Friday 28 July 2017

இந்தியர்களை ஓரங்கட்டியவர் மகாதிர்!


சமீபத்தில் ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ், எதிர்கட்சி எம்.பி. யான குலசேகரனுக்கு  பதிலளிக்கும் வகையில் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

"இந்நாட்டில் இந்தியர்கள் ஒரங்கட்டப்பட்டது துன் மகாதிரினால் தான் என்பது மறுக்க முடியாத உண்மை!"  என்பதாக அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

துன் மகாதிர் தான் குற்றவாளியே தவிர இன்றைய பிரதமர் நஜிப் அல்ல என்பது தான் அவருடைய வாதம். அப்படியே இருக்கட்டும். துன் மகாதிர் பிரதமராக இருந்த போது அப்போதே அவரும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். "இந்தியர்களின் தேவைகளைப் பற்றி ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ சாமிவேலு எதனையும் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை" என்பதாக!

ஆக, குற்றம் என்பது முன்னாள் பிரதமர் மகாதிர் மீது  மட்டும் அல்ல ம.இ.கா.வின் மீதும் சேர்த்துத் தான்!  இப்போதும் அதே குற்றச் சாட்டுக்கள்  உண்டு. இப்போதாவது இந்தியர்களின் பிரச்சனைகள் அமைச்சரைவையில் பேசப்படுகிறதா என்றால் இப்போதும் அதே "பேசப்படுவதில்லை" என்பது தான்!

பேசப்படுகிறது என்றால் தமிழ்க்கல்வி பிரச்சனையை ஏன் ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை? கேட்கோ பிரச்சனையை ஏன் ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை?  ஏன் இந்தியர்கள் அராசாங்கத்தில் வேலை வாய்ப்புக்களைப் பெற முடியவில்லை? எந்தப் பிரச்சனையானாலும் அந்தப் பிரச்சனையை அமைச்சரவையில் கொண்டு போக முடியாததினால் தானே  இப்போது மாபெரும் வியூகத்திட்டம்  என்பதாகச் சொல்லி இப்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தது போல தேர்தலுக்கு முன்பாக "அசத்திக்" கொண்டிருக்கிறீர்கள்? சரி, வியூகத்திட்டம் இருக்கட்டும். கடந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் நஜீப் - இந்தியர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கிய சாதனைகள் என்ன என்பதை பட்டியிலிட்டுக் காட்டுங்களேன். யார் வேண்டாமென்றார்! பொது மக்களும் பார்த்து பரவசமடையட்டுமே!

இந்தியர்களை ம.இ.கா. ஏமாற்றுகிறது என்பதால் தானே மக்கள்,  நீங்கள் எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அது "நிறைவேறாது"  என்று மனத்தளவில் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்!  வியூகத் திட்டம் வந்த பிறகு செடிக் அலுவலகத்தில் 50 பேர் வேலை செய்கிறார்கள் என்பது என்ன சாதனையா? அதில் 48 மலாய்க்காரர்களும், 2 இந்தியர்கள் இருப்பார்கள்! அவர்களால் ஆகப்போவது என்ன?

இந்தியர்களின் தகவல்கள் அனைத்தும் உங்களிடம் உள்ளன. எந்த ஒரு வியூகத்திட்டமும் இல்லாமலே, இந்தியர்களின் பிரச்சனையை - மனம் வைத்தால், மனம் வைத்தால் மட்டுமே - உங்களால் தீர்க்க முடியும். இல்லாவிட்டால் அடியோ, உதையோ வாங்கி, நீங்களும் இந்தியர்களை ஓரங்கட்டி விடுங்கள்! இந்தியர்கள் தாங்களாகவே தங்களைப் பார்த்துக் கொள்ளுவார்கள்!

சுமை தாங்கி


சுமை தாங்கி என்கின்ற ஒரு தமிழ்த்திரைப் படம், ஜெமினி கணேசன் நடித்து,  ஸ்ரீதர்  இயக்கி,  1962-ம் ஆண்டு வெளியான ஒரு படம் என்பதை அந்தக் காலத்து சினிமா ரசிகர்களுக்குத் தெரியும். அதில் தான் "மயக்கமா.. கலக்கமா..!"  என்கிற, ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல் மிகவும் பிரபலம். ஏன், இப்போதும் பிரபலம் தான். இந்தப் படத்தின் கரு என்பது குடும்பச் சுமையைச் சுமக்கின்ற கதாநாயகன்  தான் அந்தச் சுமை தாங்கி.

இந்தச் "சுமை தாங்கி" என்கிற சொல் என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது என்பதை சமீபகாலம் வரை  நான் அறிந்திருக்க வில்லை. சைக்கள்களின் பின் பகுதியில் சுமைகளை ஏற்றிச் செல்லும் அதனையும் சுமைதாங்கி எனச் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஆனால் தீடீரென இந்தச் சுமைதாங்கியைப் பற்றி இரண்டு வாரங்களில் மூன்று முறை என் கவனத்திற்கு வந்தது. ஒரு சொற்பொழிவில் இந்த சுமைதாங்கி கற்கள் சிவகங்கையில் உள்ளதாக ஒருவர் கூறினார். இரண்டாவது சிவகங்கையில் உள்ள ஒருவர் வருகை தந்திருந்தார். மூன்றாவது சிவகங்கையில் உள்ள    சுமைதாங்கி கற்களைப் பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. மூன்றும் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக வந்ததால், சரி, நாமும் கொஞ்சம் சொல்லி வைப்போம் என்பதற்குத்தான் இந்தக் கட்டுரை.



பொதுவாக இந்தச் சுமைதாங்கி கற்கள் சிவகங்கை மாவட்டத்தில் தான் அதிகம் காணப்படுகிறது; பேசப்படுகிறது. போக்குவரத்து அதிகம் இல்லாத காலக்கட்டத்தில் இது போன்ற சுமைதாங்கிகள் தாம் மக்களுக்கு இளைப்பாறவும், சுமந்து வந்த சுமைகளை இறக்கி வைக்கவும், ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் உதவியாக இருந்தன. சுமைகளைச் சுமந்து செல்லும் மக்கள் யாருடைய உதவியும் இல்லாத நேரத்தில் அவர்களது சுமைகளை இந்த சுமைதாங்கிகளின் மேல் வைத்துவிட்டு அவர்களே மீண்டும் அந்தச் சுமைகளை  யாருடைய உதிவியும் இன்றி தூக்கிக்கொள்ள உதவும் கற்கள் தான் இந்தச் சுமைதாங்கிகள்.  பெரும்பாலான இந்தச் சுமைதாங்கிகள் ஆற்றோரங்களிலும், சாலை ஓர மரத்தடிகளிலும் தாம்  அமைக்கப்பட்டன. தாகம் தீர்க்கவும்,அமர்ந்து இளைப்பாறவும் பயணிகளுக்காக இந்த வசதிகள். 

இறந்த போர் வீரர்களுக்காகவும், அரசர்களின் நினைவாகவும், இறப்பு, பிறப்பு போன்ற ஞாபகச்சின்னங்களாகவும் இது போன்ற சுமைதாங்கிகள் அக்கலாத்தில் உருவாயின. அரசர்களின் உதவியோடும், அக்காலத்தில் வாழ்ந்த மனிதநேய மிக்க குடிகளாலும் சுமைதாங்கிகள் ஏற்படுத்தப்பட்டன. 

பிற்காலத்தில்,  போக்குவரத்து வசதிகள் அதிகரித்த பின்னர், சுமைதாங்கிகளின் பயன்பாடு குறைந்துவிட்ட நிலையில், அவைகள் மக்கள் மறக்கும் நிலைக்கு வந்துவிட்டன. அரசிடமிருந்தும் புதிய சுமைதாங்கிகள் கட்டுவதற்கான அனுமதியும்     கிடைக்கவில்லை.  ஒரு சில சுமைதாங்கிகள் இப்போது வழிபாடு செய்யும் இடங்களாக மாறிவிட்டன.




தமிழகம் முழுவதும் இது போன்ற சுமைதாங்கிகள் கட்டப்பட்டனவா என்று தெரியவில்லை.  ஆனால் தமிழகத்தில் பல  இடங்களில் இவைகள் இருந்ததற்கான அடையாளங்கள் இப்போதும்  இருப்பதாகக் கூறப்படுகின்றது. சிவகங்கை தவிர்த்து, சேலம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வாழப்பாடி போன்ற இடங்களிலும், திருவாருரில் ஒரு சில இடங்களிலும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

போக்குவரத்து குறைந்த காலத்தில், மாட்டு வண்டிகளைப் பயன்படுத்த முடியாத ஏழைகளுக்கு இது போன்ற, பல கல் தூரம் தலையில் பாரங்களைச் சுமந்து செல்லும் ஏழை மக்களுக்கு இந்தச் சுமைதாங்கிகள் மிகவும் பயன் உடையவைகளாக இருந்திருக்கின்றன. 

அக்காலத்திய அரசுகளும், வசதிப்படைத்த பெரியவர்களும் ஏழைகளின் மேல் பற்றும் பாசமும் உடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என அறியும் போது நமக்கும் பெருமையாக இருக்கிறது.


நல்லதொரு நோக்கத்துக்காக இந்தச் சுமைதாங்கிகள் ஏற்படுத்தப்பட்டன.  அவைகள் மக்களுக்குப் பயன் உடையவைகளாகவும் இருந்திருக்கின்றன. 

சுமைதாங்கிகளே! சுமையை மட்டுமா தாங்கினீர்கள்? எங்கள் சுகத்தையும், சோகத்தையும் அனைத்தயும்  அல்லவா தாங்கினீர்கள்!

Monday 24 July 2017

கேள்வி - பதில் (55)


கேள்வி

"சர்வதேச சட்டப்படியே மீனவர்களை இலங்கை கடற்படை  கைது செய்கிறது" என்று தமிழிசை சவுந்தரராஜனின் கருத்து சரியானாதா?

