Tuesday 6 September 2016

கடன் வாங்கப்பட்ட மொழி தமிழ்!


மற்ற மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்ட மொழி தான் தமிழ் என்றால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? ஏதோ பைத்தியக்காரன் உளருகிறான் என்று தான் சொல்லுவீர்கள்!

ஆனால் மலேசிய நாட்டில் தமிழைப்பற்றியோ, தமிழர்களைப்பற்றியோ, தமிழர் கலாச்சாரத்தைப் பற்றியோ  எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்னும் நிலை உருவாகி வருகிறது என்பது தான் உண்மை!

இதோ! இப்போது ஒரு புது 'உண்மை' யைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்!  தமிழ் எங்கிருந்து வந்தது என்பதை ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்திருக்கிறார்கள்!

தமிழ் எங்கிருந்து வந்தது? "போர்த்துகீஸ், இங்கிலிஷ், கிரேக்கம் மற்றும் கிழக்கிந்திய நாடுகளின் மொழிகளில் இருந்து கடன் வாங்கப்பட்ட மொழி தான் தமிழ்!"

இதனை மாலாய் மொழி பாடப்  புத்தகத்தில்   வெளியிட்டிருக்கிறார்கள்! நாளை பல்கலைக்கழகம் செல்லுவிருக்கும் மாணவர்களுக்கானப் பாடம் புத்தகம் இது!

வெளீயிடு செய்திருப்பவர்கள்: OXFORD FAJAR PUBLICATIONS என்னும் பிரபல நிறுவனம்!

வெளியீட்டாளர்கள் உலக அளவில் பெயர் பெற்ற  பிரபலமான நிறுவனத்தினர். இது போன்ற பாடப்புத்தங்களைத் தயாரிப்பவர்கள் சிறந்த கவிமான்களின்  துணை கொண்டு தான் புத்தகங்கள் தயாரிக்கின்றார்கள். ஆயினும் தவறுகள் நேர்கின்றன! எப்படி? அதுவும் மலாய் மொழி பாடப்புத்தகங்களில் தமிழ் மொழி பற்றி பேசும் போது நிச்சயம் தவறுகள் நேர்கின்றன! இது ஒன்றும் நமக்குப் புதிது அல்ல! மலாய் மொழி  கல்விமான்களுக்குத் தமிழ் பற்றி எதுவும் தெரியவில்லை! தெரிந்து கொள்வதும் இல்லை! அது தேவை என்றும் அவர்கள் நினைக்கவுமில்லை!

இந்த மலாய் கல்விமான்கள் தமிழ் என்று வரும் போது அங்கு அரசியலைக் கொண்டு வருகிறார்கள்!  தமிழனை மட்டம் தட்ட வேண்டும்; தமிழை மட்டம் தட்ட வேண்டும்; தமிழர் கலாச்சாரத்தை மட்டம் தட்ட வேண்டும்! இது தான் அவர்களது கொள்கையாக இது நாள் வரை இருந்து வருகிறது! இது நாள் வரை அப்படித்தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! தமிழ், தமிழன் என்று வரும் போது எத்தனையோ குளறுபடிகள்!

இப்படி குளறுபடிகள் நேரும் போது ஒவ்வொரு முறையும் தமிழ்/இந்திய அமைப்புக்கள் கண்டனத்தை தெரிவிப்பதும் அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு செல்வதும், அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சாக்குப்போக்குச் சொல்வதும் இது ஒரு தோடர்கதை!

இம்முறை அது தனியார் வெளியீடு என்பதால் அதனைத் திருத்திக் கொள்வதாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். உலக அளவில் பிரசித்திப் பெற்ற ஒரு நிறுவனம் என்பதால் தங்களது தவற்றினை அவர்கள்  ஏற்றுக் கொண்டனர்.

தவறை தவறு என்று ஒப்புக்கொண்டவர்களுக்கு நமது பாராட்டுக்கள். இனி வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் நேர வண்ணம் கவனமாக இருப்பது அவர்களின் பொறுப்பு.

ஆக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய அனைவருக்கும் நமது நன்றி! இது போன்ற 'தவுறுகள்' தொடர்கின்ற போதெல்லாம் குரல் எழுப்பி கண்டனத்தை தெரிவிக்கின்ற அனைத்து தரப்பினருக்கும் நமது நன்றியும் வாழ்த்துக்களும்!

தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க! தமிழர் கலாச்சாரம் தழைத்தோங்குக!



No comments:

Post a Comment