Friday 29 April 2016

புதிய பட்டதாரிகளா? கொஞ்சம் கவனியுங்கள்!

கல்லூரிகளிலிருந்து புதிய கனவுகளோடு வெளியாகும் பட்டதாரிகளே! இதையும் கொஞ்சம் கவனியுங்கள்.

என்ன தான் உங்கள் படிப்பு அனைத்தும் தேசிய மொழியில் இருந்தாலும் நீங்கள் வேலைக்கு மனு செய்யும் போது ஆங்கிலத்தில் தான் மனு செய்ய வேண்டும் என்பது நீங்கள் கல்லூரிகளிலிருந்து  வெளியாகும் போதே உங்களுக்கு "கிளிப்பிள்ளை" பாடம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்!

அது தவறில்லை தான்! ஆனாலும் நீங்களும் அது சரிதானா அல்லது ஏதாவது மாறுதல்கள் செய்ய வேண்டுமா என்பதைக் கொஞ்சம் அலசி ஆராய வேண்டும். சில பேர் கணினியில் புகுந்து விளயாடுகின்றனர்.  எல்லாமே சரிதான்.

நமக்கும் கொஞ்சம் பொது அறிவு வேண்டும். நாம் என்ன வேலைக்கு மனு செய்கிறோம்; நாம் சரியாகத்தான் செய்கிறோமா அல்லது புரிந்து கொண்டு தான் செய்கிறோமா என்பதைச் சிந்தித்துப் பார்த்து நாம் செயல்பட வேண்டும்.

சிலர் மனு செய்வதைப் பார்க்கும் போது நமக்கும் பாவமாகத் தான் இருக்கிறது!

இதோ நமது பட்டதாரி மாணவர்களின் சில எடுத்துக்காட்டுக்கள்:

                      NATIONALITY;             BLUE
                      NATIONALITY:             INDIA
                      POSITION:                    APPLICATION FOR EXPECTED SALARY


இது போன்ற கோமாளித் தனங்கள்  நிறையவே உண்டு!


பட்டதாரிகளே!  உங்கள் ஆங்கிலத் திறன் பற்றி நாங்கள் அறிவோம்.பார்க்கப் போனால் உங்கள் ஆங்கில விரிவுரையாளர்களை விட உங்களுக்கு இன்னும் அதிக ஆங்கில அறிவு உண்டு! அவர்கள் உங்களுக்கு மலாய் மொழியில் தான் ஆங்கிலம் போதிக்கின்றனர்! மலாய் மொழியில் தான் பேசுகின்றனர்! நீங்கள் அவர்களை விட பல மடங்குகள் மேல்!

ஆனால் அவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள். அவர்களுக்கு நிரந்திர வேலை உண்டு. அவர்களுடைய ஆங்கிலத்திறனைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை! கல்லுரிகளும் கவலைப்படப் போவதில்லை! அது அவர்களுக்கு அரசியல்! நீங்கள் இப்போது தான் வேலை தேடுகிறீர்கள். ஆங்கிலப் பத்திரிக்கைகளைப் படித்து உங்களது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அரசாங்க வேலை தான் உங்கள் இலக்கு என்றால் இருக்கின்ற ஆங்கிலமே உங்களுக்குப் போதும்! ஆனால் தனியார் துறை என்றால்  உங்களிடம் இன்னும் அதிகமாகவே ஆங்கிலத் திறனை எதிர்பார்க்கிறது.

எத்தனையோ விஜய் படங்களைப் பார்க்கிறோம்.எத்தனையோ கமலஹாசன் படங்களைப் பார்க்கிறோம். பல மணி நேரங்களை எப்படி எப்படியோ வீணடிக்கிறோம். நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு முக்கிய மொழியைக் கற்க சில மணித்துளிகளை ஒதுக்கி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்! குறைந்த பட்சம் எப்படி வேலைக்கு மனு செய்வது என்பதையாவது கற்று, தெளிந்து மனு செய்யுங்கள்.

நீங்கள் வெர்றி பெற வாழ்த்துகள்!


                   




         


Thursday 28 April 2016

பெருசா..! பெருசா..!

டொனால்ட் ட்ரம்ப் ...உருவத்தில் மட்டும் பெரியவர் அல்ல. உயரத்தில் மட்டும் பெரியவர்  அல்ல.  எல்லா...எல்லாவற்றிலும்  உயர்ந்த  மனிதர்!

சின்ன சின்ன சங்கதிகளை எல்லாம் அவர் யோசித்துப் பார்ப்பதில்லை. எதைச் செய்தாலும் அது பெரியதாக இருக்க வேண்டும். பெரிசா...பெரிசா.. சிந்திக்கும் மனப்போக்குடையவர்.

ஆமாம்! உங்களுக்குப் பணம் தானே வேண்டும்?  அப்புறம் ஏன் அதனைப் பிச்சைக்காரத்தனமாக யோசிக்கிறீர்கள்? பெரியதாகவே யோசியுங்கள். பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று யோசியுங்கள்.

ஆமாம்! டொனால்ட்  அப்படியே சிந்தித்து சிந்தித்துப்  பழக்கப்பட்டவர்.  நம்மையும் அப்படியே சிந்திக்கும்படி தூண்டி விடுகிறார்!

