Thursday 4 August 2016

இதோ! இந்த நிமிடம் உண்மையானது!


இதோ! இந்த நிமிடம் தான் உண்மையானது! இதோ இப்போது நாம் பேசுகிறோம்; இப்போது நாம் எழுதுகிறோம்; இப்போது நாம் சிந்திக்கிறோம். இப்போது நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம்; .இப்போது நாம் பாடுகிறோம்;  இப்போது நாம் நடிக்கிறோம். இது தான் உண்மை.

பிறகு, அப்புறம், இன்று மாலை, நாளைக் காலை, அடுத்த மாதம்  இவைகளெல்லாம் உண்மையில்லை! நாம் அதுவரை இருந்தால் தான் அது உண்மை!

அதனால் அதனை நாம் ஒதுக்கிவிடுவோம்!  இந்த வினாடி, இப்போது நம் கண்முன்னே என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வோம். எது முக்கியமோ அதனைச் செய்ய ஆரம்பிப்போம்.

அடுத்த வாரத்திற்கு நாம் செய்ய வேண்டிய வேலைகள் இருந்தால் அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்ய ஆரம்பிப்போம். அடுத்த ஆண்டு ஏதோ ஒரு புதிய திட்டம் இருக்கிறதா அதற்கானத் தயாரிப்புக்களில் இறங்குவோம். எதையும் நேரம் வரும்வரை காத்திருக்கத் தேவை இல்லை!

இப்போது நமது கைகளில் இருக்கின்ற வேலைகளை முடிப்போம். தள்ளிப்போடும் பழக்கம் தள்ளப்பட வேண்டியது. செய்கின்ற நேரத்தில் செய்யாது அதனைத் தள்ளிபோட்டு அதன் பிறகு அது பற்றி வேதனைப்படுவது என்பது நமது வாடிக்கை!

இன்றே செய்க! அதனை நன்றே செய்க! அந்த நன்றையும் இன்றே செய்க! என்பது தான் முது மொழி.  இங்கு இன்றே எனப்படுவது இந்த நிமிடம், இந்த வினாடி எனக் கொள்க! இன்று இந்த இருபத்து நான்கு மணி நேரம் நம்முடையதா என்பது நமக்குத் தெரியாது! தெரியாத ஒன்றைபற்றிக் கவலைப்படாமல் தெரிந்த, நம் கண்முன்னே இருக்கின்ற இந்த நேரத்தை நமக்கும் பிறருக்கும் பயன் படும்படியாக பயன் படுத்துவோம்!

இதோ! உடனே செயல் படுவோம்!  நாம் வீணாக்குகிற ஒவ்வொரு வினாடியும் மீண்டும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை மனதிலே இருத்திச் செயல்படுவோம்! பணத்தை இழந்தால் மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால் நேரத்தை இழந்தால் போனது போனது தான்!

இதோ! இந்த நிமிடத்தைச் சரியாகப் பயன் படுத்துங்கள்! வெற்றி பெறுங்கள்! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment