Saturday 31 December 2016

விடை கொடுப்போம்..!

இன்றோடு 2016-ம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்து விட்டது. நாளை முதல் புதிய ஆண்டு. புதிய தொடக்கம்.புதிய புத்துணர்ச்சி. ஆண்டு புதிது. நாமும் புதிய மனிதனாக நம்மை மாற்றிக் கொள்ளுவோம்.

சென்ற ஆண்டைத்  திரும்பிப் பார்க்கும் போது எத்தனையோ செயல்கள். நாம் விரும்பியது, நாம் விரும்பாதது, நமக்குப் பிடித்தது, நமக்குப் பிடிக்காதது, நாம் சாதிக்க நினைத்தது, நாம் சாதிக்க முடியாமற் போனது என்று இழுத்துக்கொண்டே போகலாம்.

நம்மால் என்ன சாதிக்க முடிந்ததோ அதற்காக மகிழ்ச்சியடைவோம். நாம் எதிர்பார்த்தது நிறைவேறியதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.

நமது சாதனைகளுக்காக நன்றி! நாம் சாதித்தவைகளுக்காக நன்றி! நன்றி! சென்ற ஆண்டு நிறைவேறாமல் போனவைகளுக்காகவும் நன்றி சொல்லுவோம்! காரணம் நாம் சாதிக்கவில்லை என்றால் அது நமக்கு ஒரு பாடம். அது ஒரு பயிற்சி.

இந்த ஆண்டும் நாம் என்ன சாதிக்க வேண்டும் என்னும் ஒரு பட்டியலை வைத்திருப்போம். சென்ற ஆண்டு சாதிக்க முடியாததை இந்த ஆண்டு மீண்டும் முயற்சி செய்வோம்.

சென்ற ஆண்டு நாம் சாதிக்க முடியவில்லை என்றால் அதனை நாம் அனுபவமாக எடுத்துக் கொள்ளுவோம். முயற்சி செய்தோமோ அதுவே ஒரு சாதனை தான்! முயற்சி தான் முதல் படி. வெற்றிபெறவில்லையானாலும் அந்த அனுபவத்தின் மூலம் பல அனுபவங்களைப் பெற்றிருப்போம். அந்த அனுபவங்கள் தான் வருகின்ற ஆண்டு நாம் பெறப்போகும் வெற்றி.

சென்ற ஆண்டு நடந்தவைகள் அனைத்தும்  நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளுங்கள். எது நடந்தாலும் அது நன்மைக்கே! தோல்வியாக இருந்தால் என்ன? அதன் மூலம் நல்லதொரு படிப்பினை நமக்குக் கிடைத்திருக்கும்.

தோல்வி என்று எதுவும் இல்லை.  அந்தத் தோல்வியுலும் ஏதொ ஒரு வெற்றி ஒளிந்து கொண்டிருக்கும். அதனை அலசி ஆராய்ந்தால் உங்கள் தோல்வியே உங்களுக்குக் கிடைத்த வெற்றியாகத் தெரிய வரும்!

எல்லாமே நமது எண்ணங்களில் தான் அடங்கி இருக்கிறது. வெற்றி என்றால் வெற்றி! தோல்வி என்றால் தோல்வி! தோல்வி என்றால் ஓர் அனுபவம். அது தான் உங்களை வெற்றிக்கு இட்டுச் செல்லும். எடுத்த எடுப்பில் யாருக்கும் வெற்றிகள் குவிந்து விடாது. எந்த முயற்சியாக இருந்தாலும் முதலில் தோல்வி தான் முட்டுக்கட்டையாக வந்து நிற்கும். அதன் பிறகு தான் வெற்றி தலையை நீட்டும்!

ஆக, சென்ற ஆண்டுக்கு விடை கொடுப்போம்! வருகின்ற ஆண்டை கை நீட்டி வரவேற்போம்! அத்தோடு,  வெற்றியே வருக! வருக!

Friday 30 December 2016

கேள்வி - பதில் (40)


கேள்வி

சசிகலா முதல்வர் ஆவாரா...?

பதில்

பொதுவாக அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளர் தான் தமிழக முதல்வர் ஆகலாம்.  அது தான் கட்சியின் பாரம்பரியம்.

இந்த பாரம்பரியம் தொடரலாம் அல்லது தொடராமலும்  போகலாம்.. அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால் இப்போதைக்கு இது தொடரும் என நிச்சயம் நம்ப வேண்டும். காரணம் இப்போது சசிகலா தான் பொதுச் செயலாளர்.

ஆனாலும் பெரும்பாலானோர் பன்னிர்செல்வம் தான் முதல்வர் ஆவார் என்று நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை!

ஆனால் இதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவை இல்லை! இந்த இருவரில் யார் வந்தாலும் தமிழ் நாட்டுக்கு ஆகப்போவது எதுவும் இல்லை!

இவர்கள் நினைப்பதெல்லாம் அடுத்த தேர்தல் வரை யார் முதல்வர் என்பது தான். அது தான் இப்போதைய போட்டி. அடுத்த தேர்தலக்குப் பிறகு எதுவும் நடக்கலாம். ஆட்சி பறி போகலாம். இவர்கள் இருவருக்குமே அ,தி,மு.க. தொண்டர்களிடம் எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை. இன்னும் நான்கரை ஆண்டுகளில் கட்சியை இவர்கள் வளர்ப்பார்கள் - இவர்களால் வளர்க்க முடியும் - என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வெறும் சினிமா நடிகர்களை வைத்தெல்லாம் கட்சியை வளர்த்து விட முடியாது!

இப்போது - இந்த நிமிடம் - கையில் இருப்பது அடுத்த நாலரை ஆண்டுகள். அதனை நோக்கித்தான் சசிகலா காய்களை நகர்த்துவார்! அவர் நகர்த்துகிறாரோ இல்லையோ அவருடைய மன்னார்குடி மன்னர்கள் அவரை நகர்த்த வைப்பார்கள்!

இவர் காலத்தில் தமிழ் நாடு 'ஆகா! ஒகோ!' என்று வளர்ந்து விடும் என்பதையெல்லாம்  நாம் மறந்து விட வேண்டும்.

ஆட்சியில் இல்லாத போதே இசையமைப்பாளர் கங்கை அமரனின் சொத்துக்களை அபகரித்தவர் சசிகலா! ஆக, அடுத்த நாலரை ஆண்டுகள் எதனை நோக்கிப் போகும் என்பதை இதனை வைத்தே ஒரளவு ஊகித்துக் கொள்ளலாம்!

இருப்பினும் எதனையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. நல்லதும்  நடக்கலாம். தீடீரென அவர் திருந்தலாம். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று நினைக்கலாம்!

இப்படி எத்தனையோ ...லாம்...லாம்....லாம்....! ஆம்! சசிகலா தான் முதல்வர்! நடக்கட்டும் நல்லாட்சி!

Friday 23 December 2016

RM 50 மில்லியன் வெள்ளியைக் காணோம்!


சீன ஆரம்பப்  பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வெள்ளி 50 மில்லியனைக் காணோம்!

2016-ம் ஆண்டு பட்ஜெட்டில் சீன  ஆரம்பப் பள்ளிகளுக்காகாக ஒதுக்கப்பட்ட 50 மில்லியனைக் காணோம் என்பது தான் இப்போதைய பரப்பான செய்தி!

நம்மைப் பொருத்தவரை நாம் பல ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கு ஒதுக்கப்பட்ட -  பணமாக இருந்தாலும் சரி, நிலமாக இருந்தாலும் சரி -  பல காணோம்களை   நாம் கண்டுவிட்டோம்.

ஆனால் சீனப்பள்ளிகளைப் பொருத்தவரை இப்போது தான் முதன் முதலாக பெரியளவில் பேசப்படுகிறது! இது போன்று காணாமல் போவது முதல் தடவையாகக் கூட  இருக்கலாம்!

இந்தக் காணாமல் போவதில் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. தமிழ்ப்பள்ளிகளைப் பொருத்தவரை காணாமல் போனால் போனது தான்!  அதற்குக் காரணமானவன் ஆளுங்கட்சியில் உள்ள தமிழனாகத்தான் இருப்பான்! அவனுக்கு மொழியைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை! காரணம் அவன் தாய்ப்பால் குடிக்காமல் 'தண்ணி அடிச்சே'  வளர்க்கப்பட்டவன் என்பதால் தாய்மொழி பற்றெயெல்லாம் துறந்தவனாக இருப்பான்!




                (அரசாங்கம் கட்டிய இருபது இலட்சம் வெள்ளி தமிழ்ப்பள்ளி)


 சீனர்கள் நிலை வேறு.  அவர்கள் தங்கள் தாய்மொழியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இன்று நாட்டில் சீனப்பள்ளிகள் தான் எல்லா இனப் பெற்றோர்களும் விரும்பும் பள்ளிகளாக இருக்கின்றன. சிறப்பான கல்விக்கு அவர்கள் தான் முதலிடம்.

காணாமல் போன பணம் அப்படியே ஓடிவிடாது! அவர்கள் அதனைத் தேடிக் கண்டுபிடித்து விடுவார்கள்!

இன்று  இந்தப் பிரச்சனையை எதிர்கட்சியில் உள்ளவர் கொண்டுவந்தாலும் அவரைத் தூண்டிவிட்டதே ஆளுங்கட்சியில் உள்ள சீனராகத்தான் இருப்பார்! இது போன்ற பிரச்சனைகளில் அவர்கள் கமுக்கமாக காதும்-காதும் வைத்தால் போல நடந்து கொள்ளுவார்கள்.

ஆனாலும் பயப்பட ஒன்றுமில்லை! அப்படி ஒன்றும் ஏமாந்த சோணகிரிகளோ - ஏமாளிகளோ அல்ல சீனர்கள்! பணம் கைக்கு வரும்வரை அவர்கள் விடமாட்டார்கள்!

