Thursday 8 September 2016

"நன்றி!" சொல்லுங்க சார்!


வெள்ளைக்காரன் மொழியான ஆங்கிலத்தைப் படித்தோம். படித்த அந்த ஆங்கிலம் மூலம் பெரிய பெரிய பதவிகளில் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

நல்ல ஆசை தான். குற்றமில்லை! ஆனால் அதே வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்த "நன்றி!" என்று சொல்லை மட்டும் மறந்து விட்டோம்! வெள்ளைக்காரனுக்கு நன்றி ஒரு வார்த்தையைச் சொல்லாமல் இருக்க முடியாது. அது அவனுடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் நன்றி! அவர்கள் குழந்தைகளாகட்டும் அல்லது பிச்சைக்காரனாகட்டும் அல்லது கோடீஸ்வரனாகட்டும், மனைவி பிள்ளைகளாகட்டும் யார் எதைச் செய்தாலும் நன்றி! என்று சொல்லுவதை அவனது தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது!

ஆனால் நம்முடைய நிலை என்ன? இங்கே நன்றி என்று சொல்லுவதிலும் ஒரு ஏற்றத் தாழ்வைக் கொண்டு வந்து விட்டோம். சம நிலையில் உடையவரிடையே பேசும் போது நன்றி என்று தாராளாமாகச் சொல்லுகிறோம். நமக்குக் கீழே உள்ளவர்களுக்கு நன்றி சொல்லுவதே கேவலம் என்னும் நிலைக்கு வந்து விட்டோம்!

அ) அவன் அவனுடைய வேலையைச் செய்வதற்கு நன்றி சொல்ல வேண்டுமா?
ஆ) நமக்குக் கீழே வேலை செய்பவன் அவனுக்கு நன்றியா?
இ) நாம் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் இவனை வேலையை விட்டுத் தூக்க முடியும்! இவனுக்குப் போய் நன்றி சொல்லுவதா?
ஈ) ஒரு முதாலாளி ஒரு தொழிலாளிக்கு நன்றி சொல்லுவதா?

ஒவ்வொன்றையும் இப்படித்தான் நாம் எடை போடுகிறோம்! ஆனாலும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். நன்றி சொல்லுவதில் பெரியவர், சிறியவர் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது!

ஒருவர் நமக்கு ஏதோ ஒரு வகையில் உதவியிருக்கிறார். அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். உங்கள் மகன் உங்களது கண்ணாடியைக் கொண்டு வது கொடுக்கிறான். . நன்றி சொல்லத்தான் வேண்டும்.  உங்கள் மனைவி உங்களது சட்டையை "இஸ்திரி" போட்டுக் கொடுக்கிறார்.   நன்றி சொல்லத்தான் வேண்டும். காவலாளி உங்களுக்காகக் கதவைத் திறந்து விடுகிறார். நன்றி சொல்லத்தான் வேண்டும். உணவகத்தில் பரிமாறுபவர் தேநீர் கொண்டு வந்து வைக்கிறார். நன்றி சொல்லத்தான் வேண்டும்.

ஆமாம், வெள்ளைக்காரன் இதனை எல்லாம் செய்கிறான் தானே? அவனது மொழியைப் படித்த நமக்கும் அந்தப் பண்புகள் வரவேண்டும் அல்லவா! நன்றி அவ்வளவு முக்கியமா என்று நாம் கருதலாம். ஆமாம் முக்கியம் தான். நன்றி சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை நீங்கள் உணவகத்திற்குச் செல்லும் போது உங்களை ஆர்வத்தோடு வரவேற்பார்; விசேஷமாகவும் கவனிப்பார் அந்த பரிமாறும் நண்பர்!

இந்த உலகமே நன்றிக்காகவும், பாராட்டுக்காகவும் ஏங்கித் தவிக்கின்றன. நாமும் இந்த மனித மனங்களைக் குளிர வைப்போம். நன்றி சொல்லி பாராட்டுவோம்! நன்றி சொல்லுவதன் மூலம் நல்லது தான் நடக்குமே தவிர எந்தக் கெடுதலும் நடக்கப் போவதில்லை!

நன்றி! நன்றி! நன்றி!

No comments:

Post a Comment