டொனால்ட் அமரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபர்.  ஹொட்டல்கள், சூதாட்ட மையங்கள், தொலைக்காட்சி தயாரிப்பு, சொத்துக்கள் விற்பனையாளர், எழுத்தாளர்  என்று  பன்முகம் கொண்ட மனிதர். கடைசியாக அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அமெரிக்க  ஜனாதிபதியாக வருவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டொனால்டின் தந்தையாரின் தொழில்  தச்சுத் தொழில். பின்னர்  மலிவான வீடுகளைக்கட்டி அவைகளை நடுத்தர குடும்பங்களுக்கு விற்றும், வாடகைக்கு விட்டும் வந்தவர். ஆரம்பக் காலத்தில் டொனால்டும் அவருடன் சேர்ந்து தனது திறமைகளை வளர்த்துக் கொண்டவர். பின்னர், தனக்கு ஒரு பாதை, தனக்கு ஒரு வழி என்று பெரியதாக யோசிக்க ஆரம்பித்தார்.

அவர் தந்தையார் இறந்த போது அவரின் சொத்து மதிப்பு  நானூறு மில்லியன் என்று மதிப்பிட்டாலும் அது மற்ற வாரிசுகளுக்கும் சேர்த்துத் தான். ஆனாலும் இப்போது டொனால்டின்  சொத்துக்கள் அனைத்தும் அவரே சம்பாதித்தவை.

அதன் பின்னர் தான் வானளாவிய கட்டடங்கள், பிரமாண்ட .. பிராமாண்டமான பல கோடிகோடிகளைத் தாண்டும் திட்டங்கள் என்று அவர் செய்யாதவை  ஒன்றுமில்லை. இப்படிப் பிரமாண்டங்களுக்கு நடுவே அவருக்குப் பலமான அடியும் விழுந்திருக்கிறது! அனைத்தையும் இழந்து, கையைப் பிசைந்து கொண்டு நிற்கையில் ஒரு விருந்துக்குப் போக வேண்டிய கட்டாயம். அங்கு அவர் ஒரு வங்கியாளரைச் சந்திக்க வேண்டி நேர்ந்தது. அந்த வங்கியாளர் டொனால்டுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி அவர் மீண்டும் தொழிலுக்குத் திரும்ப ஊக்கமூட்டினார். அதன் பின்னர் அவருக்கு அனைத்தும் வெற்றியே!

அந்தத் தோல்விக்குப் பின்னர் டொனால்டு நமக்குக் கொடுக்கும் அறிவுரை என்ன? "படித்துக் கொண்டே இருங்கள். தொழில் சம்பந்தமான புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு எங்காவது ஒரு பொறி தட்டும். அது போதும் மீண்டும் உங்களை எழுச்சிபெற செய்ய!"

பெருசோ! சிறுசோ! தோல்வி என்பது டொனால்ட் ட்ரம்ப்புக்கும் உண்டு! நமக்கும் உண்டு! மனம் தளராமல்,  வெற்றி பெறுவது தான் நமது நாட்டமாக இருக்க வேண்டும்!

Monday 25 April 2016

கேள்வி - பதில் (9)



கேள்வி

தமிழகத் தேர்தலில்  முதலமைச்சர்  ஜெயலலிதாவை ஒர் இரும்புப் பெண்மணி என்பது  போன்று வர்ணிக்கிறர்களே!  உண்மை தானோ?


பதில்

உண்மை தான்! அவர் ஒருவர் தான் தமிழகத் தேர்தலில் தனி ஒரு பெண்மணியாக அத்தனை ஆண்களையும் எதிர்த்து வெற்றி கொண்டு வருகிறார் என்பதனைப் பார்க்கும் போது அது உண்மையாகத்தான் தோன்றுகிறது!

அவர் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் ஐந்து ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகளை அவரால் சம்பாதிக்க முடிகிறது! பல்லாயிரம் கோடிகளை ஒருவர் சம்பாதிக்கும் போது அவரை இரும்பு, கரும்பு என்று நாம் சொல்லாவிட்டாலும் அந்தச் துணிச்சல், தைரியும் அனைத்தும் தானாக வந்து விடும்!

கண்ணதாசன் ஒரு பாடல் வரியில் "கையிலே பணம் இருந்தால் கழுதைக் கூட அரசனடி" என்று எழுதியிருப்பார்! நம்மிடம் ஒரு கோடி இருந்தால் நாம் கூட நம்மை இரும்பாகத் தான் நினைத்துக் கொள்ளுவோம்!  பல கோடிகள் சம்பாதிப்பவர் எப்படி இருப்பார்?  ஆணவம், திமிர் அனைத்தும் இருக்கத்தானே செய்யும்! அதனைத்தான் இரும்பு என்கிறோம்! அதுவும் பெண்ணாக இருப்பதால் கொஞ்சம் அதிகப்படியாகவே சொல்லுகிறோம்!

ஆனாலும் நாட்டுக்கு நல்லது செய்திருந்தால் அவரை இரும்புப் பெண்மணி என்று அழைப்பதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. செய்தவைகளோ அத்தனையும் ஊழல்கள்! ஏமாற்று வேலைகள்! அவர் இரும்புப் பெண்மணி அல்ல! ஊழல்களின் இரும்புக் கோட்டை!


ரவி அழகேந்திரன் என்ன பிழை செய்தார்?




"ரயானி" விமான நிறுவனத்தின் நிறுவனரான ரவி அழகேந்திரன் அந்த விமான நிறுவனம் இப்போது சந்தித்துத்துக்  கொண்டிருக்கும் இக்கட்டானச் சூழ்நிலைக்கு என்ன காரணமாக இருக்கக் கூடும்?

