசிரியர் சொல்லுவது போல "சமயத்திற்காக உயிர் துறந்தனர்" என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்தை மதிக்காமல் நடந்து கொண்டு விட்டு, அதனைக் கடவுள் மேல் மேல் பழி சுமத்துவது போல் தான் இது. ஏற்கனவே இது போல் நடந்திருக்கிறது என்றால் மீண்டும் மீண்டும் அது நடக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல.

அதிகாரிகள் தங்களது கடமைகளைச் செய்யவில்லை. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

பெருமைப்படுவோம்..!


பெருமைப்படுங்கள்! உங்கள் நண்பர்களில் யாராவது பதவி உயர்வு பெறுவர்களானால் அவர்களைப் பெருமைப் படுத்துங்கள்; வாழ்த்துங்கள்! உடன் வேலை செய்யும் ஊழியர்கள் பதவி உயர்வு பெற்றால் அவர்களை வாழ்த்துங்கள்; பெருமைப் படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த நபர்கள் யாரானாலும் நல்ல ஒரு பதவியில் அமர்ந்தால் அவர்களுக்கு வாழ்த்துக் கூறுங்கள்; அவர்களைப் பெருமைப் படுத்துங்கள்.

ஆம்,அவர்களைப்பற்றி பெருமை தான் பட வேண்டுமே தவிர, பொறாமைப் படக் கூடாது. ஒருவரின் முன்னேற்றத்தைப் பார்த்து நாம் பொறாமைப் படுபவர்களாக இருந்தால் அந்தப் பொறாமை என்பது அவர்களைப் பாதிக்காது; பொறாமைப் படுபவர்களைத்தான் பாதிக்கும். நமது எண்ணங்கள் கீழ் நோக்கி இருந்தால் நமது எதிராளியை அது பாதிக்காது, நம்மைத்தான் பாதிக்கும்.

மேலும் வாழ்த்துகின்ற பழக்கம் நமக்கு இருந்தால், மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பெருமைப்படுகின்ற பழக்கம் நமக்கு இருந்தால் அந்தப் பழக்கமே நம்மை உயர்த்தும்.

நமது குழைந்தைகள் பரிட்சையில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தால்  அவர்களை  வாழ்த்துங்கள்; பாராட்டுங்கள்; பெருமைப் படுங்கள். இன்னும் சிலர் மிகக் குறைவான புள்ளிகள் எடுத்திருக்கலாம். அதற்காக குய்யோ, முய்யோ என்று உலகமே இருண்டு போனதாக அவர்களை வையாதீர்கள். அவர்கள் எந்தப் பாடத்திலாவது குறைவான புள்ளிகள் எடுத்திருந்தாலும் அதற்காக அவர்களைப் பாராட்டுங்கள்.  நீங்கள் பாராட்டுவதன் மூலம் அடுத்த முறை அவர்களின் தேர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும். குறைவான புள்ளிகளை எடுத்திருந்தாலும் அதற்காகப் பெருமைப் படுங்கள். யாராக இருந்தாலும் அவர்களைப் பெருமைப் படுத்துவதின் மூலமே அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள்.

நம் ஒவ்வொரின் திறன் ஒரே மாதிரி இருப்பதில்லை. நம் விருப்பு, வெறுப்பு  ஒரே மாதிரி இருப்பதில்லை.  அதனால் தான் நம் செயல்பாடுகள் மாறுபடுகின்றன. குறைகளை மிகைப் படுத்தாமல் நிறைகளை மட்டுமே பாராட்டி, உயர்த்தி  ஒருவரைப்  பெருமைப்படுத்தினால் அவரும் உயர்வார், நாமும் உயர்வோம்.

நாம் உயர வேண்டுமானால் மற்றவர்களின் உயர்வில் நாம் பெருமைப்பட வேண்டும்! அவர்களை வாழ்த்த வேண்டும்!  நாமும் வளர்வோம்! அவர்களும் வளர்வார்கள்!

