Thursday 30 June 2016

நண்பர்கள் நலமா...?


உங்களைச் சுற்றியுள்ள உங்கள் நண்பர்களைப்  பாருங்கள். அனவைரும் நலம் தானே? உங்கள் நண்பர்கள் நலமாக இருந்தால் நீங்களும் நலமாகத்தான் இருப்பிர்கள்!

நாம் சிரித்து வாழ்வதும், மகிழ்ச்சியாக வாழ்வதும் நமது சுற்றுப்புறமும் ஒரு காரணமாக அமைகிறது. சிரித்துப் பேசி, மகிழ்ச்சியாக வாழ்வது என்பது ஒரு சிலருக்குக் கனவாகவே போய்விடுகிறது!

ஒரு சில நண்பர்களைப் பார்த்திருப்பீர்கள். ஏதாவது ஒரு பிரச்சனை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்! அவர்களைப் பொருத்த வரைக்கும் அந்தப் பிரச்சனைகளிலிருந்து அவர்களால் விடுபடவே முடிவதில்லை! "உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது"  என்று கவிஞர் கண்ணதாசன் பாடிவிட்டுப் போனார்! அந்த வரிகள் இவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்!

எல்லாம் உப்புச்சப்பில்லாத பிரச்சனைகளாக இருக்கும்! ஆனால் இவர்கள் பண்ணுகின்ற சேட்டைகள் நம்மைக் கலங்கடித்து விடும்! இவர்களுடைய சோகங்கள் இவர்களோடு போய்விட்டால் நமக்கு மிக மிக சந்தோஷம். ஆனால் சுற்றுபுறத்தையே இவர்கள்  கலங்கடித்து விடுவார்கள்! அவர்கள் சோகங்கள் நம்மைத் தாக்கி நாமும் தேவையற்ற சோகங்களில் வீழ்த்தப்படுவோம்!

ஒரு சிலர் நோய்களப்பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களோடு நாமும் கலந்துவிட்டால் போதும் வேறு வினையே வேண்டாம்! நமக்கும் நோய் வந்துவிடும்! ஒரு நண்பரை எனக்குத் தெரியும்.நோய்களைப் பற்றி பேசுவதில் வல்லாதி வல்லவர்! நமது நாட்டில் உள்ள அத்தனை டாக்டர்களையும் தெரியும்; அத்தனை மருத்துவ நிபுணர்களையும் தெரியும். எந்த டாக்டர் எந்த வியாதியைக் குணப்படுத்துவார்! எந்த டாக்டரிடம் போனால் எந்த வியாதி குணமாகும் அத்தனையும் விரல் நுனியில் வைத்திருப்பார்! கடைசியில் அவரும் ஏதோ ஒரு பெயரைச் சொல்லி அந்த வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்! நோயில்லாமல் அவரைப் பார்க்கவே முடியாது! நமக்கு நோய் என்றால் டாக்டரைப் பார்ப்போம்; டாக்டர் சொல்லுவதைக் கேட்போம். அத்தோடு பிரச்சனை முடிந்தது.

ஆனால் 24 மணி நேரமும் நோய்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள் மிக ஆபத்தானவர்கள்! மற்றவர்களுக்கு நோயைப் பரப்புவர்கள்! ஒரு நோயும் இல்லாமல் நாமும் ஏதாவது ஒரு நோயால் வாடிக் கொண்டிருப்போம்!

நாம் பெரும்பாலும் நண்பர்களோடு சேர்ந்து நேரத்தை கழிக்கிறோம். சிரித்துப் பேசி மகிழ்ந்திருப்போம்! அந்த வேளையில் நோய்களைப் பற்றி பேசுவதும் சோகங்களையே பகிர்ந்து கொள்ளுவதும்  நமக்கு எந்த நலனையும் கொண்டுவரப் போவதில்லை! நல்லதையே பேசி நலமோடு வாழ்வோம்! நல்ல நண்பர்கள் நமக்கு நலத்தைக் கொண்டுவருவார்கள். நோய் பரப்பும் நண்பர்கள் நோயைக் கொண்டு வருவார்கள்!

நலமோடு வாழ்வோம்! நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்போம்!

Wednesday 29 June 2016

கேள்வி-பதில் (21)


கேள்வி

பூச்சோங் ஜெயா, I.O.I Boulevard, Movida Restaurant -ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கும் ஐ.எஸ்.ஐ. பயங்கரவாத கும்பலுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமோ?

பதில்

இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே  பலமுறை நடந்திருக்கின்றன. புதிது என்று சொல்லுவதற்கில்லை. காவல்துறையினர் அதனைத் தொழில் போட்டி அல்லது பொறாமை காரணமாக நடைப்பெற்ற சம்பவங்களாக வகைப்படுத்தினர்.

ஆனால் இப்போது நமது பார்வை மாறிவிட்டது! காவல்துறை சொல்லுவதை இப்போது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! காரணம் சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.யின் மிரட்டல் - இன்னொரு பக்கம் பகாங் மாநில முப்தியின் மிரட்டல் - இது போன்ற மிரட்டல்களுக்கிடையே இந்த வெடிப்புச் சம்பவம் நடந்திருக்கிறது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்திருக்கின்றனர்.  ஒரு இந்திய இளம் தம்பதியினர் கடுமையானக் காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். கணவர் ஜெயசீலன்,  கழுத்து, கால் மற்றும் முகம் ஆகியப் பகுதிகளில் கடுமையானக் காயங்களுக்கு உள்ளாகி அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.  அவரின்  மனைவி பவானி கையில் ஏற்பட்ட முறிவுக்காக சிகிச்சைப் பெற்று வருகிறார். இருவரும் தங்களது இரண்டாம் ஆண்டு திருமண நிறைவு நாளைக் கொண்டாட முதன் முதலாக அந்த உணவுவிடுதிக்குச் சென்றிருந்தனர்.

இதற்கிடையே இந்தக் குண்டுவெடிப்புக்குத் தாங்களே காரணம் என ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதக் கும்பலின் மலேசியப்பிரிவு  அறிவித்திருக்கிறது.  "இது உங்களுக்கு முன் எச்சரிக்கை"  என அறிவித்துள்ளது. இவர்கள் சொல்வது உண்மையோ பொய்யோ ஆனால் நம்பத்தான் வேண்டியிருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த வெடிக்குண்டு சம்பவங்களால் இந்த அளவு மனித பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இப்போது தான் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது. இரவு உணவுக்காக உணவகங்களுக்குச் செல்லலாம். ஆனால்  நேரத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். காலை, அதிகாலை என்று இழுத்துக்கொண்டு போகாதீர்கள். இந்த வெடிப்புச் சம்பவம் காலை 1.45 க்கு நடந்திருக்கிறது என்பதை மனதில் வையுங்கள்.

பயங்கரவாதக் கும்பல்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது! அவர்கள் உலக அளவில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். நமது காவல்துறையோ இது போன்ற சம்பவங்களை இதுவரை எதிர்நோக்கியதில்லை! ஆனாலும் நமது காவல்துறையினர் மீது நமக்கு நம்பிக்கை உள்ளது.

நமது நாடு அமைதியான நாடாகத் தொடர்ந்து திகழ இறவைனைப் பிரார்த்திப்போம்! வாழ்க மலேசியா!


Monday 27 June 2016

உயர்ந்த இனத்தின் உன்னதப் பெயர்கள்!


"உயர்ந்த இனத்தின் உன்னதத் தமிழை எழுதவது எப்படி?"என்னும் கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது. எழுதியவர்: வழக்கறிஞர் பொன்முகம் பொன்னன் அவர்கள்

அதிலும் குறிப்பாக என்னைக் கவர்ந்தது பிள்ளைகளுக்கு எப்படி பெயரிடுவது என்பது மீதான பகுதி தான்.


இப்போது நமது பிள்ளைகளின் பெயர்களைப் பார்க்கும் போது என்ன நினைத்து, எப்படி நினைத்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கிறார்களோ என்பது  நமக்குப் புரியவில்லை! பெயர்களைப் பார்க்கும் போது இவன் எந்த ஊர்காரன், இவன் என்ன இனம் என்று ஒன்றுமே புரியவில்லை! அவன் தமிழன் என்பதற்கான அடையாளமே அங்கு இல்லை!

