Tuesday 16 August 2016

வழி காட்டுங்கள்; வற்புறுத்தாதீர்கள்!


இப்போது நமது குழந்தைகளின் வாழ்க்கை என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் துன்பமான வாழ்க்கை என்று தான் சொல்ல வேண்டும்.

பெற்றோர்கள் இந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கின்ற இம்சைகள் சொல்லி மாளாது! குழந்தைகள் தங்களது இயல்பான வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை. அவர்கள் இயல்பான முறையில் வளர முடியவில்லை!

பெற்றோர்கள் குழந்தைகளின்  கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஒரு குழந்தை எல்லா வகையிலும் வளர வேண்டும். வெறும் கல்வி மட்டும் வளர்ச்சியைக் கொண்டு வந்து விடாது!

சமீபத்தில் ஓர் ஆசிரியை தற்கொலைச் செய்து கொள்ள முயற்சி சைய்தார் என்பதாக ஒரு செய்தி. காரணம், அவருடைய தலைமை ஆசிரியை அவருக்குக் கொடுத்த அழுத்தம், மனத்தொல்லைகள், மனக்கஷ்டங்களை  அந்த இளம் அசிரியையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

அந்த ஆசிரியையின் பெற்றோர்கள் அவரைப் படி படி என்று படிக்க வைத்தார்கள். நல்லது தான். ஆனால் பிரச்சனைகள் வரும் போது அவைகளை எப்படி எதிர்கொள்வது,  எப்படிக் கையாள்வது என்பதை அவர்கள் சொல்லிக் கொடுக்கவில்லை!

குழந்தைகளுக்கு எல்லா ஆற்றலும் வளர வேண்டும். அவர்கள் விரும்புகின்ற துறையில் அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு வழி காட்டலாம். ஆனால் அவர்களை வற்புறுத்தி இதைப்[படி, அதைப்படி என்றெல்லாம் துன்புறுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

இப்போது தங்கள் பிள்ளைகள் அனைவருமே பள்ளிப்பாடங்களின் முதலாவதாக வரவேண்டும் என்பது தான் இப்போதைய பெற்றோர்களின் ஆசை. நல்ல ஆசை தான்.  அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் பார்க்கும் போது பிள்ளைகள் உபத்திரவப் படுத்தப்படுகின்றனர். ஒரு பாடத்தில் குறைவானப் புள்ளிகள் எடுத்தால் ஏதோ வானமே இடிந்து விழுந்தது போல பெற்றோர்கள் ஆர்பாட்டப்படுத்துகின்றனர்!

பெரியர்வர்களுக்கு உள்ள இரத்த அழுத்தம், மன அழுத்தம்  மன உளைச்சல் அனைத்தும் இப்போது குழந்தைகளுக்கும் வந்துவிட்டன!   ஓடி விளையாடி பாப்பா என்றெல்லாம் பெற்றோர்கள் இப்போது பாப்பாக்களிடம் சொல்லுவதில்லை! எல்லாவற்றுக்கும் ஒரு நேரமுண்டு: காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை  முழுதும் விளையாட்டு அதன் பின்னர் இரவும் மீண்டும் படிப்பு என்று ஒரு வழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

பிள்ளைகளுக்கு வழிகாட்டியாய் இருங்கள். இதைத்தான் படிக்க வேண்டும், இப்படித்தான் நீ வரவேண்டும் என்றெல்லாம் உங்கள் ஆசைகளை அவர்கள் மேல்  திணிக்காதீர்கள்!

பிள்ளைகளுக்கு வழிகாட்டியாய் இருப்பது பெற்றோர்களின் கடமை. வழிகாட்டுதல் வற்புறுத்தலாய் மாறும்போது அது பெற்றொரகளின் மடமை!. .

No comments:

Post a Comment