இப்படிக் கையாடல் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

இளைஞனே! நீ வெற்றி பெறுவாய்!


இளைஞனே நீ வெற்றி பெறுவாய்!  நீ வெற்றி பெற வேண்டும். நீ தான் நமது சமுதாயத்தின் சொத்து. நீ தான் இந்தச் சமுதாயத்தை தூக்கி நிறுத்த வேண்டும்.

உன் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு, நீ வெற்றி பெறுவாய் என்பதில் எனக்கு ஐயமில்லை.

காலையில் ஒரு இளைஞனைச் சந்தித்த போது எனக்கு அந்த நம்பிக்கை பிறந்தது.  துடிப்பான இளைஞன். அப்படித்தான் நமது இளைஞர்கள் இருக்க வேண்டும்.

ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அந்த இளைஞன் படிவம் ஆறு முடித்ததும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் போட்டான். அரசாங்கத் தரப்பிலிருந்து எந்த நல்ல செய்தியும் கிடைக்கவில்லை. அரசாங்கம்,  இந்தியர்கள் என்றாலே ஒதுக்குவதும் அலட்சியம் படுத்துவதும் நமக்குத் தெரிந்தது தானே!

வேறு வழியில்லாமல் தனியார்ப் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டிய ஒரு கட்டாயம் அந்த இளைஞனுக்கு. சேர்ந்த பிறகு ஏதேனும் கல்விக்கடனுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்னும் நம்பிக்கையோடு சேர்ந்தான். ஓர் ஆண்டு தான் அவனால்   கட்டணம் கட்ட  முடிந்தது. எந்தவிதக் கல்விக்கடனும் கிடைத்தபாடில்லை.

வேறு வழியில்லை.. படிப்பைபைத் தொடர முடியவில்லை. கல்விக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ' முதலில் பணம் சம்பாதிப்போம். பிறகு உயர்கல்வியைப் பற்றி யோசிப்போம்' என்று முடிவெடுத்து ஒரு வேலையைத் தேடிக் கொண்டான். ஆனாலும் கல்வியைத் தொடர வேண்டும் என்னும் அந்த எண்ண்த்தை மனதிலிருந்து அவனால் அகற்ற முடியவில்லை.

அப்போது தான் அவன் கண்ணில் பட்டது OPEN UNIVERSITY.  சரியானத் தகவல்களைத் தெரிந்து கொண்டு உடனடியாகச் சேர்ந்து விட்டான் அவனது கல்வியைத் தொடர. இப்போது வேலையைச் செய்து கொண்டே கல்வியைத் தொடர்ந்து விட்டான்.

இதில் என்ன அதிசயம் என்று நினைக்கத் தோன்றும். இப்போது நமது இளைஞர்கள் மிக எளிதில் சோர்ந்து போய் விடுகிறார்கள். முதல் முயற்சியிலேயே அனைத்தும் தங்களது காலடியில் விழுந்துவிடும் என்று நினைக்கிறார்கள்!

அப்படியெல்லாம் ஒன்றும் விழுந்துவிடாது! ஒரு முயற்சி அல்ல. பல முயற்சிகள். யாருமே முதல் முயற்சிலேயே வெற்றிபெற்று விடுவதில்லை. அது கல்விக்கும் பொருந்தும். மேலே சொன்ன அந்த இளைஞனைப் போல விடாமுயற்சி  வேண்டும். பணம் இருந்தால் வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடரலாம். பணம் இல்லாதவர்கள்?  இப்படித்தான் பல முயற்சிகள் செய்து கல்வியைத் தொடர வேண்டும். அதற்குக் கடுமையான உழைப்பு வேண்டும்.

ஒரு நம்பிக்கை எனக்குத் தோன்றுகிறது. நமது  இளஞர்கள் சரியான பாதையை நோக்கித் தான் செல்லுகிறார்கள். பட்டதாரியாக வேண்டும் என்னும் அந்த இலட்சியம் எல்லா இளைஞர்களிடமும் கனன்று கொண்டு தான் இருக்கிறது.

நமது இளைஞர்கள் வெற்றி பெறுவார்கள்! இந்த சமுதாயம் வெற்றி பெறும். நாம் வெற்றி பெறுவோம்!

Wednesday 21 December 2016

ஏன் தண்ணிர் தட்டுப்பாடு?

நம் நாட்டில் தண்ணீர் தட்டுப்ட்டிலும் சமயம் புகுந்து விடுகிறதோ என்னும் சந்தேகம் நமக்கு வலுக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பெருநாள் காலங்களில் தண்ணிர் தட்டுப்பாடு வந்துவிடுகிறது!

தீபாவாளி வருகிற போது தண்ணீர் தட்டுப்பாடு வந்து விடுகிறது. கிறிஸ்துமஸ் பெருநாள் வருகின்ற போது தண்ணீர் தட்டுப்பாடு வந்து விடுகிறது.

நாடு முழுவதும் இல்லையென்றாலும் ஆங்காங்கே ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் அதை எப்படி - என்னவென்று சொல்லுவது?

அரசாங்கம் தான் இதனைச் செய்கிறது என்று நாம் சொல்லவில்லை. ஆனால் அரசாங்கத்தின் மீது தான்  பழி போகிறது என்பதைத் தான் நாம் சொல்ல வருகிறோம்.




பலரின் முணுமுணுப்புக்களை இது போன்ற காலங்களில் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்.

"தீபாவளி வந்தாதான் தண்ணீர் தட்டுப்பாடு வரும்! இதுவரை சும்மா இருந்துவிட்டு இப்ப தான் எல்லா வேலையும் செய்வானுங்க!" என்று நாமே பல முறை முணுமுணுத்திருக்கிறோம்.

ஒரு உண்மையை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது ஏன் - குறிப்பாக விழா காலங்களில் மின்சார வாரியம் தனது பழுது பார்க்கும் வேலையையோ அல்லது சுத்திகரிப்பு வேலையையோ அல்லது சீரமைப்பு வேலைகளைச் செய்வது ஏன்? அதுவும் குறிப்பாகத் தீபாவளி, கிறிஸ்துமஸ் காலங்களில்?

விடுமுறைக் காலங்களில் வேலை செய்தால் மூன்று மடங்கு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்னும் காரணமாயிருக்குமோ? நமக்குத் தெரியவில்லை!  பண்டிகை நாள்கள் இல்லாத காலங்களில் இந்த வேலைகளைச் செய்யலாம். மக்களுக்குப் பிரச்சனைகள் இல்லாத காலங்களில் வேலைகளைச் செய்யலாம்.  ஒவ்வொரு ஆண்டும் தங்களது திட்டமிடும் பணிகளை அப்படித்தான் செய்ய வேண்டும். அவர்கள் திட்டமிடல் அப்படித்தான் அமைய வேண்டும்.
மக்களுக்கு இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும்.


ஒரு நல்ல செய்தியும் நமக்குக் கிடைத்திருக்கிறது. இனி விழாக்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிகழாது என தேசியத் தண்ணீர் சேவையின் ஆணையத் தலைவர் டத்தோ லியாங் உறுதி அளித்திருக்கிறர். நாம் அதனை வர வேற்கிறோம்!

Monday 19 December 2016

112 வயதிலும் ஊதித் தள்ளுகிறார் பாட்டி!




பாட்டியம்மாவுக்கு 112 வயது. அதற்கு மேலும் அவருக்கு ஓரிரு வயது கூடவே  இருக்கும் என்கிறார்கள் அவர் ஊர்க்காரர்கள்.

நுவாகோட், நேப்பாளிலுள்ள ஊரைச் சேர்ந்தவர் பத்துளி லாமிச்சான். அது தான் அவர் பெயர்.

சுமார் 95 வருடங்களாக விடாமல் சிகிரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர் பாட்டி. ஒரு நாளைக்கு சுமார் 30 சிகிரெட்டுக்களை ஊதித் தள்ளுகிறார்!  17 வயதில் ஆரம்பித்த பழக்கம்.  யார் பேச்சையும் கேட்பதாக இல்லை!

இளம் வயதில் இந்தியாவிற்குவேலைத் தேடிப் போன அவரது கணவர் இதுவரை வீடு திரும்பல!

பாட்டி எல்லாக் காலத்திலும் சுறுசுறுப்புக்குப் பேர் போனவர். வயதானவர்கள்  சும்மா இருக்கக் கூடாது என்கிறார். எப்போதும் வேலை செய்து கொண்டே இருங்கள். அது தான் உங்களை உயிரோடு வைத்திருக்கும் என்கிறார். சோம்பித் திரிவதும், சொம்பேறித்தனமும் வயதானவர்களைக் கொல்லும். அது தான் வயதானவர்களுக்கு அவரது அறிவுரை.

மன அழுத்தம் என்பது தான் இப்போது உள்ள மிகப் பெரிய பிரச்சனை. அதிலிருந்து விடுபடுங்கள். மகிழ்ச்சியாயிருங்கள். நீங்கள் நீண்ட நாள் வாழ்வீர்கள்.

ஆமாம், அவரின் புகைப்பழக்கத்தை பற்றீ...?  மற்றவர்கள் தயாரிக்கும் சிகிரெட்டுக்களை அவர் பயன் படுத்துவதில்லை.  எல்லாமே அவரது சொந்தத் தயாரிப்புக்கள் தான்!அது தான் அவரை மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது என்கிறார்!

ஒரு இந்துக் கோயிலின் உதவியோடு தனது காலத்தை மகிழ்ச்சியோடு கழித்து வருகிறார் பத்துளி.

வேலை! வேலை! வேலை! அது தான் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்!

அது தான் பாட்டியின் அறிவுரை!






Sunday 18 December 2016

கேள்வி-பதில் (39)

கேள்வி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை இரும்புப் பெண்மணி  என்று சொல்லுகிறார்களே, சரியா?

பதில்

நமக்குத் தெரிந்த இரும்புப் பெண்மணிகள் இருவர். ஒருவர் பிரிட்டனின்  மார்கரெட் தாட்சர் மற்றறொருவர் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி.

இந்த இரண்டு இரும்புப் பெண்மணிகளோடு ஜெயலலிதாவை ஒப்பிட முடியமா என்பது எனக்குத் தெரியவில்லை. பிரதமர் தாட்சர் நாட்டில் ஏற்பட்ட கலவரங்களை அடக்கி பொருளாதார சீர்திருத்ததைக் கொண்டு வந்தார். இந்திரா காந்தி வங்காள தேசம் என்னும் ஒரு புதிய நாட்டையே உருவாக்கினார்.

ஜெயலலிதா,  ஈழத்திற்கு ஒரு விடிவைக் கொண்டு வந்திருந்தால் ஒரு வேளை அவரை  ஒரு இரும்புப் பெண்மணி என்று நாமும் தாராளாமாகக் கூறலாம்.

அவருடைய அரசியல் பார்வையே வேறு. இளம் வயதில் ஆண்கள் மீது அவருக்கு ஏற்பட்ட சங்கடங்களை வேறு வகையில் பழி தீர்த்துக் கொண்டார். தனது ஆட்சி காலத்தில் ஆண்களைக் காலில் விழ வைத்து 'அழகு' பார்த்தவர் அவர். அவருடைய கார் டையர்களை  வணங்குவதும், அவர் மிதித்த மண்ணைத்  தொட்டு வணங்குவதும் - இவைகள் எல்லாம் ஏதோ புரட்சி என்பதாக அவருடைய தொண்டர்கள் நினைக்கலாம். நாம் அப்படி நினைக்க முடியுமா?

அவர் ஏழைபாழைகளை அரசியலுக்குக் கொண்டு வந்தார் என்பதற்குக் காரணங்கள் உள்ளன.  பணக்காரன் காலில் விழமாட்டான். ஏழை என்றால் தான் சொல்லுவதைக் கேட்பான். காலிலும் விழுவான்.    ஏழைகளை அரசியலுக்குக் கொண்டு வந்ததில் தவறில்லை. ஆனால் அவரவர் தொகுதிகளில் அவர்களைத் தாராளாமாக பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்க வைத்து கொள்ளைக்காரர்களாக மாற்றினாரே, அதை அவர்கள் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளலாம் , நாம் எப்படி ஏற்றுக் கொள்ளுவது?

ஊகூம்....! அவர் அரசியல்வாதியே அல்ல..! இரும்புப் பெண்மணியும் அல்ல!.

Saturday 17 December 2016

கேள்வி-பதில் (38)

கேள்வி

சின்னம்மா சசிகலா செய்வது சரியா?


பதில்

எப்படிப் பார்த்தாலும் சின்னம்மா செய்வது சரியில்லை!

எந்த அரசியல் பின்னணியுமில்லை. பெரியம்மா இருந்தவரை வாலைச் சுருட்டிகொண்டு இருந்தவர் இப்போது தேர்ந்த அரசியல்வாதி போல செயல்பட ஆரம்பித்துவிட்டார்!

நமக்கும் வருத்தமாகத் தான் இருக்கிறது. தமிழ் நாட்டை  யார் வேண்டுமானாலும்  ஆட்சி செய்யலாம் என்கின்ற ஒரு நிலைமை தமிழ் நாட்டில் உருவாகிவிட்டதாகவே தோன்றுகிறது!

சசிகலாவுக்கு அரசியல் செல்வாக்கு இல்லை என்பது அவருக்கே தெரியும். மக்கள் யாரும் அவரை ஆதரிக்கப் போவதில்லை. ஆனாலும் இன்னும் தேர்தல் வர நான்கரை ஆண்டுகள் இருக்கும் இந்த இடைக்காலத்தில் ஒரு முதலமைச்சராக இருந்தால் எவ்வளவு  சம்பாதிக்கலாம் என்பதில் குறியாக இருக்கிறார்.



ஜெயலலிதாவுடன் 30 ஆண்டு கால நெருக்கமாக இருந்தவர். அவருடைய ஒவ்வொரு அடியும் எதை நோக்கிப் போகிறது என்பதை அறிந்தவர்.  தேர்தல் முடிந்து அடுத்த ஐந்து ஆண்டுகள் அவருடைய செயல் திட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை நன்கு புரிந்தவர். "செயல் திட்டங்கள்" என்றால்? எத்தனை பாலங்கள், எத்தனை ஏரிகள், எத்தனை குளங்கள், குட்டைகள், எத்தனை அலுவலகங்கள் - இப்படி இரு அம்மாக்களும் சேர்ந்து பேசி, விவாதித்து தமிழ் நாட்டின் 'வளர்ச்சிக்காக' ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள்!

இப்போது பெரிய அம்மா இல்லை. சின்னம்மாவுக்கு அந்தப் பணம் பண்ணும் அற்புத விளக்குப் பற்றிய இரகசியம் என்பது அவருக்கு மட்டுமே உரியது! அவரால் அதனை மற்றவர்கள் வசதிக்காக விட்டுக்கொடுக்க முடியாது! அப்படியெல்லாம் விட்டுக் கொடுக்க மாட்டார்!

முடிந்தவரை இழுபறியிலேயே ஆட்சி நடக்கும்! இவரை அடக்குவதற்கு மோடியைத் தவிர வேறு யாராலும் முடியாது. இவரின் ஊழல் வழக்கை வைத்தே மோடியால் இவரை மிரட்டி உட்கார வைக்க முடியும்!

பார்ப்போம்! தமிழனின் தலையெழுத்தை!

Friday 16 December 2016

சவியா வைத்தியநாதன் மேயரானார்!


உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலமையகம் அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரமான குப்பெர்டினோ, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மிக முக்கிய நகரங்களில் ஒன்று..  கல்வியில் சிறந்து விளங்கும்  சிறிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

புகழ் மிக்க இந்த  நகரத்தின் மேயராக சவியா வைத்தியநாதன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இந்திய வம்சாவளி பெண்ணான இவர் இந்த நகரத்தின் முதன் முதலில் தேர்ந்தேடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

இருபது ஆண்டுகளாக குப்பெர்டினோ நகரில் வசித்து வரும் இவர் அமெரிக்கக்  குடியுரிமைப் பெற்றவர். எம்.பி.ஏ. படித்தவர்.

இவர் இடைநிலைப்பள்ளி ஒன்றில் கணித ஆசிரியையாகத் தனது பணியை ஆரம்பித்து அதன் பின்னர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணி புரிந்தவர். ரோட்டரி கிளப் போன்ற இயக்கங்களில் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கின்றார். இன்னும் பல சமூக அமைப்புக்களிலும் தனது சேவைகளைத் தொடர்ந்திருக்கின்றார்.

கடந்த வாரம் டிசம்பர், 8-ம் தேதி குப்பெர்டினோவின் புதிய மேயராக பதவியேற்றிருக்கிறார் சவியா. அவரது  உறவினர்களும், நண்பர்களும் இன்னும் பலரும் இந்தப் பதிவியேற்பின் போது கலந்து கொண்டனர். இந்தியாவில் வசித்து வரும் அவரது தாயாரும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

இது குறித்து சவியா வைத்தியநாதன் பேசும்போது இனவேறுபாடு பார்க்காமல் தன்னை மேயராகத் தெர்ந்தெடுத்த குப்பெர்டினோ வாழ் மக்களுக்குத்  தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.





சவியா வைத்தியநாதனுக்கு நமது வாழ்த்துகள்!

Thursday 15 December 2016

தொழிலதிபர் அஜய் ஒரு முன்னோடி!




காலை நேரத்தில் நல்லதொரு செய்தியைப் படிக்க நேர்ந்தது.

மும்பையைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் பாராட்டும்படியான ஒரு செயலைச் செய்திருக்கிறார்.

நல்லதைச் செய்பவர்களை நாம் பாராட்ட வேண்டும். பராட்டுவதில் கஞ்சத்தனம் வேண்டாம். நல்லதைச் செய்பவர்களை நாம் முடக்கிவிடக் கூடாது!

அஜய் முனோட் என்னும் அந்தத் தொழிலதிபர் தனது மகளின் திருமணத்திற்காக செலவு செய்ய வேண்டிய பணத்தில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். அது தான் அந்தச் செய்தி.

மகளின் திருமணத்திற்காக அவர் செய்ய வேண்டிய செலவு சுமார் எண்பது இலட்சம். அதுவே அவர் மகளின் திருமணத்திற்கான அவரின் செலவுத் திட்டப்பட்டியல்.

ஆனால் அத்தனையையும் ஒரு நொடியில் மாற்றிவிட்டார் அஜய். அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் சேர்ந்து அவரது மகளின் திருமணத்தின் போது ஏதாவது நல்லதொரு செயலைச் செய்யலாமே என்னும் கருத்தைச் சொல்ல அதனையே ஏற்றுக்கொண்டார் அஜய்.

என்றென்றும் அவரது மகளின் பெயரைச் சொல்லும்படியாக சுமார் 90 வீடுகளை ஏழைகளுக்கு அன்பளிப்பு செய்திருக்கிறார் அஜய்.

நாம் அவரை வாழ்த்துகிறோம்! அவரது மகளையும் நீடுழி வாழ வாழ்த்துகிறோம். மகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இது நடக்கக்கூடிய சாத்தியமில்லை!  கோடீஸ்வர வீட்டுப்பிள்ளைகள் அப்படியெல்லாம் எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு வீட்டுப்பிள்ளையும்  தனது  திருமணத்திற்கு எத்தனை கோடி செலவு செய்தார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பந்தயம் மாதிரி!

 அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய  நம்முடைய வாழ்த்துகள்!

கேள்வி - பதில் (37)


கேள்வி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீடிக்கிறதே?

பதில்

ஆமாம்! எல்லாப் பக்கங்களிலிருந்தும் நாம் கேள்விப்படாத, ஆச்சயரியமான, பல செய்திகள் வெளியாகின்றன. எதை நம்புவது என்று ஒன்றும் புரியவில்லை!

