Saturday 25 February 2017

மழையில் நினைந்தால் என்ன?


காலை நேரம். மழை பெய்து கொண்டிருந்தது. நண்பரிடம் குடை இல்லை. மழையிலேயே நினைந்து கொண்டு வந்தார்.

"என்ன, இப்படி மழையில் நினைந்து கொண்டு வருகிறீர்களே?" என்று கேட்டேன்.

"ரொம்ப சந்தோஷம்! இப்படி ஒரு சந்தோஷம் மீண்டும் கிடைக்குமா, யார் கண்டார்? சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை அனுபவிப்போமே!" .நண்பர் அந்த அனுபவத்தை ரசித்து மகிழ்ந்து போனார்!

ஆம்! இது தான் ஒர் அற்புதமான மனநிலை. குடை இருந்தால் குடையைப் பயன்படுத்தலாம். குடை இல்லையா மழையில் நினைவோம்! அவ்வளவு தான்! இதனைப் பெரிது படுத்த என்ன இருக்கிறது?

நாம் வேண்டுமென்றே எதனையும் செய்யவில்லை. குடை இல்லை அதனால் நினைந்தோம்.

ஒரு சிலர் இதனை ஒரு பிரச்சனையாகவே பார்ப்பார்கள். அடாடா1 மழையில் நினைந்து விட்டேன், சளி பிடிக்கப் போகிறது! காய்ச்சல் வரப்போகிறது! ஏதோ உலகமே அழிந்துவிடுவது போல ஒரே பிதற்றல்! ஒரே புலம்பல்!

ஒன்றுமில்லை என்றால் ஒன்றுமில்லை தான்! ஏதோ ஆகிவிடும் என்றால் ஏதோ ஆகிவிடும் தான்! இதில் குழப்பமே வேண்டாம்!

எனக்குத் தெரிந்த மருத்துவ உதவியாள நண்பர். கொஞ்சம் வயதானவர்.மழை என்றாலே பயப்படுவார், அப்படியே மழையில் நினைந்து விட்டால் உடனே மருந்து மாத்திரை என்று உள்ளே தள்ளுவிடுவார்!

மழையில் நினைந்துவிட்டால் உடனே தனக்கு நிம்மோனியா காய்ச்சல் வரும் என்று புலம்பிக் கொண்டிருப்பார்!  கடைசிக் காலத்தில் நிம்மோனியா காய்ச்சலால் அவர் இறந்து போனார்!

அவர் நிம்மோனியா காய்ச்சல் என்றாலே மிகவும் கடுமையாகக் கருதுபவர். அப்படியே அந்தக் காய்ச்சல் இல்லை என்றாலும் அவர் யாரையும் நம்பிவிட மாட்டார்! மழையில் நினைந்தால் நிம்மோனியா காய்ச்சல் வரும் என்பதை அவர் தீர்மானித்து விட்டார். யார் அவரை மாற்ற முடியும்?

மழையில் நினைவதெல்லாம் ஒரு சாதாரண விஷயம். நினைந்து விட்டால் ஒரு துண்டை எடுத்து தலையைத் துவட்டிவிட்டு அடுத்த வேலைக்குத் தயாராக வேண்டியது தான். அதனைப் பெரிது படுத்தி தனக்குத் தானே வியாதியை வரவழைத்துக் கொள்ளுவது ஒரு சிலருக்குப் பொழுது போக்காக இருக்கலாம்! ஆனால் பயனற்ற பொழுது போக்கு!

எல்லாமே நமது எண்ணங்கள் தான்!   உங்கள் எண்ணங்களை வலிமையாக வைத்துக் கொள்ளுங்கள்!                                                                                                                                                        

Thursday 23 February 2017

தனியார் கல்லுரிகளா? யோசியுங்கள்!


தனியார் கல்லுரிகளுக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்புகிறீர்களா, கொஞ்சம் யோசியுங்கள். நீங்கள் பணம் உள்ளவர்களாக இருந்தால் நீங்கள் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நிச்சயமாக சிறப்பான கல்வி நிலையங்களையே தேர்ந்தெடுப்பீர்கள்.

நல்ல முறையில் இயங்கும் கல்லுரிகளால் உங்களுக்குப் பிரச்சனை இல்லை. அவர்கள்,  நல்ல பாடத்திட்டங்கள், நல்ல பேராசிரியர்கள்,  நல்ல விரிவுரையாளர்களைக் கொண்டிருப்பார்கள். நாம் அவர்களைக் குறைச் சொல்லவில்லை.

ஆனால் நாம் இங்கு குறிப்பிடுகின்ற கல்லுரிகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளால் நடத்தபெறுகின்ற கல்லுரிகள்.  தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இவர்கள் கல்வி அமைச்சிடமிருந்து தேவையான சான்றிதழ்களைப் பெற்று விடுகின்றனர். கல்வி அமைச்சில் வேலை செய்பவர்களுக்கும் இதில் பங்கு உண்டு

இவர்களின் முக்கிய நோக்கம் கல்லுரிகள்  நடுத்துவது அல்ல. பணம் சம்பாதிப்பது மட்டுமே! மிகவும் உயரிய நோக்கம்! ஏய்த்துப் பிழைக்கும் ஒரு படித்த கூட்டம்.

இவர்கள் கல்லுரிகள் என்று பெயரை வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு கூட்டம். இவர்களின் விளம்பரங்கள் பெரும்பாலும் தமிழ்ப்பத்திரிக்கைகளில் மட்டுமே வரும்.

இவர்கள் மலாய்க்கார மாணவர்களையோ, சீன மாணவர்களையோ விரும்புவதில்லை. அவர்களும் இவர்கள் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. அவர்களுடைய  இலக்கு என்பது தமிழ் - இந்திய மாணவர்கள் மட்டும் தான். பெரும்பாலும் ஏழை மாணவர்கள் தான் இவர்களின் இலக்கு. அவர்கள் கொடுக்கும் கல்வி தரமான கல்வி என்றால் கூட நாம் அவர்களை மன்னித்துவிடலாம். தரமற்ற கல்வி, தரமற்ற விரிவுரையாளர்கள்  - ஏதோ ஒரு டியுஷன் வகுப்பு நடத்துவது போல கல்வி நிலையங்களை இவர்கள் நடுத்துகிறார்கள்! கல்வி அமைச்சில் உள்ள சில கருப்பு ஆடுகளின் பின்னால் இவர்கள் ஒளிந்து கொண்டிருப்பதால் இவர்கள் தொடர்ந்து ஏழை மாணவர்களை ஏய்த்துக் கொண்டும், ஏமாற்றிக் கொண்டும் இவர்கள் பிழைப்பை நடுத்துகிறார்கள்!