பல காரணங்கள்  கூறப்படுகின்றன.  விமானம் பறக்க ஆரம்பித்ததிலிருந்தே பிரச்சனைகளும் கூடவே ஆரம்பித்துவிட்டன. விமானத்தின் கண்ணாடிக் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன.  இங்கிருந்தே ஆரம்பமாகின்றன அந்த விமான நிறுவனத்தின் அனைத்துப் பிரச்சனைகளும்.

அதன் பின்னர் அந்த நிறுவனம் தனது பயணங்களைக் குறித்த நேரத்தில் பயணங்களை மேற்கொள்ள முடியவில்லை என்னும் குற்றச்சாட்டுக்கள்.. பல மணி நேரங்களை இழுத்து அடிப்பதாகவும் பயணிகள் தங்களது பயணங்கள் சுமுகமாக அமையவில்லை என்னும் பயணிகளின் குற்றச்சாட்டுக்கள்.

தீடீரென பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக அடுத்தடுத்து தொடர் குற்றச்சாட்டுகள். Boarding Pass க்கள் கையால் எழுதப்பட்டுக் கொடுக்கப்படுகின்றன என்று இன்னொரு குற்றச்சாட்டு.

ஆக, அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுக்கள்!

இதனிடையே போக்குவரத்து அமைச்சர் விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறைவளிக்கவில்லை என்றால் அதன் சேவைகள் மூன்று மாதத்திற்கு  நிறுத்தி வைக்கப்படும் என விமான நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இப்போது அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்பது ஆகக் கடைசி நிலைமை.

ரவி அழகேந்திரன் விமானப் போக்குவரத்து சம்பந்தமான போதிய அனுபவம் இல்லாதவர் என்பதாலே தான் இவ்வளவு சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டும் உண்டு. இந்தக் குற்றச்சாட்டைப் புறந்தள்ளலாம். ஏர் ஏசியா டோனி ஃபெர்னாண்டஸ் என்ன அனுபவத்தைக் கொண்டிருந்தார்? அவர் வெற்றிகரமாக உலா வருகிறாரே!

ரவி ஒரு வெற்றிகரமான இஸ்லாமிய விமான நிறுவனத்தை நிறுவியிருந்தார். அதனை புருணை இஸ்லாமிய விமானத்தோடு ஒப்பிடும் அளவுக்கு அதன் செயல்பாடுகள் இருந்தன.  உலக அளவில் ரயானி விமான நிறுவனம்  நான்காவது இஸ்லாமிய விமான நிறுவனம் என்னும் பெயர் எடுத்தது. அனைத்தும் ஷரியா சட்டத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டன. விமானத்தில் குடிவகைகள் இல்லை; பன்றி இறைச்சி தவிர்க்கப்பட்டது. விமானப் பணிப்பெண்களின் சீருடைகள் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்தன. விமானம் புறப்படும் போது இஸ்லாமிய வழிபாடுகள் ஓதப்பட்டன.

இத்தனையையும் நேர்த்தியாகச் செய்து ஒரு அதி அற்புதமான இஸ்லாமிய விமான நிறுவனத்தை நிறுவிய இத்தம்பதி யர் -  ரவி அழகேந்திரனும் அவர் மனைவியும் - எங்கே? என்ன பிழை செய்தனர்?

உலக அளவில் கொண்டு செல்லப்படுகின்ற ஒர் இஸ்லாமிய விமான நிறுவனம்,ஒர் இஸ்லாமிய நாடான மலேசியாவின் பெயரை சுமந்து செல்லும் ஒர் இஸ்லாமிய நிறுவனம், இஸ்லாமியர் அல்லாத  ஒர் இந்து மதத்தினரால் நடத்தப்படுகிறது என்றால் அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது தான் பிழை! இது உள்ளுர் அரசியல். கோடிக்கணக்கில் பணம் போட்டவருக்கு இந்த அரசியலைப் புரிந்து கொள்ள முடியவில்லை!

ஆனாலும் கவலைப்பட ஒன்றுமில்லை! இதனையும் ரவி வெற்றி கொள்ளுவார்! இதுவும் கடந்து போகும்!




Saturday 23 April 2016

விமான அபகரிப்பா? இந்தியரின் வேதனை!


"ரயானி ஏர்"  என்னும் விமான நிறுவனம் இன்னும் பெரிய அளவில் மலேசியர்களால் அறியப்படாத ஒரு நிறுவனம்.

அதன் நிறுவனர்கள் (ர)வி அழகேந்திரனும்  அவர் மனைவி கார்த்தி(யா)யி(னி) கோவிந்தன் ஆவர்.

நிறுவனம் ஆரம்பித்து இன்னும் நான்கு மாதங்கள் கூட ஆகாத நிலையில் அதனுடைய பயணங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி.

அந்நிறுவனத்தைப்  பற்றி வருகின்ற  செய்திகள் நம்பத்தக்கதாக இல்லை என்றாலும்  விமான நிறுவனம் என்னவோ மூடுவிழாவை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது.

விமான நிறுவனம் தனது 400க்கு மேற்பட்ட பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை என்னும் குற்றச்சாட்டு அதன் மேல் சுமத்தப்படுகிறது.

கோடிக்கணக்கில் முதலீடு செய்து தொடங்கப்படுகிற ஒரு விமான நிறுவனம் இரண்டு, மூன்று மாதங்களில் தனது பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்பது நம்பக்கூடிய செய்தியாக இல்லை.

இந்த நிறுவனம் ஒர் இந்தியர்க்குச் சொந்தமான நிறுவனம் என்பதால் தான் இப்படி ஒரு நிலை அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கிறது என்பது பொதுவாக முன் வைக்கப்படும்  குற்றச்சாட்டு.

