Tuesday 30 August 2016

பாராட்டுங்கள்! பாராட்டப்படுவீர்கள்!


அனைவரையும் பாராட்டுங்கள்! நீங்களும் பாராட்டப்படுவீர்கள்!

மற்றவர்கள் நல்லதைச் செய்யும் போது  அவர்களைப் பராட்டுங்கள். பாராட்டும் போது மற்றவர்கள் உங்களை நாடி, தேடி வருவார்கள். பாராட்டு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது!

வீட்டிலே நல்ல உணவு, மனைவியைப் பாராட்டுங்கள். உணவகத்திலே நல்லதொரு தேநீர், பரிமாறுபவரைப் பாராட்டுங்கள். பள்ளியில் மகன் கணக்குப் பாடத்தில் முப்பது மார்க்குகள் தான் வாங்கினானா? அவனையும் பாராட்டுங்கள்.  அந்தப் பாராட்டுதல்களுக்காகவே அடுத்த முறை அறுபது மார்க்குகள் வாங்கி உங்களை மகிழ்ச்சி படுத்துவான்!

இந்த உலகமே பாராட்டுதலுக்காக ஏங்கித் தவிக்கிறது! அடிதடி மூலமோ, ஒருவரை ஏசுவதன் மூலமோ நாம் நினைக்கின்ற வேலைகள் செய்து முடிக்கப்படலாம். ஆனால் அதில் ஒரு நிறைவு இருக்காது. அதிலே ஒரு திருப்தி இருக்காது.

ஒரு வெற்றிகரமான வர்த்தகர். நிறைய வேலையாள்கள் அவருடைய நிறுவனத்தில். பொதுவாக பல நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள்! ஆனால் அவருடைய நிறுவனத்தில் வருவது மட்டுமே! போவது என்பது ஒய்வு பெறும் போது மட்டுமே! அப்படி என்ன தான் அவர் செய்கிறார்? வேலை ஆட்களைத் தட்டிக் கொடுப்பார். வேலை சரியாக இருந்தால் தாராளமாகப் பாராட்டுவார்! இப்படிப் பாராட்டுவதால் அவருக்கு என்ன இலாபம்?  அந்த வேலையாள் இன்னும் அதிகமாக, இன்னும் சிறப்பாக தனது வேலையைச் செய்வார்! வேலை சிறப்பாக அமையும் போது அந்த வர்த்தகருக்கு விற்பனையும் கூடுகிறது. வேலையாளுக்கு ஊதிய உயர்வும் கிடைக்கிறது.  எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவைகள் தாம்!

இதனையே அதட்டல், உருட்டல் மூலம் செய்து பாருங்கள். திருப்தியற்ற வேலை; அரைகுறை வேலை!  நேரத்தோடு செய்து முடிக்க முடியாமை! வேலையாள் மாற்றம்! சம்பளக் குறைப்பு! இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கும்!

பாராட்டுவதற்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை! இலஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை! ஒரு இன்சொல் போதும்! அனைத்துத் தடைகளையும்
 தகர்த்து எறிந்து விடும்!

பராட்டுவது என்பது எவ்வளவு வலிமையானது என்பதை இந்நேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

மற்றவர்களைப் பாராட்டுங்கள்; பாராட்டுக்கள் உங்களைத் தேடிவரும்!

No comments:

Post a Comment