ஆனால் அனைத்துச் செய்திகளும் சசிகலாவையே சுட்டிக் காட்டுகின்றன. அனைத்தையும் நம்ப முடியவில்லை என்றாலும் ஒரு சில விஷயங்கள் நம்மை விழி பிதுங்க வைக்கின்றன!

போகிற போக்கைப் பார்த்தால் சசிகலாவைப் புரட்டி எடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது!  அவரோ இதுவரை வாய்த் திறக்கவில்லை! திறக்கவும் மாட்டார்  என்றே தோன்றுகிறது!

அ.தி.மு.க. மேல் மட்டத்தில் எல்லாருமே கப்சிப்! பணத்தைக் கொடுத்து அவர்களைக் 'கப்சிப்' ஆக்கிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது!

ஒன்று மட்டும் புரிகிறது. இந்திய பிரதமர் மோடிக்கும் இது பற்றி தெரிந்திருக்க வேண்டும். இப்போது சசிகலாவின் குடுமி பிரதமர் மோடியின் கையில். அல்லது பன்னிர்செல்வத்தின் குடுமியையும் சேர்த்துக் கொள்ளலாம். இவர் இருவரில் யாரோ ஒருவர்! ஆனால் சசிகலாவின் பக்கம் தான்  'வர்தா' வீசுகிறது!

சசிகலாவின் அமைதியே அவரை குற்றவாளியாகச் சுட்டிக் காட்டுகிறது! அது மட்டும் அல்லாமல் ஏதோ எதுவுமே நடவாதவர் போல் நடந்து கொள்ளுவதும், ஜெயலலிதாவைப் போல் தமிழகத்திற்கு வரும் பிரமுகர்களை வரவேற்பதும் - எல்லாவற்றிலும் ஒரு அவசரத்தைக் காட்டுவதும் - அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் ஐயப்பாட்டைத்தான் உருவாக்குகின்றன! அவர் இயல்பாக நடந்து கொள்ளவில்லை என்பது மட்டும் புரிகிறது!

இதுவரை பன்னிர்செல்வமோ, சசிகலாவோ பேசவோ, கொள்ளவோ, பொது மக்களுடனான தொடர்பை ஏற்படுத்தவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இது வெறும் அ.தி.மு.க. என்னும் கட்சியின் பிரச்சனை மட்டும் அல்ல. தமிழ் நாட்டு முதலைமைச்சரின் மரணம் என்பது தமிழ் நாட்டுப் பிரச்சனை. இப்போது இவர்கள் இருவருமே ஏதோ - இந்தப் பிரச்சனை - கட்சி பிரச்சனையாக நினைத்துக்  கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

இந்த மரணம் என்பது தமிழகப் பிரச்சனை. தமிழக மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் மரணத்தில் இன்று இந்த மர்மம் நீடித்தால் நாளையும் இது போன்ற மர்மங்கள் தொடர வாய்ப்புண்டு. அவரின் அண்ணன் மகளையும் காணோம் என்னும் வதந்தியும் இப்போது நிலவுகிறது!

இதற்கு ஒரு முடிவு காண்பது பிரதமர் மோடியின் கையில்! வேறு வழி இல்லை!


Wednesday 14 December 2016

சிறார் மதமாற்றம் - தடம் மாறுகிறதா பெர்லிஸ்?


மத்தியில் தேசிய முன்னணி அரசாங்கம். பெர்லிஸ் மாநிலத்திலும் தேசிய முன்னணி அரசாங்கம். ஆனால் போகிற போக்கோ  வெவ்வேறு பாதைகளில். பெர்லிஸ் மாநிலம் திடீரென மத்திய அரசாங்கத்திற்கு எதிர்ப்பான ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டிய காரணம் என்ன?

எதிர்ப்பு என்று சொல்லலாமா அல்லது இரு தரப்பும் சேர்ந்து நமக்குக்  காது குத்துகிறார்களா?  பெர்லிஸ் மாநிலம் இப்படி ஒரு  சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன? மத்திய அரசாங்கத்திற்குத் தெரியாமல் - அவர்களுடைய ஆசியில்லாமல் - பெர்லிஸ் மாநிலம் இப்படி செய்யுமா? அதை நாம் நம்ப வேண்டுமா? இதனை நாம் ஏதோ ஒரு நாடகம் அரங்கேறுகிறது என்று தானே நினைக்க வேண்டியிருக்கிறது! நாடகம் என்ன, நாடகமே தான்!

அதுவும் நாடாளுமன்றத்தில் இந்த மதமாற்றத்திற்கு  முடிவு காண கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த அரசாங்கம் முன்வந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு  அவசர மதமாற்ற சட்டத்தை மாநில அர்சாங்கம் கொண்டு வருவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.  மாநில அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் சேர்ந்து மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே இது தோன்றுகிறது! இதற்கு ஒரு முடிவு காணுப்படும் என்று நமக்குத் தோன்றுவில்லை!

ஏற்கனவே சிறுவர்கள் மதமாற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகள் பல எந்த ஒரு முடிவுமில்லாமல் இழுபறியில் நிற்கின்றன.இழுபறி  என்றாலும் அது இஸ்லாத்துக்குச் சாதகமாகத்தான் இருக்கின்றது.

இந்த நேரத்தில் பெர்லிஸ் மாநிலம் ஒரு தலைப்பட்சமாக  சிறார் மதமாற்றத்தை அனுமதிக்கும் விதமாக சட்டத்தைக் கொண்டு வந்திருப்பது மிகவும் கண்டித்தக்கது. நாம் கண்டிப்பதை அல்லது நமது தலைவர்கள் கண்டிப்பதை - யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளுவதில்லை!  அது தான் இங்குள்ள பிரச்சனை.

இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறிய பத்மநாதன் குழந்தையோடு தலைமறைவாய் இருப்பதை இதுவரை காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை! நீதிமன்றம் ஆணையிட்டும் குழந்தையை அதன் தாய் இந்திரா காந்தியிடம்  ஒப்படைக்க காவல்துறையினரால் இயலவில்லை!      

                                                   

முகமது ரிதுவான் அப்துல்லா என்னும் பதமநாதன்  நாட்டில் தான் வாழ்கிறார். ஆனால் அவருக்கு முகவரி இல்லை. கைதொலைப் பேசி இல்லை. தொடர்புக்கான எந்த வழியும் இல்லை. ஆனால் அவர் நாட்டில் தான் வாழ்கிறார்! நீதிமன்ற வழக்குகளிலும் அவர் முகவரி குறிப்பிடப்படவில்லை! அவர் கடைசி மகள் இப்போது பள்ளி போகிறாள். ஆனாலும் அவருடைய முகவரியை யாராலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை!

அதனால் என்ன சட்டதிருத்தம் கொண்டு வந்தாலும் அதனை - நீதி, நியாயம் பற்றி கவலைப்படாத ஒரு நாட்டில் - எந்தச் சட்ட திருத்தத்தினால் எந்தப் பயனும் இல்லை!

இப்போதைக்கு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டதிருத்தம் ஒரு தேர்தல் அறிவிப்பாகவே எடுத்துக் கொள்ளலாம்! மற்றபடி இந்தச் சட்டதிருத்தத்தினால் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது!

மாநிலமும் நடுவண் அரசாங்கமும் சேர்ந்து நமக்குக் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறார்கள்!

மனமாற்றம் ஏற்பட்டால் தான் சிறார் மதமாற்றம் பயன் உடையதாக அமையும்! அதை நோக்கி பயணிப்போம்!


Monday 12 December 2016

இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதில்லையா?


இந்தியர்களும், சீனர்களும் அரச மலேசிய விமானப்படையில் சேர்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதாக விமானப்படைத் தளபதி ஜெனெரல் டான்ஸ்ரீ ரோஸ்லான் சாட் கவலைத் தெரிவித்திருக்கிறார் என்பதாக ஒரு செய்தி.

இது போன்ற செய்திகளைப் படிக்கும் போது நிச்சயமாக நமக்கு ஒன்று தோன்றும்.  எப்படியெல்லாம் நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அது விமானப்படையாக இருந்தாலும் சரி, கப்பற்படையாக இருந்தாலும் சரி நம் இந்திய இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது தான் சரி. எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்தும் ...ஊகும்..  ஒன்றும் ஆகவில்லை!

இது போன்ற சூழலில் - ஒவ்வொரு முறையும் புறக்கணிக்கப்படும் போது - எந்த இளைஞன் வினானப்படைக்கு மனு செய்வான்? குறைவாக விண்ணப்பங்களே வருகின்றன என்று சொல்லுவதில் பயனில்லை.  இந்தியர்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதனால் தான் குறைவான விண்ணப்பங்கள் வருகின்றன என்பதை விமானப்படைத் தளபதி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டு முழுவதும் தகவல்கள் வெளியிடப்படுகின்றன என்பது சரி தான். நீங்கள் விளம்பரம் செய்வதோடு சரி. நீங்கள் இடைஇடையே இது போன்ற செய்திகளைக் கொடுப்பதோடு உங்கள் கடமை முடிந்துவிட்டது. அவ்வளவு தான்! ஆனால் ஆள் சேர்ப்பதற்காக நீங்கள் நியமித்திருக்கிறீர்களே அவர்கள் சரியாக இல்லையே! அவர்கள் மலாய்க்காரர்களுக்குத் தானே முன்னுரிமை கொடுக்கிறார்கள்!  அவர்களைத் தாண்டி போக முடியதே!

அதனால் தளபதி அவர்களே, உங்கள்  கவலை பொருளற்றது. இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை!

ஒவ்வொரு ஆண்டும் இத்தனை இந்தியர்கள் விமானப்படையில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஒரு கட்டாயம் இல்லாதவரை இதற்கு ஒரு முடிவில்லை! நீங்கள் சொல்லுவதையே சொல்லிக் கொண்டிருப்பீர்கள் நாங்களும் சொல்லுவதையே சொல்லிக் கொண்டிருப்போம்!

Sunday 11 December 2016

சீமானுக்கு தற்காலிக வெற்றி!


யார் என்ன தான் சொல்லட்டும்,  சீமானுக்கு இது ஒரு தற்காலிக வெற்றி என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அவர் தான் தமிழக மேடைகளில், தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்று முழக்கமிட்டவர். அவரே இதனை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

ஜெயலலிதா மறைவார் என்று யாரும் எதிர்பாபார்க்கவில்லை. இப்படி திடீரென்று பன்னிர்செல்வம் முதலைமச்சர் ஆவார் என்று நாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

ஒரு பக்கம்,  சசிகலா சீவி சிங்காரித்துக் கொண்டு ஜெயலலிதா எந்த மூலை முடுக்குகளில்லாம் அமர்ந்து ஆட்சி செய்தாரோ அங்கெல்லாம் உட்கார்ந்து கொண்டு முதலமைச்சர் பாணியில் செயல்பட ஆரம்பித்துவிட்டார்!

ஆக, சீமானுக்கு ஒரு தமிழர் அல்ல, இருவர் தமிழ் நாட்டுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றனர்!



சசிகலா எந்த அரசியல் பின்னணியும் இல்லாதவர்.ஆனாலும் இரும்புப் பெண்மணியோடு 33 அண்டுகாலம்  பேர் போட்டவர். இரும்பு இல்லையென்றாலும் செம்பு அளவாவது கர்வம், ஆணவம், பழிவாங்கும் குணம் எல்லாம் இவருக்கு  இருக்கும்! இவருடைய பலமே பண பலம்  தான்! அடுத்த தேர்தல் வரை - அந்த  இடைக்காலத்தில் - இவருடைய ஆட்டம் அதிகமாகவே இருக்கும்!  

பன்னிர்செல்வம் இது நாள்வரை அம்மாவுக்கு மிக அடங்கிய  மனிதராகத் தான் இருந்து வந்தார். இனி மேலும் அப்படித்தான் இருப்பாரா? இருக்க மாட்டார்!  அப்படியே இருந்தாலும் அவருடைய சமுதாயத்தினர் அவரை சும்மா இருக்கவிட மாட்டார்கள்!  

இந்த இருவரும் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் நாட்டுக்கும் எந்த அளவுக்குப் பயனாக இருப்பார்கள்? இருவருமே திராவிடப் பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள். கர்னாடக அரசு,  காவேரி நீர் தமிழகத்துக்கு வரக்கூகூடாது என்பதற்காகப் பாலம் கட்டிய போது அவர்களுக்கு லோரி லோரியாக தமிழக மணலை அவர்களுக்கு விற்று காசாக்கியவர்கள்!  இது போதும் இவர்களைப் பற்றி! ஒரு வேளை இப்போது அவர்கள் மாறலாம்! மாறினால் நமக்கு மகிழ்ச்சியே!

எப்படிப் பார்த்தாலும்  "நாம் தமிழர்" சீமானுக்கு இது வெற்றியே! அவர் மட்டும் தான் தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று பட்டி, தொட்டி, தெருவெல்லாம் முழக்கமிட்டவர்.

எப்படியோ ஒரு மாற்றம் வந்திருக்கிறது. இனி எப்போதும் தமிழர் ஆட்சி தக்க வைக்கப்பட வேண்டும்.. இது தொடர வேண்டும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழன் தான் தலைமை பீடத்தில் இருக்க வேண்டும். அதுவே நமது ஆசையும் கூட!



                                                                     

கேள்வி - பதில் (36)


கேள்வி

அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளராக சசிகலா வரும் வாய்ப்பு உண்டு என்று நினைக்கிறீர்களா?

பதில்

அவர் பொதுச் செயலாளராக வருவதற்கான வாய்ப்புக்குள் சிறப்பாகவே இருக்கிறது.

அ.தி.மு.க.வின்  மிக முக்கிய பதவி பொதுச் செயலாளர் என்பது தான். பொதுச் செயலாளர் தான் முதலைமைச்சராக வர முடியும்.

 ஜெயலலிதாவின் உயிர்த் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. இத்தனை ஆண்டு காலம் அவருடன் இருந்தவர். அவரோடு இருந்து அனைத்தையும் அனுபவித்தவர்,

ஜெயலலிதாவை வைத்தே கோடிக்ணக்கில் தமிழகத்தை சுரண்டியவர். இப்போது அவரது குடும்பத்தினர் ஏழு ஏழு தலைமுறைக்கும் பணத்தைப் பற்றி கவலையில்லாதவர்கள்! பணம் இருக்கும் போது பதவியெல்லையென்றால் எப்படி?  அவர் சம்பாதித்த பணம்  எல்லாம் அரசியல் மூலம் வந்தது! அந்த அரசியலை அவர் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்து விடமாட்டர்!

பொதுச் செயலாளர் பதவி என்பது அ.தி.மு.க பொதுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்டும் பதவி. பொதுக்குழுவில் உள்ள ஓரிருவர் இப்போதே சசிகலாவின் காலில் விழ ஆரம்பித்து விட்டார்கள்! மீதம் உள்ளவர்களைப் பணத்தைப் போட்டு வளைத்து விடுவார்! ஜெயாவோடு இருந்தவர்க்கு இதெல்லாம் கைவந்த கலை!




அவரை எதிர்ப்பவர்களைப் பணத்தால் வளைத்து விடுவார்! அது மட்டும் அல்ல. கட்சியிலுள்ள அனைவரையும் அறிந்தவர். அவர்களுடைய பலம், பலவீனங்களையும் அறிந்தவர்.எப்படி சொடுக்கலாம், மடக்கலாம் என்பதெல்லாம் ஜெயா காலத்திலிருந்தே அறிந்து வைத்திருப்பவர். அவர்களின் பாவ, புண்ணியங்கள்,  எதற்காக அலைகிறார்கள் என்பதைப் புரிந்தவர்!

ஆக,  சசிகலா பக்கம் தான் அதிர்ஷ்டக் காற்று பலமாக வீசுகிறது! அவர் பொதுச் செயலாளராக வருவார் என்பதே நமது எண்ணம். குறைந்த பட்சம் அடுத்த தேர்தல் வரும்வரை அவருக்கு நல்ல காலம் பிறக்கலாம்!

யார் வந்தாலும் சரி! தமிழ் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்க வேண்டும்! அதுவே நமது ஆசை!



Saturday 10 December 2016

கேள்வி - பதில் (35)


கேள்வி

ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருக்கிறதா?

பதில்

அப்படித்தான் தோன்றுகிறது. பல்வேறு செய்திகள் நம்மைக் குழப்புகின்றன. ஆனாலும் அவை அனைத்தும் பொய் என்று நாம் ஒதுக்கிவிட முடியாது.

உண்மையில் நடந்தது என்ன என்பது சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அப்பல்லோவின் மருத்துவர்களுக்கும் தான் தெரியும்.

ஆனால் அப்பல்லோ மருத்துவமனை அவர் டிசம்பர், 5, இரவு மணி 11.30 க்குக் காலமானார் என்னும் அறிவிப்போடு முடித்துக் கொண்டது.

இப்போது அவர் சாவில் மர்மம் இருப்பதாகப் பலவாறாகப் பேசப்படுகிறது. இக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சசிகலாவின் பக்கமே சுட்டிக்காட்டப் படுகிறது. ஆனால் அவர் அதனைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை! அப்பொல்லோ என்ன சொன்னதோ அது தான் அவரின் நிலைப்பாடு. அதற்கு மேல் அவர் வாய் திறப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது! திறந்தால் அவருக்கத்தான் பிரச்சனை! அதனால் அவர் அ.தி.மு.க. வை  தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் தனது கவனத்தை திருப்பிக் கொண்டார்!

பலர் பலவகையான சந்தேகங்களை எழுப்பியது போல என்னிடமும் ஒரு சந்தேகம் உள்ளது. எல்லாச் சந்தேகங்களோடு இதனையும் சேர்த்துக் கொள்ளட்டுமே என்று நானும் இதனை இங்கு வெளியிடுகிறேன். இது சரியா, , தவறா என்று என்னால் சொல்ல முடியாது.

ஜெயா தொலைகாட்சியில்  ஒவ்வொரு நாள் காலையிலும் இந்திய நேரம் 6.00 - 7.00 வரை நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கண்ணி மாதா வழிபாடு நேரடி ஒளிபரப்பாக நடைபெறும். இது எங்கள் குடும்பத்தினர் தினசரி பார்க்கின்ற நிகழ்ச்சி. இது ஒரு கட்டண நிகழ்ச்சி.  அதனால் எந்தத் தடையுமில்லாமல் தினசரி நடைபெறும் நிகழ்ச்சி. ஜெயலலிதா இறந்த அடுத்த நாள் காலை - அதாவது 6-ம் தேதி காலை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. அது மரியாதை நிமித்தம் ஒளிபரப்பாகவில்லை எனலாம். அது நமக்குப் புரிகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சி அவர் இறந்த அன்று காலையே (5-12-2016)ஒளிபரப்பாகவில்லை. அது ஏன் என்பதே எனது கேள்வி? அன்று காலை அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை என அறிந்ததும் நான் அவர் இறந்து விட்டதாகவே நினைத்துக் கொண்டேன். வேறு மாதிரி நினைக்கத் தோன்றவில்லை! அவர் இறக்கவில்லையென்றால் அது ஏன் ஒளிபரப்பாகவில்லை என்னும் கேள்வி தொக்கி நிற்கிறது.

அப்படியென்றால் உண்மையில் அவர் எப்போது தான் இறந்தார்?

அனைத்தும் மர்மம், மர்மம் தான்!

Friday 9 December 2016

ஸ்ரீலங்கா அதிபரின் கம்பீர வருகை..!

       நன்றி: வணக்கம் மலேசியா - போலிஸ் புகாருடன்...........

ஸ்ரீலங்கா அதிபர் மைத்ரிபால சிரிசேனாவின் மலேசிய வருகை  என்பது மிகவும் கம்பீரமான ஒரு வருகை! மலேசியா என்றுமே அவருக்கு  மிகவும் நெருக்கமான ஒரு நாடு!  ஆளும் தரப்பினர் அவரின் வருகைக்காக காத்துக் கிடக்கின்றனர்!

அவரின் வருகையை மலேசியத் தமிழர்கள் எதிர்ப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமலில்லை. அரசாங்கத்துக்குத் தெரியும். 'உங்கள் எதிர்ப்புக்களை எல்லாம் நாங்கள் மதிக்கவில்லை' என்பதே அவர்களின் கோட்பாடு!

ஒரு சிறிய கூட்டத்தின் ஆர்ப்பாட்டங்களுக்கெல்லாம் நாங்கள் பயந்து கொண்டு இருக்க முடியாது. என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

மேலும் ஸ்ரீலங்காவில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழர்கள்.. அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டுமே தவிர தங்கள் விருப்பத்திற்கேற்ப  செயல்பட முடியாது என்பது அவர்கள் வாதம்!

மலேசியாவிலும் அது தானே நடந்து கொண்டிருக்கிறது? கோயில்கள் எந்த முன்னறிவிப்புமின்றி உடைக்கப்படுகின்றன. கோயில் சிலையில் தகர்த்தெறியப்படுகின்றன! சிறுபான்மையினர் இதனை எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது.மனிதாபிமானம் பற்றிப் பேசக்கூடாது என்பது தான் இங்கு உள்ள கொள்கையும்!

சரி! எப்படிப் பார்த்தாலும் சிரிசேனாவின் வருகையை நாம் தமிழர்கள் எதிர்த்துப் பயனில்லை என்று புரிகிறது. அரசாங்கம் அவரை ஆதரிக்கிறது. நமது எதிர்ப்புக்களைக் காட்டலாம். ஆங்காங்கே கொடிகள் பிடிக்கலாம். போலிஸ் புகார் செய்யலாம். ஒழிக என்று கூச்சல் போடலாம். கொடும்பாவி எரிக்கலாம். அனைத்தும் சிறிய அளவில் மட்டுமே செய்ய முடியும். வெளி உலகிற்கு எட்டாதவாறு தான் செய்ய முடியும்! ஆனாலும் செய்யத்தான் வேண்டும். தமிழ்ப்பத்திரிக்கைகளும் ஏதோ ஒரு பக்கம் வேண்டாத செய்தியாகப் போடலாம். அந்த அளவுக்குத் தான் அவர்களின் உரிமை!

தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு தமிழனும் சரித்திரம் படைப்பவன் தான். அந்த அளவுக்கு அவன் திறமைப் படைத்தவன்.இவனை ஒன்று சேர்க்க முடியாததால் தான் இன்று இவன் வீழ்ந்து கிடக்கிறான். இந்த வீழ்ச்சியால் தான் உலகம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது. ஆனால் இது தொடர் கதை அல்ல! விழுவது எழுவத்ற்குத்தான்!

அரசாங்கத்தில் நம்மைப் பிரதிநிதிப்போர் கொஞ்சம் அக்கறை காட்டினால் போதும். இது ஒரு பிரச்சனையே அல்ல. அமைச்சரவையில் பேசி மிக எளிதாக சிரிசேனாவின் வருகையைத் தடுக்கலாம்.ஆனால் அவர்கள் அதற்குத் தயாராக இல்லை. கொத்து கொத்துகாக மக்கள் கொல்லப்பட்ட போது கருணாநிதி தனது பிள்ளைகளின் பதவிக்காக ஆளாய்ப் பறந்து கொண்டிருந்தார். இங்கும் நமது அரசியல்வாதிகள் பதவிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!  எந்தப் போர் ஒய்ந்தாலும் இவர்கள் போர் ஓயப்போவதில்லை!

அப்படி ஓயும்வரை
 சிரி சேனாக்கள் கம்பீரமாக வருவார்கள்! போவார்கள்! நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்!

ரோஹிங்யா சமுகத்தின் மீதான தாக்குதல்!




மியன்மாரில்,  ரோஹிங்யா சமூகத்தினர் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று மலேசிய வெளியுறவு அமைச்சு மியன்மாரை நினைவுறுத்தியது.

தொடர்ந்து மியன்மார் இன, சமய வெறியர்களால் ரோஹிங்யா முஸ்லிம்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், நாட்டைவிட்டு அவர்கள் துரத்தப்படுவதும் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயல்.

இன்று இராணுவத்தினரால் பலவகையானத் துன்பங்களுக்கு உள்ளாகும் இந்த மக்களை எந்த நாடும் வரவேற்பதாக இல்லை. வெளி நாடுகளுக்குப் படகுகள் மூலம் தப்பியோடுவதும், கடலிலேயே சாவதும், கரைக்கு வெளியே அவர்களால் வெளியேற முடியாததும் - அதன் பிறகு அவர்கள் கடலையே சுற்றிச்சுற்றி - நாமே  நமது வசதிக்கேற்ப ஊகித்துக் கொள்ள வேண்டியது தான்.

ஆண்டுக் கணக்கில் இந்தப் பிரச்சனை இழுத்துக் கொண்டு போகிறதே தவிர இவர்களுக்கு எந்த ஒரு முடிவும் காணப்படவில்லை.

இவர்கள் ஒரளவு அருகில் உள்ள வங்காள தேசத்தின் உறவுகள். ஆனாலும் வங்காள தேசம் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கத்  தயாராக இல்லை. எந்த நாடும் ஏற்காத நிலையில், இருக்கின்ற நாடும் இம்சைப் படுத்துகின்ற நிலையில், இவர்கள் நிலை என்ன?  எங்கு தான் போவார்கள்? என்ன தான் செய்வார்கள்?

இதனை மியன்மார் தனது உள்நாட்டு விவகாரமாக காண முடியாது என்றும் இது ஒரு அனைத்துலக விவகாரமாக காண வேண்டும் எனவும் மலேசிய வெளியுறவு அமைச்சு கூறுகிறது. இது சமய சம்பந்தமான விவகாரம் அல்ல; மாறாக மனிதாபிமானம் சம்பந்தமான விவாகாரம். அது மட்டும் அல்லாது ஓர் இனத்தை மட்டுமே குறிவைத்து வெளியேற்றும் இந்தச் செயல் இன அழிப்பு விவகாரந்தான் என  அது மேலும் கூறியது.

மியன்மார் பதிலடியாக தனது நாட்டுக் குடிமக்கள் இனி மலேசிய நாட்டிற்கு வேலை செய்ய அனுமதி இல்லை என அறிவித்துவிட்டது

வெளியுறவு அமைச்சின் இந்தச் செயல்பாட்டை நாமும் வரவேற்கிறோம். இன அழிப்போ, அல்லது பலவீனப்பட்டுப் போயிருக்கும் ஒரு பகுதி மக்களை வெளியேற்ற முயற்சிப்பதோ மிகவும் கொடூரமான ஒரு  செயல்.

இலங்கையில் பல இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது கூட நமது அரசாங்கம், இதுவரை கூட, - மகிந்த ராஜபக்‌சே, இப்போதைய அதிபர் மைத்திரி பாலா சிரிசேனா வரை - கண்டு கொள்ளவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. தமிழ் மக்கள் அவ்வளவு எளிதில் அதனை மறந்து விட முடியாது.

இது போன்ற செயல்கள் எங்கு நடந்தாலும் மனிதாபிமானமற்ற செயல்கள் தான். இது சமயம் சார்ந்ததும் அல்ல. இனம் சார்ந்ததும் அல்ல.இது மனிதம் மட்டும் தான்.

ஆனாலும் நமது வெளியுறவு அமைச்சு தெளிவாகவே இருக்கிறது. ரோஹிங்யா சமூகம் என்பது முஸ்லிம்கள் என்னும் கோணத்தில் பார்க்காமல் அவர்களும் மனிதர்கள், மனிதாபிமான கோணத்தில் பார்க்கப்பட வேண்டியவர்கள் என்னும் கொள்கையைக் கொண்டிருப்பது நமக்கும் ஏற்புடையதே.

ரோஹிங்யா மக்களின் துயர் துடைக்கப்பட வேண்டும். குடியிருக்க ஒரு வீடு  மட்டும் அல்ல, ஒரு நாடும் வேண்டும். அவர்களுக்கு யார் அடைக்கலம்  தருவார்?  இஸ்லாமிய நாடுகளுக்கே இதில் அதிக பொறுப்புக்கள் உண்டு. மனிதாபிமானத்தைப் பாருங்கள் - முஸ்லிம்களாகப் பார்க்காதீர்கள் - என்று சொல்லி தப்பிவிட முடியாது!


எனினும் இந்த மக்களுக்கு நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்!








Wednesday 7 December 2016

கேள்வி-பதில் (34)


கேள்வி

ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சி தானே?


பதில்

உண்மை தான். அவருடைய மறைவு என்பது அதிர்ச்சி செய்திதான். அவர் மறைவு என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

அவர் உடல் நலம் குன்றியிருந்தார் என்பது நாம் அறிந்தது தான். நாம் யாரையாவது  குற்றம் சொல்ல வேண்டும் என்றால் அவரது தோழி சசிகலாவைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்.

எல்லாவற்றையும் மூடி மறைத்தார். அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரது குடும்பமே ஜெயலலிதாவைச் சுற்றி நின்று கொண்டு யாரையும் நெருங்க விடவில்லை.