பதில்

அவரது கருத்தாக அதனை அவர் சொன்னாலும் அது பா.ஜ.க. வின் கருத்தாகத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இது மிகவும்  ஆபத்தான கருத்து.  தமிழிசை பா.ஜ.க. வின் தமிழக மாநிலத் தலைவர். அவர் சொல்லுகின்ற கருத்து எதுவாக இருந்தாலும் அவர் பிரதமர் மோடியின் கருத்தைத் தான் பிரதிபலிக்கிறார் என்பது தான் பொருள்.  பிரதமரின் கருத்தை தமிழகத்தில் மெல்லத் திணிக்கிறார் என்பதாகத்தான் நாம் பார்க்க வேண்டும். 

பிரதமர் சொல்லுவது சரி என்றால் தமிழக மீனவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதையும் தமிழிசை பார்க்க வேண்டும். மீனவர்கள் சொல்லுவதெல்லாம் தாங்கள் இந்திய எல்லையில் மட்டுமே மீன் பிடிப்பதாகச் சொல்லுகிறார்கள். இதனை அவர்கள் பல முறை சொல்லியிருக்கிறார்கள். இலங்கை கடற்படையினரே அத்துமீறி இந்திய எல்லையில் நுழைந்து தங்களைத் தாக்குவதும், சுடுவதும் எல்லாக் காலங்களிலும் தொடர்கதையாகவே நடைபெறுவதாக மீனவர்கள் கூறி வருகின்றனர். தமிழிசை,  மோடி சொல்லுவதை மட்டும் கேட்காமல் மீனவர்களும் என்ன சொல்லுகிறார்கள் என்பதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.    

தொடர்ந்து நடைபெறுகின்ற இந்த வன்முறையை  நிறுத்துவதற்கு என்ன செய்யலாம் என்பதைத் தான் தமிழிசை யோசிக்க வேண்டும்; பிரதமரிடம் சிபாரிசு செய்ய வேண்டும்.  தமிழர்களின் நலனை பிரதமர் மோடி அலட்சியம் செய்கிறார் என்பது தமிழர்களிடையே உள்ள பொதுவான கருத்து. அதனை உறுதி படுத்துவது போலத் தான் தமிழிசையும் பேசுகிறார்.    

தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பா.ஜ.க. வின் மாநிலத் தலைவர். மற்ற மாநிலத் தலைவர்கள் தங்களது மாநிலத்திற்காக பேசும் போது இவர் மட்டும் தமிழ் நாட்டை புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது நமக்குப் புரியவில்லை.  அவர் அநியாயத்திற்குத் துணை போக வேண்டாம். குறைந்த பட்சம் நியாயத்திற்காக குரல் கொடுக்க வேண்டும்.

ஏழை மீனவர்களுக்காக அவர் குரல் கொடுப்பார் என நம்புவோம்! தீர்வை நோக்கி அவர் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்ப்போம்!                                                                                                                                                                                                                                                                                       

Sunday 23 July 2017

கேள்வி - பதில் (54)


கேள்வி

தமிழக அரசியலில் ரஜினிக்கு ஆதரவும், கமலுக்கு எதிர்ப்பும் என்று சொல்லலாமா?

பதில்

அப்படி சொல்லுவதற்கில்லை. ரஜினிக்கு எப்படி ஆதரவு உள்ளதோ,  அதே அளவு ஆதரவு கமலுக்கும் உண்டு. குறைத்து மதிப்பிட முடியாது. 

ரஜினி "சிஸ்டம்" சரியில்லை  என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். அத்தோடு பிரதமர் மோடியையும் சந்தித்திருக்கிறார். இவைகளெல்லாம் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அத்தோடு தமிழக ஆளுங்கட்சியும் பா.ஜ.க.வோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது! வருகின்ற நான்காண்டுகளையும் எப்படியாவது "கடத்திக்" கொண்டு போக வேண்டும் என்னும் பிடிவாத நிலையில் அ.தி.மு.க. இருக்கிறது.  இந்த நான்காண்டுகளில் தங்களுக்குள் என்னன்ன வசதிகள் செய்து கொள்ள முடியுமோ அத்தனையும் செய்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்! அதனால் பா.ஜ.க. என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அத்தனைக்கும் ஒத்து ஊதூம் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்!  ரஜினி வாய் திறக்காத நிலையில் தமிழக அரசுக்கும், நடுவண் அரசுக்கும் அவர் மிகவும் நல்ல மனிதராக இருக்கிறார்!  அரசியல்வாதிகள் விரும்புவதெல்லாம் ரஜினி போன்ற பேசாத நல்ல மனிதர்களைத் தான்! ஆனால் ரஜினி பேச மாட்டார் என்று யார் சொன்னார்? இப்போதைக்கு அவர் பேசவில்லை; அதனால் அவர் நல்ல மனிதர்! அவ்வளவு தான்!

கமல் ஏன் கெட்ட மனிதர் ஆனார்? அரசியல்வாதிகளிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டாரே! அது ஒன்றே போதும்! கேள்வி கேட்பவர்களை அரசியல்வாதிகள் விரும்புவதில்லை. எதிர்கட்சியினர் கேள்விகள் கேட்கலாம். அது பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். காரணம் அவர்கள் அனைவருமே திருடர்கள்! ஆனால் பொது மக்கள் கேள்வி கேட்டால் அது அவர்களுக்கு ஆபத்து என்று அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்.  அதனால் கேள்வி கேட்பவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் கீழ் மிகவும் ஆபத்தானவர்கள் என்று சொல்லி அவர்களை "உள்ளே" தள்ளுகிறார்கள்! அதனால் தான் இப்போது கமலும் ஆபத்தானவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்! ஆனால் அப்படி எதுவும் அவர்கள் கமலுக்குச் செய்துவிட முடியாது. முடிந்தவரை எச்சரிக்கைக் கொடுப்பதிலேயே காலத்தைத் தள்ளுவார்கள்!

ஆனால் கமல் செய்வது சரியே! தொடர்ந்து எல்லாப் பிரச்சனைகளுக்கும் அவர் குரல் எழுப்ப வேண்டும். சினிமாத்துறை மட்டும் அல்ல;  ஹைட்ரோ கார்பன், மீதேன் என்று எல்லாப் பிரச்சனைகளிலும் அவர் குரல் எழுப்ப வேண்டும். ஒரு குடிமகனின் கடமையை அவரும் செய்ய வேண்டும்.  அவரின் குரலுக்கு வலு உள்ளது என்பது உண்மை.

நாட்டைக் கொள்ளை அடிக்கும் கும்பலக்கெல்லாம்  குனிந்து   போக வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஒரு சராசரி மனிதன் பேசினால் அவனைக் கைது செய்து "ஆபத்தானவன்" என்று முத்திரைக் குத்தி அவனை சிறையில் தள்ளுவார்கள். அதனால் கமல் இன்னும் பேச வேண்டும்.

கமலுக்கு எதிர்ப்பு என்பதெல்லாம் வழக்கம் போல அரசியல்வாதிகளின் பயமே தவிர வேறொன்றும் இல்லை!


Friday 21 July 2017

கேள்வி - பதில் (53)


கேள்வி

பிக்பாஸ் சம்பந்தமான சர்ச்சையில் "முடிந்தால், என்னைக் கைது செய்யுங்கள்!"  என்கிறாரே நடிகர் கமல்ஹாசன்?


பதில்

இந்து மக்கள் கட்சியினர், சென்னை காவல் ஆணையிரிடம், கமலையும் அந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்டிருக்கும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனப் புகார் கொடுத்திருக்கின்றனர்! அந்த நிகழ்ச்சி பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கெடுப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான். கன்னடத்திலும் ஒளிபரப்பானதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவிற்கு இது புதிய வரவல்ல. இந்தியில் ஏற்படாத இந்த அளவு எதிர்ப்பு ஏன் தமிழில் மட்டும்?

வழக்கம் போல இதுவும் அரசியல் தான்! இந்து மக்கள் கட்சி என்றாலும் பா.ஜ.க. என்றாலும் எல்லாம் ஒன்று தான். இன்று இந்திய நாட்டில் ஏற்படுகின்ற அனைத்துப் பிரச்சனைகளும் இந்து மக்கள் முன்னணி என்னும் பெயரில் பா.ஜ.க. அரங்கேற்றுகிறது!

பா.ஜ.க.,   ரஜினி அரசியலுக்கு வருவதை கைகூப்பி வரவேற்கிறது. காரணம் ரஜினி மூலம் தமிழ் நாட்டில் பா.ஜ.க. காலூன்றாலாம் என்னும் ஒரு திட்டம் அவர்களுக்கு உண்டு. ரஜினியின் செல்வாக்கு என்பது தமிழகத்தில் அதிகம். அதுவும் ரஜினி ஓர் ஆன்மீகவாதி என்னும் பெயரும் உண்டு. ஆனால் கமல் ரஜினிக்கு நேர்மாறானவர். கடவுள் மறுப்பு  கொள்கை உடையவர்; ஒழுக்கம் இல்லாதவர் என்கிற பெயரும் உண்டு. கமல் அரசியலுக்கு வருவது பா.ஜ.க. வுக்கு நன்மை பயக்காது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் தங்களது நலனுக்காக ரஜினியை முன் நிறுத்தி, கமலை கவிழ்க்க வேண்டும் என்று அவர் மீது சேற்றை வாரி வீசிக் கொண்டிருக்கிறார்கள்!

மற்றபடி கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் நொண்டிச்சாக்கு! சினிமாவில் இல்லாத கலாச்சார சீரழிவா? அவரைக் கைது செய்யுங்கள் என்பதெல்லாம் வெறும் அரசியல்! இதுவும் நடக்காது! அதுவும் ந்டக்காது!

