Saturday 17 September 2016

கபாலிகள் வேண்டாம்! கல்வியாளர்கள் வேண்டும்!


சில சமயங்களில் நமது இளம் பெற்றோர்கள் அல்லது கூட இருக்கும் பெரியவர்கள் இந்தக் குழந்தைகளிடம் பேசுகின்ற பேச்சுக்கள் நிச்சயமாக நமக்கு எரிச்சல் ஊட்டுவதாகவே இருக்கும். குழந்தைகளுக்கு விதவிதமாக முடிவெட்டி  விடுவதும் 'அடி,'உதை' என்று பிஞ்சு மனதில் விஷத்தை விதைப்பதும் தமிழர்களைத் தவிர வேறு யார் செய்வார்?

நாம் ஏன் எல்லாத் துறைகளிலும் பின் தங்கி  இருக்கிறோம் என்பது இப்போது புரிகிறதா? நாம் குழைந்தைகள வளர்க்கும் போதே நல்லவைகளைச் சொல்லி வளர்ப்பதில்லை. அவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதில்லை.

சில பெற்றோர்கள் குழந்தைகளை 'வாங்க, போங்க' என்று பண்போடும் அன்போடும்  அழைப்பதில் நமக்கும் உடன்பாடு தான். ஆனால் தங்களுக்குப் பிடிக்காதவர்களை 'வாடா, போடா' என்று குழைந்தைகளைப் பேசை வைப்பதும் இதே பெற்றோர்கள் தான்! இந்த நிலையில் குழந்தைகள் எப்படி பண்போடு வளர்வார்கள்?

குழந்தைகள் வளரும் போது  சினிமா நடிகர்களை முன்னுதாரணமாக காட்டி வளர்க்காதீர்கள். ரஜினி மாதிரி வரணும், கமல் மாதிரி வரணும் என்று ஆசையை ஊட்டி வளர்க்காதீர்கள். சினிமா நடிகர்கள் நமது குழந்தைகளுக்கு சரியான எடுத்துக்காட்டுக்கள்  அல்ல!

"நீ நல்ல டாக்டராக வரவேண்டும், வழக்கறிஞராக வரவேண்டும், இஞ்சினியராக வரவேண்டும், விஞ்ஞானியாக வரவேண்டும், நல்ல  ஆசிரியராக வரவேண்டும், சித்தப்பா மாதிரி கணினி வல்லுனுராக வேண்டும்,மாமா மாதிரி பெரிய பட்டதாரியாக வேண்டும், பக்கத்துவீட்டு அண்ணன் மாதிரி பல்கலைக்கழகம் போய் படிக்க வேண்டும்'  என்று பிள்ளைகளுக்குச் சொல்லி ச் சொல்லி வளர்க்க வேண்டும்.. குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு ஒரு குறிக்கோளை ஏற்படுத்த வேண்டும். சிறு வயதிலிருந்தே உயர்ந்த குறிக்கோளை ஏற்படுத்த வேண்டும். ஆனால் உங்களுடைய ஆசையை அவர்கள் மீது திணிக்க வேண்டாம்!

ஆனால் சராசரியான நமது தமிழர்கள் குடும்பங்களில் நல்ல எடுத்துக்காட்டுக்களைக் காண முடிவதில்லை! நமது குடும்பங்களில் இருப்பவர்கள் எல்லாம் குடிகாரன், கபாலி, அடிதடி கும்பல் - இப்படித்தான் பட்டியல் நீளுகிறது! இந்தச் சூழலில் வளர்பவன் எப்படி வளர்வான்? இது போன்ற குடும்பங்களில் தான் மேற் சொன்ன முறைகளில் சொல்லிச்சொல்லி பிள்ளைகளை வளர்க்க வேண்டியுள்ளது! வேறு வழியில்லை!

சாதாரணக் குடும்பங்களை நான் பார்க்கிறேன். நன்றாகச் சம்பாதிக்கிறார்கள். நன்றாகத் தண்ணி அடிக்கவும் செய்கிறார்கள்! கொஞ்சம் தண்ணி அடிப்பதை நிறுத்தி பிள்ளைகளின் கல்வி மீது கொஞ்சம் அக்கறை செலுத்தினால் போதும் அந்தக் குடும்பம் கல்வி கற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கிவிடும். கல்விக்குப் பணம் செலவு செய்கிகிறார்கள். ஆனால் பையனோ அப்பனைப் போல தண்ணி அடிப்பதில் தான் கவனம் செலுத்துகிறான்!

தாய்மார்கள் பிள்ளைகளின் கல்வியில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். இந்த சமுதாயம் உயர்ந்து விடும்.

தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் குழந்தைகளைக் கொபுரமாக்குங்கள். குப்பைகள் மிஞ்சிவிட்டன. குப்பைகள் போதும் போதும் என்னும் அளவுக்கு குவிந்துவிட்டன! இனி நமக்குத் தேவை சீமான்களும் கோமான்களும், கோபுரங்களும் தான்! கோபுரமாவோம்! கோடிபதிகளாவோம்!


No comments:

Post a Comment