Sunday 23 October 2016

கருணை வேண்டாம்! கொள்கையே வேண்டும்!


ஏய்மஸ்ட் பல்கலைக்கழகத்தில்,  பன்னாட்டுத் தமிழாசிரியர்களின் மாநாட்டில் ம.இ.கா.தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் நல்லதொரு கருத்தைச் சொன்னார்.

பிரதமர் நஜிப் இந்த சமுதாயத்திற்குக்  கருணைக்  காட்ட வேண்டாம். கருணை என்னும் நிலை மாறி அது அரசின் கொள்கையாக மாற வேண்டும்.

டாக்டர் சுப்பிரமணியம் பிரதமருக்கு விடுத்த இந்த வேண்டுடுகோளை  நாமும் இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள்  பிரதமரின் கருணை அடிப்படையில் இல்லாமல் அது அரசாங்கக் கொள்கையாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவரின் வேண்டுகோள்.

மலேசியாவில் தமிழ்க்கல்வி தோன்றி  இந்த அக்டோபர் மாதத்தோடு 200 ஆண்டுகள் ஆகின்றன. இனி நமக்குத் தேவை எல்லாம் தமிழ்க்கல்வியின் வளர்ச்சி. அந்த வளர்ச்சி என்பது சரியான முறையில் அமைய வேண்டும். வெறும் கருணை அடிப்படையில் அல்ல!  அது அரசாங்கக் கொள்கையாக அமைய வேண்டும்.

நாட்டில் 524 தமிழ்ப்பள்ளிகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.  பிரதமர் நஜிப் பல கோடிகளை இந்தப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காகக் கொடுத்துள்ளார்.  கடந்த  வெள்ளிகிழமை வெளியான பட்ஜெட்டில் ஐந்து கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு சேர்த்து தமிழ்ப்பள்ளிகளுக்காக 79 கோடி வெள்ளீயை பிரதமர் நஜிப் இதுவரைக் கொடுத்துள்ளார்.

இத்தனை கோடிகள்  கொடுத்தும் தமிழ்ப்பள்ளிகளின் நிலை மாறவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டும் உள்ளது.  இந்த நிதி ஒதுக்கீடுகள்  எந்த எந்தப் பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்டன என்னும் விபரங்கள் யாரிடமும் இல்லை! அமைச்சரவையில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ஒரே தலைவர் என்னும் முறையில், டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் இந்த நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் முறையாக எல்லாப்  பள்ளிகளுக்கும் போய்ச் சேருவதை  உறுதி செய்ய  வேண்டும். அல்லது தேவையான பள்ளிகளுக்குப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.

டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சொல்லுவது போல இது வெறும் பிரதமரின் இந்தியச் சமூகத்தின் மேல் உள்ள அனுதாபமாகவோ அல்லது கருணையாகவோ இருக்கக் கூடாது!  அது எங்களது உரிமையாக இருக்க வேண்டும். சட்டமாக இருக்க வேண்டும். அது அரசாங்கக் கொள்கையாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் கெஞ்சுவதும், கொஞ்சுவதுனாக இருக்கக் கூடாது. அது அரசாங்கத்தின் சட்டமாக  அமைய வேண்டும். ஒரு நாட்டின் குடிமக்கள்,   மூன்றாவது பெரிய இனம், எல்லாலாக் காலத்திலும் பிச்சை எடுக்கும் சமூகமாக அரசாங்கம் மாற்றத் துணியக் கூடாது! இந்தியர்களும் கௌரவமாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

இந்தியர்கள் ரௌடிகள், குண்டர்கள் என்னும் ஒரு நிலையே முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரின் காலத்தில் மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது! அதுவும் ம.இ.கா.வின் உதவியோடு!  அனைத்து  உரிமைகளையும் நாம் இழந்து விட்டோம்! இழந்த உரிமைகளை இனி நாம் கேட்கக் கூடிய நிலையில் இல்லை!  உரிமையாளர்கள் உடைந்து போனார்கள்! ஒன்பதாகப் பிரிந்து போனார்கள்!  ஒன்பாதாகிப் போனார்கள்! இனி எந்த உரிமைகளையும் மீண்டும் பெற முடியும் என்னும் நம்பிக்கையும் குறைந்து போய்விட்டது!

இந்த நிலையில் தான் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் "எங்களுக்குக் கருணைக்  காட்ட வேண்டாம்; அதனை சட்டமாக்கி உரிமையாகக் கொடுங்கள்"  என்கிறார். இப்படிப் பேசியதற்காகவே நாம் அவரைப் பராட்ட வண்டும்!

பொதுவாகவே அரசாங்கத்திடம் எந்தப் பிரச்சனையைப் பற்றியும் ம.இ.கா.வினர் வாய்த் திறப்பதில்லை!  இப்போது டாக்டர் அவர்கள் வாய்த் திறந்து ஒரு கோரிக்கையாக அவர் விட்டிருப்பது மிகவும் பாராட்டுதலுக்குறியது!

இப்போதாவது இப்படி ஒரு கோரிக்கை விட்டிருக்கிறாரே  நாம் அவரைப் பாராட்டுகிறோம்!

இப்பவும் அவர் வாய் திறவாதிருந்தால் வேகு விரைவில் வெளி நாட்டுச் சக்திகள்  நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிடும்! அரசாங்கத்தின் ஒப்புதலுடனே அது நடக்கும்!

இனி டாக்டர் அவர்கள் இந்தியர்களின் ஒவ்வொரு பிரச்சனையையும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். உங்களிடையே ஒற்றுமை இல்லையென்றால் சந்தடிச்சாக்கில் இருக்கின்ற அனைத்தையும் இழந்து விடுவோம்!

நீங்கள் நமது பிரதமரிடம் கேட்டுக் கொண்டதைப் போல நமக்குக் கருணை வேண்டாம்! அனைத்தும் சட்டமாகப்பட்டு உரிமையாக வேண்டும்! என்பதை நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஆதரிக்கிறோம்!














No comments:

Post a Comment