அந்த அளவுக்கு என்ன ரகசியத்தை அவர் மூடி மறைத்தார்? இப்போது சசிகலாவின் மீது கொண்டு வரப்படுகின்ற குற்றச் சாட்டுக்களில்  உண்மை இருக்கலாம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

எல்லாவற்றையும் மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு மாநில முதல்வரை ஏதோ ஒரு சிறைக்குள் அடைத்து வைத்து ஒரு கைதியைப் போல நடத்தியிருக்கிறார் சசிகலா. இதற்கு அப்பல்லோவும் உடந்தை என்பதாகவே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு மாநில முதல்வரின் உடல்நிலையை அறிந்துகொள்ள அந்த மாநில மக்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.எந்த  ஒளிவு மறைவும் தேவை இல்லை.

இப்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்புக்களும், தற்கொலைகளும், சேதங்களும் அனைத்தும் சசிகலாவின் பிழையான அணுகுமுறை தான் காரணம் என்பதில் ஐயமில்லை. ஆரம்பத்திலேயே அவருடை உடல்நிலை குறித்து அறிவிப்புக்கள் கொடுத்திருந்தால் - அவரது புகைப்படங்களை வெளியிட்டிருந்தால் - இந்த அள்வுக்குத் தற்கொலைகள் ஏற்பட்டிருக்காது. .தொடர்ந்தாற் போல அறிவிப்புக்களும் , புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருந்தால் அவருடைய தொண்டர்கள் நல்லதோ, கெட்டதோ அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்; மனதளவில் தங்களைத் தயார் படுத்தியிருப்பார்கள்.

ஆனால் கொடுக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் நம்பிக்கை தரும் செய்தியாகவே இருந்தன.நடக்கிறார், பேசுகிறார், சாப்பிடுகிறார், அமைச்சர்களுக்குக் கட்டளையிடுகிறார் என்று  ஊக்கம்தரும் செய்திகளாகவே கூறிவிட்டு கடைசியில் தீடீரென இறந்து போனார் என்றால் எங்கோ, ஏதோ சரியாக இல்லை; ஒரு சந்தேகத்தை தான் ஏற்படுத்துகிறது.

எப்படிப் பார்த்தாலும் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கும். அதற்கு சசிகலா தான் காரணம் என்பதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

ஆனாலும் எங்களுக்குப் பஞ்சமே இல்லை!


அரசாங்கம் கட்டிய இருபது இலட்சம் வெள்ளி தமிழ்ப்பள்ளிளி!

நமது நாட்டில் என்னன்னவோ நடந்து கொண்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதும்,  அவர் இவரைக் குற்றம் சாட்டுவதும் இவர் அவரைக் குற்றம் சாட்டுவதும் என்பது மிகவும் சாதாரணம். அதுவும் அரசியால்வாதிகளாயிருந்தால் சொல்லவே வேண்டாம்!

நாட்டில் அரசியல்வாதிகளின் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள்! குற்றச்சாட்டுகளுக்குப் பஞ்சமே இல்லை! ஆனால் யாரும் எவரும் எந்தக் குற்றச்சாட்டையும் ஒத்துக்கொள்ளுவதாகவும் இல்லை! அதனால் நாம் குற்றச்சாட்டுக்களைக் காதில் போட்டுக்  கொள்வதோடு சரி!

தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்கம் நிறைய நிதி ஒதிக்கீடு செய்கிறது. அரசாங்கத்தின் கணக்குப்படி பார்த்தால் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் ஒரு கல்லூரிக்குச் சமமாக இருக்க வேண்டும்!  ஆனால் அரசாங்கம் கொடுக்கின்ற நிதி யார் கைக்குப் போகிறதென்று யாருக்கமே தெரியவில்லை! ஒன்று மட்டும் உறுதி. அப்பணம் பள்ளிகளுக்குப் போய் சேர்வதில்லை!

நிதி ஒதுக்கீடுகளுக்குப் பஞ்சமில்லை  நிதி போய் சேர்வதில் தான் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது! எந்தப் பஞ்சப் பராரிகளுக்குப் போய் சேருகிறது என்பது தான் புரியாத புதிர்!

இந்தியர்களை வியாபாரத் துறையில் ஊக்குவிக்க ஒரு திட்டம் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. சிறு வியாபாரிகள் பலன் பெரும் பொருட்டு அரம்பிக்கப்பட்ட ஒரு திட்டம். அரசாங்கம் சில கோடிகளையும் அதற்காக ஒதுக்கியது. ஆனாலும் அந்தப் பணம் ஏதோ ஓரிரு சிறு வியாபாரிகளைத் தவிர வேறு யாருக்குத்தான் அந்தப் பணம் போய் சேர்ந்தது என்று இது நாள் வரை யாருக்கும் தெரியவில்லை! இதில் பெரிய வியாபாரிகள் தான் பயனடைவதாக ஒரு பேச்சும் உண்டு!

வியாபாரம் செய்ய நிதி  ஒதுக்கீடுகளில் எந்தப் பஞ்சமுமில்லை! அரசாங்கம் அதனைச் செய்கிறது. ஆனால் சிறு வியாபாரிகள் ஆயிரம் பேருக்குச் சேர வேண்டிய நிதி ஒதுக்கீடு - அத்தனை பணமும்  ஒரு பெரிய பணக்காரர்க்குப் போய்ச் சேர்ந்தால் - அதனால் சிறு வியாபாரிகளுக்கு என்ன பயன்? அப்படி பஞ்சப்பாட்டுப் பாடுகிற பெரிய வியாபாரி கூட இருக்கிறாரா? தெரியவில்லை! ஆனால் ஒதிக்கீடுகளில் எந்தப் பஞ்சமும் இல்லை! சரியாகப் பஞ்சமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது!

ஆனால் எல்லாவற்றையும் விட அரவமே இல்லாமல்  ஒரு பஞ்சமா பாதகம் ஒன்று அரங்கேறியிருக்கிறது! அதையும் தெரிந்து கொள்ளுங்கள்!

மீஞாக்/செரண்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பற்றி  செம்பருத்தி இணைய இதழில்  படிக்க நேர்ந்தது!

பிரதமர் நஜீப், 2010-ம்ஆண்டில் இந்தப் பள்ளியின் கட்டுமானப்பணிக்காக ஒரு மில்லியன் ரிங்கிட் கொடுப்பதாக அறிவித்தார்!. அவரைத் தொடர்ந்து முன்னாள் கல்வி அமைச்சர் முகமது யாசின் 2012-ம் ஆண்டில் இந்தப் பள்ளிக்கு இரண்டரை மில்லியன் கொடுப்பதாக அறிவித்தார்!அதே ஆண்டில் முன்னாள் ம.இ.கா. தலைவர், ஜி.பழனிவேலு அவரின் பங்காக இரண்டு மில்லியன் தருவாதாக வாக்குக் கொடுத்தார்!

ஆகக் கடைசியாக, அரசாங்கத்தின் மூலம், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் வழி, மேற்குறிப்பிட்ட மீஞாக்/செரண்டா தமிழ்ப்பள்ளிக்கு வெள்ளி20,00,000.00 (வெள்ளி இருபது இலட்சம்) நிதி உதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது!

வாக்களிக்கப்பட்டதோ வெள்ளி 55,00,000.00. (ஐம்பது இலட்சம்).  கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதோ வெள்ளி 20,00,000.00 (இருபது இலட்சத்தில்).

சரி, ஏதோ 20,00,000 வெள்ளியாவது பள்ளிக்கூடம் கட்ட கொடுத்தார்களே, நிர்மாணித்தார்களே  என்று பெருந்தன்மையோடு நாமும்  ஏற்றுக்கொண்டோம்! ஆனால் பள்ளிக்கூடம் எங்கே என்பது தான் யாருக்கும் தெரியவில்லை! அடிக்கல் நாட்டிய இடத்தில் ஏதோ ஒரு சில சிமிண்ட் தூண்களைத் தவிர வேறு ஒன்றையும் காணவில்லை!

இல்லாதப் பள்ளிக்கூடத்திற்கு இருபது இலட்சம் செலவா? ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கிணற்றைக் காணோம் என்று காவல்துறைக்குப் புகார் செய்வார்! இப்போது நமது நிலையும் அப்படித்தான்! இருபது இலட்சம் செலவில் கட்டப்பட்ட தமிழ்பள்ளியைக் காணோம் என்று புகார் செய்யலாம் தான்! ஆனால் காவல்துறை இந்தப் புகாரையெல்லாம் கண்டு கொள்ளாது! காரணம் இது அரசியல்! இதையெல்லாம் தெரிந்தவர்கள் அரசியல்வாதிகள் மட்டும் தான்! அது சரி! நல்ல அரசியல்வாதிகளை எங்கே போய் நாம் தேடுவது?

ஆனாலும்  எங்கள் நாட்டில் எதற்கும் பஞ்சமே இல்லை!






Saturday 3 December 2016

பெட்ரோல் விலை குறைந்தது! ஆனால்......!


பெட்ரோல் விலை குறைந்தது என்பது மகிழ்ச்சிக்குறிய செய்தி தான். ஆனாலும் மலேசியர்கள் மகிழ்ச்சியடைய முடியவில்லை!

காரணம் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான் பெட்ரோல் விலை பதினைந்து (15)காசுகள் கூட்டப்பட்டன. அது ஒரு அதிர்ச்சி தரும் செய்தி என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இப்போது குறைக்கப்பட்டதோ ஐந்தே ஐந்து (5)காசுகள் தான்!

ஏமாற்றம் தான் என்றாலும் ஏதோ அந்த அளவாவது குறைக்கப்பட்டதே என்பதில் மகிழ்ச்சியே!

ஆனால் இங்கு யோசிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. விலை ஏற்றத்தின் போது எல்லாப் பொருள்களின் விலையும் ஏறிவிட்டன. அவ்வளவு தான்!  இனி மேல் பொருள்களின் விலை இறங்கும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை!

வியாபாரிகள் விலைகளை ஏற்றிவிட்டார்கள் என்பது வழக்கமான பல்லவி தான். ஆனால் இதற்கு அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறதோ என்று நாம் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

பதினைந்து காசுகள் ஏற்றிவிட்டு ஐந்து காசுகள் குறைக்கும் போது விலைவாசிகளில் எந்தத் தாக்கமும் ஏற்படப்போவதில்லை. சாதாரணக் காலங்களிலேயே ஏறிய பொருள்களின் விலை குறைக்கப்படுவதில்லை.

முன்பு பதினைந்து காசுகள் ஏற்றத்தின் போது பொருள்களின் விலை மட்டும் ஏறவில்லை.  பல பொருள்கள் அப்போதிருந்தே காண முடியவில்லை!

மக்கள் பயன்படுத்தும் மிக அத்தியாவசியமான பொருள்களான சமையல் எண்ணைய், குழந்தைகளின் பால் பவுடர்கள் பெரும்பாலும் கடைகளில் காணப்படவில்லை!  ஒரு சிலர் பேராங்காடிகளில் ஒரு சிலப் பொருள்கள் கிடைப்பதாகச் சொல்லுகிறார்கள். அப்படி என்றால் சிறு வியாபாரிகளின் நிலை என்ன?

மக்கள் மனதிலே வேறு ஒர் எண்ணமும் வலூவூன்றுகிறது. ஏன்? இப்போதே அனைவரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்! ஐந்து காசுகள் குறைக்கபட்டதற்கு மகிழ்ச்சியடைவதைவிட  வெகு சீக்கிரத்தில் அதாவது ஜனவரியில் இருபது (20) காசுகள் கூட்டுவது உறுதி என்பதாக இப்போதே மக்கள் கவலைப்பட  ஆரம்பித்துவிட்டார்கள்!

ஏற்றமோ, இறக்கமோ எல்லாம் நன்மைக்காக என்றே எடுத்துக் கொள்ளுவோம்!

Friday 2 December 2016

தலைமறைவானவர் நாட்டில் தான் இருக்கிறார்!


இந்த நாட்டில் எத்தனையோ குற்றவாளிகள், மிகவும் ஆபத்தான, படு பயங்கரமானக் குற்றவாளிகள் கூட, போலிஸ் கண்களில் இருந்து தப்பித்தது கிடையாது! எப்போதோ, எங்கயோ அவர்கள் பிடிபட்டு விடுவார்கள். அல்லது சுட்டுத் தள்ளப்படுவார்கள்!

ஆனால் இந்திராவின் முன்னாள் கணவர் முகமது ரித்வான் என்னும் பத்மநாதன் மட்டும் போலிஸாரின் கண்களுக்கு அகப்படும் சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை! நமது ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூட மிகவும் சலித்துக் கொள்ளக்கூடிய வகையில் இந்தத் தேடு பணி தொடர்...தொடர்ந்து ........கொண்டே ..........இருக்கிறது!

இந்த பத்மநாதன் என்னும் ரிதுவான், நீதிமன்ற உத்தரவின் படி, இந்நேரம் தனது கடைசி குழந்தையை தனது முன்னாள் மனைவியிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் ஒப்படைக்கவில்லை. என்று  நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்ததோ அன்றிலிருந்து அவர் காணப்படவில்லை!

பத்மநாதன் வெளி நாடுகளுக்குப் போகும் நிலையில் இல்லை.  காரணம் எல்லாச் சோதனைச் சாவடிகளிலும் அதிகாரிகள் விழிப்பு நிலையில் உள்ளனர் என்கிறார் போலிஸ் படைத்தலைவர்.

பத்மநாதனுக்கு அவரின் கைது உத்தரவு பற்றி பெரிய விளம்பரம் கொடுத்ததனாலேயே அவர் உஷாராகி விட்டார் என்கிறார் டான்ஸ்ரீ காலிட்! அதனாலேயே அவரைக் கைது செய்ய முடியாத நிலை என்கிறார் அவர்!

போலிஸாரைக் குற்றம் சொல்ல வேண்டாம். நாங்கள் வேண்டுமென்றே அவரைக் கைது செய்யாமல் இருக்கிறோம் என்பது உண்மையல்ல! தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்கிறார் அவர்.

போலிஸ் படைத் தலைவரின் கருத்துக்கு எதிர்கருத்து சொல்லக்கூடிய நிலைமையில் நாம் இல்லை. "வேண்டுமென்றே அவரைக்கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்" என்று மக்கள் பேசுவதை அவர் தெரிந்து வைத்திருக்கிறார்! நன்றி! அவருக்கு அதிகப்படியான விளம்பரம் கிடைத்ததானாலேயே அவர் தலைமறைவாகிவிட்டார் என்பதும் நம்பக்குட்டியதாக இல்லை. தமிழ்ப்பத்திரிக்கைகளைத் தவிர மற்றபடி பெரிய அளவில் எந்த ஊடகங்களும் ரித்துவானைப் பற்றிய செய்திகளைப் போடுவதில்லை.

இருந்தாலும் போலிஸார் இன்னும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துகொண்டு வருவதாக அவர் கூறியிருப்பதை வரவேற்போம்! இது மிகவும் சாதாரண ஒரு வழக்கு. நிச்சயம் போலிஸார் இதற்கு ஒரு முடிவு காண்பார்கள் என நம்புவோம்!



Thursday 1 December 2016

குழந்தைகள் விற்பனையா..?


சமீப காலங்களில்,  உலகளவில்,  மலேசியா பற்றிய செய்திகள் கேட்பதற்கு வருத்தம் அளிப்பதாகத்தான் இருக்கிறது.

அரசியல்வாதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மோசமான  ஊழல் சம்பந்தமான  செய்திகள் ஒரு பக்கம். இப்போது படிப்படியாக இறங்கி எல்லா மட்டத்திலும் வெவ்வேறு வகையில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சில நாள்களுக்கு முன்னர் ஆள் கடத்தல் செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டன.அதற்கும் மலேசியா பெரிய அளவில் பேசப்பட்டது!

குழந்தைகள் கடத்தல் என்பது எப்போதுமே உள்ள ஒரு குற்றச்சாட்டு. ஆனால் எதற்குமே சரியான பதில் இல்லை!

இப்போது குழந்தைகள் கடத்தல் இல்லை. குழந்தைகள் விற்பனை என்பதாக ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது அல்ஜஸீரா தொலைக்காட்சி நிலையம்,  சமீபத்திய தனது செய்தித் தொகுப்பொன்றில்  மலேசியாவை குழந்தைகள் விற்பனை மையமாக சித்தத்திரிக்கிறது அல்ஜஸீரா. மலேசியாவுக்கு இது மிகவும் சங்கடத்துக்குறிய செய்தி என்பதில் ஐயமில்லை.

அல்ஜஸீரா கொடுக்கும் மேலும் அதிர்ச்சிக்குறிய  செய்தி: இந்த குழந்தைகள் விற்பனையில் டாக்டர்கள்,  அராசங்க  அதிகாரிகள்,  தேசிய பதிவு இலாகா அதிகாரிகள், காவல் துறையினர் போன்றவர்கள் பலர் சம்பந்தப்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் செய்தி தான்! .

சராசரி மலேசியர்களோடு ஒப்பிடும் போது மேற் குறிப்பிட்டவர்கள் அனைவருமே நல்ல நிலையில் உள்ளவர்கள். அதாவது வருமானம் என்று வரும்போது கொஞ்சம் அதிக சம்பாத்தியம் உள்ளவர்கள்!  ஆனாலும் இவர்களெல்லாம் இது போன்ற ஊழல்களில் ஈடுபடும் போது - ஊழல் என்பதைவிட இதுவும் பயங்கரவாதம் தான் - பொது மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை! இப்படி படித்தவன் எல்லாம் பண்பற்ற முறையில் நடந்து கொண்டால் நாடு எங்கு நோக்கிச் செல்கிறது என்று தான் நாமும் கேட்க வேண்டி இருக்கிறது!

இந்த செய்திகள் வந்த அடுத்த நாளே காவல்துறை தலைவர், காலிட் அபு பக்கர் இதனை மறுத்துள்ளார்!  சட்டதிட்டங்கள் எல்லாம் மிகவும் கடுமையாக இருப்பதாகவும் குழந்தைகள் விற்பனை என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்று அவர் கூறியிருக்கிறார்.  பொதுவாகவே காவல் துறைத் தலைவர் எந்த விஷயமானாலும் முதலில் மறுப்பதும் பின்னர் 'நான் அப்படிச் சொல்லவில்லை, இப்படிச் சொல்லவில்லை' என்று மறுப்பதும் அவரின் இயல்பு!

ஆனாலும் காவல்துறையினரால்  இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறியும் போது நமக்கும் ஆறுதலாக இருக்கிறது! தனியார் துறை தான் அவர்களின் இலக்கு என்பது அவர்களின் நடவடிக்கைகளின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.

பொதுவாகவே மலேசியர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது நாம் கேட்டிராத ஒன்று. வெளி நாடுகளிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் பெண்கள் ஒரு சில கிளினிக்குகளை மட்டுமே, தேர்ந்தெடுத்து  பயன்படுத்தி  வருகின்றனர். இங்கு தான் தவறான பல நடவடிக்கைகள் செயல்படுத்தப் படுகின்றன. இவைகள் எல்லாம் காவல்துறைக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. வரம்புகள் மீறப்படுகின்றன.

யாரும் ஒன்றும் செய்வதற்கில்லை! காரணம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் 'பெரிய' மனிதர்களாக வெளியே உலா வருகின்றனர்! யார் என்ன செய்ய?

இவ்வளவு இடர்பாடுகளிலும் ஒரு சிலர் துணிந்து இது போன்ற செய்திகளை வெளி உலகிற்குக் கொண்டு வந்து விடுகின்றனர்!

அதற்காக நாம் அல்ஜஸீரா தொலைக்காட்சி நிருபரைப்  பாராட்ட வேண்டும்.

காவல்துதுறை இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்ப்போம். சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய புள்ளிகளாக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். அதுவே நமது எதிர்பார்ப்பு!