முன்பு நாம் நமது தாத்தா பாட்டி அல்லது தெய்வங்களின் பெயர்கள் அல்லது சினிமா நடிகர்களின் பெயர்கள் என்று ஏதோ நமது தமிழர்களின் அடையாளத்தைக் காட்டி வந்தோம். இப்போது அந்தப் பழக்கம் முற்றிலுமாக தொலைந்து போனது!

இது பற்றி ஒரு சில இளம் பெற்றோர்களை நான் விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் சொன்னதிலிருந்து முதல் குற்றவாளியாக நான் நினைப்பது கோவில் பூசாரிகளைத்தான்! அவர்கள் தான் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். முதல் எழுத்தை அவர்கள் கொடுத்து விடுகிறார்கள். பிறகு பெற்றோர்கள் அந்த எழுத்துக்குத் தகுந்தவாறு பிள்ளைகளுக்குப் பெயர்களை வைக்கிறார்கள். அவர்கள் கொடுக்கின்ற முதல் எழுத்து  இப்படியும் தொடங்கலாம்:  டு, ஷு, ஜு  இப்படி நடைமுறைக்குக் கொஞ்சமும் ஒத்துவராத எழுத்துக்களைக் கொடுத்தால் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்?  கேட்டால் நாங்கள் ஜாதகத்தைப் பார்த்து கணித்து எழுத்துக்களை எழுதி கொடுக்கிறோம் என்கிறார்கள்!

சரி! போனது போனவைகளாக இருக்கட்டும்! இப்போது "தமிழ் எங்கள் உயிர்" என்னும் அமைப்பு இவைகளை நிவர்த்திச் செய்ய சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதனைப் பலரும் வரவேற்றுள்ளனர். நாமும் இருகரம் கூப்பி வரவேற்போம்!

அதில் முக்கியமாக "தமிழுக்கு நாம் செய்யாமல் வேறு யார் செய்வது"  என்று மலேசிய அர்ச்சகர்கள் சங்கம் களத்தில் குதித்துள்ளது! இவர்களைத்தான் நாம் அதிகமாக எதிர்பார்த்தோம். காரணம் குழந்தைகள் பிறந்ததும் பெற்றோர்கள் முதலில் நாடுவது அர்ச்சர்களைத்தான். அவர்கள் நினைத்தால் இந்தப் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்! அதிலும் வெறும் பெயரின்  தொடக்க எழுத்தைக் கொடுக்காமல் நல்லதொரு பெயர் பட்டியிலைத் தயார் செய்து பெற்றோர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

அத்தோடு இந்த நேரத்தில் "தமிழ் எங்கள் உயிர்: அமைப்பு மேற்கொண்டிருக்கும் - தமிழ் தமிழர் சம்பந்தப்பட்ட - எல்லா  முயற்சிகளிலும்
வெற்றிபெற நமது வாழ்த்துகள்!  

தமிழன் தலை நிமிர வேண்டும்! வாழ்க தமிழினம்!

Sunday 26 June 2016

கேள்வி-பதில் (20)


கேள்வி

பகாங் மாநில முப்தி, டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் "மத நம்பிக்கையற்றவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்" என்று கூறியிருக்கிறாரே! சரி தானா?

பதில்

சரி என்பதனால் தான் அவர் கூறுகிறார் என்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்! ஒரு பக்கம் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பயமுறுத்தல். இஸ்லாம் அல்லாதவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று ஐ.எஸ். ஸினர் பயமுறுத்துகின்றனர்.  இன்னொரு பக்கம் மதவாதிகளின் அச்சுறுத்தல்.  பொதுவாக மதவாதிகள் - நாட்டில் உலகில் - மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இந்த உலக மக்களுக்காகவே பிரார்த்திப்பவர்கள்.

அப்படிப் பிரார்த்தனைச் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

நமது பகாங் மாநில முப்தி சுகபோக வாழ்க்கை வாழ்பவர். அவர் எட்ட முடியாத இடத்தில் இருக்கிறார். அவருடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதனால் தனக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை  என்பது அவருக்குத் தெரியும். அதனால் தைரியமாகப் பேசுகிறார்! அதுவும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சவால் விட்டிருக்கும் இந்த நேரத்தில் இவரும் அவர்களோடு சேர்ந்து இப்படி கூறுவது இதுவும் ஒரு சவாலாகவே நமக்குத் தோன்றுகிறது!

ஆக, மலேசிய இஸ்லாம் அல்லாத மலேசியர்கள்  வெளி நாட்டிலிருந்தும், உள் நாட்டிலிருந்தும் இரு சவால்களை எதிர்நோக்குகின்றனர் என்பது தெளிவு. பகாங் மாநில முப்தி அப்படி ஒரு நிலையை ஏற்படுத்திவிட்டார் என்று தான் நாம் சொல்ல வேண்டி உள்ளது.

இந்த நேரத்தில் முப்தி அவர்களின் கவனத்திற்கு ஒன்றை நாம் கொண்டு வருகின்றோம். மத நம்பிக்கையற்றவர்களால் எந்த நாடும் எந்தப் பிரச்சனைகளையும் எதிர்நோக்கவில்லை! அவர்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை! எந்த பயமுறுத்தலும் இல்லை! அவர்களிடன் எந்தத் தீவிரவாதமும் இல்லை!

இன்று நடக்கின்ற அட்டுழியங்கள், அக்கப்போர்கள் அனைத்தும் எல்லா மததித்தினராலும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய - கட்டாயச் சட்டமாக்கப்பட்டு விட்டது! வன்முறை, தீவிரவாதம் அனைத்தும் மதவாதிகளே வளர்த்து விடுகின்றனர்!

இந்த நேரத்தில் நாம் சொல்ல வருவதெல்லாம்: தீவிரவாதம் ஒடுக்கப்பட வேண்டும்! ஒழிக்கப்பட வேண்டும்! அதனை வளரவிடுவது அனைத்துத் தரப்பினருக்கும் எந்த நலனும் ஏற்படப்போவதில்லை!

வாழ்க மலேசியா! வளர்க மலேசியா! வெல்க மலேசியா!


Saturday 25 June 2016

கேள்வி-பதில் (19)


கேள்வி

"உங்களுக்குத்  துணிவு இருந்தால் மலேசியாவுக்கு வந்து பாருங்கள்!"  என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கதிற்கு, போலிஸ் படைத் தலைவர், டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் சவால் விட்டிருக்கிறாரே!


பதில்

டான்ஸ்ரீ காலிட் அபு பக்காரின் துணிச்சலை நாம் பாராட்டுகிறோம். அப்படியென்றால் நமது நாட்டின் பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை!  நாம் பயப்படும் அளவுக்கு எதுவும் நடந்துவிடப் போவதில்லை!

நமது நாடு எல்லாக் காலங்களிலும் அமைதியான ஒரு நாடாக விளங்கி வந்திருக்கிறது. அதற்கு ஒரே காரணம் பொதுவாக மலேசியர்கள் அமைதி விரும்பிகள். எந்த ஒரு கலவரமோ, ஆர்ப்பாட்டமோ , குண்டு வீச்சு தாக்குதல்கள் போன்றவகைகளுக்கு  இ ங்கு இடமில்லை!

ஆனாலும் சமீப காலங்களில் சமய தீவிரவாதிகளால் ஆங்காங்கே சில அசாம்பவிதங்கள்  நடைபெற்றிருக்கக் கூடும்.  அவர்கள் மேல் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள்  எடுத்தும் வருகின்றனர்.