Thursday 14 September 2017

கேள்வி - பதில் (61)


கேள்வி

கமல்ஹாசன் தனிகட்சி தொடங்குகிறாராமே? 

பதில்

தொடங்கட்டுமே!  வாழ்த்துக்கள்! வேறு என்ன சொல்ல? தமிழகமே சினிமாவில் தான் தங்களது முதலமைச்சரைத் தேடிக் கொண்டிருக்கிறது. அப்படி என்றால் அந்த முதலமைச்சர் கமலாக இருக்கட்டுமே!

கடந்த 50 ஆண்டுகளாக சினிமா சம்பந்தப்பட்டவர்களே தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.  இதுவரை அது திருடர்கள் ஆட்சியாகத்தான் இருந்து வந்திருக்கிறது.  இனி  தமிழகத்தில் நல்லதொரு ஆட்சி வேண்டுமானால் அது இன்னொரு சினிமாக் காரனால் தான் கொண்டுவர முடியும். அது கமல்ஹாசனாக இருக்கலாம் அல்லது ரஜினியாக இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டுமே! நமக்குத் தேவை எல்லாம் நல்லதொரு ஆட்சி.

ஒரு விஷயம் கமலிடம் எனக்குப் பிடித்திருக்கிறது. அரசியலை விமர்சனம் செய்தார். எதிர்த்தார்கள். அரசியலுக்கு வருவேன் என்றார். சிரித்தார்கள்.  இப்போது கட்சி தொடங்குவேன் என்கிறார்.  முகம் சுளிக்கிறார்கள்!  வழ, வழ, குழ, குழ என்று ஒன்றுமில்லை. முடிவெடுத்து விட்டார்; வருகிறேன் என்கிறார். வரட்டும். வெற்றியா, தோல்வியா என்பது பற்றி அவர் கவலைப்பட வில்லை. அவர் நிறைய தோல்விகளைச்  சந்தித்தவர்.  நல்லதொரு ஆட்சியை தன்னால்  கொடுக்க முடியும் என்கிறார். கொடுக்கட்டுமே! நாம் வரவேற்போம்! அவர் நல்லவரா கெட்டவரா என்று கேட்டால் அவர் நல்லவர் தான். எப்படி? தனது வருமானவரியை எந்தப் பிரச்சனையுமின்றி வருடா வருடம் ஒழுங்காகக் கட்டி வருகிறார். இது ஒன்றே போதும். அவர் இந்தத் தேசத்தை நேசிக்கிறார்; தமிழ் நாட்டை நேசிக்கிறார் என்பதற்கு அடையாளம்.


ஒரு வார்த்தை கமலுக்குச் சொல்லலாம். அவர் தனது கட்சிக்கு "திராவிடம்" என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டாம். திராவிடன் என்றாலே அது திருடர்களைக் குறிக்கிறது. அவர் ஒரு பேட்டியில் திராவிடன் என்ற சொல் பழைய தமிழ்         இலக்கியங்களில் உள்ள ஒரு சொல் என்கிறார். இருந்துவிட்டுப் போகட்டும். நவீனத் தமிழில் அது திருடர்களைக் குறிக்கிறது.  அதனால் அந்தச் சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.

புதிய கட்சி என்பது  ஏதோ தீடீரென அவர் எடுத்த முடிவாக நான் நினைக்கவில்லை.  நீண்ட நாள் மனதிலே கனன்று கொண்டிருந்த ஒரு நெருப்பு அது. இப்போது தான் காலம் கனிந்திருக்கிறது. நேரம் காலம் கூடி வந்திருக்கிறது

நல்லதே நடக்கட்டும்! நாடு செழிக்கட்டும்!


Wednesday 13 September 2017

ம.இ.கா.வினர் திருந்த வேண்டும்..!


