Friday 28 October 2016

கபாலி - தீபாவளி செய்தி!


தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். நல்ல முறையில் கொண்டாடுங்கள். உற்றார்  உறவினர், நண்பர்கள், நமது நலம் விரும்பிகள் அனைவரோடும் சேர்ந்து குதூகலமாக தீபாவளியைக் கொண்டாடுங்கள்.  

வீணடிப்பது என்பது நமது சமூகத்தில் மிக அதிகம். ஒர் அளவு தெரியாமல் அதிகமாகச் சமைத்துவிட்டு அதனை அப்படியே குப்பையில் கொட்டுவது என்பது நம்மிடையே அதிகம். முடிந்தால் ஆதரவற்ற இல்லங்களுக்குச் சென்று உங்களது தீபாவளியைக் கொண்டாடுங்கள். ஆதரற்றவர் என்பது எப்போது வேண்டுமானாலும் மாறலாம். கொஞ்சம் புண்ணியத்தையாவது சேர்த்து வைப்போம்.

எல்லாவற்றையும் விட கபாலி என்ன சொன்னார் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.  

பாருங்கள்,  கபாலி என்ன சொல்லுகிறார் என்று: "நாங்கள் ஆண்ட பரம்பரை இல்லை தான்! ஆனால் ஆள விரும்புகிறவண்டா!"  
இதனை மறந்து விடாதீர்கள். நாம்  நாட்டை ஆள வந்த சமூகம். ஆள விரும்புகிற சமூகம். ஆள வேண்டியவர்கள் நாம். பிறரை நாம் ஆள விடக்கூடாது!    தவறுகள் நேர்ந்திருக்கலாம்.  ஆனால் அதனைத் தொடர விடக்கூடாது! இதனைத் திருத்துவதற்கு யாரையும் நாம் எதிர்பார்க்க  வேண்டாம். நாமே தான் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஆள விரும்புவது என்றால் அனைத்தையும் ஆள வேண்டும். நாடு, வர்த்தகம், மருத்துவம், நீதித்துறை இப்படி அனைத்துத் துறையிலும் நமது கால்கள் உறுதியாக ஊன்றப்பட வேண்டும் நமக்குச் சாக்குப் போக்குகள் வேண்டாம்..    

சீனனைப் பாருங்கள். யூதனையும் பாருங்கள்.  இன்று வர்த்தகம் என்பது அவர்கள் கையில். யூதனைப் பார்க்க முடியாவிட்டாலும் சீனர்களைத் தினசரி  நாம் பார்க்கிறோம்.  அவன் வர்த்தகத்தைப் பாருங்கள்.  எப்படி செயல்படுகிறான் என்று பாருங்கள். நமது நகரத்தாரிடமிருந்து கடன் வாங்கியவன். இன்று நாம் அவனை அண்ணாந்துப் பார்க்கிறோம்!  

தமிழர் சமூகம் கொடிகட்டி வாழ்ந்த சமூகம். அந்தப் பெருமையை மீட்டெடுக்க நாம் உழைக்க வேண்டும். உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்.நாம் ஆள வேண்டும்! ஆள்கின்ற சமுகமாக மாற வேண்டும்.

இந்தத் தீபாவளி பெருநாளில் "நாம் உயர்வோம்!" என்று உறுதிமொழி எடுப்போம்!    

தீபாவளி வாழ்த்துகள்!                    

No comments:

Post a Comment