மத்தியில் பா.ஜ.க. வின் ஆட்சியினால்  இந்து மக்கள் முன்னணி  இப்போது எல்லா மாநிலங்களிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது! தமிழ் நாட்டிலும் தனது வாலை ஆட்டிக் கொண்டிருக்கிறது!

பொறுத்திருந்து பார்ப்போம்!                                                                                


Thursday 20 July 2017

தாய்மொழிப் பள்ளிகள் தேவையா?


தாய் மொழிப் பள்ளிகள் தேவையா, அவசியமா என்னும் கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இன்றைய நிலையில் சீன,  தமிழ் பள்ளிகளே தாய் மொழிப்பள்ளிகளாக குறிப்பிடப்படுகின்றன. 

எல்லாவற்றையும் போல இதிலும் அரசியல் இருக்கிறது. தாய் மொழிப்பள்ளிகள் வேண்டவே வேண்டாம் என்று ஒருவர் சொன்னால் அவர் பெரிய ஹீரோவாகக்  கருதப்படுவோர்! வேண்டும் என்று சொன்னால் அவர் இனத் துரோகி என முத்திரைக் குத்தப்படுவார்!  அதனால் வேண்டாம் என்று சொல்லுவதையே பலர் விரும்புவர்.

சமீபத்திலும் அது நடந்திருக்கிறது. இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், கைரி ஜமாலுடின்,                     பெட்ரோனாஸ் பணியாளர்களுடனான ஒரு கலந்துரையாடலில் இந்தக் கேள்வியை எழுப்பினார்.  ஒரே மொழிக் கொள்கை, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பள்ளி, ஒரே கல்வி என்பது நாட்டில் ஒற்றுமையை வளர்க்கும் என்பதாக அவர் கூறினார். இதனை அனைவரும் ஏகமானதாக ஏற்று, ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர்.

அதே சமயத்தில் இன்னொரு கேள்வியையும் அவர்கள் முன் அவர் வைத்தார். இந்தக் கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் சொல்லுகின்ற வாதம் உங்களுக்கு ஏற்புடையதா என்றும் அவர் வினவினார்.  அது என்ன?  "முற்றிலும் மலாய் மாணவர்கள் தங்கிப் படிக்கும் மலாய்ப் பள்ளிகளின் நிலை என்ன?" என்பது தான். கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களில் அனைவரும் மௌனம் காத்தனர்!

நாம் அந்தக் கேள்வியைக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? இது நாள் வரை பல ஆயிரம் மாணவர்கள் இது போன்ற விடுதிகளில் படித்து வெளியாகியிருக்கும் ஒரே இன மணவர்களால்  என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது? எல்லாம் மலாய் மாணவர்கள். அதே போல எல்லாம் சீன மாணவர்கள், அதே போல எல்லாம் இந்திய மாணவர்கள். உண்மையைச் சொன்னால் அப்படி  யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையே! ஒரே இன மாணவர்களாக இருந்தாலும் வெளி உலகிற்கு வரும் போது பல இன மாணவர்களாத் தானே வர வேண்டியுள்ளது. இதில் என்ன இன ஒற்றுமை என்னும் சாயம் பூச வேண்டியுள்ளது!

இன ஒற்றுமை என்பது மொழி சார்ந்த பள்ளிகளில் இல்லை. இது தேசிய பள்ளிகளில்  ஆசிரியர்களால் விதைக்கப்படுகின்ற விஷ விதை. அதைத்தான் வேரறுக்க வேண்டுமே தவிர, தேவை இல்லாமல் தாய் மொழிப்பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என்னும் கோஷம் ஒடுக்கப்பட வேண்டும்! ஒழிக்க வேண்டும் என்பவர்கள் சரித்திரம் அறியாதவர்கள். பள்ளியில் படிக்கும் போது சரித்திரத்தைப் படிக்காமல் உபத்திரவம் பண்ணியவர்கள்! இவர்களுக்குச் சரித்திரமும் இல்லை சமகால அறிவும் இல்லை! 

அறைகுறை அறிவோடு பேசுவதல்ல தாய்மொழிக்கல்வி.            தாய்மொழி வழிக் கல்வி என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்! நிலைத்திருக்கவே செய்யும்!

Wednesday 19 July 2017

அன்வாரே அடுத்த பிரதமர்...?


வருகின்ற பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் "நாட்டின் பிரதமராக அன்வார் இப்ராஹிம்"  வருவதை  முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளுவதாக தனது முழு ஒப்புதலை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் வெளிப்படுத்தியுள்ளார்!

அன்வார் பிரதமராக வருவதை மக்கள் விரும்புகிறார்கள் என்றால் தனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை என்பதாக அவர் கூறியிருக்கிறார். பெர்டானா தலைமைத்துவ அறநிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு அறிவித்திருக்கிறார்.

ஆனால் அவர் சமீபத்தில் இங்கிலாந்து வருகையின் போது "தி கார்டியன்" பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தான் அன்வாரை நாட்டின் பிரதமராக வருவதை வரவேற்கவில்லை என்பதாகவும்  அவர்  கூறியிருந்தார்.  அன்வார், பிரதமருக்கான தகுதி பெற்றவர் அல்ல; அவர் மீதான தகாத உறவு குற்றச்சாட்டுக்கள் இன்னும் உள்ளன என்கிறார் டாக்டர் மகாதிர். 

அன்வார் மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை; அது, டாக்டர் மகாதிரின்,  அன்வார் மீதான காழ்ப்புணர்ச்சியே காரணம் என்கிறனர் அன்வாரின் ஆதரவாளர்கள்.  அன்வார் மீதான சிறிதளவே எதிர்ப்பலைகள் இருந்தாலும் அவருக்குப் பெரியளவில் ஆதரவு அலைகள் உள்ளன என்பதும் மறைக்க முடியாத உண்மை.

அது சரி.  இந்தியர்களைப் பொறுத்தவரை யாரை அவர்கள் ஆதரிக்கின்றனர்?  மகாதிரையா? அன்வாரையா? இந்தியர்களைப் பொறுத்தவரை டாக்டர் மகாதிர் தனது ஆட்சி காலத்தில், சாமிவேலுவுடன் கூட்டு சேர்ந்து,  இந்தியர்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்து விட்டார் என்பதாகக் குற்றச்சாட்டு உண்டு. பொருளாதார ரீதியில், உயர் கல்வி கற்பதில், அரசாங்க வேலை வாய்ப்புக்களில் இப்படி அனைத்திலும் இந்தியர்கள் ஏமாற்றப்பட்ட ஒரு சமூகமாக மிகவும் கீழ் நிலைக்குக் கொண்டு சென்றவர் டாக்டர் மாகாதிர். அவர் மீண்டும் பிரதமர் ஆவதை பெரும்பாலான இந்தியர்கள் விரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.   இப்போதுள்ள பல பிரச்சனைகளைக்குக் காரணமானவர் டாக்டர் மகாதிர் தான் என்பதில் கருத்து வேறுபாடில்லை.

சரி, அப்படியே அன்வார் பிரதமராக வந்தால் இந்தியர்கள் பிரச்சனைகள் அனைத்தும் கலைந்து விடுவாரா என்று கேட்டால்  அப்படியெல்லாம் சொல்லுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் மேல் உள்ளது வெறுப்பு; இவர் மேல் உள்ளது அனுதாபம்! அவ்வளவு தான். காரணம் சிலாங்கூர் என்பது  எதிர்கட்சியினர் ஆட்சி தான். இந்தியர்களுக்கு அவர்கள் என்ன செய்து விட்டார்கள் என்னும் கேள்வி இப்பவும் எழத்தான் செய்கிறது. குறிப்பாக அரசாங்க வேலை வாய்ப்புக்கள் இன்னமும் எட்டாதக் கனியாகத்தான் இருக்கிறது! கோவில்கள் இன்னும் உடைக்கத்தான் படுகின்றன! 

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுவோம். நம்மிடம் ஒரே ஒரு ஆயுதம் தான் உண்டு. அது தான் விலை மதிக்க முடியாத வாக்குச் சீட்டு. யார் வந்தால் நமக்கு இலாபம் என்பதை வைத்து வாக்களிப்போம். மற்றவர்களை விரட்டி அடிப்போம்!

Tuesday 18 July 2017

கேள்வி - பதில் (52)


கேள்வி

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவார் என பேச்சு அடிபடுகிறதே!

பதில்

வரலாம்; வராமலும் போகலாம். அவரிடமிருந்து உறுதியான பதில் இல்லை. ஏதோ மேலோட்டமாக கூறியிருக்கிறார். 

பொதுவாக அவர் அரசியலை விரும்பாதவர்.  ஆனாலும் ஒரு சிலரின் தேவையற்ற பேச்சின் மூலம் அவரை வம்புக்கு இழுக்கிறார்கள்.  அதுவும் குறிப்பாக ஊழலிலேயே சுழன்று கொண்டிருக்கும் அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்களை பெருந்தலைவர் காமராசர் போல நினைத்துக் கொண்டு சவால் விடுகிறார்கள்! எதற்கு எடுத்தாலும் அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்கிறார்கள்! அவர்கள் உண்மையைத் தான் சொல்லுகிறார்கள்.  அம்மாவின் ஆட்சி என்பதென்ன? ஊழல் ஆட்சி தானே! அந்த ஊழல் ஆட்சி இன்னும் ஏன் தொடர வேண்டும்?  அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. இனி அம்மாவின் ஆட்சி தொடர வாய்ப்பில்லை!