பெற்றோர்களே! இனி ஏமாற வேண்டாம். தொடர்ந்து நாம் ஏமாறக் கூடாது! நம் இனத்தவனே நம்மை ஏமாற்றுகிறான். இது தான் துக்கம். முடிந்தவரை அரசாங்கக் கல்லுரிகளைப் பயன்படுத்துங்கள். இந்த ஆண்டு இடம் இல்லையென்றால் அடுத்தஆண்டு இடம் கிடைக்கலாம். தனியார் கல்லுரிகளில்சேர்வதின் மூலம் பணத்தையும் இழந்து, தரத்தையும் இழந்து கடைசியாக ஒரு கடன்காரனாக உங்களை வெளியாக்குவார்கள்! இது தான் அவர்களது வாடிக்கை!

தனியார் கல்லுரிகளா? யோசியுங்கள்!


Wednesday 22 February 2017

கல்வி கற்ற சமுதாயமாக மாறுவோம்!


இன்று நமது இந்திய மாணவர்களுக்கு அரசாங்கக் கல்லுரிகளில் நிறையவே வாய்ப்புக்கள் அளிக்கப்படுகின்றன. இதனை நான் கண்கூடாகவே  பார்க்கிறேன்.

இந்த வாய்ப்புக்களைப் பலர் பயன்படுத்திக் கொள்ளவே செய்கின்றனர். ஆனால் ஒரு சிலர் தூரத்தைக் காரணம் காட்டி வாய்ப்புக்களை தவற விடுகின்றனர்.  பெண் பிள்ளைகளைக் கூட இப்போதெல்லாம் பெற்றோர்கள் தொலைவிலுள்ள  கல்லுரிகளுக்கு அனுப்பவே செய்கின்றனர்.

நமது பிள்ளைகளை நாம் நம்பத்தான் வேண்டும். அவர்கள் படிக்கத்தான் போகிறார்கள். சபா, சரவாக் போன்ற மாநிலங்களாக இருந்தாலும் அவர்களது நோக்கம் ஒன்றே: கல்வி மட்டுமே!

இப்படி வெளி மாநிலங்களுக்குப் படிக்கப் போகும் மாணவர்களுக்குக் குறிக்கோள் ஒன்று தான். பட்டதாரியாக வேண்டும்   

பெற்றோர்களே!  பிள்ளைகளைப்  படிக்க விடுங்கள். பட்டம் பெறப் போகிற மாணவர்களை, குழந்தைகளைப் போல் பார்க்காதீர்கள். அவர்கள் முதிர்ச்சி பெற்ற மாணவர்கள்.  அவர்கள் கெட்டுப் போவார்கள் என்றெல்லாம் நீங்களே ஒரு முடிவுக்கு வராதீர்கள்.  கெட்டுப்போக நினைப்பவன் நமது கூடவே இருந்தாலும் அவன் கெட்டுத்தான் போவான்! இதனையெல்லாம் ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

கல்வி என்பது இன்றைய நிலையில் எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல. இன்று பல குடும்பங்களின் முன்னேற்றங்கள் பிள்ளைகளின் கல்வியை வைத்துத் தான் ஆரம்பிக்கப்படுகிறது.. ஆமாம்! ஒருவன் கல்வி கற்றால் அந்தக் குடும்பத்திற்கே ஒரு வழிகாட்டல் கிடைத்து விடுகிறது.

ஓர் ஐந்து பிள்ளைகள்  உள்ள ஒரு குடும்பம்.  இரண்டாவது மகன் மட்டுமே படித்தவன். படித்த பின் அவனுக்குத் தலை நகரில் வேலை கிடைத்தது. அந்த ஐந்து பேரையுமே அவனுடன் கூட்டிக் கொண்டான்.அனைவருக்கும் தலைநகரிலேயே வேலை வாங்கிக் கொடுத்தான். இப்போது அந்த ஐந்து பேரின் பிள்ளைகள் அனைவரும் மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக, விமானிகளாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலை செய்து கொண்டும், அங்கேயே குடியுரிமை பெற்றுக் கொண்டும் வாழ்கிறார்கள். இது தான் கல்வி கொடுக்கும் வாய்ப்புக்கள். இத்தனைக்கும் அவர்கள் தோட்டப்புறத்தில் வாழ்ந்த ஒரு ஏழைத்தாயின் பிள்ளைகள்.  இது தான் கல்வி தரும் சிறப்பு.

உங்கள் பிள்ளைகளுக்குக் கல்வியைக் கொடுங்கள்.  அலட்சியப் படுத்தாதீர்கள். நமது சமுதாயத்தின் முன்னேற்றம் கல்வியால் மட்டுமே முடியும். கல்வியைக் கொடுத்துவிட்டால் அவர்கள் அவர்களது வாழ்க்கையைக் கவனித்துக் கொள்ளுவார்கள்.

தமிழ்ச் சமூகம் எல்லாக் காலங்களிலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த சமூகம். அதனை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். படித்த சமுதாயமாக பெயரெடுக்க வேண்டும்.

கல்வி கற்ற சமுதாயமாக மாறுவோம்!


Monday 20 February 2017

பொருளாதாரமே வலு சேர்க்கும்!


நமது சமுதாயம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இந்த முன்னேற்றம் என்பது தனிப்பட்டவர்களின் முயற்சி. பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக, கல்விக்காக பெற்றோர்கள் தங்களது வாழ்நாள்  சேமிப்புக்களை அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்!

ஒரு பக்கம் கல்விக்காகவும் செலவழிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பிள்ளைகள் தொழில் செய்ய, வியாபாரா முன்னேற்றத்திற்காகவும் தங்களின் சேமிப்புக்களைக் கொடுத்து உதவுகிறார்கள்.

ஒரு பக்கம் சேமிப்புக்களை இழந்து நின்றாலும் இன்னொரு பக்கம் பிள்ளைகளின் வளர்ச்சி பெற்றோர்களை மகிழ்ச்சி அடையைச் செய்கிறது. பிள்ளைகளின் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றோர்களும் விரும்புகிறார்கள்.

பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு மனிதனின் தனி முயற்சி.. தான் வளர வேண்டும் என்னும் தன் உள்ளே ஏற்படும் உந்துதல்.  ஏதோ  ஒன்று அவனை உந்தித் தள்ளுகிறது.

வளர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். பணத்தை அள்ளிக்கொடுங்கள் என்பது அதன் அர்த்தமல்ல. ஊக்கமூட்டும் வார்த்தைகளே போதும்.

இன்று நமது சமூகத்தில் நிறைய மருத்துவர்களைப் பார்க்கிறோம். வழக்கறிஞர்களைப் பார்க்கிறோம். அதற்கு மேல்...?  வேறு உயர் கல்விகள் இருக்கின்றன என்பதே பலருக்குத் தெரியவில்லை. படித்தவர்களுக்கும் தெரியவில்லை; படிக்காதவர்களுக்கும் தெரியவில்லை!

எந்தத் துறையை நாம் தேர்ந்தெடுத்தாலும் அதன் மூலம் நாம் நமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள முடியுமா என்பது தான் முக்கியம். மருத்துவர்கள் அனைவரும் பொருளாதார வெற்றி பெற்றவர்கள் என்று சொல்ல முடியாது. வழக்கறிஞர்கள் அரசியலுக்குப் போவதே அவர்கள் துறையில் வெற்றிபெற முடியவில்ல என்பதால் தான்.

எந்தக் கல்வியை நீங்கள் தெர்ந்தெடுத்தாலும் பாதகமில்லை. ஆனால் வெற்றி பெற வேண்டும் என்பது தான் முக்கியம். அதுவும் பொருளாதார வெற்றி என்பதே மிக மிக முக்கியம்.

பொருளாதார வெற்றி தான் இந்தச் சமுதாயத்தை தலை நிமிர வைக்கும். மற்றவர்களுக்கு நம் மீது ஒரு மரியாதை ஏற்படும்.

பொருளாதார வளர்ச்சியே நமது குறிக்கோளாக இருக்கட்டும்!

Sunday 19 February 2017

நமது சொத்துக்கள் நமக்கே!


ஆமாம்! மலேசிய நாட்டின் மூன்றாவது பெரிய இனம் நாம். நாம் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுவது நமது கையில் இல்லை. அது அரசாங்கத்தின் கொள்கை மாற்றத்தால் மாறுபடுகிறது. அவர்கள் வங்காள தேசிகள் தான் வேண்டும் என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஒர் இஸ்லாமிய தேசத்துக்கு நாம் உதவுகிறோம் என்றால் நாம் அதனைப் பார்த்துக் கொண்டு தான் இருக்க முடியும்!

ஆனால் நான் சொல்ல வருவது அது இல்லை. நமது சொத்துக்கள் நம்மிடமே இருக்க வேண்டும்.

நம்மிடையே பணக்காரர்கள் இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் சொந்த வீடு, சொந்த நிலம், சொந்த வியாபாரம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.  பெரிய வியாபாரம், சிறு வியாபாரம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் உங்கள் வீட்டையோ, நிலத்தையோ, வியாபாரங்களையோ விற்க வேண்டும் என்று நினைத்தால் முடிந்த வரை அதனை ஒரு இந்தியருக்கே விற்பனை செய்ய முயற்சி செய்யுங்கள். இது முக்கியம்.

நாம் எல்லாவற்றிலும் அலட்சியமாக இருக்கிறோம். நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உண்டு. மலாய்க்காரர்கள் தங்கள் நிலங்களை மற்ற இனத்தவருக்கு விற்க முடியாது. அது அரசாங்கத்தின் கொள்கை. சீனர்களுக்கு அது போன்ற அரசாங்க கொள்கைகள் இல்லை. ஆனால் அரசாங்கத்தை விட தங்களுக்குள்ளே கடுமையானக் கொள்கைகளை வைத்திருக்கின்றனர். அவர்கள் மற்ற இனத்தவர்களுக்கு தங்களது சொத்துக்களை விற்பதில்லை. அப்படியே அவர்கள் விற்கிறார்கள் என்றால் அதில் ஏதோ வில்லங்கம் இருப்பதாக அர்த்தம்.

எனது நண்பர் ஒருவர் ஒரு கடைவீட்டை சீன நண்பர் ஒருவரிடமிருந்து வாங்குவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. கூடுதலாகப் பணம் கொடுக்க முன் வந்தும் அவரால் வாங்க முடியவில்லை.

அது தான் சீன சமூகம். அவர்களின் சொத்துக்கள் நாட்டில் கூடுகின்றதே தவிர அவர்களுடைய சொத்துக்கள் எந்தக் காலத்திலும் குறைவதில்லை! குறையாது!

நாம் வழக்கம் போல் எல்லாவற்றிலும் அலட்சியம்! அலட்சியம்! அலட்சியம்! நம்முடைய சொத்துக்கள் நம்மிடமிருந்து பறி போகின்றன, அது பற்றியெல்லாம் நாம் கவலைப்படுவதில்லை. மற்ற இனத்தவர்களுக்குத் தான் நாம் விற்கிறோம். அதுவே நமக்குப் பெருமை தரும் விஷயமாக இருக்கிறது!

 சீனர்களுக்கு உள்ள அந்த இன உணர்வு நம்மிடமும் வரவேண்டும். நாம் எவ்வளவு தான் திறமைசாலியாக இருந்தாலும்  அந்த இன உணர்வு என்ற ஒன்று இல்லாததால் நாம் பின் தள்ளப்படுகின்றோம்.

நமது இனம் முன்னேறுகிறது என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்ளுவது? நாட்டில் நமது சொத்து விகிதம் குறைகிறதே தவிர, கூடவில்லையே!

தனி மனிதனாக நமது முன்னேற்றம் இருக்கிறதே தவிர ஒரு சமுதாயம் என்று பார்க்கும் போது நாம் இன்னும் மிக மிகக் கீழ் நிலையில் தான் இருக்கிறோம். நம்மால்  ஒன்றுபட முடியவில்லை, சரி. ஆனால் சமுதாய நலன் கருதியாவது நமது சொத்துக்களை நாம் நமது இனத்தாரிடமே விற்க வேண்டும் என்னும் இன உணர்வு நம்மிடம் இருப்பது மிக மிக முக்கியம்.

