Wednesday 3 August 2016

கேள்வி - பதில் (27)


கேள்வி

கபாலி திரைப்படத்திற்குப் பின்னர் தமிழ் திரைப்படவுலகிள் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டா?

பதில்

ஏற்பட வாய்ப்புண்டு என்றே நான் நினைக்கிறேன்.

கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஒரு கூட்டத்தில் பேசும் போது தனது சினிமா வாழ்க்கையில் தனக்குப் பிடித்த இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமனும், பா.ரஞ்சித் இருவரைப் பற்றி குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இந்த இரு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளைகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்!

எஸ்.பி.முத்துராமன் ரஜினி வைத்து 25 படங்களை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றவர். எஸ். தாணுவின் கருத்துப்படி இந்த இரு இயக்குனர்களுமே தயாரிப்பாளர்களின் நலனை முன்னிறுத்துபவர்கள். தயாரிப்பாளர்களுக்கு எந்தவித நட்டத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்று நினைப்பவர்கள். இவர்கள் இருவருமே தயாரிப்பாளர்கள் கொடுக்கின்ற மதிப்பீட்டுக்குள்ளேயே தங்களது படங்களை முடித்துக் கொடுப்பவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இப்போது எந்தப் படங்களையும் இயக்குவதில்லை. அடுத்து நிற்பவர் பா.ரஞ்சித். அவருடைய முன்னைய இரு படங்களும் - அட்டைக்கத்தி, மெட் ராஸ் - இரு படங்களுமே குறைந்த செலவில் நிறைவாக எடுக்கப்பட்டப்  படங்கள். வெற்றிகரமாக ஓடிய படங்கள்! ஏன்? கபாலி ஒரு பெரிய பிரமாண்ட தயாரிப்பாக இருந்தாலும் அவர் கபாலியில் ஏகப்பட்ட சிக்கனத்தைக் கையாண்டவர்! பணத்தை வாரி இறைக்க அவர் சம்மதிக்கவில்லை! அது ஒன்றே போதும் தயாரிப்பாளர்களை மனங்குளிரவைக்க! பணத்தைக் கொட்டிக்கொடுக்க தயாரிப்பாளர் தயராக இருந்தாலும் அவர் அதனை ஏற்கவில்லை! தேவை என்றால் மட்டுமே செலவுகளை ஏற்பவர்! இது தான் எஸ்.பி.முத்துராமனின் அவர்களின் வழியுங்கூட! அதனால் தான் அவர் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக இருந்திருக்கிறார்! அத்தோடு 75 படங்களையும் இயக்கியிருக்கிறார்!

இந்த முன்மாதிரிகள்  இனி எல்லாத் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமையக் கூடிய சாத்தியம் உண்டு!

அதுமட்டும் அல்லாமல் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டும் என்னும் ஒரு நினைப்பையும் கபாலி படம் உருவாக்கியிருக்கிறது! பல பிரச்சனைகளை - குறிப்பாக ஏழை பாழைகளின் பிரச்சனைகள் - வெளி வருவதில்லை! அனைத்தும் அடக்கி ஒடுக்கி மறைக்கப்படுகின்றன!  அரசியல்வாதிகள் இப்போது ஒரு புதிய வழியைக் கையாளுகின்றனர்.  எங்கேயாவது ஒரு அநீதி நடந்துவிட்டால் உடனே அந்தக் குடும்பத்தினருக்குக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து மறைத்துவிடுகின்றனர்!

இப்போது கபாலி ஒரு புதிய பாதையைக் காண்பித்துக் கொடுத்திருக்கிறது.. புதிய இயக்குனர்களுக்கு ஒர் உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது கபாலி. மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் திரை உலகம் கையில் எடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.

இனி வருங்காலங்களில் மக்களின் பிரச்சனைகளைச் சினிமா உலகம் கையிலெடுத்துப் பயணிக்கும் என்று நம்பலாம்!

கபாலியின் வரவு தமிழ்த் திரை உலகிற்கு ஒரு புதிய வரலாறு படைக்கும்!


No comments:

Post a Comment