ஆமாம், இந்த அமைச்சர்கள் ஏன் இந்த அளவுக்கு கமல் மேல் வெறுப்பைக் காட்டுகிறார்கள்?  உண்மையில் இது வெறுப்பல்ல. தமிழ் நாட்டில் இப்போதைக்குப் பிரச்சனைகள் அதிகம். அதனை சமாளிக்கும் திறன் இந்த அரசாங்கத்திற்கு இல்லை. நெடுவாசல்,  குடிநீர் தட்டுப்பாடு,  விவசாயிகளின் தற்கொலை, மருத்துவ மாணவர்கள், நீட்  என்று இப்படிப் பிரச்சனைகள் நீண்டு கொண்டே போகிறது! அமைச்சர்கள் பிரச்சனைகளைக் கிடப்பில் போட்டுவிட்டு ஜெயிலில் இருக்கும் சின்னம்மாவிற்கு சேவகம் செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்! இன்னொரு பக்கம் பா.ஜ.க. செய்கின்ற ஒவ்வொரு அநியாயத்திற்கும் தலையை ஆட்ட வேண்டும் ஆட்டாவிட்டால் ஊழல் வழக்கில் சிக்க வேண்டி வரும்! இப்போது தமிழக அரசாங்கம் வெறும் சுழியம்! அதனால் தமிழக மக்களுக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை! அதனால் கமல்ஹாசனின் அரசியல் பேச்சு அவர்களைத் தேடி வந்த வரப்பிரசாதம்! பிரச்சனைகளிலிருந்து தப்புவதற்கு அவரைச் சாடிக் கொண்டிருக்கிறார்கள்!

என்னைக் கேட்டால் கமல்ஹாசன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதே எனது எண்ணம். வந்தாலும் ஆட்சேபணை இல்லை. கடந்த ஆட்சிகளை விட நல்லாட்சியையே கொடுப்பார்!

ஆசிரியர்களின் அராஜகம்...?


ஆசிரியர்களைப் பற்றி எழுதும் போது அராஜகம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவது தவறு தான். காரணம் நமது பண்பாடு வேறு. ஆசிரியர்களை நாம் மிக உயரிய இடத்தில் வைத்திருக்கிறோம். மாதா, பிதாவுக்குப் பிறகு அவர்களைத்தான்  நாம் அடுத்த நிலையில் வைத்திருக்கிறோம். குரு என்கிறோம். குரு என்பது தூய தமிழ்ச்சொல்.   குரு என்று மலாய் மொழியில் சொன்னால் அது வெறும் ஆசிரியரைக் குறிக்கும். ஆனால் அதனையே தமிழில் சொன்னால் அது வெறும் ஆசிரியர் மட்டும் அல்ல, ஆசான், குரவர்,  தலைமை, மேன்மை, சிறப்பு, வழிகாட்டி- என்று இப்படியெல்லாம் அதற்குப் பொருள்கள் கூறப்படுகின்றன. அதனால் தான் ஆசிரியர் என்றாலே அவர்கள் மீது நாம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம்.

ஆனால் நமது மலேசியப் பள்ளிகளைப்  பொறுத்தவரை ஆசிரியர் என்பவரை வெவ்வேறு கோணத்தில் நாம் பார்க்க வேண்டி உள்ளது. ஆசிரியர் என்பவர், வேறு வேலை கிடைக்காததால்  ஆசிரியாரானவர், கஞ்சா பழக்கம் உடையவர்,  இனப்பாகுபாடு பார்ப்பவர் - இப்படி பல கோணங்களில்.

சமீப காலங்களில் குறிப்பாக இந்திய மாணவர்கள், ஒரு சில மலாய் இனத்தைச் சேர்ந்த ஆசிரியர்களால்,   பலவகையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.  இந்திய மாணவர்கள் மீது இனத்துவேஷத்தைக் காட்டுவதும், காலணிகளால் அவர்களை அடிப்பதும் இப்போது கடைசியாக கன்னத்தில் சூடு வைக்கின்ற அளவுக்கு அது  வளர்ந்திருக்கிறது.

இதே மலாய் ஆசிரியர்கள் ஏன் மலாய் மாணவர்களை அடிக்க முடிவதில்லை?  அவர்கள் குறும்பு செய்வதில்லையா? அவர்களை அடிக்க அவர்களுக்குத் துணிவில்லை. காரணம் ஆளும் அம்னோ கட்சி அதனை ஓர் அரசியல் பிரச்சனையாக்கி அந்த ஆசிரியரை நாட்டை விட்டே துரத்திவிடும்! அவர்கள் ஏன் சீன மாணவர்களை அடிக்க முடிவதில்லை?  சீன மாணவர்கள் மீது கைவைத்தால் அது ஓர் இனப் பிரச்சனையாக உருவாகிவிடும்! இந்திய மாணவர்கள்...? ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில்  ஆண்டி என்பார்கள்.  ஆக அது தான் நமது நிலை. யார் வேண்டுமானாலும் நம் மீது கை வைக்கலாம்.  கல்வி துணை அமைச்சர் மீதே கை வைத்தார்கள்....என்ன ஆயிற்றூ? ஒன்றும் ஆகவில்லை! சகிப்புத் தன்மை உள்ளவர்கள் எனப் பெயர் வாங்கினோம்! அந்தச் சகிப்புத்தன்மை தொடர வேண்டும் என்று நமது மலாய் ஆசிரியர்கள் ஆசைப்படுகிறார்கள். காரணம் அவர்கள் வீட்டில் கூட அவர்கள் பிள்ளைகள் மீது கை வைக்க முடியாது!  ஆனால் பள்ளியில் இந்திய மாணவர்களை ஆசை தீர அவர்களை அடிக்கலாம், உதைக்கலாம், சூடு வைக்கலாம்! கேட்க நாதியற்ற சமூகம். யாரும் கேட்கப் போவதில்லை! கல்வி அமைச்சு கேட்காது! அதுக்குக்  காதில்லை! ம.இ.கா. கேட்காது. அதற்குச் சகிப்புத் தன்மை அதிகம்! 

ஏன் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன? அந்த ஆசிரியர்களுக்கு எந்தப் பிரச்சனையும் எழவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. காரணம் அவர்கள் இந்தியர்கள் அல்ல! உண்மையைச் சொன்னால் அப்படி செய்வதற்கு அவர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள்!

நம்மைப் பொறுத்தவரை இது அராஜகம்! அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். வேலை நீக்கம் செய்யப்பட வேண்டும். குண்டர் கும்பல்களை வேலைக்கு வைத்திருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது!

Friday 14 July 2017

தமிழிசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன்


இந்த ஆண்டு   தமிழிசைத் சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் நூற்றாண்டு விழா. சிறந்த பாடகர். நல்ல இசைக் கலைஞர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி படத்திற்கு முதன் முதலாக சிவாஜி கணேசனுக்குப் பின்னணி பாடியவர். அந்தப் பாடல்கள்:

            கா.கா.கா. 
            தேசம் ஞானம் கல்வி
            நெஞ்சு பொறுக்குதில்லையே   

பராசக்தி படத்திற்குப் பின்னர் சிவாஜி கணேசனுக்காக பல பாடல்கள் அவரின் குரலிலேயே ஒலித்தன. அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகவும் புகழ் பெற்ற பாடல்கள்.




 அவரை வெறும் பின்னணிப் பாடகராக மட்டும் குறிப்பிட முடியாது. அவர் பல படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். குறிப்பாக நடிகவேள் எம்.ஆர். ராதாவின் ரத்தக்கண்ணீர் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அவரே.

தியாகராஜ பாகவதர் என்றாலே அறியாதார் யாரும் இருக்க முடியாது. பாகவதருக்கு இரண்டு ஆண்டு காலம் இசைப்பயிற்சி அளித்தவரும் அவரே.

கலைஞர் மு.கருணாநிதியை தமிழ்த்திரை உலகிற்கு திரைக்கதை,வசனம்  எழுதுவதற்கு  காரணமாக இருந்தவர்,  கலைஞரின்  முதல் மனைவி, பத்மாவதி அம்மையரின் அண்ணன், எம்.ஜி.ஆர்.புகழ், நடிகர் மு.க.முத்துவின் தாய் மாமன், பிற்காலத்தில் தமிழ் நாடு இசைக்கல்லூரியின் முதல்வராகவும் இருந்தவர் தான் இசைச் சித்தர்.

இவருடைய மகள் சிவகாமசுந்தரி இவரைப் பற்றி குறிப்பிடும் போது தனது தந்தை ஒரு கார் பிரியர் என்கிறார். ஒரே நேரத்தில் எட்டு கார்களை வைத்திருந்தவர், வீடு, தோட்டம் என்று செல்வாக்காக வாழ்ந்தவர்.

சி.எஸ்.ஜெயராமன் 1917 - ம் ஆண்டு பிறந்தவர். இந்த ஆண்டு 100 வது ஆண்டு. அவர் 1995 - ம் ஆண்டு காலமானர்.

நல்லதொரு இசைக்கலைஞர். அவரின் குரல் யாராலும் பின்பற்றமுடியாத ஒரு குரல்.  இன்று மட்டும் அல்ல என்று கேட்டாலும் அவரின் குரல் இனிமை இனிமை தான்!

சி.எஸ்.ஜெயராமனின் மகள் சிவகமசுந்தரி அவரைப்பற்றியான ஒரு கட்டுரைத் தொகுப்பை  "ஓர் இனிய இசைப்பயணம்" என்னும் தலைப்பில் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.

சி.எஸ்.ஜெயராமன் இப்போதும் தமது பாடல்களின் மூலம் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.  அவர் என்றென்றும் நம்மோடு வாழ்வார்!





ஷரியா ......வரவேற்க முடியாது!


கிளந்தான் மாநில சட்டமன்றம் ஒரு திருத்தப்பட்ட  மசோதாவை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அது என்ன? கிளந்தானில் இனி குற்றவாளிகள் பொது இடத்தில் பகிரங்கமாக சவுக்கடி கொடுப்பதற்கு இந்த ஷரியா திருத்தம் வழிவகை செய்கிறது.