நான் சொல்ல வருவது இது தான்: நமது சொத்துக்கள் - அவை நிலங்களாக இருக்கலாம், வீடுகளாக இருக்கலாம், வேறு வகையான அசையா சொத்துக்களாக இருக்கலாம் -   அவைகள் நமது இனத்தாரின் கைகளுக்கே விற்கப்பட வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நமது சொத்துக்கள் அதிகரிக்குமே தவிர, குறைய வாயப்பில்லை!

நமது சொத்துக்கள் நம்மிடமே!

Saturday 18 February 2017

வங்காளதேசிகளுக்கே.....!


இப்போது மலேசிய நாட்டில் வங்காளதேசிகளுக்கும்  இந்தியர்களுக்கும் தான் நாளுக்கு நாள் போட்டி அதிகமாகிக் கொண்டு வருகிறது.

இந்தியர்கள் என்று சொல்லுவதைவிட குறிப்பாகத் தமிழர்கள் தான் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

சீனர் ஒருவர் அவர் செய்கின்ற தொழிலை விற்கிறார் என்றால் அது இன்னொரு சீனர் கைகளுக்குத் தான் போவும். ஆனால் நமது நிலை அப்படி அல்ல. ஒரு தமிழன் செய்கின்ற தொழில் ஒரு  தமிழன் கைகளுக்கு மாறுவதில்லை.

ஒன்று: இன்னொரு தமிழன் முன்னேறுவதை நாம் விரும்பவில்லை.
                 அது நமது பொறாமைக் குணம். கணவன் விரும்பினாலும்                           மனைவி விரும்ப மாட்டாள்!
இரண்டு: மதம் என்பதும் ஒரு முக்கிய காரணம். இந்து, முஸ்லிம்,
                       கிறிஸ்துவன் என்னும் பிரிவினையும் உண்டு. ஒருவர் மீது
                       ஒருவருக்கு நம்பிக்கை இல்லை. நாம் தமிழர் என்னும்                                   எண்ணம் இன்னும் நமக்கு  வரவில்லை.
மூன்று:  வங்காளதேசி நம்மைவிடக்  கூடுதலாகப் பணம்                                                     கொடுக்கிறான் என்றால் அவனுக்கே முதலிடம்!

 நாம் செய்கின்ற தொழில் மற்ற இனத்தவரின் கைகளுக்குப் போகக் கூடாது என்னும் இன உணர்வு நம்மிடம் இல்லை.

ஒரு வியப்பானச் செய்தி. இப்படிச் செய்கிறவர்கள் தான் தமிழர்களிடையே ஒற்றுமில்லை என்று பேசுபவர்களாக இருக்கிறார்கள்!

இன்று தமிழர்கள் செய்கின்ற சிறு சிறு வியாபாரங்கள் எல்லாம் வங்காளதேசிகளுக்கே கைமாறுகின்றன.. ஒரே காரணம். அவர்கள் அதிகப்பணம் கொடுக்கிறார்கள் என்பது தான்.. எல்லாவற்றையும் அந்நியனுக்குத் தாரளமாக  விட்டுக் கொடுத்துவிட்டு  அப்புறம் வங்காளதேசிகள் தான் எங்கள் எதிரிகள் போன்று வெளியே வந்து பேசுகிறார்கள்!

என்னடா! இனம் இது! நான் வழக்கமாகப் போகும் மார்க்கெட்டில் ஒரு தமிழர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் பெரிய அளவில். வியாபாரிகள் எல்லாம் அவரிடம் தான் காய்கறிகள் வாங்குவார்கள். தீடீரென ஒரு நாள் ஒரு வங்காளதேசியிடம் தனது தொழிலை விற்று விட்டார்! என்ன காரணம்? பெண்டாட்டிக்கு உடல் நலம் இல்லையாம்! அவருடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இந்தியர்கள். இவரைப் போன்றவர்களை நாம் என்ன செய்வது?

நாம் தமிழர் என்கின்ற உணர்வு இல்லாதவரை நாம் பல துன்பங்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அனைத்தும் நமக்கு நாமே வருவித்துக் கொள்ளும் துன்பங்கள் தான்..

நமது தொழில்கள், நமது வியாபாரங்கள்  அனைத்தும் நம் இனத்தவருக்கே கைமாற வேண்டும். நாம் தமிழர் என்னும் உணர்வு ஒங்க வேண்டும்!

வங்காளதேசியிடம்  போன தொழில்கள் மீண்டும் நமது கைகளுக்கு வரப்போவதில்லை! அதனால்...? நமது தொழில்கள், நமது சொத்துக்கள் அனைத்தும் நம் இனத்தவரிடம் தான் இருக்க வேண்டும். வாழ்க தமிழினம்!

Friday 17 February 2017

எல்லாமே அனுபவம் தான்!


வேலை இல்லா பட்டதாரிகள் நிலை அதிகரித்து வருகிறது. ஏன்? வேலை செய்கின்ற - நடுத்தர வயதைத் தாண்டியவர்கள் கூட - இன்று வேலையில்லாமல் அவதிப்படுகின்ற நிலையைப் பார்க்கின்றோம்.

இன்றைய நிலையில் நாம் சொல்ல வேண்டிய செய்திகள் சில இருக்கின்றன. புதிதாக வருகின்ற பட்டதாரிகள் சில அளவுகோள்களோடு வருகின்றனர். ஒரு பட்டதாரி என்றால் எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டும் அவர்களுக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது.

ஆனால் ஒரு முதலாளி, ஒருவர்  வெறும் பட்டம் பெற்றவர் என்பதை வைத்து எதனையும் தீர்மானிப்பதில்லை. முதலில் அனுபவம் பெற்றவரா என்பதைத் தான் முதலில் பார்ப்பார். மற்றவை மொழித் திறன், பேச்சுத்திறன் என்பனப் போன்ற விஷயங்களும் அவருக்கு முக்கியமானவை. அதுவும் தனியார்த் துறைகளில் ஆங்கிலத் திறன் என்பது மிகவும் முக்கியம். அதனால் தான் மாலாய் மாணவர்கள் அரசாங்கத் துறைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

பட்டதாரிகள், பட்டம் பெற்ற உடனேயே அனைத்தும் அவர்கள் காலடியில் வந்து விழும் என்கிற எண்ணத்தை  அவர்கள் மறந்து விட வேண்டும். அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. முதலில் என்ன வேலை கிடைக்கிறதோ அதனைப் பற்றிக் கொள்ளுங்கள். இந்த வேளையில் மலாய் பட்டதாரிகளை நான் பாராட்டுகிறேன்.  சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் என்கிற பாகுபாடெல்லாம் அவர்களிடம் இல்லை. ஏதோ ஒரு வேலை. ஏற்றுக் கொள்ளுகிறார்கள். இது போன்ற மனப்பான்மை நமது இளைஞர்களிடம் இல்லை. எந்த ஒரு வேலை செய்தாலும் அதன் மூலம் கிடைக்கின்ற அந்த அனுபவம் என்பது தான் மிக மிக முக்கியம்.