நமது ஐ.ஜி.பி. "துணிவு இருந்தால் மலேசியாவுக்கு வாருங்கள்"  என்கிறார். அவர்கள் இங்கு வராமலேயே  பலவிதமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உண்மை தான்! ஆனால் இங்கு தங்கு தடையின்றி வங்காளதேசிகளையும், பாக்கிஸ்தானியர்களையும் நாம் நமது நாட்டில் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் அனைவரும் இங்கு வேலைக்காக வந்தவர்கள் தான் என்றாலும் இவர்கள் அனைவருமே இங்கு வேலைச் செய்கிறார்களா ஏன்று சொல்லுவதற்கு எந்தப் புள்ளிவிபரமும் நம்மிடம் இல்லை!  வேலை செய்யாதவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர்.

தங்களது தாய் நாடுகளிலிருந்து பல ஆயிரங்களைச் செலவு செய்து இங்கு வந்தவர்கள் - வருமானம் இல்லாத நிலையில் - இது போன்ற தீவிரவாத கும்பல்களினால் மிக எளிதாக ஈர்க்கப்படுவார்கள் என்பதையும் மறைப்பதற்கில்லை! நாம் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை! ஆனாலும் ஐ.ஜி.பி. இவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

இதனை நாம் கவனத்திற்குக் கொண்டு வரக்காரணம் இவர்களின் பின்னணி  தீவிரவாதப் பின்னணி என்பது நம்மைவிட ஐ.ஜி.பி. நன்கு அறிவார்!

நமது நாடு எல்லாக்காலங்களிலும் அமைதியின் நாடாகவே தொடர்ந்து திகழ வேண்டும்!  அதுவே நமது அனைவரின் ஆசை!

வாழ்க மலேசிய! வெல்க மலேசிய!


Friday 24 June 2016

கேள்வி-பதில் (18)


கேள்வி

மலேசிய குற்றக் கண்காணிப்பு அமைப்பின் (அரசு சாரா அமைப்பு) தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீசஞ்சீவன் கைது செய்யப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!


பதில்

உண்மையே! ஆனாலும் எதுவும் சொல்வதற்கில்லை!

பல ஊழல்களை அம்பலத்திற்குக் கொண்டு வந்தவர் சஞ்சீவன். காவல்துறையினர்  அவரைக் கண்காணித்துக் கொண்டும், பின் தொடர்ந்து  கொண்டும் வந்ததாக அவரே பல முறை புகார் கூறியிருக்கிறார்.

காவல்துறையினரால் கண்காணித்துக் கொண்டும், பின் தொடர்ந்து கொண்டும் இருக்கும் ஒரு நபர் எப்படி இதையெல்லாம் செய்ய முடியும் - செய்வாரா -  என்று நம்மால் நம்ப முடியவில்லை தான்!

ஒரு சூதாட்ட மைய உரிமையாளரிடம் பாதுகாப்புப் பணம் கேட்டு மிரட்டுவதும், அந்த உரிமையாளர்  தனது குடும்பத்தின் பாதுகாப்புக் கருதி காவல்துறையினரிடம் புகார் கொடுப்பதும் - ஒன்றுமே புரியவில்லை! - அந்த அளவுக்குப் பலம் வாய்ந்தவரா அல்லது அந்த அளவுக்குச் செல்வாக்கு உள்ளவரா சஞ்சீவன்? இன்னும் பல புகார்கள் அவர் மேல் சுமத்தப் பட்டிருக்கின்றன!

ஒரிரு வாரங்களூக்கு முன்னர் தான் அவர் தங்கியிருந்த தங்கும் விடுதியில் அவரைக் கண்ணிவைத்துப் பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது! அவரின் பக்கத்து அறையில் ஒரு பெண் போலிஸ் இன்ஸ்பெக்டர் தங்கியிருந்தார். ஆனால் அவர் அவரின் அறையில் இருந்தார்! இவர் இவரின் அறையில் இருந்தார்! அதனால் ஒன்றும் செய்யமுடியவில்லை!

ஆனால் ஒன்று மனதை நெருடுகிறது. அவருடைய கார் ஓட்டுனர் ஓர் இந்தியப் பிரஜை. அவரிடம் காலாவதியான வேலைபெர்மிட் இருந்ததாகக் கூறப்படுகிறது.  வேலை செய்ய அனுமதி இல்லாத ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருப்பது சட்டப்படி குற்றம்  ஒரு பிரபலமான மனிதர் எப்படி இந்த அளவுக்கு அலட்சியமாக இருக்க முடியும்?  

இருந்தாலும் நாம் எதையும் ஊகிக்க வேண்டாம். சட்டம் தனது கடமையைச் செய்யட்டும். நாடறிந்த வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ அவருக்காக வாதாடுகிறார்.

நல்லதே நடக்கட்டும்!


Wednesday 22 June 2016

சிரித்து வாழவேண்டும்!



"சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!"என்பது கவிஞர் புலமைபித்தனின், எம்.ஜி.ஆர். பாடல்!

இங்கு நாம் சிரித்து, நல்ல நலத்தோடு வாழ்வது பற்றி பேசுவோம். பிறரைச் சிரிக்க வைக்கலாம்; நம்மைப் பார்த்து பிறர் சிரிக்க வேண்டாம்!

இன்று சிரிப்பது என்பது பெரியதொரு பிரச்சனையாகி விட்டது! மனிதர்கள் சிரிப்பதில்லை! அந்த அளவுக்கு மனிதர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள்! எல்லாருமே ஏதோ ஒரு மன இறுக்கத்தில் இருக்கிறோம்! இறுக்கத்தை இறக்கிவிட வழி இல்லை! காசு கொடுத்தால் கூட சிரிக்க ஆளில்லை! அதனால் தொலைக்காட்சிகளே  நம்மைச் சிரிக்க வைக்கப் பல அலைவரிசைகளை ஏற்படுத்தியிருக்கின்றன! அப்போதும் கூட சிலர் சிரிப்பதே இல்லை!

அட! சிரிப்பு எங்கே போயிற்று? சிறுபிள்ளைகளாய் இருந்த போது எப்படியெல்லாம் சிரித்திருப்போம்! இப்போது கூட குழைந்தைகள்   300 லிருந்து 500 வரை ஒரு நாளைக்குச் சிரிக்கிறார்களாம்! பெரியவர்களோ 20 முறைதான் ஒரு நாளைக்கு அவர்களால் சிரிக்க முடிகிறதாம்! சாப்பாட்டைக் குறைத்தால் உடம்புக்கு நல்லது. சாப்பாட்டைக் கட்டுப்படுத்தாமல் சிரிப்பைக் கட்டுப்படுத்தினால் சாப்பாட்டோடு சிரிக்காத சிரிப்பும் உடம்பில் நோயை ஏற்படுத்தும்!

சிரிப்பதில் அப்படி என்ன நமக்குக் கஷ்டம்? சிறு குழந்தைகளைப் பார்க்கிறோமே எவ்வளவு நெருக்கடிகளிலும் அவர்கள் விளையாட்டும் சிரிப்புமாகத்தானே இருக்கிறார்கள். பெரியவர்களில் கூட ஒரு சிலர் எந்நேரத்திலும் சிரித்த முகத்தோடையே இருப்பார்கள். அவர்களுக்குப் பிரச்சனைகளா இல்லை?  பிரச்சனைகள் இருக்கின்றன என்பதற்காக முகத்தை ...உர்...என்றா வைத்துக் கொண்டிருக்க முடியும்! அது ஒரு பக்கம் இருக்கட்டும். இதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்!

நடிகர் நாகேஷ் - இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். ஆனால் அவரின் வாழ்க்கையில் ஏகப்பட்ட நெருக்கடிகள், துன்பங்கள்! அதனை நினைத்து அவர் என்ன கன்னத்தில் கைவைத்துக் கொண்டா இருந்தார்? அவரின் துன்பங்களை மறந்து நம்மை என்னமாய் சிரிக்க வைத்தார்!

"இடுக்கண் வருங்கால் நகுக" என்று தானே ஐயன் திருவள்ளுவர் சொல்லிவிட்டுப் போனர். "அழுக" என்று சொல்லவில்லையே! பிரச்சனைகள் தீருவதற்கு சிரிப்பும் ஒரு வழி தான்.. சிரிக்கும் போது மன இறுக்கம் குறையும். இறுக்கம் குறைந்தால் நம்மால் சிந்திக்க முடியும். பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

சிரித்து வாழ்வோம்! சிறப்பாக வாழ்வோம்! சீரும் சிறப்புமாக வாழ்வோம்! சிந்தித்து வாழ்வோம்! செல்வத்தோடு வாழ்வோம்!

கடைசிவரை யாரோ......!


கடைசிவரை நம்மோடு யார் இருப்பார்.....?

நல்ல கேள்வி.  கையில் பணம் இருந்தால்  அந்த 'நாலு' பேரும் நம்மோடு பணம் இருக்கும்வரை இருப்பார்கள்! கவலையே வேண்டாம்!

நமது பிள்ளைகள், சொந்தங்கள் பந்தங்கள், உறவுகள், நண்பர்கள் ஏன் மருமகள்கள் கூட நம்மோடு கடைசிவரை இருப்பார்கள்! இடையில் பணம் கைமாறினால் ஏமாற்றம் அடைந்தவர்கள் "நாங்கள் ஏமாளிகளா?" என்று விலகி விடுவார்கள்!  அப்போது சொந்தமாவது, பந்தமாவது எதுவும் இல்லை!

அதனால் 'இருக்கும்'  போதே பிரித்துக் கொடுக்க வேண்டாம்.  ஆனால் இருக்கும் போது எழுதி வைத்துவிடுங்கள். 'போன'  பிறகு தான் அது பயன்பாட்டுக்கு வரும் என்பதை உறுதிப்படுத்தி விடுங்கள். பிள்ளைகள் மனதில் ஒரு கேள்விக்குறி இருந்து கொண்டே இருக்க வேண்டும்! நமது விருப்பத்தை எப்போது வேண்டுமானாலும் மாற்றிவிடலாம்! நமக்கு அந்த உரிமை உண்டு!

அப்போது தான் நாம் இருக்கும் வரையில் கொஞ்சமாவது கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ முடியும்.

கடைசிவரை யார்? உங்கள் பணம் தானே! இந்த உலகின் எந்த மூலைமுடுக்குகளுக்கு நீங்கள்  போக வேண்டுமானாலும் அந்த பணம் உங்களோடு வரும். போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரும்! போக வேண்டிய இடங்களுக்குப் போங்கள்;  பார்க்க வேண்டிய இடங்களைப் பாருங்கள். தாஜ்மகாலா? சீனப்பெருஞ்சுவரா? திருப்பதியா? திருவாருர் தேரா?  எல்லாவற்றையும் பார்க்கலாம். எந்தக் கட்டுப்படும் இல்லை!

'அட! நடக்க முடியாத காலத்திலே இதெல்லாம் எப்படி முடியும்?' என்று யோசிக்கிறீர்களா?  அது ஒரு பிரச்சனையே இல்லை! விமான நிலையத்தாரிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டால் போதும். அனைத்தையும் ஏற்பாடு செய்து விடுவார்கள்! சக்கரவண்டியை வைத்துக் கொண்டு உலகையே சுற்றி வரலாம்.

இரத்தினவள்ளி அம்மையாரைப் போல இருந்த இடத்திலிருந்தே நாலு பேருக்குத் தான தர்மம் செய்ய ஆசைப்பபடுகிறீர்களா?  செய்யலாம்! தான தர்மம் செய்வது இறைவனுக்குப் பிடித்தமான ஒன்று. சொர்க்கத்தில் உங்களுடைய தான தர்மங்கள் உங்களுடைய கணக்கில்  வரவு வைத்துக் கொள்ளப்படும் என்று வேதங்கள் கூறுகின்றன.

கடைசிவரை அந்தப் பணம் உங்களோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். "என் மகன் தானே" என்று பாசத்தினால் நேசக்கரம் நீட்டினால் உங்கள் மருமகள் உங்களை "யாரோ" ஆக்கிவிடுவார்!

இது தான் வாழ்க்கை! இது தான் பயணம்! கடைசிவரை நீங்கள் ஹீரோவாகவே இருங்கள்!

"ஜீரோ" வாழ்க்கை வேண்டாம்!


Monday 20 June 2016

நீங்களும் தலைவர் தான்!


நாம் யார் யாரையோ தலைவர் ஏன்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படியென்றால் நாம் என்ன, வாலாட்டும் நாய்களா?

இப்போதெல்லாம் யார் தலைவர், யார் தலைவர் என்று கேள்விகள் நிறையவே கேட்க ஆரம்பித்து விட்டோம்.

அவசியம் இல்லை1 எந்தத் தலைவனும் நமக்கு அவசியம் இல்லை; தேவையும் இல்லை! நமக்கு நாமே தான் தலைவர்!

இது நாள் வரை நமக்கு வாய்த்த தலைவர்ககள் எல்லாம் ஏமாற்றுப் பேர்வழிகள்! யாராவது ஒருவரை நம்மால் கறைபடாத காமராசர் என்று சொல்ல முடியுமா?

யார் யாரையோ ஏமாற்றுகிறார்கள். நமக்கு மிகவும் ஏமாற்றம் தருவது தமிழ்பள்ளிகளுக்காக அரசாங்கம் கொடுக்கின்ற கோடிக்கணக்கான மானியங்கள்,  சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குப் போய் சேரவில்லை என்பது தான் மிகப்பெரிய வருத்தம்.

இப்படிக் கல்விக் கூடங்களுக்குப் போய் சேர வேண்டிய பணத்தை ஏமாற்றித்திரியும் இந்தத் தலைவர்களின் வீட்டுப்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? கல்வி இவர்களுக்குப் போய்ச் சேருமா?

முதலில் இந்தத் தலைவர்களை நம்புகின்ற போக்கை நாம்  கைவிட வேண்டும். அவர்களிடம் போய் தொங்குகின்ற போக்கை நாம் உதற வேண்டும்.நாம் தலைவர்கள் என்று கம்பிரமாகத் தலை நிமிர்ந்து  நிற்க வேண்டும்.. தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை நாம் அதிகமாகவே கூனிக்குறுகி வணங்கிவிட்டோம்!

சீன சமுகத்தைப் பார்க்கிறோமே அவர்கள் என்ன அவர்கள் தலைவர்களைப் பார்த்ததும் கூனிக்குறுகியா நிற்கிறார்கள்? நமக்குச் சேவை செய்ய வேண்டியவர்களைப் பார்த்து நாம் ஏன் கூனிக்குறுக வேண்டும்? அதற்கான காரணம் என்ன? பொருளாதார பலம் இல்லை என்கிற ஒரே காரணம் தானே நம்மை அப்படிக் கூனிக்குறுக வைக்கிறது!

பொருளாதாரப் பலத்தை நாம் பெருக்கிக்கொள்ள வேண்டுமே தவிர, கண்டவன் கை கால்களைப் பிடித்து நாம் முன்னேற  வேண்டும் என நினைப்பது தவறு! நமது சுயமரியாதையை நாம் எந்த நிலையிலும்  அடகு வைத்துவிடக் கூடாது!

முன்னேற வேண்டும். பொருளாதாரப் பலத்தோடு வாழ வேண்டும். தலைநிமிர்ந்து நடக்க வேண்டும்..நானும் தன்மான உள்ளத் தமிழன் தான். நானும் தலைவன்  தான். நான் ஏன் யாருக்கோ, எவனுக்கோ கூனிக்குறுக வேண்டும்?

கையில் பணம் இல்லை இன்றால் நாம் எந்நாளும் தொண்டனாகத்தான் இருக்க வேண்டும். தலைவனிடன் கூனிக்குறுக வேண்டும்! யாரைப் பார்த்தாலும் கூனிக்குறுக வேண்டும்.

கை நிறைய பணம் உள்ளவனை அவ்வளவு சீக்கிரத்தில் நாம் அசைத்துவிட முடியாது. அதனால் தான் சீனர்களை யாராலும் கைவைக்க முடிகிறதா, பாருங்கள். நமது சமூகத்தினருக்கு எவ்வளவு பிரச்சனைகள்.