ஓர் இஸ்லாமிய கட்சியான, பாஸ் கட்சியின் ஆட்சியில் இருக்கும் கிளந்தான் மாநிலம் இப்படி ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து பல இனங்கள் வாழ்கின்ற - சீன, இந்திய - கிறிஸ்துவ, புத்த, இந்து சமயத்தினர்  - என்று பல்லினங்கள்,மதத்தினர்,  வாழ்கின்ற ஒரு நிலையில் இப்படி ஒரு சட்டத்திருத்தம் தேவை தானா  என்று யோசித்ததாகத் தெரியவில்லை. இஸ்லாமியச் சட்டம் என்று  பெருமையாக எண்ணுகின்றார்களே தவிர, நடைமுறையில் இல்லாத ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து எதனைச் சாதிக்கப் போகிறார்கள் என்பது நமக்கும்  புரியவில்லை.

சட்டம் அமலாக்கப்பட்டால் ஒன்று மட்டும் நமக்குத் தெரியும். ஏய்த்துப் பிழைக்கும் அத்தனை அரசியல்வாதிகளுக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் எந்தப் பாதிப்பும் வராது என்பது மட்டும் உறுதி. மிகச் சாதாரண ஏழை இளைஞர்கள் தான் இந்தச் சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கோ, பணம் படைத்தவர்களுக்கோ இந்தச் சட்டம் எதனையும் கொண்டு வரப்போவதில்லை. அவர்கள் வழக்கம் போல் தங்களின் லீலைகளை நிறுத்தப் போவதுமில்லை!!

இது போன்ற சட்டங்களைக் கொண்டிருக்கும் இஸ்லாமிய நாடுகளில் குற்றச் செயல்கள் குறைந்து விட்டனவா, என்ன? இல்லை! நமக்குத் தெரிந்தவரை பெண்கள் தான் பல வகைகளில் பாதிக்கப்படுகின்றனர்.  இஸ்லாமிய சட்டம் என்றாலே அது பெண்களுக்குத் தான் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்ற சட்டங்களைக் கொண்டிருக்கும் பாக்கிஸ்தான்,  வங்காளதேசம் போன்ற நாடுகள் அப்படி என்ன வளர்ச்சிகளைக் கண்டுவிட்டன?  அரபு நாடுகள் எண்ணைய் வளத்தால் பேர் போடுகின்றன.  அத்தோடு மக்கள் ஆட்சி என்பது அங்கு இல்லை. இந்த ஷரியா சட்டத்தினால் பெரிய மாறுதல் நடந்து அங்கு மக்கள் எல்லாம் புத்தம் புது புனிதர்களாக மாறிவிட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! ஷரியா சட்டத்தைக் கொண்டிருக்கும் எந்த ஒரு நாட்டையும் சுட்டிக்காட்டும் அளவுக்கு  -  முன்னுதாரணமாகக் கொள்வதற்க்கு - எந்த ஒரு இஸ்லாமிய நாடும் இல்லை!  இந்த  நிலையில் இப்படி ஒரு சட்டத் திருத்தம் தேவை தானா என்பதை இஸ்லாமிய அரசியல்வாதிகள் நினைத்துப் பார்க்க வேண்டும். வெறும் இஸ்லாம் என்பதற்காகவே ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து மக்களைப் பயமுறுத்துவது சரியான செயல் அல்ல.

ஏன், முன்னாள் தகவல் அமைச்சர், ஜைனுடின் மைடின் கூட இது பற்றி கிண்டலடித்திருக்கிறார். இதனை அவர் ஒரு காட்டுமிராண்டித்தனமான ஒரு தண்டனை என வர்ணிக்கிறார். என்ன தான் முஸ்லிம்களுக்கு மட்டுமான தண்டனையாக இருந்தாலும் வேற்று இனத்தவரிடையே அது மனசஞ்சலத்தை ஏற்படுத்தவே செய்யும்..

இந்த சட்டத் திருத்தத்திற்கு முன்னர் எப்படி தண்டனை நிறைவேற்றப்பட்டதோ அதுவே சிறந்த வழி.  சிறையில் நிறைவேற்றுங்கள். 

மனிதன் வாழும் வரை குற்றங்கள் இருக்கத்தான் செய்யும். எந்தச் சட்டத்தினாலும் குற்றச்செயல்களை மாற்றி விட முடியாது. அது சமயம் சார்ந்ததாக இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். மனிதனைத் திருத்துவதற்கு ஏதாவது வழிகள் இருக்கிறதா,  பாருங்கள். புனிதமான சட்டங்களைக் கொண்டு வந்து புனிதமற்றதாக ஆக்காதீர்கள்.

கடைசியாக ஒன்றை நினைவிற் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் இருக்கும் வரை குற்றச்செயல்கள் இருக்கவே செய்யும். குற்றச் செயல்களுக்கு ஆணி வேர் அரசியல்வாதிகள். அவர்கள் திருந்தினால் மக்கள் திருந்துவர்கள்.

ஷரியா......நாம் வரவேற்கவில்லை!


















Wednesday 12 July 2017

கேள்வி - பதில் (51)


கேள்வி

தமிழக மீனவர்களை இலங்கை அரசு மனிதர்களாகக் கூட மதிக்க மாட்டர்கள் போல் தோன்றுகிறதே?

பதில்

உண்மையே! மதிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்கள். காரணம் தமிழக நிலவரம் அப்படி. இன்று தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் இருந்தால் இப்படியெல்லாம் நடக்காது. நடக்கவும் துணிய மாட்டார்கள்.

"தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டு மீன் பிடிப்பவர்களுக்கும்,  அத்து மீறல் செய்யும் படகுகளுக்கும் 2 கோடி முதல் 20 கோடி வரை அபராதமும், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும்" என்கிற புதிய சட்டம்  இலங்கை அரசாங்கம் தமிழக மீனவர்களை  மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை என்றே எடுத்துக் கொள்ளலாம். அதே போல இந்திய அரசாங்கமும் தமிழக மீனவர்களை இந்தியர்களாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை, தமிழர்களாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே சொல்லலாம்.  இப்படி ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கு இந்தியாவின் ஆசியும் அவர்களுக்கு உண்டு என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்திய அரசு எந்த ஒரு கருத்தையும் கூறாமல் மௌனமாக இருப்பதே அதற்குச் சான்று.

மோடி அரசு இரண்டு விதமான இலாபங்களை இதன் மூலம் அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். மோடியின் செல்லப்பிள்ளை என்று சொல்லப்படும் இலங்கை அரசு, தமிழகத்திற்கு எதிராக செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் இலங்கை அரசுக்கு ஆதரவு அளிக்கிறது. அடுத்து,  ஒட்டு மொத்த தமிழக ஆளுங்கட்சி ஒரே குரலில், தமிழகத்திற்கு எதிராக மோடி அரசு எதனைச் செய்தாலும், அதனையும் ஆதரிக்கத் தயார் நிலையில் இருக்கிறது. ஆக, மோடி தமிழகத்திற்கு என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறாரோ அத்தனையும் அவரால் இப்போது செய்ய முடியும். அனைத்தும் தமிழர் நலனுக்கு எதிரானது என்பது தான் வருத்தமான செய்தி.

தமிழ் நாட்டை ஏதோ அயல் நாடு போல் பிரதமர் மோடி எண்ணுவதே இப்போது தமிழ்  நாட்டுக்கு உள்ள பிரச்சனை. அவர் எப்போது தமிழ் நாடு இந்தியாவின் ஒரு மாநிலம் என்று எண்ணுகிறாரோ அப்போது தான் தமிழ் நாட்டுக்கு விடிவு காலம் வரும்.

அது வரை தமிழக மீனவர் பிரச்சனை தொடரத்தான் செய்யும். சுட்டுத்தள்ளத்தான் செய்வார்கள். பறிமுதல் நடக்கத்தான் நடக்கும்.  பார்த்துக்  கொண்டிருப்பது தான்  தமிழனின் இன்றைய நிலை.

கேட்க நாதியற்ற சமுகமாக இன்று தமிழன் வாழ்கிறான். ஐயா! கலைஞரே வாழ்க! ஐயா! ஸ்டாலினாரே வாழ்க! இருவருமே சேர்ந்து கச்சத்தீவை சிங்களவனுக்குத்  தாரை வார்த்தீர்கள். இப்போது நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள்.  தமிழன் அழுது கொண்டிருக்கிறான்.


Tuesday 11 July 2017

சீன மாணவர்கள் குறைகிறார்கள்..?


சீனப் பள்ளிகளில் சீன மாணவர்கள் குறைந்து கொண்டு வருவதாக துணைக்கல்வி அமைச்சர் டத்தோ சோங் சின் வூன் கூறியிருக்கிறார்.

சீன மாணவர்கள் குறைவதற்கான காரணம் சீனர்களிடையே பிறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருவதினால் சீன மாணவர்களின் எண்ணிக்கையிலும் அந்தச் சரிவு காணப்படுவதாக அவர் கூறினார். 

ஆனாலும் சீனப் பள்ளிகளின் வளர்ச்சி மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. காரணம் சீனர் அல்லாத மற்ற இனத்து மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சீனப் பள்ளிகளில் கூடிக்கொண்டு வருவதே காரணம்.