இங்கு நேரடியாக கிடைக்கின்ற அந்த அனுபவம் என்பது உங்கள் கல்லூரியில் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு வெறும் புத்தக அறிவு தான் இருக்கிறது. அது போதாது என்பதால் தான் நிறுவனங்கள் உங்களுடைய  அனுபவத்தைக் கேட்கின்றன.

எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் கணக்காளராகப்  பட்டம் பெற்றவர். தட்டச்சுப்பொறிகள் பழுது பார்க்கும் ஒரு இந்தியர் நிறுவனத்தில் வேலைச்  செய்து கொண்டு வந்தார். ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வங்கி ஒன்றில் வேலைக்  கிடைத்தது. தனது வேலையை மாற்றிக் கொண்டார். அந்த சிறிய நிறுவனத்தில் வேலைச் செய்தபோது கணக்கு வழக்குகளை எப்படிக் கவனித்துக் கொள்ளுவது  என்பதை நேரடி அனுபவம் மூலம் தெரிந்து கொண்டார். வங்கியின் நேர்காணலின் போது அவர் ஒருவர் மட்டும் தான் கொஞ்சம் அனுபவம்  உள்ளவராக இருந்தார்! அந்த அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது!

இப்போது நமது நாட்டில் துரித உணவகங்கள் என்பது நிறைய வேலை வாய்ப்புக்களைக் கொடுக்கின்றன.  நீங்கள் பட்டதாரி என்பதை மறந்து விட்டு ஒரு சாதாரண வேலையில் அங்கு சேர்ந்தால் போகப்போக படிப்படியாக உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளலாம். அவர்கள் தலைமையகங்களில் மிகப் பொறுப்புள்ள பதவிகள் உங்களைத்  தேடி வரும்.  இன்றைய நிலையில் பேரங்காடிகள் நிறையவே இருக்கின்றன. எல்லாமே உங்களுக்கு வாய்ப்புக்களை அளிக்கின்றன.

ஆக, முதலில் அனுபவங்களைத் தேடிக் கொள்ளுங்கள். வெறுமனே உட்கார்ந்து கொண்டு ஊர்க்கதைகளைப் பேசுவதை விட ஏதோ ஒரு நிறுவனத்தில் சேர்ந்து உங்கள் அனுபவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்!

Thursday 16 February 2017

மதிப்பும், மரியாதைக்கும் ஏங்குகிற மனம்!


சமீபத்தில் படித்த கட்டுரை ஒன்று கொஞ்சம் மனதை  நெகிழ வைத்தது.

மனிதனின் மனம் எதற்கு எதற்கெல்லாம் ஏங்குகிறது!  வெறும் பணம் மட்டும் தானா வாழ்க்கை? அதனை விட மனித மனம் ஏங்குவது எதற்குத் தெரியுமா?

மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை மனிதன்  ஏங்குவது - மதிப்பு, மரியாதை, பாராட்டு  - இவைகளுக்குத் தான். கேட்பதற்கு இது ஒரு பெரிய விஷயமாக  இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை!

அனைவருமே பாராட்டை விரும்புகிறார்கள். அனைவருமே மரியாதையை விரும்புகிறார்கள். அனைவருமே மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.

நமது தமிழ்ச் சினிமாவின் தலைநகரான கோலிவூட் பற்றி அறியாத தமிழ் ரசிகன் இல்லை. அங்கு பல ஆயிரக்கணக்கான மிக அடிமட்டத்தில் வேலை செய்கின்ற மிகச் சாதாரண தொழிலாளர்களும்  உண்டு; நிறையவே உண்டு. அவர்களில் லைட்மேன் என்று சொல்லப்படுகின்ற கீழ்நிலைத் தொழிலாளரும் உண்டு. இங்குப் பணிபுரிகிற அனைவருமே முக்கியமானவர்கள் தான். ஒவ்வொருவரின் பணியும் சிறப்பாக அமைய வேண்டும். அப்போது தான் ஒரு திரைப்படம் சிறப்பாக, வெற்றிகரமாக அமையும்.

நாம் எப்போதுமே கதாநாயகனைப் பார்க்கிறோம். கதாநாயகியைப் பார்க்கிறோம். இயக்குனரைப் பார்க்கிறோம். ஆனால் ஒரு திரைப்படம் வெற்றி பெற அனைத்துத் தரப்பும் ஒத்துழைக்க வேண்டும்.  அப்போது தான் வெற்றி என்பது  சாத்தியம்.

இந்த லைட்மேன் என்பவர்களை யாரும் அவ்வளவாகச் சட்டை செய்வதில்லை. பொதுவாகவே கீழ் நிலை ஊழியர்களை அவ்வளவாக யாரும் மதிப்பதில்லை என்பது நாம் அறிந்தது தானே!

ஆனாலும் அங்கும் விதிவிலக்குகள் உண்டு.  சிறியவரோ, பெரியவரோ மதிக்கின்ற பழக்கம் குடும்பங்களிலிருந்து வருவது. அது ஒர் உயர்ந்த குணம்.

இந்த லைட்மேன்களையும் மதித்து ஒரு செய்திப் படம் தயாராகிறது. அவர்களுடைய நல்லது கெட்டது பற்றி இந்தச் செய்திப்படம் விவரிக்கும். ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நடிகர்களில் இவர்களுக்கு  மரியாதைக் கொடுப்பவர்கள் அஜித், கமலஹாசன் போன்றவர்கள் தான். லைட்மேன்களுக்கு அவர்கள் மேல் நல்ல  அபிமானம் உண்டு.