காலையில் கோவிலுக்குப் போக வேண்டும் என்றால் கோவில்களிள் உள்ள  சிலைகள் உடைந்து கிடக்கின்றன. பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பினால் கூரை உடையும் தருவாயில் இருக்கின்றது.  பெற்றோறோருக்கு நிம்மதியில்லை! நாம் 19-ம் நுற்றாண்டிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நாம் வளர்கின்ற நாடா? வளர முடியாத நாடா?  இப்படித்தான் நாம் தொடர்ந்து  போய்க்கொண்டிருக்கப் போகிறோமா?

தமிழனே நிமிர்ந்து நில்! உயர்ந்து நில்! மற்றவனைக் குறைச் சொல்வதை நிறுத்து! உனது வாழ்க்கைப் பாதையை மாற்று! நான் ஏமாறுபவன் அல்ல! ஏமாற்றுபவனும் அல்ல!  உனக்கு என்று ஒரு வர்த்தகப்பாதையை ஏற்படுத்து! வர்த்தகத்தை வயப்படுத்து! வர்த்தகம் நமது நாடி நரம்புகளில் ஓடுகிறது! அதனை மேம்படுத்து!

எனக்கு எந்தத் தலைவனும் வேண்டாம்! நானே தலைவன்! நானே தலைவன்! நான் எனது சமுகத்தின் தலைவிதியை மாற்றியமைப்பேன்! எனது சமுகத்தை உயர்த்துவேன்!

எனது தமிழினம் தலை நிமிரும்! விரைவில்!



.



Thursday 16 June 2016

நோன்பு தானே! அதனால் என்ன....?


நோன்பு மாதம் இஸ்லாமியர்களுக்குப் புனிதமான மாதம். உலகளவில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து அந்த நோன்பின் பயனை உடல் ரீதியுலும் ஆன்ம  ரீதியிலும் பெற்று பயனடைகின்றனர் என்பதே அதன் சுருக்கும்.

நாம் அதுபற்றி இங்குப் பேசப்போவதில்லை.  நமது மலேசிய நாட்டில் இந்த நோன்பு மாதத்தில் எந்த அளவுக்கு நம் கண் முன்னே நிகழும் வீணடிப்புக்களைப் பற்றி - அதுவும் உணவுகள் வீணடிக்கப்படுவதை -   நாம் புரிந்து கொள்ளுவோம்.

 இதை நாம் மட்டும் சொல்லவில்லை. அரசாங்கமே சொல்லத்தான் செய்கிறது. இதனை எப்படி தவிர்ப்பது என்பதைத்  தான் நாம் மாற்றி  யோசிக்க வேண்டியுள்ளது!

ரமலான் மாதத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும்  சுமார் 9,000 டன் உணவுகள் குப்பைகளுக்குப் போவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அப்படி என்றால் ரமலான் மாதத்தில் மட்டும் சுமார் 2,70,000 டன் எடையுள்ள உணவுகள் தூக்கி வீசப்படுகின்றன.

நாம் தினசரி குப்பைகளுக்குப் போடும் உணவுகள் 15,000 டன் என்றால் அதில் சாப்பிடும் அளவுக்குத் தரமான உணவுகள் 3,000 டன் என்று (SWCorp) ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

ஆனால் இந்த ரமலான் மாதத்தில் வீணடிக்கப்படும் உணவுகள் பலவற்றை பல  சிறுவர் இல்லங்களுக்கும், ஆஸ்ரமங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன என்பது ஒரளவு திருப்தி அளிக்கும் செய்தி. இந்த நல்ல காரியங்களைச் சில அரசு சாரா இயக்கத்தினர் செய்கின்றனர்.. ஆனால் இந்த உணவுகள் எல்லாம் பெரும்பாலும் ஹோட்டல்கள், உணவகங்கள், ரெஸ்டாடாரண்டுகளிலிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன. இங்கு ஒவ்வொரு குடும்பங்களிலிருந்தும் குப்பைக் கூடைகளுக்கு வழி அனுப்பப்படுகின்ற உணவுகள் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட வில்லை!  இவைகள் எல்லாவற்றையும் மிஞ்சி விடும்! குடும்பங்களில் தானே அதிக வீணடிப்புக்கள்! நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும்; கண்களிலே தானகவே நீர் ததும்பும்!

நாம் கேட்டுக்கொள்ளுவதெல்லாம் ஒன்று தான். புனித மாதத்தில் உலகில் வறுமையில் வாடும் மனிதர்களை நினைத்துக் கொள்ளுங்கள். எத்தனையோ இஸ்லாமிய நாடுகள் பசியால், பட்டினியால் வாடுகின்றன. நாம் கொடுத்து வைத்தவர்கள்! கொடுத்து வைக்காதவர்கள் உலகெங்கிலும் பரந்து விரிந்து கிடக்கின்றனர்.

நோன்பு நோற்பது புனிதம்; நோன்பு துறப்பதும்  புனிதம் தான்!


கேள்வி - பதில் (17)


கேள்வி

தமிழகத்தில் சமஸ்கிருதத்தைத் திணிக்க நினைத்தால் தமிழர்கள் ஒவ்வொருவரும் சவுக்கை எடுத்து கிளர்ந்து எழ வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி தமிழர்களை உசுப்பிவிடுகிறரே, நியாயமா?

பதில்

நியாயமா! அநியாயமா! என்று சொல்லுகின்ற நிலைமையில் நாம் இல்லை! அவர் தமிழர்களை மட்டும் குறிவைக்கிறார். ஏன் திராவிடர்களுக்கு அவர் பாதுகாப்புக் கொடுக்கிறார் என்பதும் நமக்குப் புரியவில்லை!

திராவிடக் கட்சியான தி.மு.க.  தமிழ் நாட்டில் அரியணை ஏறிய போது இருமொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதாக அறிஞர் அண்ணா அறிவித்தார். அது தமிழும் ஆங்கிலமும். அவருக்குப் பின்னர் வந்த கருணாநிதி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா  கூட்டணி ஐம்பது ஆண்டு காலம் தமிழகத்தைத் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்தனர்;  புரிகின்றனர்.

இந்தக் கூட்டணியினர்  தமிழை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டனர். ஆங்கிலத்தை அரியணை ஏற வைத்துவிட்டனர்!

தமிழின்  புறக்கணிப்பிற்கு  முதன்மையானவர் கருணாநிதி தான். அவரையே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பின்பற்றினர். தமிழ் நாட்டின் அநேக சீரழிவுகளுக்குக் கருணாநிதியே  காரணம்.

தமிழரின் பாரம்பரியம், தமிழரின் கலாச்சாரம் அனைத்தையும் திட்டம் போட்டு கவிழ்த்தவர் கருணாநிதி. இப்போது கூட அவர் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசுவதில்லை. அவர் அது பற்றி பேசுவதில்லை என்றால் தமிழர்களை அவர் மதிக்கவில்லை என்பது தான் பொருள்?

கருணாநிதி சொன்னவைகளுக்கெல்லாம் தலையை ஆட்டினான் தமிழன். அதற்குத் தண்டனையாக இன்று தனது மொழியையே தனது தாய் மண்ணில் இழந்து நிற்கிறான் தமிழன்.

அவர் சொன்னவைகளைப் புறக்கணித்திருந்தால் ஒருவேளை நல்லது நடந்திருக்கலாம்!

இப்போது தமிழன் ஜெயலலிதாவிடம் கையேந்தும் நிலைமை!

Wednesday 15 June 2016

இந்துக்கள் அழுக்கானவர்களா?


ஆமாம்! அப்படித்தான் சொல்கிறது மலேசியத் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் தனது பாடத்திட்டம் ஒன்றில்!

எப்போதும் இந்துக்களையே குறிவைத்துச் சுடும் உயர்கல்விக் கூடங்கள் இம்முறை சீக்கிய மதத்தினரையும் சேர்த்துக் கொண்டது தான் வில்லங்கமாகி விட்டது!  இந்துக்களைச் சமாதானப்படுத்தி விடலாம்; ஒரு வருத்தம்  சொன்னால் போதும். பிரச்சனை அடங்கிவிடும்! அதற்கு மேல் கேட்க ஆளில்லை!

