Sunday 21 August 2016

காட்டுமிராண்டித்தனமான வழிபாடுகள்!


மலேசிய இந்து சங்கத் தலைவர்,  டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் கடுமையான ஒர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

காட்டுமிராண்டித்தனமான தெய்வவழிபாடுகளில்  ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆமாம்! இத்தனை ஆண்டுகள் நாம் கேள்விப்படாத ஒன்று இப்போது புதிதாக அரங்கேறிக்  கொண்டிருக்கிறது!

டத்தோ மோகன் ஷான் அவர்கள் கோபப்படும்படியாக அப்படி என்ன நடந்திருக்கிறது?

கிளந்தால் மாநிலத்தில் ஆலயம் ஒன்றில் பன்றிகளை ஈட்டியால் குத்தி பலி கொடுப்பதாக அவர் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டிருக்கிறார்! உயிரினங்களைப் பலி கொடுப்பதே பாவம். அதிலும் இப்படி ஒரு பலியா? ஈட்டியால் குத்தி பலி கொடுப்பது என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அது உயிருள்ள ஒரு ஜீவன். என்னதான் பன்றி என்று கேவலப்படுத்தினாலும் ஒரு பிராணியை இப்படியெல்லாம் கொடுமைப் படுத்துவது  மகா பாவம். ஏற்றுக்கொள்ளக் கூடியதே அல்ல!   வாயில்லா ஒரு ஜீவனை இப்படி வதைப்பது மகாக்கொடிய செயல்.

அதே சமயத்தில்  இன்னொரு தகவலையும் டத்தோ மோகன் ஷான் வெளியிட்டிருக்கிறார்.  அந்தத் தகவல்களிலிருந்து   நாம் தெரிந்து கொள்ளுவது ஒன்று தான். அரசாங்கத்தால் உடைக்கப்படுகின்ற கோயில்களில் பெரும்பாலான் கொயில்கள் தனியார் நிலங்களில் உள்ள கோயில்கள் தான். இதில் ஆச்சரியப்படக்கூடிய செய்தி என்னவெனில் இந்தக் கோயில்களை அதன் உரிமையாளர்கள் அதனைப் பொதுச்சொத்தாக மாற்றிக்கொள்ள அனுமதி கொடுப்பதில்லை என்பது தான்!    தனியார் நிலங்களில் வைத்துகொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிப்பதையே தொழிலாக அந்தக் கோயில்களின் உரிமையாளர்கள் அந்தக் கோயில்களைப் பயன் படுத்துகின்றனர்! ஒரு சில கோயில்கள் விதிவிலக்காக இருக்கலாம்.

நமக்குத் தெரிந்தவரை நகரத்தார் கோயில்கள் பாதிக்கப்படவில்லை. அதேபோல யாழ்ப்பாணத்தமிழர்களின் கோயில்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. அதே போல தமிழர்கள் பல இடங்களில் பெரிய கோயில்களை அமைத்து வழிபட்டு வருகின்றனர். அவைகளில் ஒரு சில கோயில்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் பெரிய பாதிப்பில்லை! ஆனால் பெரும்பாலான பாதிப்புகள் சிறிய சிறிய தனியார் நிலங்களில் உள்ள கோயில்கள் தாம்!

இந்து சங்கம் தனியார் நிலங்களில் உள்ள கோயில்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.  அவைகளைப் பொது சொத்தாக மாற்ற வேண்டும். எதிர்கால நலனுக்கு இதுவே சிறந்த நடவடிக்கையாக இருக்கும். சிறிய கோயில்கள் பெரிய கோயில்களாக  மாற்றப்பட வேணடும்.

இது போன்ற கோயில்களில் இருந்து தான்  டத்தோ ஷான் குறிப்பிட்ட "காட்டுமிராண்டித்தனமான தெய்வ வழிபாடுகள்" நடபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவைகள் தனியார் நிலங்களில் உள்ள கோயில்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது தொடர அனுமதிக்கப்படுமானால் கஞ்சா அடிப்பவர்கள், குண்டர் கும்பல்களைச் சார்ந்தவர்கள் எல்லாம் புதிது புதிதாக ஏதாவது பலிகளைச் செலுத்த புதிய வழிகளைக் கண்டு பிடித்துக் கொண்டே இருப்பார்கள்!

கடைசியில் தெய்வ வழிபாடு என்பது கேலிக்குரிய ஒன்றாக ஆகிவிடும்! இந்து சங்கம் எப்படி இந்தப் பிரச்சனைகளைச் சமாளிப்பார்கள் என்பது தெரியவில்லை! ஆனாலும் அவர்கள் எதற்கும் தயார் என்பதாகவே நமக்குப் படுகிறது!

வழிபாட்டுத்தலம்  வழிப்பாட்டுத்தலமாகவே இருக்க வேண்டும்! பலி செலுத்தும் பாவத்தலங்களாக மாறக்கூடாது!
                                        

No comments:

Post a Comment