ஒரு கொசுறு செய்தியாக ஒன்றைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அஜித் தன்னோடு பணிபுரிபவர்களின் மீது எப்போதுமே அன்பைப் பொழிபவர். முடிந்த வரையில் அவர்களுக்கு உதவும் மனப்பான்மை உடையவர். தன் வீட்டில் வேலை செய்பவர்களுக்குக் கூட வீடு கட்டிக்கொடுக்கும் அளவுக்குப் பெரும் மனம் படைத்தவர்.

இவைகள் எல்லாம் பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள். ஒரு மனிதனுக்கு வேண்டிய மிக முக்கிய குணங்கள்.

இப்போது நாம் ஒர் உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுவோம். நமக்குக் கீழே இருப்பவர்களைத் தினசரி வாழ்க்கையில் நாம் சந்தித்து கொண்டு வருகிறோம். அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள். அவர்களை மதியுங்கள். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தாம் என்பதை உங்களது செயல்பாடுகளின் வழி அவர்களுக்கு உணர்த்துங்கள்.

வாழ்த்துகள்!

Wednesday 15 February 2017

சிறை எதிர்பார்க்கப்பட்டது தான்!


சின்னம்மா சசிகலாவுக்குச் சிறை தண்டனை  என்பது எதிர்பார்க்கப்பட்டது தான்.

ஆனாலும் அவர் கொடுத்த "பில்டப்"  சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கையில் பணம் இருப்பதால் தன்னால் எதனையும் செய்ய முடியும் என்கின்ற ஒரு இறுமாப்பு அவரிடம் இருந்தது.

தமிழ் நாட்டையே கொள்ளையடித்த ஒரு கும்பல் இந்த அளவுக்கு அராஜகமான செயல்களைச் செய்ய முடியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

சசிகலாவின் பின்னணி நமக்குத் தெரியவில்லை. ஓரு பெண்மணி இந்த அளவுக்குக் கொடூர மனம் படைத்தவராக இருக்க முடியும் என்றால் அவருடைய குடும்பம் எந்த அளவுக்கு பயங்கரமான் குடும்பமாக இருக்க முடியும் என்பதை நம்மால்  ஓரளவுக்குத் தான் ஊகிக்க முடியும்.

தமிழ் நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சியைப் பற்றி  நாம் பெரிதாக ஒன்றும் சொல்லுவதற்கில்லை. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. சசிகலாவின் மன்னார்குடி  குடும்பம் தான் ஜெயலலிதாவை ஆட்டிப் படைத்திருக்கிறது.

மற்றவர்கள் அவரைப் பற்றி பேசும் போது ஜெயலலிதா நல்லவராகத்தான் தென்படுகிறார். ஆனால் இந்த மன்னார்குடி குடும்பம் அவரைத் தவறான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பது உண்மையாகத்தான் இருக்க வெண்டும்.

இசை அமைப்பாளர் கங்கை அமரன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனது வீட்டை - சில இலட்சங்களைக் கொடுத்து -  தன்னிடமிருந்து  வற்புறுத்தி வாங்கினார்கள் என்பதாக மன்னார்குடி குடும்பத்தின் மீது குற்றம் சொல்லுகிறார். ஒரு பிரபலமான மனிதருக்கே இந்த நிலைமை என்றால்..?  ஏன்? நடிகர் திலகம் சிவாஜியின் குடும்பத்திலேயே இவர்கள் சம்பந்தம் செய்திருக்கிறார்கள் என்றால் எல்லாமே பயமுறுத்தால் தான்.

ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி தமிழகத்தையே கொள்ளையடித்த ஒரு குடும்பம் சசிகலாவின் குடும்பம். கடைசியில் ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்து அவரையே தீர்த்து கட்டிவிட்டார்கள்! உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்த குடும்பம் இந்த சசிகலாவின் குடும்பம்.

அதனால் தான் தமிழகமே சசிகலா பதவிக்கு வரக்கூடாது என்று கொதித்து எழுந்தது! தமிழக மக்கள் அவரை வெறுத்தனர். ஆனால் அவருடைய சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் அவருக்கு ஆதரவு கொடுத்தனர்!  அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கோடிகள் கிடைத்தனவா என்பது தெரியவில்லை!

சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் தண்டனை போதாது என்பதாகத்தான் தமிழக மக்களின் கருத்தாக இருக்கிறது! தங்களின் சுயநலனுக்காக எதனையும் செய்யத் தயாராய் இருந்தவர்கள் இந்த மன்னார்குடி குடும்பம்.

ஆனால் இவர்களின் ஆட்டம்  முடிந்து விட்டதாக முற்றாகப்முற்றுப்புள்ளி வைத்து விட முடியாது.  வேறு வகையில் விஸ்வரூபம் எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Thursday 9 February 2017

சின்னம்மா விட்டுக்கொடுப்பாரா?

தமிழக ஆளுநரின் முன்னிலையில் முதலைமைச்சர் பன்னிர்செல்வத்திற்கும், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா சசிகலாவிட்கும் "நீயா, நானா" போட்டி நடந்து கொண்டிருக்கிறது!

சசிகலாவை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜெயலலிதாவோடு முப்பது ஆண்டுகள் கூடவே இருந்தவர் சசிகலா. நல்ல நேரம், கெட்ட நேரம் அனைத்திலும் உடன் இருந்தவர். ஜெயலலிதா எப்படி பிரச்சனைகளைச் சமாளித்தார் என்பதை கூடவே இருந்து பார்த்தவர். ஜெயலலிதாவின் பலம் காவல்துறை! காவல்துறையினர் ஜெயலலிதாவுக்கு எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்தவர்கள். அவரும் காவல்துறையினரை நன்றாகக் கவனித்துக் கொண்டவர்.

சசிகலாவும் அதே பாணியைத்தான் கையாள்கிறார் என்பதும் உண்மை. மெரினாவில் நடந்த மாணவர்கள் மீதானத் தாக்குதல், மீனவர்கள் மீதானத் தாக்குதல்களின்  பின்னணியில் சசிகலாவின் பங்கும் உள்ளது என்பதை மறந்துவிட முடியாது.

ஜெயலலிதாவின் அதே போர்க்குணம்  சசிகலாவிடமும் உண்டு. விட்டுக் கொடுக்காத அந்தப் போர்க்குணம்!