"எங்களை எப்படி அழுக்கானவர்கள் என்று சொல்லலாம்" என்று சீக்கியர்கள் பொங்கி எழுந்து விட்டனர்!

இப்போது இதுபற்றி  பலவிதமான பதில்கள் அரசு தரப்பிடமிருந்து.  உயர்கல்வி அமைச்சு இதனை அங்கீகரிக்கவில்லை என்பதாக ஒரு விளக்கம்! பல்கலைக்கழக   துணை வேந்தர் இது பற்றி அறிந்திருக்கவில்லை என்பதாக ஒரு செய்தி! இனிமேல் தான் துணை வேந்தர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது! தனது ஆளுகையின் கீழ் இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை அறியாத ஒரு துணைவேந்தர் அவர்!

நேர்ந்தத்  தவறுகளுக்காக துணை வேந்தர் மன்னிப்புக் கேட்டுவிட்டதாக உயர்க்கல்வி அமைச்சர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே தேசிய சீக்கிய இயக்கம்  "இந்துக்களும் சீக்கியர்களும் அழுக்கானவர்கள்" என்று கண்டுபிடித்த அந்தக் 'கொலம்பஸ்' சை பணிநீக்கம் செய்ய வேணடும் என்று  கொடி பிடித்திருக்கின்றனர்! அதுவே நமது நிலையுமாகும்!

மன்னிப்பு என்பதை ஒரு சடங்காக இல்லாமல் எல்லாத் தமிழ் நாளிதழ்களிலும் ஒரு பக்க விளம்பரமாக வெளியிட வேண்டும். தொடர்ந்து சமயங்களை இழிவு படுத்துவதும் பிறகு மன்னிப்பு என்பதும் ஏதோ ஒரு விளையாட்டாக ஆகிவிட்டதாகவே தோன்றுகிறது!

சமயத்தைப்பற்றி எழுதுபவர்கள் அந்த அந்த சமயங்களைப் பற்றி படித்து, அறிந்து, புரிந்து எழுத வேண்டும். ஞானசூனியங்கள் எல்லாம் சமயங்களைப் பற்றி எழுதுவது என்பது தங்களுக்குகுத் தானே சூனியம் வைத்துக் கொள்ளுவதற்கு ஒப்பாகும்!

போலீஸ் புகார் என்பது வழக்கமான ஒன்று. எல்லாம்  கண்துடைப்பு வேலை! இதுவரை கொடுக்கப்பட்ட புகார்கள் எந்தப் பலனும் அளிக்கவில்லை! இனிமேலும் அளிக்கப்போபோவதில்லை!

நமது குரல் "பணிநீக்கம்" என்பதாகவே ஒலிக்கட்டும்! குரல் ஒங்கி ஒலிக்கட்டும்!

Tuesday 14 June 2016

அடாடா! தமிழரா நீங்கள்?


நமது நாட்டில் ஒருவரை - எந்த இனத்தவர் - என்று அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம் தான்!

ஒருவரைப் பார்த்து இவர் சீனரா, இந்தியரா, மலாய்க்காரரா அல்லது வெள்ளைக்காரரா என்பதை உடனடியாகத் தீர்மானிக்க முடியவில்லை! அந்த அளவுக்கு நம்மிடையே 'கலப்பு'  இனம் மிகந்துவிட்டதோ! அப்படியும் சொல்ல முடியவில்லை! ஒரு வேளை நமது நாட்டின் பருவ  நிலை கூட காரணமாக  இருக்கலாம்!

என்னைப் பார்த்தால் இப்போது உள்ள இளந்தலை முறையினர் மலாய் மொழியில் பேசுகின்றனர். தாடி வைப்பது மலாய்க்காரர் மட்டும் தான் என்னும் நினைப்பு அவர்களுக்கு!

ஒரு டாக்டர் நண்பரைத் தெரியும். முதன் முதலில் நான் அவரைப் பார்த்தபோது என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை! சீனரா, இந்தியரா, மலாய்க்காரரா  என்று ஒன்றும் புரியவில்லை! ஆங்கிலப் பத்திரிக்கையை வாங்குவார், போவார்! பேசவதில்லை! ஒரு நாள் தீடீரென "என்னப்பா,  பெட்ரோல் விலையை ஏத்திட்டானுங்க!"  என்று சொன்னதும் தான் தெரியும் அவர் தமிழர் என்று! கொஞ்சம் நெருக்கம் வந்ததும் அவர் நாமக்கல்காரர் என்று சொன்னார்! அவர் தாயார் ஒரு சீனப்பெண்மனி. அவ்வளவு தான் விஷயம்!

ஒரு முறை ஒரு "Mr.Menon" என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.நானும் சரி என்றேன். ஆனால் வந்து இறங்கியவரோ ஒரு சீனர்! என்னப்பா இது?    "எங்கப்பா மாதவ மேனன்! நான் மகாதேவ மேனன்! அம்மா சீனர்! நம்ம ஊருல இதெல்லாம் சகஜம் தானே!"  ஆமாம்!  அது உண்மை தான்!

எல்லாம் சரிதான். யார், எவர் என்று அடையாளம் காண்பதில் தானே சிக்கல்! தீடிரென ஒரு நாள் ஞானோதயம் ஏற்பட்டது!  அடடா! தமிழர்களை அடையாளம் காண்பதில் ஒரு சிக்கலும் இல்லை! வலது கையில், கோவிலில்  மந்தரித்தக்  கயிறு கட்டியிருப்பாளர்களே! அது தான் அடையாளம்!

இப்போது அந்த அடையாளத்தைத் தான் நான் பார்க்கிறேன். கயிறு கட்டி இருந்தால் அவர்களிடம் தைரியமாக தமிழில் பேசுகிறேன். இல்லாவிட்டால்? மலாய் தான் உத்தமம்!

அப்போதுங்கூட சில சமயங்களில் நமது புலமைக்கு அப்பாற்பட்ட மனிதர்களும்  இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்களே பேசினால் தான் உண்டு!  அவன் பங்களாவா! நேப்பாளியா!.வியட்நாமியனா!

பல இனங்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் இது போன்ற குழப்பங்கள் ஏற்படுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை! இப்போது வெளி நாட்டினரும் சேர்ந்து கொண்டதால் குழப்பமோ குழப்பம்!

அடடா! தமிழர் தானே நீங்கள்?


Saturday 11 June 2016

ஹூடுட் சட்டம் தேவை தானா?



ஹூடுட் சட்டம் இந்நாட்டிற்குத் தேவை என்பதாக இஸ்லாமிய கட்சியான பாஸ் ஒரு கட்டாயச் சூழலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியோடு தாங்களும் ஒத்துப்போவதாக ஆளுங்கட்சியான அம்னோவும் தலையாட்டிக் கொண்டிருக்கிறது!

ஆளுங்கட்சியில் அம்னோவே மிகப்பெரிய கட்சியாக விளங்குகிறது. அது மலாய்க்காரர்களைக் கொண்ட கட்சி. அத்தோடு ஆளுங்கூட்டணியில் சீனர்களும் (மலேசிய சீனர் சங்கம்) இந்தியர்களும் (மலேசிய இந்தியர் காங்கிரஸ்) கட்சிகளும் மற்றும் சபா, சரவாக்கிலுள்ள பிற கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன.

பாஸ் என்பது முற்றிலுமாக  மலாய்க்காரர்கள் கட்சி. அந்தக் கட்சியோடு .ஆளுங்கட்சியான அம்னோ சேரும் போது அது மிகப்பெரிய மலாய்க்காரர்களைக் கொண்ட கட்சியாக விளங்கும். நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியாக அது உருவாகும்!

இஸ்லாம், இஸ்லாமிய நாடு என்று பேசுபவர்கள் அந்த மலாய்க்கூட்டணியையே விரும்புகின்றனர். அதே சமயத்தில் ஆளுங்கூட்டணியில் உள்ள சீனர், இந்தியர் ஹூடுட் சட்டத்தையும் விரும்பவில்லை; அந்த இரு கட்சிகளின் கூட்டணியையும் விரும்பவில்லை!