நாம் எப்போதுமே ஒரு தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம்.  மலாய் தேசிய பள்ளிகளே எல்லா இனத்தாருக்கும் பொதுவானது என்பது தான் அது. ஆனால் அது பொதுவான, எல்லா இனத்தாருக்கும், ஏற்றப் பள்ளிகளாக இல்லை என்பதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம். தேசியப் பள்ளிகளைப் பொறுத்துவரை அவை இஸ்லாமியப் பள்ளிகளாகச் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுவதுண்டு. அப்படித்தான் அவைகள் செயல்படுகின்றன என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. மேலும் இனப்பாகுபாடும் மாணவர்களிடையே ஆசிரியர்களால் வளர்க்கப்படுகின்றன. மலாய் அல்லாத மாணவர்கள் பல வழிகளில் ஒதுக்கப்படுகின்றனர் என்றும் குற்றச்சாட்டுக்களும் உண்டு.  தேசியப்பள்ளிகள் எல்லா மாணவர்களுக்கும் ஏற்றப் பள்ளிகளாக அமையவில்லை அதற்குப் பதிலாக சமயத்தை வளர்க்கும்  பள்ளிகளாக அவைகள் இயங்குகின்றன எனச் சொல்லப்படுகின்றது. பொதுவாக தேசியப் பள்ளிகளின் தரம் என்பது தரமற்றதாகவே இருக்கின்றது என்பது பெற்றோர்களின் முடிவு.

இந்த நிலையில் சீனப் பள்ளிகளில் மலாய்க்கார, இந்திய மாணவர்களின் அதிகரிப்பு என்பது சீனப்பள்ளிகள் வருங்காலங்களில் எல்லா இனத்து மாணவர்களும் ஏற்கக் கூடிய பள்ளிகளாக அமையும் என்பது தான் உண்மை நிலை. அது மட்டும் அல்லாமல் சீனப்பள்ளிகளின் கல்வித் தரம் தேசியப் பள்ளிகளை விட சற்று உயர்வாகவே இருக்கிறது என்பதே பெற்றோர்களின் கணிப்பு. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு என்பது சீனப்பள்ளிகளில் அதிகம்.

இன்றைய நிலையில்  சீனப் பள்ளிகளில் பயிலும் இந்திய, மலாய்க்கார மாணவர்களின் எண்ணிக்கை 18 விழுக்காடு என்பதாக துணைக்கல்வி அமைச்சர் கூறியிருக்கிறார். அதே சமயத்தில் இந்த எண்ணிக்கை 30 விழுக்காடு வரை அதிகரிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்போதும் சரி, எப்போதும் சரி பெற்றோர்கள் தரமானக் கல்விக்கே முதலிடம் கொடுப்பர். அது சீனப்பள்ளிகளுக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். 


Monday 10 July 2017

வறுமையை ஒழிப்பது கல்வியே!


துணைப்பிரதமர்,  டத்தோஸ்ரீ அகமது சாகிட், இந்திய அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசும் போது இந்தியர்களின் வறுமையை ஒழிக்க கல்வியே சிறந்த சாதனம் என்று வலியுறுத்திப் பேசியிருப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.

உண்மையைச் சொன்னால் இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. ஆனால் நமது இனத்தவருக்கு அடிக்கடி சொல்லித்தான் இதனை நாம் புரிய வைக்க வேண்டியுள்ளது. இன்னமும் நாம் தான், நமது இனத்தவர்கள் தான்,  கல்வியில் பின் தங்கியிருக்கிறோம். எல்லாக் காலங்களிலும் நமது தலைவர்கள் இதனை வலியுறுத்தித்தான் வருகின்றனர். 

நம்மிடையே வறுமையே முக்கியத் தடையாக விளங்குகிறது என்பது தான் உண்மை. தங்களது குழைந்தைகள் படித்து நல்ல நிலமைக்கு வர வேண்டும் என்பதில் எல்லாப் பெற்றோர்களுக்கும் அக்கறையும், ஆர்வமும் உண்டு. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் கல்வியே நல்லதொரு  வியாபாரமாகி விட்டது. அரசாங்கப் பள்ளிகள் என்றாலும் அங்கும் அப்படி ஒன்று அனைத்தும் இலவசம் என்று சொல்லுவதற்கில்லை. அங்கும் பணம் தான். முக்கியமானப் பிரச்சனை என்பது பள்ளிப் பிள்ளைகள் பள்ளிக்குப் போகும் பேருந்து கட்டணம். இதனைக் கட்ட முடியாமல் பல பெற்றோர்கள் திணறுகின்றனர்.

நமது நாட்டில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் இனம் என்றால் அது நமது இனம் தான். நாம் தான் பலவகைகளில் பாதிக்கப்படுகின்றோம். 

நமது துணைப்பிரதமர் சுட்டிக்காட்டியிருப்பது போல கல்வி தான் முன்னேற்றத்துக்கான முதல்படி. இன்றைய மலாய்ச் சமூகத்தின் முன்னேற்றம் என்பது கல்வியில் இருந்து தான் ஆரம்பமாகிறது. ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் மிகவும் பின் தங்கியிருந்தனர். அவர்களின் கல்வி பொறுப்பை அரசாங்கம் எடுத்துக் கொண்ட பின்னர் அவர்களின் முன்னேற்றம் கிடு கிடு என்று உயர்ந்துவிட்டது. இன்றைய நிலையில் அவர்களுக்குக் கல்வியின் அவசியத்தைப் பற்றி யாரும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஒரு பின் தங்கிய சமூகம் என்னும் நிலையில் இந்திய சமூகத்திற்கு அரசாங்கத்தின்  கருணைப் பார்வை மிகவும் தேவைப்படுகிறது.  அரசாங்கத்தின் உதவி இல்லாமல் கல்வியில் இந்தியச் சமூகம் முன்னேறுவது கடினம். மேற்கல்வி பயில இப்போது வாய்ப்புக்கள் கொடுக்கப் படுகின்றன என்பது மகிழ்ச்சியான ஒன்று என்றாலும் குறைந்த பட்சம் 10 விழுக்காடு கொடுக்கப்பட்டாலே கல்வித் துறையில் நமது சாதனை நிறைவாக இருக்கும். நாம் இன்னும் நிறைய பட்டதாரிகளை உருவாக்கும் நிலையில் இருக்கிறோம். 

இன்று மேற்கல்வியை விட கீழ் நிலையிலேயே நமது நிலை மிகவும் மோசமாக உள்ளது.    இடைநிலைக் கல்வி என்பது எஸ்.பி.எம். மோடு முடிவடைகிறது என்றாலும் அந்தக் கல்வியைப் பெறும் முன்பே சுமார் ஏழாயிரம் மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறி விடுவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. எஸ்.பி.எம்.மில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் அவர்களுக்கு டிப்ளோமா பெறும் அளவுக்கு வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகின்றன.  ஒவ்வொரு ஆண்டும் ஏழாயிரம் மாணவர்கள் வெளியேறுகிறார்கள் என்றால்  வெளி உலகில் அவர்கள் நிலமை என்ன? இவர்களில் எத்தனை பேர் குண்டர் கும்பல்களிலும், குடிகாரர்களாகவும், தீயச் சக்திகளுடனும் தங்களை இணைத்துக் கொள்ளுகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்?

கல்வி என்பது இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான முதல் படி.  வறுமையை ஒழிப்பதற்கு கல்வியே சிறந்த சாதனம்.  விழிப்புணர்ச்சி பெற கல்வியை விட வேறு சிறப்பானது எதுவும்  இல்லை.    

அனைவரும் கல்வி பெறுவோம்! கல்வி கற்ற சமுதாயம் என பெயர் எடுப்போம்!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    

Sunday 9 July 2017

கேள்வி - பதில் (50)



கேள்வி


ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மீண்டும்   உச்சநீதிமன்றத்தில் 
மிருகவதை நடந்துள்ளதாக புதிய மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளதே?


பதில்

ஆமாம்! அத்தோடு மட்டும் அல்ல.  தமிழக அரசின் மிருகவதைத் திருத்தச்  சட்டத்தை ரத்து செய்யவும் கோரியுள்ளது. இனி அடுத்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஏதேனும் பிரச்சனை வருமா என்று தெரியவில்லை.  இப்போதைக்கு ஜல்லிக்கட்டு ஆடி ஓடி அசந்து போனதால் ஒரு சத்தமும் ஜல்லிகட்டு ஆர்வலர்களிடமிருந்து வரவில்லை. அவசரப்பட ஒன்றுமில்லை. இனி ஐந்து ஆறு மாதங்கள் இருக்கின்றன என்பதால் அதன் எதிரொலி வர தாமதமாகலாம். இவர்களின் தாமதம் அவர்களின் வெற்றியாகக் கூட இருக்கலாம்.  பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சட்டம் என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. தமிழக அரசின் மிருகவதைச் சட்ட்த் திருத்தத்தை   ரத்து  செய்யும் அதிகாரம் யாருக்கு உண்டு  என்பது தெரியவில்லை. ஆனால் அப்படி  உண்டு என்பதால் தான் பீட்டா அப்படி ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறது என்று நம்பலாம். காரணம் நல்லதைச் செய்ய நாலு பேர் இருந்தால் கெடுதலைச் செய்ய ஒரு எட்டு பேராவது இருப்பான்!

இம்முறை பீட்டா கொஞ்சம் கூடுதல் பலம் பெற்றிருக்கிறது என்பது கவனத்திற்குரியது. தமிழ் நாடு இப்போதைக்கு ஒரு பலவீனமான அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறது.  எப்படிப் பார்த்தாலும் அது பா.ஜ.க. வின் கிடுக்கிப் பிடியில் ஊசாலாடிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க.  எதைச் சொன்னாலும் "ஆம்" என்று தலையாட்டுவதற்கு அ.தி.மு.க.வினர் வரிசையில் நிற்கிறார்கள். பீட்டா என்றாலும் பா.ஜ.க. என்றாலும் ஒன்று தான். இந்த நேரத்தில் பா.ஜ.க. என்றாலும் சரி பீட்டா என்றாலும் சரி அவர்களது காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவார்கள். எதிர்ப்பைக் காட்டினால் காவல்துறையை வைத்து இளைஞர்களை அடக்கிவிடுவார்கள்!

ஆக, இம்முறை பீட்டா வின் கை ஓங்கியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. இங்கு நீதி, நியாயம் எல்லாம் பா.ஜ.க. பார்க்கப் போவதில்லை. இன்றைய நிலையில் தமிழகத்தில் என்ன என்ன காரியங்கள் சாதிக்க முடியுமோ அத்தனையையும் பா.ஜ.க. சாதித்துக் கொள்ளும். அதில் ஜல்லிக்கட்டும் ஒன்று.

பொறுத்திருந்து பார்ப்போம்!

Friday 7 July 2017

கேள்வி - பதில் (49)


கேள்வி

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது பற்றி இன்னும் முடிவெடுக்க வில்லையா?


பதில்

இன்னும் பேச்சு மூச்சு எதனும் அவர் பக்க இருந்து வரவில்லை. பார்த்தால் அவர் மீண்டும் பழைய நிலைக்கே போய்விட்டார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது; அப்படி இல்லாமலும் இருக்கலாம். காரணங்கள் பல.

முதலாவது: அவர் இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது வாய் திறந்தால் அவருடைய படங்கள் பாதிக்கப்படலாம்.  அதனால் இப்போது அவர் வாயைத் திறக்கக் கூடாது என்பதாகத் தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்கலாம்.

இரண்டாவது: அவர் எதைப் பேசினாலும் அதனை ஊடகவியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகிய அனைத்துத் தரப்பும் ஆதரித்தும் எதிர்த்தும் எழுதியும், பேசியும் பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். அதற்கு ஒன்றும் பேசாமல் இருப்பதே நல்லது என்று அவர் நினைக்கலாம். அவர் பேசாமல் இருந்தால் அதனையும் ஒரு பிரச்சனையாக்கி விவாதத்திற்கான பொருளாக்கி விடுகின்றனர் தொலைக்காட்சியினர்.

மூன்றாவது:  அவர் பேசுவதை ஊடகங்கள், அரசியல்வாதிகள்  முழுமையாகப் போடுவதில்லை; பேசுவதில்லை. அவர்களுக்கு எது தேவையோ அதனை மட்டும் எடுத்துக்கொண்டு விவாதம் செய்கின்றனர். அதனால் அவர் சொல்ல வந்தது எதுவும் மக்களுக்குப் போய்ச் சேருவதில்லை. ஒரு பக்கம் அவரைக் கெட்டவராக  இன்னொரு பக்கம் அவரை நல்லவராகக் காட்டும் வேலை தான் நடக்கிறது. 

இதனாலேயே அவர் "எதற்கு வம்பு" என்று மௌனியாக இருக்கலாம். ஒரு வேளை அரசியலுக்கு வந்த பிறகு பேசுவதை வைத்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கலாம். 

நாம் சொல்ல வருவதெல்லாம் இது தான்: அவர் அரசியலுக்கு வந்து தமிழ் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவரால் தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்கும். அவர் பா.ஜ.க. வுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று நினைத்தால் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது.

முடிவு அவர் கையில்!


எத்தனை மொழிகள் உங்களுக்குத் தெரியும்?



மலேசியர்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்? எழுதப்படிக்க என்றால் மலாய்க்காரர்களுக்கு: மலாய், ஆங்கிலம் ஒரு சிலருக்கு அரபு.  சீனர்கள்: மலாய், ஆங்கிலம், மெண்டரின் ஒரு சிலருக்கு மெண்டரின் தெரியாது. இந்தியர்களுக்கு: மலாய், ஆங்கிலம், தமிழ், ஒரு சிலருக்கு தமிழ் தெரியாது.

அது சரி, பேசத் தெரிந்த மொழிகள்? பொதுவாக மலாய் அடுத்ததாக ஆங்கிலம். அரைகுறை தமிழும், அரைகுறை மெண்டரினும் பலருக்கும் தெரியும்! 

சரி, ஏன் இந்தப் பீடிகை? சமிபத்தில் ஒர் தமிழ் இளைஞர் என்னை திணறடித்து  விட்டார்! அவர் ஒரு பட்டதாரி இளைஞர்.ஏற்கனவே வேலை செய்த நிறுவனம் "ஊத்தி" கிட்டதினால் புதிய வேலைக்கு மனு செய்து கொண்டிருந்தார். அவருக்கு எழுதப் படிக்கத் தெரிந்த மொழிகள் மலாய், ஆங்கிலம், தமிழ். பேசத் தெரிந்த மொழிகள்? ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறேன், நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்:  இந்தோனேசிய மொழி, தாய்லாந்து மொழி, வங்காளம், இந்தி, தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம், மெண்டரின், ஹோக்கியன்,  வியட்னாம், மியான்மார் - மற்றவைகள் எனது ஞாபகத்திற்கு வரவில்லை! இத்தனை மொழிகளையும் ஏதோ ஓரளவு தெரிந்து வைத்திருப்பார் என்றே நினைக்கிறேன்.   ஆனால் இதில் ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்னவென்றால் இத்தனை மொழிகளும் தனக்குத் தெரியும் என்று தனது வேலைக்கான விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறாரே அது தான் என்னை கவர்ந்தது! அது ஒரு துணிச்சலான விஷயம் தான்! நன்றாகப் பாருங்கள்.  நாமும் ஏறக்குறைய அந்த மொழிகளோடு ஒரளவு தொடர்பு உள்ளவர்களாகத்தான் இருக்கிறோம். ஆனால் அதனை ஒரு கூடுதல் தகுதியாக  அந்த இளைஞர் பயன்படுத்தியிருக்கிறார். அது ஒரு வித்தியாசமான அணுகுமுறை தானே!

நான் சொல்ல வருவது இது தான். தெலுங்கு மொழி தெரிந்தவர்கள் என்றால் உங்களுக்கு தெலுங்கு மொழி தெரியும் என்று குறிப்புடுங்கள். மலையாள மொழி தெரியும் என்று குறிப்பிடுங்கள். இவைகளெல்லாம் உங்களுக்கு ஒரு கூடுதல் தகுதியைக் கொடுக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். உங்களிடம் யாரும் மலையாள மொழியில் நேர்காணல் காணப்போவதில்லை. அதிகமாக ஒரு மொழி தெரியும், அதுவே ஒரு கூடுதல் தகுதி.

பல மொழிகள் தெரிவது நல்ல விஷயம் தான். நம்மில் பலர் சீன மொழி பேசுகிறோம். சீனர் தமிழ் பேசுவது உண்டு. தமிழ் பேசும் மலாய்க்காரரும் உண்டு. இப்படி யார் என்ன மொழி பேசுவார் என்பதே நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. எனக்குத் தெரிந்த சீன நண்பன் ஒருவன் தமிழ் பேசுவான், மலையாளம் பேசுவான் - இதையெல்லாம் விட நிமிடத்திற்கு நிமிடம், நாம் கேட்டிராத, நமது பாட்டிகளின் கிராமத்து பழமொழிகளை அள்ளி அள்ளி வீசுவான்! நமது அக்கம் பக்கத்தில் யார் இருக்கிறார்களோ இயல்பாகவே அவர்களின் மொழி நமக்கும் ஒட்டிக்கொள்ளும்!

வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளையும் குறிப்பிடுங்கள். அலட்சியம் வேண்டாம். இந்த கூடுதலான  பேசும் மொழி ஆற்றல் ஒரு பெரும் தகுதியே.

நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்!

                      

Wednesday 5 July 2017

மஞ்சளை வெறுக்கும்....?


தினசரி வாழ்க்கையில் நம் வீட்டுப் பெண்கள் நிறையவே மஞ்சளைப் பயன் படுத்துகிறார்கள்.  பல வகைகளில்; அதில் மஞ்சளை முகத்தில் பூசுவதும் ஒன்று. ஆம்; நமது பெண்கள் மஞ்சளை ஒப்பனைப் பொருளாகவும் பயன் படுத்துகின்றனர். இன்றளவும் அது தொடரத்தான் செய்கிறது.  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மஞ்சள் நம்மோடு கலந்துவிட்டது. அதனை யாரால் வெறுக்க முடியும்? வெறுக்க முடியுமா? முடியும்!

 தமிழர்களில் ஒரு சிறுபான்மையினர் மஞ்சளை வெறுக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் மஞ்சள் நிறத்தைக் கூட வெறுக்கின்றனர். 

சமீபத்தில்  நக்கீரன்  இணைய தளத்தில் "மஞ்சள்" என்னும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. முழுமையாக இல்லை என்றாலும் ஒரு சிறு பகுதி தான். அது போதும், அது சொல்ல வரும் செய்தினைப் புரிந்து கொள்ள.

அருந்ததி என்று சொல்லப் படுகின்ற ஒரு சிறுபான்மை தாழ்த்தப்பட்ட தமிழினம். அவ்ர்கள் தமிழர்கள் தான். ஆனால் அவர்கள் செய்கின்ற வேலை தான் நம்மைத் தலை குனிய வைக்கிறது.  தமிழன் இவ்வளவு கேவலமானவனா என்று நினைக்கத் தோன்றுகிறது.  ஒரு சகத் தமிழனை, தமிழன் நடுத்துகின்ற விதத்தைப் பார்க்கின்ற போது - இதற்கு யார் பொறுப்போ - அவன் நான்று கொண்டு தான் சாவான். அது தான் அவன் தலையில் எழுதப்பட்ட விதி!

மலத்தை கையால் அள்ளுகின்ற இந்த அருந்ததியினர் தனது சக மனிதனைப் பற்றி என்ன நினைப்பர்? இதற்கு யார் பொறுப்பு? அரசாங்கம் இதனை மாற்ற முடியாதா? மனம் வைத்தால் எல்லாமே முடியும். மற்ற நாடுகளிலெல்லாம் மலத்தைக் கையால் தான் அள்ளுகிறார்களா?  மற்ற நாடுகளில்லெல்லாம் முடியும் போது தமிழ் நாட்டில் முடியாதா?

