Sunday 16 October 2016

தோல்விக்குப் பின்னாலும் ஒரு பெண்ணே!


ஒர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.. அப்படி வெற்றி பெற்ற ஆண்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் மிகச் சிலர் தான் அந்தப் பட்டியலில் வருவார்கள்! ஆக, பெரும்பாலான ஆண்களின் தோல்விக்குப்  பெண்களே காரணம் என்பது நமக்குப் புரிகிறது!

ஒர் ஆண் சுதந்திரமாகச்  செயல் பட விரும்புகிறான். ஓர் ஆண் புதிய முயற்சிகளில் ஈடுபட விரும்புகிறான்.ஓர் ஆண்,  மக்கள் சேவையில் ஈடுபட விரும்பிகிறான்; புதிய பாதையில் கால் எடுத்து வைக்க விரும்புகிறான். அனைத்துக்கும் அவனுக்குத் துணை செய்ய, ஆதரவாகப் பேச அவனுக்கு அம்மா தேவை அல்லது அக்காள் -தங்கை தேவை அல்லது மனைவி தேவை. ஏன்? அவனது அண்ணனாகக் கூட இருக்கலாம். இங்கு பெரும்பாலும் ஓர் ஆண் தனது மனைவியுடன் தான் அதிகக் காலம் வாழ்கிறான் என்னும் போது அவனது மனைவி தான் அவனுக்கு உற்றத் துணையாகவும்  -  ஊக்கமாகவும் இருக்கிறாள். அதனால் மனைவி தான் அவனது வெற்றிக்கோ, தோல்விக்கோ காரணமாகிறாள்! அவனது மனைவி அவனைக் கவிழ்த்தும் விடலாம், கைத் தூக்கியும் விடலாம்! உயரவும் வைக்கலாம், உடைந்து போகவும் வைக்கலாம்! கோபுரமாகவும் ஆக்கலாம். குப்பை மேடாகவும் ஆக்கலாம்!

ஆனால் கைத்தூக்கி விடுகிற மனைவிகள் குறைவாகவும்  கவிழ்த்து விடுகிற மனைவிகள் அதிகமாகக் கொண்ட சமுதாயம் நாம்! ஊக்கமானச் சொற்களைக் கூற ஆளில்லை. மட்டம் தட்டுவதும் மடத்தனமாய் பேசுவதிலும்  நாம் கைத்தேர்ந்தவர்கள்!

ஒரு இளம் .முஸ்லிம் குடும்பத்தினரை எனக்குத் தெரியும். கணவன் மனைவி இருவருமே நல்ல குணம். கணவர் ஆறாம் வகுப்போடு சரி. படிப்பு ஏறவில்லை. மனைவி ஒன்பதாம் வகுப்போடு சரி. படிக்க வழியில்லை. மனைவியிடம் ஒரு தவறான ஒரு குணம். தனது கணவர் படிக்காதவர் என்று சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பார். நாளடைவில் அவரால் ஒரு பத்திரிக்கைப் படிக்க முடியவில்லை. எழுதத் தெரியவில்லை.  படிக்கும் பழக்கமோ, எழுதும் பழக்கமோ அவரிடம் இல்லாமலேயே போய்விட்டது! ஆறாம் வகுப்புப் படித்தவர்களுக்குப் படிக்கத் தெரியாதா? எழுதத் தெரியாதா? ஆனாலும் அவருடைய மனைவியின் வார்த்தையை வேத வாக்காக எடுத்துக் கொண்டார்! மழுங்கிப் போய்விட்டார்! இவர் படிக்கத் தெரியாதவர் என்பதால் எல்லாக் காரியங்களிலும் அவர் மனைவி தான் முன்னணியில் நிற்பார்! இவர் படிக்காதவர் என்பதால் எல்லாவற்றிலும் ஒதுங்கியே நிற்பார்! உண்மையைச் சொன்னால் கணவர் படிக்காதவர் என்பதால் மனைவி தான் அந்தக் குடும்பத்திற்காக அதிகம் உழைப்பவராகி விட்டார்!

அந்த நண்பர் உண்மையில் நல்ல திறமைசாலி. ஆனாலும் அவர் மனைவியால் அவரைப் புரிந்து கொள்ள இயலவில்லை. அவர் படிக்காதவர், அவர் ஏமாறுபவர், அவரை மற்றவர்கள் ஏமாற்றிவிடுவார்கள் என்று சொல்லி சொல்லியே அவரை "தான் எதற்கும் லாயக்கில்லை!' என்று நினைக்கும் படியாக செய்து விட்டார்!  இதனை அவர் வேண்டுமென்றே செய்யவில்லை. அறியாமை என்று தான் சொல்ல வேண்டும்!

ஒரு சிறிய தூண்டுதல் இருந்தாலே போதும். எல்லா மனிதனுமே சாதனை புரிவான். இதில் ஒன்றும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனாலும் நமது பெண்களுக்கு இது புரிவதில்லை. நாம் தோற்றுவிடுவோமோ என்னும் பயம்.  எதிலும் பயம். எல்லாவற்றிலும் பயம்.

கணவனுக்குப் பின்னால் இருந்து கொண்டு கணவன் மூலம் குடும்பத்தைக் கோபுரமாக்குபவள் மனைவி. அவள் ஒரு உந்து சக்தி. அவள் மட்டும் கணவனுக்கு ஆதரவாக இருந்தால் கணவன் இமயத்தைத் தொடுவான். அவள் அரட்டையாக இருந்தால் அவன் அசட்டையாகத் தான் இருப்பான்!

பெண்கள் தோல்விக்குத் துணைப் போகக்கூடாது. எந்த நிலையில் இருந்தாலும் வெற்றியை நோக்கியே நகர வேண்டும். உச்சத்தை தொட  வேண்டும்.  உயரே உயரே போக வேண்டும்!

அடிமட்ட வாழ்க்கை வாழ்ந்தாகிவிட்டது. அது சரித்திரம். இனிமேல் அந்தச் சரித்திரம் திரும்பக் கூடாது. அடுத்தக் கட்டத்துக்கு மாற வேண்டும். மாற்ற  வேண்டும். வாழ்க்கை,  மேல் நோக்கிப் போக வேண்டும்.

இந்த மாற்றத்திற்கு பெண்களின் பங்கு கொஞ்சம் அதிகம். தங்கள் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் அனைவரையும் அனுசரித்து, ஊக்கமூட்டி, உற்சாகப்படுத்தி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேற்றப் பாதைக்கு வழி காட்ட வேண்டும். வாழ்க்கை என்றால் வளர்ச்சி என்று ஒன்று இருக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்னும் எண்ணத்தை விதைக்க வேண்டும்.

பெண்களே நீங்கள் தோல்வியாளர்கள் அல்ல! பின்னுக்கு இருந்தாலும் முன்னுக்கு இருந்தாலும் நீங்கள் வெற்றியாளர்கள் தான்! வெற்றி என்னும் விதையைத் தொடர்ந்து விதையுங்கள்! வெற்றி நிச்சயம்!




No comments:

Post a Comment