ம.இ.கா.வினர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். என்ன தான் ஆளுங்கட்சியாக இருந்தாலும், என்ன தான் அதிகாரம் தங்கள் பக்கம் இருந்தாலும், என்ன தான் காவல்துறை தங்களுடையது என்றாலும் - தாங்கள் எதற்கு வந்தோம், தங்கள் பணி என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் நீங்கள் பணி செய்ய வந்தீர்கள். வீழ்ந்து கிடைக்கும் தமிழர்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே உங்களின் முதன்மையான பணி. தமிழர் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உங்களால் மட்டுமே தீர்வைக் கொண்டுவர முடியும் என்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. 

ஆனாலும் சொல்லுவதற்கே கூச்சமாக உள்ளது. சமுதாயம் என்று சொல்லி உங்கள் குடும்பத்திற்கே "முதன்மையான சேவை" என்று அனைத்தையும் மாற்றி அமைத்து விட்டீர்கள்! நாங்கள் என்ன சொல்லுகிறோம். நிமிர்த்த முடியாமல், நிமிர துடிக்கும், ஓர் இனத்தை, அவர்கள் நிமிர கொஞ்சமாகவாவது உதவுங்கள் என்று தான் சொல்லுகிறோம். நீங்கள் மாறுவீர்கள் என்பதற்கான அறிகுறி இதுவரைத் தென்படவில்லை.

பொதுவாக இந்திய சமுதாயம் உங்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்து விட்டது. ம.இ.கா.வினர் அறிவில்லாதவர்கள் என்பதாக மக்கள் ஒரு முடிவு எடுத்து விட்டார்கள். இது ஒரு பிரச்சனை அல்ல. எப்போது பொது நலம் என்று உங்களுக்கு நினைவுக்கு வருகிறதோ அப்போதே உங்களுக்கு அறிவு முதிர்ச்சி ஏற்பட்டு விடும்.

ஆனால் அதைவிட முக்கியம் நமது தமிழ்ப் பத்திரிக்கைகள். அவர்கள் தான் உங்களுக்கு ஆசான். அறிவைப் புகட்டுகிறார்கள். வழியைக் காட்டுகிறார்கள். உங்களின் தவறுகளைச் சுட்டுகிறார்கள். சமுதாயப் பிரச்சனைகளை உங்கள் கண்முன் நிறுத்துகிறார்கள். ஆமாம். நீங்கள் உங்கள் தொகுதிற்கே போகாத போது பத்திரிக்கைகள் தான் உங்களுக்கு வழிகாட்டியாக அமைகின்றன. உங்களின் நன்மைக்காக போராடும் அவர்களை எட்டி உதைக்கிறீர்களே - இது எந்த வகையில் நியாயம்? குண்டர்களை வைத்து குண்டர்த்தனம் செய்கிறீர்களே - ஏற்றுக்கொள்ள முடியுமா?

தயவு செய்து உங்கள் போக்கை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். சமுதாயப்பணியை நீங்கள் மறந்ததினால் தான் இவ்வளவு பிரச்சனைகளும். சமுதாயத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய பணிகளைச்  சுட்டிக் காட்டினால் உங்களுக்குக் கோபம் வருகிறது. பொதுத் தேர்தல் வருகின்ற நேரத்தில் என்னன்னவோ அறிக்கைகள் வெளியாகின்றன. இதெல்லாம் வெற்று அறிக்கைகள் என்று அனைவருக்குமே தெரியும்.

நீங்களும் ஒன்றும் செய்ய மாட்டீர்கள். மற்றவர்களும் ஒன்றும்செய்யக் கூடாது. பத்திரிக்கைகளும் அது பற்றி வாய்த் திறக்கக் கூடாது. பொது மக்களும் எதுவும் பேசக் கூடாது.  ஆனால் தேர்தல் வரும் போது மக்கள் ஓட்டுப்  போட  வேண்டும்!   

அடாடா! என்ன எதிர்பார்ப்பு! நீங்கள் பெருமை மிக்க வாழ்க்கை வாழ வேண்டும்.  அதற்குக் குண்டர்களை வைத்து நீங்கள் மற்றவர்களைப் பயமுறுத்த வேண்டும். ஒன்றை மறந்து விடாதீர்கள். அந்தக் குண்டர்கள் நாளை உங்களுக்கும் குண்டர்களாக மாறி விடுவார்கள்!

உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள் அல்லது நீங்கள் திருத்தப் படுவீர்கள்!                                                                                                                                                                              


Sunday 10 September 2017

திறன் உண்டு; தக்க தலைமை இல்லை!



காற்பந்து உலகில் பீட்டர் வேலப்பன் என்றால் தெரியாதார் யாருமில்லை.  ஆனால் ஒன்று. இவர் மலேசிய முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவரல்ல. பின்னணியில் இருந்து செயல்படுபவர். எத்தனையோ ஆட்டக்காரர்கள் வந்து போய்விட்டனர். ஆனால் இவரோ நீ....ண்...ட  காலம் மலேசியக் காற்பந்துத் துறையில் இருந்தவர்.

வயதோ 82. அவரிடம் காற்பந்து பற்றிப் பேசினால் 8 வயது பையானாக மாறி விடுவார்! அந்தச் சுறுசுறுப்பு, அந்தத் துடிதுடிப்பு இன்னும் குறையவில்லை. காற்பந்தே அவரது வாழ்க்கை. காற்பந்தே அவரது சுவாசிப்பு. காற்பந்தே அவரது ஒவ்வொரு நாடித் தூடிப்பிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

நெகிரி செம்பிலான், சிலியோ தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் பீட்டர் வேலப்பன்.  ஆரம்பக் கல்வி சிலியோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில். அதன் பின்னர் சிரம்பானில் ஏ.சி.எஸ். ஆங்கிலப் பள்ளியில். சீனியர் கேம்பிரிஜ் முடித்த பின்னர் ஆசிரியர் பயிற்சிக்காக இங்கிலாந்து சென்றார். அதன்       பின்னர்,  தான் படித்த ஏ.சி.எஸ். பள்ளியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்தார். அவர் மீண்டும், ஓர் ஆண்டு, இங்கிலாந்திற்கு விளையாட்டுத் துறை சம்பந்தமான பயிற்சி பெற அனுப்பப்பட்டார். மீண்டும் மலேசியா திரும்பி தனது கல்வி சேவையைத் தொடர்ந்தார். அவர் தொடர்ந்து தனது மேற்கல்வியைத் தொடர கானடா நாட்டிற்கு அனுப்பப்பட்டார். அதனை முடித்த பின்னர் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சில் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அத்தோடு தனது 17 ஆண்டுகால அரசுப் பணியிலிருந்து விலகி தனியார் துறைக்கு மாறினார்.

தனியார் துறைக்கு மாறினாலும் காற்பந்து விளையாட்டு மேல் அவருக்கு இருந்த ஈடுபாடு குறையவில்லை. 1963 - ல்  மலேசிய காற்பந்து சங்கத்தின் துணைச் செயளாலராக பதவியில் அமர்ந்தார்.  அப்போது அதன் தலைவராக இருந்தவர் முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள். அப்போது ஆரம்பித்த அவரின் காற்பந்து பயணம் ...தொடர்ந்து....தொடர்ந்து..... ஏதோ ஓரு வகையில் இன்றும் அவருடன் பயணம் செய்கிறது! காற்பந்து தொடர்பில் சுமார் 230 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். 12 ஃபிபா உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கு பெற்றவர். ஜெர்மனியில் நடந்த 1972 ஒலிம்பிக் போட்டியில் மலேசிய காற்பந்து குழுவுக்கு நிர்வாகியாக் இருந்தவர். இன்னும் பல, பல, பல.

இன்றைய காற்பந்து நிலவரம் எப்படி?  "காற்பந்தின் பொற்காலம் என்றால் அது முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானோடு முடிந்து விட்டது. இப்போது அம்னோ அரசியல்வாதிகள் எல்லாப் பதவிகளையும் நிரப்பிவிட்டனர். பதவி தான் இருக்கிறது; காற்பந்து இல்லை! இன ரீதியில் செயல்படுவதால் காற்பந்து போட்டிகள் சொல்லும்படியாக இல்லை!" என்கிறார்.