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதற்கு ஒரு முடிவு கட்டமுடியவில்லை என்றால் அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்? இதனை ஒரு கேவலமாக அவர்கள் நினைப்பதில்லையா?

இந்த மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு இந்த வேலையைச் செய்கின்றனர். வேறு வேலைகள் கொடுக்க அவர்களுக்கு ஆளில்லை. கொடுக்க யாரும் தயாராக இல்லை. அவர்கள் பிள்ளைகள் பள்ளிக்குப் போக முடிவதில்லை. பள்ளியில் அவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். பள்ளிகளுக்குப் போனாலும் அங்கும் அவர்களுக்கு அந்த மலம் அள்ளும் வேலைக் கொடுக்கப் படுகின்றது.  படித்த ஆசிரியனே இவர்களை ஒதுக்குகின்றான். ஒரு சமூகத்தையே முன்னேற விடாமல் துரத்தி துரத்தி அடிக்கின்றனர். திரும்பத் திரும்ப  அந்த மக்கள் பிழைக்க வழியில்லாமல் அந்த மலக்குழியிலேயே இறங்கி வேலை செய்ய வற்புறுத்தப் படுகின்றனர். அவர்களைப் பாதுகாக்க எல்லா சட்டங்களும் இருந்தும் சட்டம் அதிகாரத்தில் உள்ளவர்களால் அசிங்கப்படுத்தப்படுகின்றது.

இந்த அருந்ததி மக்களின் சராசரி வயது நாற்பத்தைந்துக்கு மேல் போவதில்லை. பலதரப்பட்ட வியாதிகள் இவர்களுக்கு உண்டு.  அவர்கள் சாராயம் போட்டுத் தான் தங்களது வேலைகளைச் செய்ய முடியும். அந்த நாற்றத்தில் வேலை செய்ய வேறு வழியில்லை. அந்த நாற்றத்தைப் போக்க ஏதாவது 'செண்ட்' அடித்துக் கொள்ளுகின்றனர். கையால் மலத்தை அள்ளுவதால் கையால் சாப்பிட முடிவதில்லை. தங்களைச் சுற்றி அந்த நாற்றம் சுழன்று கொண்டே இருக்கும். 

இவர்களின் அவலத்தை யாரும் கண்டு கொள்ளுவதாகத் தெரியவில்லை. அரசியல் தான் பண்ணுகிறார்களே தவிர அருந்ததியரைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆமாம், அருந்ததியர்கள் இல்லாவிட்டால் இந்த மேல்தட்டு வர்க்கம் என்ன செய்யும்?  ஏதாவது ஒரு வழியைக் கண்டுப்பிடித்துத் தானே ஆக வேண்டும்? அதை இப்போதே செய்தால் என்ன?

ஆமாம், ஏன் இந்த மஞ்சள்? மலம் மஞ்சள் தானே அவர்கள் வெறுக்கத்தானே செய்வார்கள். 




Sunday 2 July 2017

நன்றியுள்ள நாய்!


நாய்களைப் பற்றி பேசும் போது "நன்றியுள்ளது நாய்" என்கிறோம்.  காலங்காலமாக மனிதனுடனேயே வாழ்கின்ற மிருகம் நாய். அதனை ஒரு மிருகமாக நாம் பார்ப்பதில்லை. நமது வீட்டில் வாழ்கின்ற, வளருகின்ற நாய்களை நமது வீட்டில் வளருகின்ற பிள்ளைகளாகவே நினைத்து  வளர்ப்பவர் நிறையவே உண்டு. காரணம் அந்த அளவுக்கு அது நன்றியுள்ள ஒரு பிராணியாக நமது மனதிலே இடம் பிடித்து  விட்டது.

சமயங்களிலே இந்த நன்றியுள்ள பிராணியிடம் அத்து மீறல்களும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. சமீபத்தில் எனக்குத் தெரிந்த குடும்பத்தில் வளர்ந்த ஒரு நாய் - அதனை மூன்று நாள் குட்டியாக இருந்த போது எடுத்து வளர்த்து இப்போது மூன்று ஆண்டுகள் ஆன பின்னர் - ஒரு நாள் அவர்கள் வீட்டுக் குழந்தையை கடித்துக் குதறிவிட்டது. கத்திக் கழுத்துக்குப் போகும் முன்னர் குழந்தைக் காப்பாற்றப்பட்டது. அது எப்படி ஏன் என்றெல்லாம் யோசிக்க யாருக்கும் நேரம் இல்லை. அடுத்த நிமிடமே அந்த நாய் வீட்டை விட்டு வேளியேற்றப்பட்டது.  வீட்டிலோ விதவிதமான படங்கள், ஏராளமான ஆல்பங்கள் அனைத்தும் கிழித்து எறியப்பட்டன! யாருக்காக அழுவது?  குழந்தைக்காவா, நாய்க்காகவா? ஆனாலும் அந்த நன்றியுள்ள ஜீவன் ஏன் அப்படி நடந்து கொண்டது என்பதை அந்த நாயைத் தவிர வேறு யார் அறிவார்?

ஏன் எதற்காக இந்த பின் நகர்வு? சமீபத்தில் வலைத்தலத்தில்  பார்த்த ஒரு காட்சி  மனத்தை உருக்கிவிட்டது. ஒரு நாயை, ஒரு மனிதர் தனது காரின் பின்னால் கட்டிவிட்டு காரை ஓட்டிக் கொண்டு போகிறார். அந்த நாய் காரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கீழே விழுந்து விட்டது. அவர் காரை நிறுத்தவில்லை. ஓடிக் கொண்டே இருக்கும் காரின் பின்னால் அந்த நாய் தரையிலேயே இழுத்துக் கொண்டு போகப்படுகிறது. அந்த நேரத்திலும் அந்த நன்றியுள்ள பிராணி தனது எஜமான விசுவாசத்தை மறக்காமல் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது. அந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது? மனதைப் பிழிந்து விட்டது. இப்படி எல்லாம் வாய் பேச முடியாத ஜீவன்களை வதைப்பது மிக மிகக் கொடூரம். அந்தக் கொடூரன் ஏன் அப்படி செய்தான் என்பது நமக்குத் தெரியாது. வேண்டாத நாய்களைக் கவனிக்க எத்தனையோ காப்பகங்கள்  உள்ளன. அவர்களிடம் ஒப்படைப்பதே முறை. வேறு வகையான சித்திரவதைகள் கண்டிக்கத்தக்கது.

நாய் எல்லாக் காலத்திலும் நன்றியுள்ள பிராணி தான். அது தனது குணத்தை மீறுகிறது என்றால் அது ஏன் என்பதை நாம் தான் கண்டறிய வேண்டும். அதற்குப் பொறுமை தேவை.

மனிதன் செய்கின்ற அட்டூழியங்களை விடவா நாய் செய்கிறது? நாய், நன்றியுள்ள பிராணி.  அது என்றென்றும் நன்றியுடையது தான். அதனை பேணி வளர்ப்போம்.


Saturday 1 July 2017

அமைச்சரே தவறான முன்னுதாரணம்!


இந்திய மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் செய்தது எந்த வகையிலும் நியாயமாகப் படவில்லை. சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பது என்பது சரியான  எடுத்துக்காட்டு அல்ல. விவசாய அமைச்சர் என்பதால் ஆடு, மாடுகளைப் பார்த்து அவருக்கும் இப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டு விட்டதோ, தெரியவில்லை! 


அமைச்சர் பதவி என்பது ஏதோ பீடி, சிகிரெட் விற்பவன் என்னும் மனநிலையில் இருப்பது அல்ல. மிகவும் உயர்வான பதவி. மிகவும் கௌரவமான பதவி.  மிக முக்கியம்,  மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்க வேண்டிய ஒரு பதவி.

தூய்மை இந்தியா என்று சொல்லிவிட்டு அமைச்சரே தூய்மைக்கு ஒரு  மரியாதை கொடுக்காவிட்டால் பின்னர் யார் தான் கொடுப்பார்?  யார் தான் தூய்மைக்குப் பொறுப்பு? அது ஒவ்வொரு இந்தியனின் கடமை அல்லவா.

இந்தியாவைப் பற்றி பேசும் போது நம் கண் முன்னே நிற்பது அதன் அசுத்தம் தான். எத்தனையோ வழிபாட்டுத் தலங்களைப் பார்க்கிறோம். எங்கே போனாலும் முகத்தைச் சுழிக்கும் சூழல் தான். காரணம் அதன் அசுத்தம். பெரிய நாடு, நிறைய ஏழைகள் என்று சொல்லி நமக்கு  நாமே சமாதானம் அடைகிறோம்! ஆனால் இவைகள் எல்லாம் கலையக்கூடியவைகள் தான். அப்படி ஒன்றும் இமாலயப் பிரச்சனை அல்ல.  சுத்தத்தின் முக்கியத்துவம் சேர வேண்டியவர்களுக்குப் போய்ச்  சேரவில்லை. அதனால் தான் "தூய்மை இந்தியா திட்டம்" என்றெல்லாம் திட்டம் போட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் தான் மாண்புமிகு அமைச்சர் ராதா மோகன் சிங் ஒரு தவறான எடுத்துகாட்டாக - மற்றவர்களுக்குத் தேவையற்ற  முன்னுதாரணமாக - நகைச்சுவை நாயகனாக - மக்கள் முன் காட்சியளிக்கிறார்!  அமைச்சரே இப்படி என்றால் ஒரு சாராசரி மனிதன் என்ன நினைப்பான்? அமைச்சர் தன்னை 
விவசாய கால்நடைகளோடு ஒப்பிடுவது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது அல்லவா! வருந்துகிறோம்!