எந்த ஒரு முடிவும் வராத நிலையில் அம்னோ தரப்பில் உள்ள சிலர் 'சீனர்கள்,  இந்தியர்களின் ஆதரவு  எங்களுக்குத் தேவை இல்லை" என்று இப்போதே பேசவும்  ஆரம்பித்துவிட்டனர்! அந்த அளவுக்கு ஹூடுட் சட்டத்தின் மேல் தீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டனர்.

அந்த இரு கட்சிகளும் ஹூடுட் சட்டத்தை வைத்து இணையலாம் என்று பேசினாலும் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அதன் பழைய வரலாறு அப்படி!

ஆனாலும் ஹூடுட் சட்டத்தின் மேல் ஏன் இந்த அளவு தீவிரம் காட்ட வேண்டும்? இன்று பல இஸ்லாமிய நாடுகளில் ஹூடுட் சட்டம் இருக்கிறது. அந்த நாடுகளில் எந்த அளவு குற்றச்செயல்கள் குறைந்திருக்கின்றன? அப்படி ஒன்றும் குறைந்ததாகத் தெரியவில்லை!

எந்த ஒரு சட்டம் வந்தாலும் - அது இஸ்லாமிய சட்டமோ அல்லது இஸ்லாமிய அல்லாத சட்டமோ -  பதவியில் உள்ளவர்களோ, அரசியல்வாதிகளோ, பணக்காரர்களோ இந்தச் சட்டங்களினால் பாதிக்கப்படுவதில்லை! பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளே! சதாம் ஹுசேன் செய்த தவறுகள் நிறைய. ஆனால் ஹூடுட் சட்டத்தால் என்ன செய்ய முடிந்தது?

இன்று பல ஆப்பிரிக்க இஸ்லாமிய நாடுகளில் பட்டினி, பஞ்சம் என்பது மிகச்சாதாரண விஷயம். அங்கும் பல நாடுகளில் ஹூடுட் சட்டம் உள்ளது. ஆனால் இந்த நாடுகளில் ஏன் இந்தப் பட்டினி,  பஞ்சம்?  எல்லாம் நேர்மையற்ற ஆளும் வர்க்கத்தினர், அதிகாரிகள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் என்று அடுக்கிக்கொண்டு போகலாம். இந்த ஹூடுட் சட்டத்தால் என்ன செய்ய முடிந்தது?

நமது நாட்டில் ஷரியா சட்டம் வந்த பிறகு என்ன நடந்து கொண்Mடிருக்கிறது? இஸ்லாம் பெயரைச் சொல்லி இந்து சமயத்தினரே  அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இஸ்லாமிய சட்டம் சரியானதாக இருக்கலாம். ஆனால் நடைமுறை என்று வரும் போது பல சிக்கல்கள் இருக்கின்றன. நடைமுறைபடுத்துவது பல சிக்கல்களைக் கொண்டுவரும்.

இந்நாடு இஸ்லாமிய நாடு என்று சொல்லப்பட்டாலும் இது பல மதத்தினர் வாழ்கின்ற ஒரு நாடு. இங்கு ஹூடுட் சட்டத்தை வலிந்து திணிப்பது என்பது தேவையற்ற ஒன்றே! யாருக்கும் பயன் இல்லாத ஒரு சட்டம்!

தேவை இல்லை என்பது எனது கருத்து!



Thursday 9 June 2016

படிக்கும் பழக்கம் தொடர வேண்டும்!


வாழ்க்கையில் நாம் எதனையும் நிறுத்தலாம்;  ஆனால் படிக்கின்ற பழக்கத்தை மட்டும் நாம் நிறுத்தவே கூடாது!

பள்ளியோடு புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை பலர் நிறுத்தி விடுகின்றனர். காரணம் அந்த அளவுக்குப் பள்ளிப் புத்தகங்கள்  மேல் ஒரு வெறுப்பு!  பதிமூன்று, பதினான்கு ஆண்டுகள் புத்தகங்களைப் பார்த்துப் பார்த்து ஒரு சலிப்பு ஏற்பட்டு விட்டது!

பள்ளிப் புத்தகங்கள் என்பது பள்ளியில் தேர்ச்சி பெற. ஆனால் வெளியுலக வாழ்க்கையில்  தேர்ச்சி பெற ஏகப்பட்ட புத்தகங்கள் உள்ளன. இலக்கியங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று பல கோணங்களில், பல புத்தகங்கள். 

இந்தப் புத்தகங்கள் எல்லாம் வாழ்க்கையின் வழிகாட்டிகள். ஆம்! புத்தகங்கள் வழிகாட்டும்.  புத்தகங்கள் மூலம் மற்றவர்களின் அனுபவங்கள் நமக்கு வழி காட்டுகின்றன.

நாம் செய்யும் தவறுகளைப் புத்தகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அனைத்தும் வாழ்க்கை அனுபவங்கள்.

இந்த அனுபவங்களை நாம் யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது. கற்றுக்கொடுப்பவர்கள் யாரும் இல்லை. காரணம் நாம் தவறுகளோடு தான் வாழ்கிறோம்! அனைவர்களுமே தவறு செய்பவர்களாகத்தான் இருக்கிறோம்!

நாம் கம்பராமாயணத்தையும் படிக்கலாம்; கம்பார் கனிமொழி எழுதிய கவிதைகளையும் படிக்கலாம்! பாரதியாரையும் படிக்கலாம், புண்ணியவானையும் படிக்கலாம்! புஜாங் பள்ளத்தாக்கைப் பற்றியும் படிக்கலாம்; அந்தமான் தீவுகளைப் பற்றியும் படிக்கலாம்!

எதனைப் படித்தாலும் அத்தனையும் மற்றவர்களின்  அனுபவங்கள் தான்! நீங்கள் தேடுவது ஏதோ ஒன்று அங்கு இருக்கும். நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒன்று தீடீரென உங்கள் கண்களுக்குத் தோன்றும்! உங்கள் கேள்விகளுக்கு அங்கு ஒரு பதில் இருக்கும்!

அது தான் படிப்பதினால் நாம் அடையும் பயன்! தனிமனிதனாக வாழ்ந்து விடலாம்! ஆனால் புத்தகங்கள் இல்லாமல் நாம் வாழ்ந்துவிட முடியாது!  கூடவும் கூடாது!

புத்தகங்களோடு வாழ்வது என்பது அறிஞர் பெருமக்களோடு வாழ்வது, டாக்டர் மு.வ. அவர்கள் பெரும் தமிழறிஞர். வாழ்க்கைச் சிக்கல்களை அவர் எழுதிய புத்தகங்கள் நமக்கு நல்லதொரு  பாடம் தரும். அவர் எழுதிய புத்தகங்கள் நம்மோடு இருப்பது என்பது ஒரு அறிஞர் நம்மோடு இருக்கிறார் என்பதற்குச் சமம். வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் என்பதற்குச் சமம்.

நமது வாழ்க்கையை நாம் சிக்கலின்றி கொண்டு செல்ல படிக்கும் பழக்கத்தை எந்தக் காலத்திலும் நிறுத்தி விடாதீர்கள். தொடருங்கள்; படிப்பதைத் தொடருங்கள்! நல்ல பழக்கம்!

Saturday 4 June 2016

வெற்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்!


வெற்றி பெற வேண்டுமென நினைப்பவர்கள் வெற்றி பனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

'நான் வெற்றி பெற வேண்டும்' என நினைத்துக் கொண்டே தோல்வி மனப்பான்மையை அனுதினமும் அசைப் போட்டுக் கொண்டிருந்தால் நாம் எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது! காரணம் நம் உள்ளம் முழுக்க தோல்வியுறுவோம் என்னும் நினைப்பு ஆனாலும் இடையிடையே வெற்றி பெற வேண்டும் என்னும் உந்துதல் என்று நிலையில் நமது எண்ணங்களை நாம் வளர்த்துக் கொண்டிருந்தால்  நாம்  எப்படி வெற்றி பெற முடியும்?

