Sunday 18 September 2016

தங்கம் வென்ற தங்கமகன் மாரியப்பன்!


தங்கம் வென்ற வீரத் திருமகனை - அந்தத் தமிழ்த் திருமகனை - நாமும் வாழ்த்துவோம்,  பாராட்டுவோம்!

மாற்றுத் திறனாளிகளுக்கான - பாரா ஒலிம்பிக் - போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழன், அந்த மாரியப்பன் செய்து காட்டிய சாதனையை மீண்டும் பாராட்டுவோம்!

மாரியப்பன் இந்தியா, தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்.  இருபது வயது இளைஞர். சொந்த ஊர் சேலம், பெரிய வடகம்பட்டி என்னும் குக்கிராமம். ஏழ்மையின்  இருப்பிடம்.  பெற்றோர்கள் தங்கவேலு - சரோஜா. அப்பா செங்கல் சூளையில் ஒரு தொழிலாளி.  வீடு வீடாக காய்கறிகளைக் கூவி விற்கும் அம்மா.

ஒரு பேருந்து விபத்தில் வலது கால் பறிபோனது. அது ஒரு பெரிய விபத்து என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இப்படி நாட்டுக்கும் வீட்டுக்கும், உலகத் தமிழருக்கும் பெருமை சேர்ப்பதற்குத் தான் அப்படி ஒரு விபத்து ஏற்பட்டதோ என்று இப்போது நமக்குத் தோன்றுகிறது.

இரண்டு கால்களும் சீராக உள்ள இளைஞர்களைப் பார்க்கிறோம். அவர்களில் பலர் வீட்டிற்கும் நாட்டிற்கும் பாரமாக இருக்கின்றனர். அதனால் கால்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன! சாதனைகள் புரிய வேண்டும் என்னும் எண்ணம் உடையோருக்கு எந்த நிலையிலும் சாத்தியமே!

இன்று அவர் தங்கம் வென்றார் என்றால் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முதற்சி. அவருக்கு நல்லபடியாக வாய்த்த நல்லதொரு பயிற்சியாளர்.

ஆனால் ஒருவர் வெற்றி பெற்றாலே அந்த வெற்றிக்காகச் சொந்தம் கொண்டாடுவோர் நம்மிடையே நிறையவே இருக்கின்றனர். அதே கதைதான் மாரியப்பனுக்கும்! இப்போது தான் விழித்தெழுந்த்திருக்கிறது தமிழ் நாடு பாரா ஒலிம்பிக் சங்கம்! நாங்கள் தான் அவர் வெற்றிக்குக்  காரணம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்!

தமிழ்  நாடாக இருந்தாலும் சரி அல்லது வேறு மாநிலங்களாக இருந்தாலும் சரி - பொதுவாக இந்தியாவில் விளையாட்டுச் சங்கங்கள் என்றால் அது மேல் தட்டு மக்களின் கட்டுப்பாட்டில் உள்ளவை. அதனைக் கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் மேல் தட்டு மக்கள் மட்டுமே வெற்றி பெற வேண்டும், இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்னும்  மனப்போபோக்கு  உள்ளவர்கள்.  நமது ஊர் மதம் சார்ந்தது என்றால் அந்த ஊர் சாதியல் சார்ந்தது! இவைகளையெல்லாம் மீறி தான் மாரியப்பன் போன்றவர்கள் வெற்றி பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

ஒரு வெளிச்சம் தெரிகிறது. சாதியம் அனைத்தும் உடைபடும் நாள் தொலைவில் இல்லை!

விரைவில் இன்னும் பலர் - பல தமிழ் மகன்கள் - உலக விளையாட்டு அரங்கில் தங்கங்களைக் குவிப்பார்கள் என நம்புவோம்.

தங்க மகன் மாரியப்பனுக்கு நமது வாழ்த்துகள்!

No comments:

Post a Comment