அதன் நிறுவனர் ரவி தனது விமான நிறுவனத்தை அங்குப் பணிபுரியும் பணியாளர்களே அபகரிக்க முயலுவதாகக் குற்றம் சாட்டுகிறார். தனியே ஒரு விமான நிறுவனத்தை நிறுவி அதனை நடத்த அருகதை இல்லாதவர்கள்   குறுக்கு வழியில் தனது நிறுவனத்தில் 51 விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கான திட்டம் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவர்!

ஆனால் சொல்லுப்படுகின்ற குற்றச்சாட்டுக்களோ ரவி  வான் போக்குத்துறையில் அனுபவம் இல்லதவர் என்னும் குற்றச்சாட்டு! இன்னொரு பக்கம் ரயானி விமான நிறுவனத்தின் உரிமம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்னும் பயமுறுத்தல்.

ரவி,  இந்த விமான நிறுபவனத்தை மிக எதிர்பார்ப்புடன், இஸ்லாமிய முறைப்படி பணியாளர்களுக்கான சீருடைகள், விமானம் புறப்படுகையில் இறைவழிபாடு என்று சிறப்பாக வழி நடத்தினார். உலக அளவில் கொண்டு செல்ல வேண்டுமென்று கனவு கொண்டிருந்தார். அது நிறைவேறுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியர்களின் பொருளாதாரம் நசுக்கப்படுகிறதா?

.


Friday 22 April 2016

பாலாபிஷேகமா? தையல் இயந்திரங்களா?


சினிமா சம்பந்தப்பட்ட இரண்டு செய்திகள் நமக்கு நல்ல செய்திகளாகவே படுகின்றன: தேவையானதும் கூட.

பெங்களூருவில் ரஜினியின் படங்கள் வெளியிடப்படுகின்ற நேரத்தில் அவரது பட பதாகைகளுக்கு ரஜினியின் தீவிர ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வது என்பது மிகவும் கேவலமான ஒரு செயல். பாலாபிஷேகம் என்பது கடவுள் சிலைகளுக்குச் செய்வது வேறு. ஒரு மனிதருக்குச் செய்வது என்பது வேறு.ஒரு மனிதரைக் கடவுளுக்கு ஒப்பிடுவது கண்டிக்கத்தக்கது. இது ஒரு மனிதரைக் கேவலப்படுத்துவதற்கு ஒப்பாகும்.

எத்தனையோ வருடங்களாகத் தொடருகின்ற இந்த பாலாபிஷேகத்தை நாம் சொல்லாமலேயே ரஜினி அவரது ரசிகர்களைக் கண்டித்திருக்க வேண்டும். அவர் இதனைக் கண்டு கொள்ளவில்லையா அல்லது அவர் அதனை விரும்புகிறாரா என்று நமக்குப் புரியவில்லை.

இப்படிப் பல லிட்டர் பாலை வீணடிப்பதைத் தவிர்த்து அதே பாலை கொஞ்சம் ஆக்ககரமான வகையில் பயபன்படுத்த ர்ஜினி அவரது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டிருக்கலாம். குறிப்பாக ஏழைகள் பயன்பெறுமாறு செய்யலாம். எத்தனையோ வழிகள் இருக்கின்றன.

இப்போது நீதிமன்றம் ரஜினிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறது. எதிர்காலத்தில் ரஜினி இதனைத் தவிர்க்க வழிவகைகளைத் தேட வேண்டும்.

யாழ்ப்பாண விஜய் ரசிகர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே! அவர்களது தவறுகளை அவர்கள் உணர்ந்து விட்டனர்.

பாலாபிஷேகம் செய்வதைவிட அவர்களது பார்வையை வேறு பக்கம் திருப்பி இருக்கின்றனர். வரவேற்கத்தக்கதே!

ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார்கள். குடும்பப் பெண்களுக்குத் தையல் இயந்திரங்களை வழங்கியிருக்கின்றனர், பராட்டத்தக்க பணிகள்! நல்லதே நடக்கட்டும்!

சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள்  இருக்கலாம். அதுவும் தீவிர ரசிகர்கள் இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால்  அவர்கள் பெயரில் ஏதாவது செய்ய அவரது ரசிகர்கள் விரும்பினால் அது சமுதாயத்திற்குப் பயனுடையவையாக இருக்கட்டும்!

விஜய் ரசிகர்கள் பாராட்டுக்குரியவர்கள்! வாழ்க! வளர்க!


கேள்வி - பதில் (8)



கேள்வி

தமிழகத் தேர்தலில் மது ஒழிப்பு தலையாய பிரச்சனையாகப் பரப்புரையாக்கப் படுகின்றது.. ஆனாலும் மதுவை படி படியாகக் குறைப்போம் என்கின்றனர் ஆளுங்கட்சியினர். ஒழிப்போம் என்கின்றனர் எதிர்கட்சியினர். என்ன தான் நடக்கும்?

பதில்

இரண்டுமே நடக்காது! காரணம் இந்தச் சாரய விற்பனை என்பது யாருடைய அதிகாரத்திலும் இல்லை. திராவிடக் கட்சிகளின் அதிகாரத்தில் உள்ளவை. இந்த வியாபாரத்தில் ஜெயலலிதா - கருணாநிதி மனம் வைத்தாலின்றி எதுவும் நடக்காது.