நமது எண்ணங்கள் 24 மணி நேரமும் வெற்றி வெற்றி என்பதாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய வேறு எண்ணங்களை நமது மனதின் உள்ளே நுழையவிடக் கூடாது. இரண்டில் ஒன்று தான்.  வெற்றி அல்லது தோல்வி! இரண்டையும் மனதில் போட்டுத் தாலாட்டிக் கொண்டிருக்கக் கூடாது! இப்போது நாம் என்ன நிலையில் இருந்தாலும் - தோல்வியின் விளிம்பில் இருந்தாலும் - நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்னும் ஆவேசம் மனதில் உழன்றுக்கொண்டே இருக்க வேண்டும்.  வெற்றிக்கான முயற்சிகளில் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும். வழிகளை மாற்றலாம் ஆனால் 'வெற்றி மட்டுமே' என்னும் நமது நோக்கத்தை மாற்றிக்கொள்ளக் கூடாது!

தோல்விகள் அனைத்தும் தற்காலிகத்  தடைக்கற்கள்  தான்!தோல்விகளைப் பற்றிப் பேசும் போது நமக்கு உடனடியாக ஞாபகத்திற்கு வருபவர்  முன்னால் அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன். எத்தனை எத்தனை தோல்விகள்! ஆனால் அத்தனை தோல்விகளையும் அனுபவித்த பின்னர் தான் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார்! தோல்விகள் அவரை மண்டியிட வைக்க முடியவில்லை! வெற்றியை நோக்கியே அவர் பயணித்துக் கொண்டிருந்தார்! கடைசியில் வெற்றியும் பெற்றார்!

நேற்று காலமான குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வெற்றியின் ரகசியம் என்ன? அவர் கோதாவில் இறங்கி விட்டால் தனது எதிரியைப் பார்த்து "வாடா வா! துணிவு இருந்தால் வா! உன்னை நொறுக்கித் தள்ளுகிறேன் வா!" என்று தனது வெற்றியை முன்னமையே அவர் தீர்மானித்து விடுகிறார்! எதிரியைப் பலவீனப் படுத்தி தனது வெற்றியை முன்னைமையே உறுதிப்படுத்துகிறார்!

வெற்றி பெற வேண்டும் என்னும்  எண்ணம் உள்ளவர்கள் 'நான் வெற்றி பெறுவேன்' என்று மனதிலே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர் கொள்ளுகின்ற அத்தனை இடையூறுகளையும் பலவீனப்படுத்த வேண்டும்! வெற்றியை மட்டுமே நோக்கி பயணிக்க வேண்டும்.

தோல்விகளை மனதிலிருந்து அகற்றிவிட்டு வெற்றியை மட்டும் மனதிலே நிரப்புபவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்!

எப்போதும், எல்லா நிலையிலும் வெற்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!




Friday 3 June 2016

கேள்வி - பதில்;(16)


கேள்வி

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் 60-ம் ஆண்டு மணிவிழாவை விமர்சையாகக் கொண்டாடப் போகின்றார்களாமே!

பதில்

ஆமாம்! மணிமன்றத்துக்கு நமது வாழ்த்துக்கள். 60 ஆண்டுகள் ஒர் இயக்கம் தொடர்ந்து நமது நாட்டில் தனது சேவைகளைச் செய்ய முடிகின்றது என்றால் அது சாதாராண விஷயம் அல்ல.

கலை, இலக்கியம், பண்பாடு, மொழி, இனம் சார்ந்த ஒர் இயக்கம் தொடர்ந்து தனது நோக்கங்களை முன் நிறுத்தி வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு நமது வாழ்த்துக்கள்.

ஆனாலும் மணிமன்றம் சமீபகாலமாக எந்த ஒரு ஆரவாரமுமில்லாமல் அமைதியாக, அமிழ்ந்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் உண்மை! இந்த  மணிவிழா தமிழ் இளைஞர் மணிமன்றத்திற்கு ஒர் உந்துசக்தியாகத் திகழ்ந்து,  வருகின்ற ஆண்டுகளில் தனது கலை, இலக்கிய, பண்பாட்டு, மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே நமது ஆவல். குறிப்பாக மொழி சார்ந்த பிரச்சனைகளில் 'பட்டும், படாமலும்' இருப்பது ஏற்புடையதல்ல!

ஒரு காலக் கட்டத்தில் பினாங்கு தமிழ் இளைஞர் மணிமன்றம் "முல்லை" என்னும் கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தியதை நான் அறிவேன். நானும் அதன் வாசகனாக இருந்திருக்கிறேன். அங்கிருந்தே நிறைய எழுத்தாளர்கள் உருவானார்கள் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனாலும் அது போன்ற முயற்சிகள் இப்போது உள்ளனவா என்பது தெரியவில்லை. இலக்கிய முயற்சிகள் தொடர  வேண்டும்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இன்னும் ஆக்ககரமாக மணிமன்றம் செயல்பட வேண்டும் என்பதே நமது ஆசை.

மீண்டும் மணிவிழா வாழ்த்துக்கள்!.

Thursday 2 June 2016

பொருளாதார பலமே தலை நிமிர வைக்கும்!


நாம் தனிப்பட்ட முறையில் எவ்வளவோ பலசாலிகளாக இருக்கலாம்; திறமைசாலிகளாக இருக்கலாம். புதியப்புதிய ஆராய்ச்சிகளைச் செய்யலாம்; புதியப்புதிய கண்டுபிடிப்புக்களைக் கண்டு பிடிக்கலாம்.

ஆனால் பணத்திற்கு முன் எதுவும் எடுபடாது! பொருளாதார உயர்வு மட்டும் தான் ஒருவனை உயர்த்திக் காட்டும். பொருளாதார பலமே இந்தச் சமுதாயத்தை உயர்த்திக் காட்டும்!

பணம் இல்லாத சமுதாயம் எப்படியெல்லாம் மிதிபடும் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நம்மிடம் அரசியல் பலமும் இல்லை; பண பலமும் இல்லை.

அரசியல் பலம் இருந்தால்  அதிகாரத்தைக் காட்ட முடியும், மலாய்க்காரர்களைப் போல! ஆனால் பண பலம்,  அந்த அதிகாரத்தையும் கூட வாங்கிவிடும், சீனர்களைப் போல!

அரசியல் பலம் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் பண பலம் அதனையும் மீறி செயல்பட முடியும். பொருளாதாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களின் குரல் ஒங்கி ஒலிக்கும். பொருளாதாரத்தில் பலவீனமான சமுதாயமான நமது குரல், யாருடைய காதுக்கும் எட்டுவதில்லை. தமிழ் ஊடகங்களின் வரும் நமது அவலச் செய்திகளை  அரசாங்கம் கண்டு கொள்வதில்லை.

பொருளாதார பலம் இல்லாத ஒரே காரணத்தினால் நாம் ஒரு தீண்டத்தகாத சமுதாயமாகப் பார்க்கப் படுகிறோம். எல்லாவற்றிலும் ஒதுக்கப்படுகிறோம்.

நமது பொருளாதாரத்தை நாமே உயர்த்திக்கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும். அரசாங்கம் கொடுக்கின்ற வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது இந்திய வர்த்தக சங்கங்கள் கொடுக்கின்ற பயிற்சிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

நாம் குறைகளை மட்டுமே சுட்டிக்கொண்டிருந்தால் பணம் உள்ளவனைப்பார்த்து பொறாமை தான் பட வேண்டி வரும்! நாம் பொறாமை படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை! மற்றவர்கள் துணிந்து செய்வதை நாம் பார்த்து ரசிக்க முடிகிறதே தவிர, நாமும் ஏன் அவர்களைப் போல துணிந்து செயல்படக் கூடாது என்பதை யோசிப்பதில்லை!

பொருளாதார பலமே வெற்றியின் ரகசியம்!  பொருளாதார பலமே நம்மை தலைநிமிர வைக்கும்!