கடைசிவரை  விட்டுக் கொடுக்கமாட்டார் சசிகலா! என்னன்ன முடியுமோ, அவரிடம் என்னன்ன உள்ளதோ அத்தனையும் அவர் பயன் படுத்துவார்! பின் வாங்குவது அவர் குணமல்ல! சிறு துரும்பு கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளுவார்!

ஆனால் அவரிடம் உள்ள அந்தப் போர்க்குணத்தினால் தமிழ் நாடு எந்த அளவு பயன் பெறும்?  ஒரு மண்ணும் இல்லை! அவர் கண் முன்னே நிற்பது - அந்த நீண்ட நாலரை ஆண்டுகள் -  அது மட்டும் தான்! நாலரை ஆண்டுகள்  என்பது அரசியல் கொள்ளையர்களுக்கு ஒரு நீண்ட காலம். ஒரு நாணுறு கோடியாவது நாலாயிரம் கோடியாவது  சம்பாத்தித்து விட முடியும்! அதெல்லாம் அவர்களுக்குச் சாதாரணம்!

தேர்தலை எதிர் நோக்கும் பிரச்சனை இல்லை! கட்சி வளர்ந்தால் என்ன, அழிந்தால் என்ன - அது பற்றிக் கவலை இல்லை! மக்களைச் சந்திக்கும் அவசியம் இல்லை!

இது தான் மன்னார்குடியின் இப்போதைய கண் முன்னே உள்ள திட்டம்! இதற்காகத்தான் இவ்வளவு போராட்டங்கள்!

அவரிடம் ஆட்சி போகக்கூடாது என்பதே நமது பிரார்த்தனையாக இருக்கட்டும். தமிழகம் கொள்ளயர்களின் கூடாரமாக மாறிக்கொண்டு வருகிறது!  அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என்பது தான் நமது கேள்வி! இன்னும் நாலரை ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டுமோ?

Monday 6 February 2017

காலையிலேயே தடங்களா..?


காலையில் வேலைக்குப் போகும் நேரம். எல்லாம் அவசர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும். நாம் மட்டும் என்ன விதிவிலக்கா?

இப்படித்தான் ஒரு காலை வேளையில் அவசர அவசரமாக இயங்கிக் கொண்டிருந்த போது ஒரு தடங்கள் ஏற்பட்டது!  அதை சரி செய்து கொண்டு அடுத்த வேலையைத் தொடர்ந்த போது அங்கும் இன்னொரு தடங்கள்!

அப்போது என்ன மன நிலையில் நாம் இருப்போம்? ஏற்கனவே நமது தமிழ் திரைப்படங்கள் நமக்குச் சில பாடங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன: 'காலங்காட்டிலுமா...?  இன்னிக்கு எதுவுமே உருப்படாது..!'

இந்த மனநிலையில் தான் அன்றைய நாள் முழுவதும் நமது பணிகளைச் செய்வோம். அன்றைய தினம் நாம் எதிர்பார்த்தபடியே எதுவும் உருப்படாது! அது தானே  நமக்கு வேண்டும்? அப்புறம் எப்படி உருப்படும்?

அதற்குப் பதிலாக வேறு மாதிரியாக நாம் அதனை மாற்றி அமைக்கலாம். நமது எண்ணங்களை வேறு திசைக்குக் கொண்டு செல்லலாம்.

"இந்தத் தடங்கல்கள் நமக்கு நல்லதையே செய்திருக்கின்றன. எப்போதும் போல் போயிருந்தால்  ஏதேனும் நடக்கக் கூடாதது நடந்திருக்கலாம்! அது இப்போது தவிர்க்கப்பபட்டுவிட்டது! இன்றைய தினம் நல்லதொரு தினமே. இன்று அனைத்தும் மகிழ்ச்சியாக அமையும்."

இப்படி ஒரு மன ஓட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்மறையான சிந்தனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். எல்லா எதிர்மறைகளிலும் ஓர் நேர்மறையான ஓட்டம் உள்ளது. அதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் சம்பவிக்கிறன. நல்லதை மட்டுமே நாம் எதிர் நோக்க வேண்டும். நல்லது நடக்கும் என்னும் போக்கிலேயே நமது சிந்தனைகள் அமைய  வேண்டும்.

அதுவும் காலை நேரம் என்றால் வேலைக்குச் செல்பவர்களுக்கு எத்தனையோ சோதனைகள். இந்தச் சோதனைகளை எல்லாம் மீறி தான் சாதனைகள் நிகழ்த்தப் படுகின்றன.

தடங்களா?  இருந்து விட்டுப்போகட்டும்! அதனையும் தடாகமாக மாற்றுவோம்!

Saturday 4 February 2017

நாம் பின்பற்ற வேண்டிய மனிதர் நாகராஜ்!


ராம்ராஜ் காட்டன் என்பது தமிழகத்தில் மட்டும் அல்ல - தென்னிந்திய அளவில் - மிகவும் பிரபலமான ஒரு.நிறுவனம்.

உலகளவில்,  வேட்டி கட்டும் இந்தியர்கள்  எங்கெல்லாம் இருக்கிறார்களோ,  அங்கெல்லாம் ராம்ராஜ் வேட்டிகள் பிரபலம்.

உலகளவில் பிரசித்திப்பெற்ற ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் உரிமையாளர் நாகராஜ் அவர்கள். மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மனிதர். நாம் பின்பற்ற வேண்டிய ஒரு முன்னோடி.

அழிந்து கொண்டு வந்த நமது பண்பாட்டைத் தூக்கி நிறுத்தியவர் நாகராஜ்.  வேட்டிக்கட்டும் பழக்கம்குறைந்து கொண்டு வந்த காலக்கட்டத்தில் அதனை அழிய விடாமல் காத்து நின்றவர் நாகராஜ் அவர்கள்.

வேட்டி கட்டுவதே கேவலமான ஒன்றாக இருந்த காலக்கட்டத்தில் வேட்டி கட்டுவதை ஒரு பெரும் பேறாக இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டியவர் நாகராஜ்.

நமது பண்பாட்டுச் சின்னமான வேட்டி அணிவதை தமிழர்கள் புறக்கணித்த போது  தனி ஒரு மனிதராக நின்றுஅந்தக் கலாச்சாரத்தை நிலை நாட்டியவர் நாகராஜ்,. வேட்டி ஏழைகளின் அணிகலன் என்பது  போய் இப்போது அனைவரும் பயன்படுத்தக் கூடிய அணிகலன் என்னும் இன்றைய நிலைமைக்குக் கொண்டு வந்தவர் அவர்.

நாகராஜ் அவர்களின் தொழில் ஈடுபாடு என்பது நம் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று. தொழில் செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் அவருக்கு இருந்தது. அவருடைய ஆரம்பமே வேட்டியில் இருந்து தான் ஆரம்பமாகிறது. பணம் சம்பாதித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்பதை விட நெசவாளர்களுக்கு உதவ வேண்டும் என்னும் வேட்கை தான் அவரிடம் மிகுந்திருந்தது. அவரின் தொடக்கமே அந்த நெசவாளர்கள் தான்!


ராமராஜ் நிறுவனத்தின் நிறுவனர் அவராக இருந்தாலும் மற்றவர்களைப் போல அவரும் சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளியாகத்தான் அந்த நிறுவனத்தில் பணி புரிகிறார்! கோடிக்ணக்கில் பணம் புழங்கும் ஒரு நிறுவனம் தான் ராம்ராஜ் காட்டன். ஆனால் அங்கிருந்து வரும் வருமானம் என்பது மீண்டும் அந்த நிறுவனத்திலேயே முதலீடு செய்யப்படுகிறது. வேறு தொழில்களில் முதலீடு செய்யப்படுவதில்லை! அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கே பணம் செலவிடப்படுகிறது.

இப்படிச் செய்வதனால் நெசவாளர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படுகின்றன. உற்பத்தியும் அதிகரிக்கப்படுகிறது. எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் அனைத்தும் இந்த ஒரே ஒரு தொழிலுக்கு மட்டும் தான் என்பது தான் நாகராஜ் அவர்களின் அணுகுமுறை!

பணம் என்பதை விட நெசவாளர்களின் நலனே தனக்கு முக்கியம் என்கிறார் நாகராஜ்.

இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா என்று நாம் வியக்கத்தான் வேண்டியிருக்கிறது! நாம் வியக்கும் மனிதர் மட்டுமல்ல - நாம் பின்பற்ற வேண்டிய மனிதர் நாகராஜ்! ஒரே ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதற்காகவே பாடுபட்டுக் கொண்டிருப்பவர்  நாகராஜ்!

Wednesday 1 February 2017

இனி இளைஞர்கள் என்ன செய்யலாம்?


மெரினா கடற்கரையில் நடைபெற்ற அறவழி போராட்டத்தை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

அறவழி போராட்டத்தை மாணவர்களின் வெற்றியாக ஏற்றுக்கொள்ளாத . அரசாங்கம் கடைசி நாளன்று ரத்தக்கிளறியில் அதனை முடிவுக்குக் கொண்டு வந்தது.

போராட்டம் வெற்றி தான் என்றாலும் அது மகிழ்ச்சியாக அமையவில்லை. பல நூறு மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மீனவர்கள் இன்று வரை காணவில்லை. காவல்துறையினரால் கடத்தி வைக்கப்பபட்டிருக்கின்றனர்!

அவர்களின் மீட்புக்காக பலவேறு தரப்பினரின் போராட்டங்கள் தொடர்கின்றன.ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்பதாக முதலைமைச்சர் கூறியிருக்கிறார். நீதிபதி முதலைமைச்சர் துதி பாடுபவராக இல்லாமல் இருந்தால் சரி!

மன்னிக்கவும்!  அரசாங்கம் எதனைச் செய்தாலும் அதனைச் சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்க வேண்டியுள்ளது!

போராட்டத்தின் போது மாணவர்கள் கொக்கோ-பெப்சி போன்ற குளிர்பானங்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர். இது முற்றிலும் மாணவர்களின் புறக்கணிப்பு என்றே சொல்லலாம்!

அவர்களும் இந்தக் குளிர்பானங்களைத் தடை செய்யுங்கள் என்று சொல்லவில்லை. புறக்கணிப்புச் செய்ய வேண்டும் என்று தான் சொன்னார்கள். இந்தக் குளிர்பானங்களை புறக்கணிப்பதன் மூலம் உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்திகள் அதிகரிக்கும். விவசாயிகளும் பயன் அடைவர்.

இந்தக் குளிர்பானங்கள் மட்டும் அல்ல. இன்னும் சிலவும் புறக்கணிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இளஞர்கள் நினைத்தால் இதுவும் வெற்றிகரமாக முடியும்.

பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது பாலாபிஷேகம் செய்வது என்பது நமது கலாச்சாரத்திற்கு ஏற்புடையதல்ல. அது நிறுத்தப்பட வேண்டும். ஏழைகளுக்கு நீங்கள் உதவலாம். வீணாக்கப்படும் பாலை ஏழைக்குழந்தைகளுக்குக் கொடுத்து உதவலாம். அல்லது ஆக்ககரமான முறையில் எப்படி உதவலாம் என்பதை யோசியுங்கள்.

இப்போது வரும் பெரும்பாலானப் படங்களில் மதுபானம் அருந்தும் காட்சிகளை அமைக்கின்றனர். இது அரசாங்கத்தின்  சாராய விற்பனை அதிகரிக்க உறுதுணையாக இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. இனி வரும் படங்களில் மதுபானம் அருந்தும் காட்சிகள் இருந்தால் அந்தப் படங்களைப் புறக்கணியுங்கள். நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்பதை சினிமா உலகம் அறிந்து கொண்டாலே இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கண்டுவிட முடியும்.

எல்லாவற்றையும்  விட்டுக்கொடுத்தால் அவனவன் நமது தலை மேல் ஏறிவிடுவான்! அது தான் இப்போது நடக்கிறது! "நான் தமிழன்டா", நான் தமிழச்சிடா" என்று சொல்லுவதையே ஏதோ தேசத் துரோகம் போல் ஒரு சிலர் நினைக்கின்றனர்.

தமிழ் இனத்தைக் கேவலப்படுத்தும் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். மாணவர்களே1 இளைஞர்களே! அனைத்தும் உங்கள் கையில்.

மீண்டும் நமது இனம் நிமிர வேண்டும்! நாம் தமிழர் என்று தலை நிமிர்ந்து சொல்ல வேண்டும்!

வாழ்க தமிழ் இனம்!