அவர்கள் மனம் வைக்க மாட்டார்கள். காரணம் இந்த வியாபாரத்தில் கோடிக்கணக்கில் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணம் கொட்டும் இந்தச் சாராயத் தொழிலை விட்டுவிட  அவர்கள் ஒன்றும் தமிழர்களைப் போல் ஏமாளிகள் அல்ல.

தமிழனைக் குடிக்க வைத்து பணம் சம்பாதிக்கும் இவர்கள் தான் தமிழ் நாட்டு முதலை அமைச்சர்கள்!

தமிழனை குடிக்க வைத்து, ஆட்டம் போட வைத்து, அவனை கிறங்கடித்து  அவன் பணத்தில் வாழ்க்கை நடத்தும் இவர்கள் தான் தமிழ் நாட்டை உலத் தரத்துக்குக் கொண்டு செல்லப் போகிறார்களாம்!

என்னக் கொடுமை சார் இது! முதலமைச்சரே சாராயம் விற்பது என்பது வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை!

வர்த்தகம் செய்வோம்! வான் வெளிகளையும் ஆராய்வோம்!


நாம் வர்த்தகர்கள். வர்த்தகம் செய்யும் இனம். திரை கடல் ஓடி திரவியம் திரட்டியவர்கள்.

வர்த்தகம் நமது பலம். வர்த்தகத்தை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்கள். வர்த்தகத்தை உலகளவில் கொண்டு சென்றவர்கள்.

வர்த்தகம் என்பது நமக்குப் புதிதல்ல. புதியவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள். வர்த்தகத்தின் ஆசான்கள்.

இன்று அந்த வர்த்தகத்தை நாம் பமறந்து விட்டோம். வேலை செய்வது தான் பிழைப்புக்கு வழி என்று ஒரு புதிய சிந்தனையை ஏற்றுக் கொண்டோம்.

வெள்ளைக்காரர்கள் வர்த்தகத்துக்கான் வந்தார்கள். வர்த்தகத்தை அவர்கள் கைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். நம்மை அவர்கள் மொழியைப் படிக்க வைத்து வேலைக்காரராக மாற்றி விட்டார்கள்!

ஆனால் எதுவும் வீண் போகவில்லை. காலம் கடந்து விடவில்லை.

வர்த்தகம் என்பது நமது ரத்தத்தில் ஊறியது. அதனை அவ்வளவு எளிதில் நம்மிடமிருந்து பிரித்துவிட முடியாது.

ஏன்? நமது மலேசிய நாட்டில் கூட - நாம் சஞ்சியில் வந்த போது கூட - நாம் நமது வர்த்தகத்தை  விடவில்லை. நாம் நமது வியாபாரங்களை அப்படி ஒன்றும் அம்போ என்று விட்டுவிட வில்லை.

அன்று அந்தத் தோட்டப்புறங்களில் வாழ்ந்த போது கூட சிறு சிறு வியாபாரங்களைச் செய்து கொண்டு தான் வந்தோம்.

காய்கறி வியாபாரம் செய்தோம். காலைப் பசியாறலுக்கான பலவித காலைச் சிற்றுண்டிகளைச் செய்தோம். தோசை, இடியப்பம், புட்டு என்று பலவித தின்பண்டங்களைச் செய்தோம். சேலை, துணிமணிகளை வியாபாரம் செய்தோம். தையற்கடைகளை வைத்து ஆடைஅணிகலன்களைத்
 தயாரித்துக் கொடுத்தோம்.

இவைகளெல்லாம் சிறு வியாபாரங்கள் தானே என்று அலட்சியப்படுத்தி விட முடியாது. இங்கிருந்து தான் பெரும் பெரும் வியாபாரங்கள் தொடங்கபட்டன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இன்று பிரபலமாக இருக்கும் உணவகங்கள், துணி வியாபாரங்கள் அனைத்தும் தொடக்கம் இங்கிருந்து தான் ஆரம்பாகின.

இன்று நாம் பெரும் பெரும் வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கிறோம். இன்னும் நாம் இதனை அதிகப்படுத்த வேண்டும் என்பது ஒன்று. வர்த்தகத்தில் நமது எண்ணிக்கையை இன்னும் கூட்ட வேண்டும் என்பது மற்றொன்று.

இப்போது வான் வெளியில் நமது வான் ஊர்திகள் பறக்கின்றன. அத்தோடு நாம் திருப்தி அடைந்து விடக்கூடாது. வான்  வெளிகளிலும் சென்று நமது வர்த்தகங்களை நாம் நிறுவ வேண்டும்.

திரைக்கடல் ஓடித் திரவியம் தேடியவனுக்கு வான் வெளி சென்று வர்த்தகம் செய்ய முடியாதா? முடியும். அந்நாள் வரும்! வர்த்தகம் செய்வோம்! வளம் பெறுவோம்!

என்னமோ இருக்கேன்...!



நம்மில் பலர் இப்படித்தான் பேசி பழக்கம். எதற்கெடுத்தாலும்: என்னமோ இருக்கேன்...! என்னமோ ஓடிக்கிட்டிருக்கு...! என்னமோ...!  என்னமோ...!

இவர்கள் பேசும் போதே ஏதோ ஒரு சலிப்பு...!  ஏதோ ஒரு விரக்தி....! உண்மையில் கொஞ்சம் உன்னித்துப் பார்த்தால் இவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது!  நல்லபடியாகவே இருப்பார்கள்.

ஆனாலும் தங்களுக்கு ஏதோ ஆயிரக்கணக்கானப் பிரச்சனைகள் இருப்பது போலவும்,  கடவுள் தங்களை மட்டும் தேர்ந்து எடுத்து சோதிப்பது போலவும் கொஞ்சம் அதிகமாகவே  அலட்டிக் கொள்ளுவார்கள்!