நமக்குத் திறன் உண்டு. திறமைக்குப் பஞ்சம் இல்லை. ஆற்றல் உண்டு. ஆனால் தக்க தலைமை இல்லை. அதனால் உலகளவில் நமக்கான வாய்ப்புக்கள் குறைந்து விட்டன.

இந்த வயதிலும் ஏதோ ஒரு வகையில் காற்பந்து துறையில் தனது பங்களிப்பைச் செய்து கொண்டு தான் இருக்கிறார், பீட்டர் வேலப்பன்.

இனி வருங்காலங்களில், ஒரு தமிழர், இந்த அளவு உயரத்தைக் காற்பந்துத் துறையில் எட்ட முடியுமா? முடியும் என்றே எண்ணுவோம்.  எதுவும் நடக்கலாம்! இது மட்டும் நடக்கலாமலா போய்விடும்!



Friday 8 September 2017

சும்மா, வெறுமனே இருக்க முடியாது...!


"அதனால் என்ன, எனக்குக் கண்பார்வை இல்லை என்பதற்காக வெறுமனே உட்கார்ந்து இருக்க முடியாது" இப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல:

இதோ மேலே படத்தில் நீல உடையில் இருக்கிறாரே, அவர் தான் மகாவித்யா. வயது 22. இலக்கியத் துறையில் பட்டம் பெற வேண்டும் என்னும் வேட்கையோடு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். நமது நாட்டின் மற்றைய பல்கலைக்கழகங்கள் அவரை உதாசீனப்படுத்தினாலும் பினாங்கு அறிவியல் பல்கழைக்கழகம் அவரை ஏற்றுக் கொண்டது. 

பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவரான மகாவித்யா குழைந்தையாய் இருந்த போதே தந்தையை இழந்தவர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தாயார் சீதா லட்சுமி மார்பகப் புற்று நோயால் இறந்து போனார். தனது 11-வது வயதில் நெருப்புக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு தனது இரு கண்களையும் இழந்தார்.  அவரது வாழ்க்கையில் பல சோதனைகளும், வேதனைகளும் தொடர்ந்தாலும் எதற்கும் அவர் அடி பணியவில்லை; கருமமே கண்ணாய் இருந்தார்; தனது கல்வியில் இன்னும் அதிகம் கவனம் செலுத்தினார்.

இன்று நாட்டின் புகழ் பெற்ற கல்வி நிறுவமான பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கின்றார். எதிர்காலத்தில் நல்லதொரு கல்வியாளராக வர வேண்டும் என்பதே அவரது இலட்சியம். புதிய இடம், புதிய சூழல் என்கின்ற தயக்கம் இருந்தாலும் எத்தனையோ முட்டுக்கட்டைகளை முறியடித்த நான் இதனையும் முறியடிப்பேன் என்கிறார் மகாவித்யா.

அவர் எந்தக் காலத்திலும் வெறுமனே ஓய்ந்திருந்தது இல்லை. தனது எதிர்கால கல்விக்கு என்ன என்ன தேவையோ அத்தனையும் கற்றிருக்கிறார். கண்பார்வை இழந்தவர்களுக்கான பிரையில் முறை கல்வியையும் அவர் கற்றிருக்கிறார்.

ஆசிரியர் ஆவதே எனது இலட்சியம் என்னும் கனவோடு களம் புகுந்திருக்கிறார் வித்யா. அவர் வெற்றி உறுதி என்பதில் நமக்கு ஐயமில்லை.

நமக்கு அவர் தரும் பாடம்: என்னால் சும்மா வெறுமனே இருக்க முடியாது! அடுத்தது என்ன?  அடுத்தது என்ன? அது தான் எனது தேடல்.

