Tuesday 11 October 2016

கர்நாடக முதல்வர் செய்வது சரியா?


கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழகத்திற்குத் தண்ணிர்  தர  முடியாது என்று சொன்னதைப் பற்றியான விமர்சனங்கள் பலவாறாக உள்ளன.தமிழ் நாட்டில்  ஒரு மாதிரியாகவும் கர்நாடகாவில் வேறு மாதிரியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை!

தமிழகத்தில் அவர் வில்லனாகச் சித்திரிக்கப் படுகிறார்! கர்நாடகாவில் அவர் கதாநாயகனாகப் ;போற்றப்படுகிறார்!

அவர் வில்லனாகச் சித்திரிக்கப் படுகின்றார் என்றால் அவரால் தமிழ் நாட்டுக்கு நஷ்டம்! கர்நாடகாவில் அவர் போற்றப்புடுகின்றார் என்றால் அவரால் கர்நாடாகவுக்கு இலாபம்.

ஒரு தமிழனாக இருந்து பார்க்கும் போது அவர் செய்வது எவ்வகையிலும் சரியில்லை. ஆனால் ஒரு  மாநிலத்தின் முதல்வராக அவர் செயல் படுவதில்  எந்தத் தப்பும் இல்லை!

அது அவர் மாநிலம். அவருடைய மக்களின் நலன் அவருக்கு முக்கியம். அவர் மாநிலத்து மக்களில் குடிநீருக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது என்பது அவரது வாதம். சரிதானே? சரியில்லை என்று யார் சொல்ல  முடியும்?

அவர் மாநிலத்தின் நலனுக்காக அவர் எடுத்த முடிவுகள் நிச்சயமாகப் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது அவருக்கும் தெரியும். அவரின் முதல்வர் பதவி பறி போகலாம். அவரின் ஆட்சி கலைக்கப்படலாம்.அவர் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கவில்லை - இப்படியான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உண்டு!

ஆனாலும் அப்படியே அவரின் ஆட்சி கலைக்கப்பட்டாலும் அது பற்றி அவர் கவலைப்படவில்லை! எனது மக்களின் நலனே எனக்கு முக்கியம்  என்கிறார் சித்தராமையா!

இப்படிப் பட்ட முதல்வரை நாம் எங்குப் பார்க்க முடியும்? பதவிக்காக அடித்துக் கொள்ளுகிற இந்தக் காலக் கட்டத்தில் பதவி போனாலும் பரவாயில்லை என்று யார் சொல்லுவார்? அது அவரின் இனப்பற்றைக் காட்டுகிறது என்பது தானே பொருள்?

தமிழர் மாநிலத்தில் அது போன்ற நிலைமை இல்லையென்றால் அது சித்தராமையாவின் குற்றமல்ல!  தமிழர் மாநிலத்திலும் அவர் கடைப்பிடிக்கின்ற அதே  இனவுணர்வை இங்கும் தமிழர் என்னும் இனவுணர்வை  .கடைப்பிடிக்கலாம். யார் வேண்டாமென்று சொன்னார்?  தமிழர் நலனை இங்கும் தமிழக முதல்வர் முதன்மையான கொள்கைகையாகக்  கொண்டு  வரவேண்டும்.. முடியாது என்று யார் சொல்லுவார்?  அவர் மாநில மக்களின் மீது எந்த அளவுக்கு பற்றும் பாசத்தையும் கட்டுகிறாரோ அதே பற்றும் பாசமும் ஏன் தமிழக முதல்வர் தனது குடிமக்களிடம் காட்டக்கூடாது?  இது போன்ற மாநில பாசம் கர்டநாகத்திற்கு மட்டும் தானா சொந்தம்? அப்படி  அல்லவே!  அது ஒரு நல்ல எடுத்துக்காட்டு தானே! தமிழக முதல்வரும் ஏன் அதனைப் பின் பற்றக் கூடாது?

கர்நாநாடக முதல்வர் அவரது மாநிலத்தைப் பொறுத்தவரை தனது மாநில மக்களின் நலனை முன்னிறுத்தி செயல்படுகிறார். அதனை அந்த மாநில மக்களும்  வரவேற்கிறார்கள்.தமிழர் மாநிலத்தில் தமிழக முதல்வர் தமிழர் நலனை முன்னிறுத்தி செயல்பட்டால் நிச்சயம் தமிழ் மக்களும்  அதனை வரவேற்பார்கள்.

தமிழ் மாநிலத்தின் நலன் தான் என்ன?  தமிழக முதல்வருக்குத் தெரியாதது ஒன்றுமில்லை!  அது தெரியாவிட்டால் அவர் முதல்வராக இருக்க முடியாதே!

ஆக, நமக்குத் தெரிந்தவரை கர்நாடக முதல்வரைக் குற்றம் சொல்லுவதை நிறுத்த வேண்டும்! அவர் செய்வது சரியே! அவரின் மாநிலத்தின் நலனுக்காக அவர் போராடுவது சரியே! தனது மாநிலத்திற்காக போராடும் போராளி அவர்!


No comments:

Post a Comment