இவர்கள் ஆபத்தான மனிதர்கள். மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மனிதர்கள்.

தங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பது மற்றவர்களுக்குத் தெரிந்தால் மற்றவர்கள்  "கண்பட்டு" விடும் என்று நினைக்கும்  மனிதர்கள். அதற்காகவே இவர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கூட வெளியே காட்டிக்கொள்ளாத மனிதர்கள்!  

அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடாது என்று நினப்பவர்கள்.

இவர்கள்  சலிப்பையும், ஒருவித விரக்தியையும் எப்போதுமே மற்றவர்களுக்குப் பரப்பும் நோக்கத்துடனயே செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

கவனம்! இந்த உலகில் எல்லா மனிதர்களுக்கும் பிரச்சனைகள் உள்ளன. பிரச்சனைகள் வரும் போவும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். மற்றவர்கள் தங்கள் சலிப்புக்களையும், விரக்திகளையும் நம்மீது திணிக்காமல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

நமது பிரச்சனைகளை நாம் தீர்த்துக் கொள்ளலாம். நமது சலிப்புக்களை நாம் மறந்து விடலாம். நமது விரக்திகளை நாம் விரட்டி விடலாம்.

ஆனால் இந்த சலிப்புக்களையே தங்களது வாழ்க்கையாக்கிக் கொண்டவர்களை நாம் அருகில் நெருங்கமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

என்னமோ இருக்கேன் இல்லை! நன்றாகவே இருக்கேன்!




Thursday 21 April 2016

கேள்வி - பதில் (7)



கேள்வி

மு.கருணாநிதி அவர்கள் தமிழர்களால்  தமிழறிஞர் என்று போற்றப்பட்டவர். ஆனால் அவர் செய்த காரியங்கள் அனைத்தும் ஒரு தமிழறிஞர் செய்கின்ற காரியங்களாக இல்லையே!

பதில்

உண்மையே! அவரைத் தமிழறிஞர் என்று சொன்னவர் யார்?  எல்லாமே அவர் கட்சிக்காரர்கள் தாம்.

தமிழறிஞர் என்றால் அது தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்,  டாக்டர் மு.வரதராசனார் இன்னும் பல பேராசிரியப்  பெருமக்கள் உள்ளனர். அவர்கள் தான் தமிழ் அறிஞர்கள்.

மு.கருணாநிதி அவர்களைத் தமிழ் அறிஞர் என்று ஏற்றுக் கொண்டாலும் அவர் செய்தவை அனைத்தும் எந்தத் தமிழ் அறிஞர்களும் செய்யத் துணியாதவை. தமிழ் மண் அவரை வாழ வைத்தது; அவரை வளர வைத்தது. அவருக்கு வாழ்க்கைக் கொடுத்தது. தமிழ் அவருக்குச் சோறு போட்டது.  தமிழர்கள் தமிழகத்தின் தலைமைப் பீடத்தைக் கொடுத்து அவரை அழகு பார்த்தார்கள்.

ஆனால் தமிழர்களுக்குக் கைமாறாக அவர் என்ன செய்தார்? தமிழ் மொழியையே முற்றிலுமாகத் துடைத்தொழித்தார். தமிழ் மண்ணையே அங்குலம் அங்குலமாகச் சுரண்டி எடுத்தார். ஆற்றுமணலைத் தோண்டி எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்தார். சாராயக்கடைகளைத் திறந்து கோடிக்கோடியாகச் சம்பாதித்தார். ஒன்றரை இலட்சம் தமிழர்களைச் சிங்களவன் சுட்டுக்கொன்ற போது -  அமைச்சர் பதவிக்காக - மத்திய அரசோடு பேரம் பேசிக் கொண்டிருந்தார்.  தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் சுட்டுக்கொன்ற போது வழக்கம் போல கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

ஒரு அறிஞர் செய்கின்ற காரியமா அது?  ஒர் அரசியல்வாதியின் பச்சை அயோக்கியத்தனமல்லவா! அவர் தமிழறிஞர் அல்ல! ஒரு வடிகட்டிய அரசியல்வாதி! தமிழினத் துரோகி!

Monday 18 April 2016

கேள்வி-பதில் (6)



கேள்வி

முதலைமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இப்போதெல்லாம் தமிழக மண்ணில் காலை பதிக்காமல் கோட்டையில் இருந்து கொண்டே கணினி மூலம் சாரயக்கடைகளைத் திறப்பதும், திறப்பு விழாக்களை நடத்துவதும் அதனைப் பார்த்து அவருடைய அமைச்சர்கள் பெருமிதம் அடைவதும் அவர்களோடு சேர்ந்து நாமும் புளகாங்கிதம் அடைந்தோம்! அவருடைய தேர்தல் பணிகளும் கணினி மூலமே நடைபெரும் என எதிர்ப்பார்த்த நமக்கு ஒர் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டாரே!  தீடீரென வாகனத்தில் வலம் வருகின்றாரே!

பதில்

தீடீரென நடக்க ஆரம்பித்து விட்டார் என நினைக்கிறீர்களா?  இல்லை!  அது அவருடைய உருவ பொம்மையாகக் கூட இருக்கலாம்! திராவிடர்கள் அரசியலில் எதுவும் நடக்கும்!

ஆனாலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவர் கிழே இறங்கித் தேர்தல் வேலைகளைக் கவனிக்கவில்லை. தமிழக மண்ணில் அவர் கால் பதியவில்லை! தமிழ் மண்ணை மிதிப்பதையோ,  தொடுவதையோ அவர் விரும்பவில்லை! தமிழ் மண்ணைத் தொடுவதைக் கூட அவர் விரும்பவில்லை. கையில் உறைப் போட்டுத்தான் தமிழ் மண்ணைத் தொடுகின்றார்!

இனித் தமிழ் நாட்டில் தனக்கு எதிர்காலம் இல்லை என்று குமுற ஆரம்பித்துவிட்டார் அம்மையார்.  தமிழ் மக்களை ஒரு பெரிய குடிகாரக் கூட்டமாக ஆக்கிய பெருமை அம்மையாருக்கு உண்டு!

தனக்கு அரசியல் பதவி இல்லையென்றால் தனது காலில் யாரும் விழப்பொவதில்லை!  இனி அந்தப் பழைய மரியாதைகள் கிடைக்கப் போவதில்லை என்று அவருக்குத் தெரிந்து விட்டது!

சாராயக்கடைகளின் தாய்! தமிழர்களின் எதிரி!

Sunday 17 April 2016

கேள்வி - பதில் (5)



கேள்வி

பெருந்தலைவர் காமராசர் ஆட்சிவரை இலஞ்சம், ஊழல் என்னும் சொல்லே பயன்படுத்தப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அது எங்கிருந்து முளைத்து வந்தது?


பதில்

உண்மை தான். காமராசர் மட்டும் அல்ல. அதன் பின்னர் பக்தவத்சலம் அவர்களும் 1966 வரை தமிழக முதல்வராக இருந்திருக்கிறார்.

இலஞ்சம் என்பது தி.மு.க. ஆட்சியில் தான் அரியணையேறி இருக்கிறது!அறிஞர் அண்ணா அவர்கள் 1967-ல் தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அதன் பின்னர் தான் ஊழல் ஆரம்பம்!  அண்ணாவின்  ஆட்சியில் முதல் ஊழல் குற்றச்சாட்டு கலைஞர் கருணாநிதி மேல் தான்! தமிழக  சரித்திரத்தில் ஊழல் என்னும் தரித்திரம்  அங்கிருந்து தான்  ஆரம்பமாகிறது.

கலைஞர் தனது எழுத்து ஆற்றலாலும், பேச்சாற்றலாலும் தமிழ் நாட்டு இளைஞர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நேரம் அது! அத்தோடு அவருக்குப் பதவியும் சேர்ந்து கொண்டது! சொல்லவா வேண்டும்? செய்கிற தவறுகளை - ஊழல்களை - அரசியல் பலத்தால் மிக எளிதாக மூடி மறைக்க முடிந்தது!

எல்லாவற்றுக்கும் ஒரு காலமுண்டு. இனி அவருடைய எழுத்தாற்றல், பேச்சாற்றல் அனைத்துக்கும் மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது!

மேலும் இனி அவருக்கு அரசியல் பலம் என்பது கானல் நீர்!  இது திராவிடக் கட்சிகளின் கடைசி காலம்!


Saturday 16 April 2016

பெருந்தலைவர் துன் வீ.தி.சம்பந்தனார், பெரும் வெற்றியாளர்!


ம.இ.கா.வின் (மலேசிய இந்தியர் காங்கிரஸ்) மூன்றாவது தலைவராக வந்தவர் தான் துன் வீ.தி.சம்பந்தன்.

ஆளுங்கட்சியில் அங்கம் பெற்ற ம.இ.கா.வில் துன் அவர்கள் வந்த பின்னர்  தான் கட்சியின் அதிகார மொழியாகத் தமிழ் பயன்படுத்தப்பட்டது.

துன் அவர்கள் சுமார் 18 ஆண்டு காலம் மா.இ.கா.வின் தலைமைப் பீடத்தை அலங்கரித்தவர்.

துன் அவர்கள்,   தனது  காலக் கட்டத்தில் ம.இ.கா.வில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

ஆனாலும் அவருடைய அரிய - பெரிய சாதனை என்றால் அது அவர் காலத்தில் அவர் அமைத்த தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் தான் .வெள்ளைக்காரர்கள் தோட்டங்களை விற்று, நாட்டை விட்டு  வெளியேறினர். உள்ளூர் முதலாளிகளால் பல தோட்டங்கள் துண்டாடப்பட்டன. தோட்டங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை. பாதிக்கப்பட்டவர்கள் தோட்டங்களில் பணிபுரிந்த தென்னிந்திய தொழிலாளர்கள்

மிகவும் இக்கட்டானச் சூழலைச் சந்தித்தார் சம்பந்தன் அவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தோட்டத் தொழிலாளர்கள். அப்போது அவர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.

போர்க்கால நடவடிக்கை போல எடுத்தார் ஒரு முடிவை. ' ஒவ்வொரு தோட்டப் பாட்டாளியும் மாதம் பத்து வெள்ளி கொடுங்கள். நாமே தோட்டங்களை வாங்குவோம்' என்று தோட்டம் தோட்டமாக, வீடு வீடாகச் சென்று முழக்கமிட்டார்.

அது ஒரு மாபெரும் புரட்சி! அதுவரைய யாரும் கேள்விப்படாத ஒரு முயற்சி. அப்படித்தான் பிறந்தது தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம்.