நாமும் அப்படித்தான் சிந்திக்க வேண்டும். அடுத்தது என்ன?


Sunday 3 September 2017

உன்னால் முடியும் தம்பி..!


காலையில் நல்லதொரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. மிகவும் பாராட்டுதலுக்கு உரிய செய்தி. தனி மனித முயற்சிகள் எப்படி மக்களுக்குப் பயன் தரக் கூடிய முயற்சியாக மாறுகிறது என்பதற்குச் சான்று பகர்கின்ற ஒரு செய்தி.


     
                                                     ஷியாம்லால் (42 வயது)

இந்தியா, சத்திஷ்கர் மாநிலத்தில், கோரியா மாவட்டம், சிர்மிரி என்னும் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் (மேலே) ஷியாம்லால். 27 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது கிராமத்தில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் அவருக்கு மனதிலே ஒரு வைராக்கியத்தை ஏற்படுத்தியது.   தண்ணீர் பஞ்சத்தைப் போக்க ஒற்றை ஆளாக மண்வெட்டியை  எடுத்தார். அவருடைய கிராம மக்கள் அவருக்கு உதவியாக இல்லை.  நையாண்டியும், நக்கலும் தான் அவர்களிடமிருந்து வந்தது. அவர் கவலைப்படவில்லை.  27 ஆண்டுகளாக தனி ஆளாக தனது வேலையை ஆரம்பித்தார். குளம் வெட்ட ஓர் இடத்தைக் கண்டு பிடித்து....மண்வெட்டியை எடுத்தவர் தான் ... இன்னும் அவர் நிறுத்திய பாடில்லை! 

குளம் வெட்டி, மழை நீரை சேமித்தால், தண்ணீர் பிரச்சனை தீரும் என்று அவர் சொன்ன போது யாரும் கேட்கவில்லை. அப்போது அவருக்கு வயது 15! வயது ஒரு தடை! அவர்களுக்கு உதவ அரசு தயாராக இல்லை.  அவர்கள் ஏழைகள்! பின் யார் தான் செய்வது? தனது ஊறவுகள் தொலை தூரம் சென்று தண்ணீருக்காக அலைவது அவரது கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது.

இப்போது  குளத்தை வெட்டி பெரிய அளவில் கொண்டு வந்து விட்டார். இப்போது மழை பெய்தால் மழை நீர் சேமிக்கப் படுகிறது. கிராமத்து மக்களும் இப்போது  குளத்தின்         தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். கால்நடைகளும் பயனடைகின்றன.

ஷியாம்லால் என்ன சொல்லுகிறார்: எங்கள் கிராமத்திற்குத் தண்ணீர் என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் அரசு தரப்பிலிருந்து இந்த 26 ஆண்டுகளாக எனக்கு எந்த ஒரு உதவியும்  கிடைக்கவில்லை. சமீபத்தில் எங்களது சட்டமன்ற உறுப்பினர் வந்தார். பணம் கொடுப்பதாகச் சொன்னார். அது வாயளவில் நிற்கிறது. கலெக்டர் வந்தார். உதவுவதாகக் கூறி சென்றிருக்கிறார். பார்ப்போம்!

ஆனாலும் ஷியாம்லால் இன்னும் தனது பணியை நிறுத்தவில்லை. இன்னும் வெட்டிக் கொண்டே இருக்கிறார். 27 ஆண்டுகளாக உழைத்து வந்திருக்கிறார். அது அவர் வெட்டி வளர்த்த  குளம். அதுவும் அவருக்கு ஒரு பிள்ளை மாதிரி! சும்மா விட்டு விட முடியுமா?

தனி மனிதனால் என்ன செய்ய முடியும் என்கிறோம்.  அதற்குச் சரியான எடுத்துக்காட்டு ஷியாம்லால். ஒரு தனி மனிதனின் முயற்சி. இப்போது ஒரு கிராமமே பயனடைகிறது.

ஆக, உன்னால், என்னால், நம்மால் - முடியும் தம்பி!