அவர் இறக்கும் போது அந்தப் பத்து பத்து வெள்ளியை வைத்தே சுமார் 18 தோட்டங்களை அவர் வாங்கியிருந்தார். அதில் கிட்டத்தட்ட 1,00,000 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

துன் சம்பந்தன் அவர்கள் வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால் அரசியல் மூலம் அனைத்தும் இழந்தவர். ஆனாலும் சமுதாயத்திற்கு ஒர் இழப்பு என்று வந்ததும் அவராகவே களத்தில் இறங்கினார். இரவு பகல் பாராமல் இந்த சமுதாயத்திற்காக உழைத்தவர்.

கூட்டுறவு சங்கம் என்பது அவரது சாதனை. இதுவரை அவருடைய சாதனையை முறியடிக்க எந்த ஒரு தலைவரும் பிறக்கவில்லை. மலேசிய அரசாங்கத்தின் மிகப்பெரிய "துன்" விருதை பெற்ற முதல் தமிழர். அத்தோடு கூட நமது நாட்டின் பிரதமரும், துணைப்பிரதமரும் நாட்டில்  இல்லாத  வேளையில் "ஒரு நாள்" பிரதமராகவும் இருந்திருக்கிறார்! அந்தச் செய்தி அவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.

துன் சம்பந்தன் அவர்கள் பெரும்தலைவர் மட்டுமல்ல மாபெரும் வெற்றியாளர்!

Friday 15 April 2016

கேள்வி-பதில் (4)


கேள்வி

தமிழக ஆட்சியில் டாக்டர் கலைஞர்  அவர்களும் டாக்டர் அம்மாவும் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கின்றனர். இருவருமே முன்னவர் ஆட்சியில் உருவாக்கியவைகளை அல்லது கட்டிய கட்டடங்களை அழித்துவிட்டு அல்லது உடைத்துவிட்டு புதியவைகளைக் கொண்டு வருகின்றனர்.  இதனை மக்கள் எப்படி எடுத்துக் கொள்ளுகின்றனர்?

பதில்

அவர்கள் மக்களை மக்களாகவே மதிப்பதில்லை! அதே போல மக்களும் அவர்களைப் பிணம் தின்னி கழுகுகளாகத்தான் பார்க்கின்றனர்! நாட்டை ஆளுவதற்கு இவர்களை விட்டால் வேறு வழியில்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை மக்களிடையே அவர்கள் ஏற்படுத்தி விட்டனர்! அதனால் மக்களும் அவர்கள் செய்கின்ற அனைத்துக் காரியங்களையும் மன்னித்தும் மறந்தும் விடுகின்றனர்.

ஆனால் இப்போது தான் ஒரு விடிவு ஏற்பட்டிருக்கிறது; முதன் முதலாக இருவருக்கும் தலைச் சுற்ற ஆரம்பித்திருக்கிறது! மக்கள் இவர்களைத் தமிழர்கள் இல்லை,  மாறாக பக்கத்து மாநிலங்களிருந்து வந்த திராவிடத்தின் தீய சக்திகள் என்பதை இப்போது தான் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்!

ஒவ்வொருவரும் பதவிக்கு வரும் போது:  அவர் கட்டிய சாராயக் கடைகளை இவர் உடைப்பதில்லை; இவர் கட்டிய சாராயக் கடைகளை அவர் உடைப்பதில்லை! இருவரும் அந்தச் சாராய விற்பனையில் மட்டும் ஒத்துப் போகின்றனர். தமிழர்களைக் குடிகார சமுதாயமாக மாற்றி அமைப்பதில் இருவருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை!

ஆனால் ஒரு மாபெரும் நூலகத்தையே தகர்த்தெறிந்தாரே அம்மையார் அதனை நாம் அவ்வளவு எளிதில் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது! அறிவு தெளிவுக்குத் தான் நூலகம். தமிழன் அறிவு பெறக் கூடாது என்பதில் அவர் காட்டிய  தீவிரம்  மன்னிக்க  முடியாதத் துரோகம்!

பொதுவாக இருவருமே தமிழ் மக்களின் விரோத சக்திகள்!

Wednesday 13 April 2016

நாம் ஏழையுமில்லை! கோழையுமில்லை!



நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளுவதற்கு நமக்கு ஈடாக யாருமில்லை! அந்த அளவுக்கு நாம் நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளுகிறோம்!

நாம் ஒன்றும் அந்த அளவுக்குக் கேவலப்பட்டுப் போய்விடவில்லை. ஆனாலும் நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளுகிறோம்; ஏழை என்கிறோம்! கோழை என்கிறோம்!

நம்மால் அது முடியாது என்கிறோம்! இது முடியாது என்கிறோம்!

நம்மை விட ஒருவனை உயர்ந்தவன் என்கிறோம். ஏன்?  நாம் எங்கே தாழ்ந்து போய் விட்டோம்?

உயர்ந்தவன் உயர்ந்தவனாகவே இருக்கட்டும். நாமும் உயர்ந்தவன் தான் என்கிற மனோபாவம் நமக்கு வேண்டும்.

நாம் ஏழையுமில்லை; கோழையுமில்லை!

நமது கையில் இப்போது பத்துக் காசுக் கூட இல்லை என்பதால் நாம் என்ன ஏழையா? இப்போது தானே இல்லை! இன்னும் சில நிமிடங்களில் வரலாம். இன்னும் சில மணி நேரங்களில் வரலாம். இன்னும் சில நாள்களில் வரலாம். அவ்வளவு தானே! இதற்கு ஏன் கையில் பணம் இல்லை! நான் ஏழை என்று நான் அலட்டிக்கொள்ள வேண்டும்?

பெரிய பணக்காரர்கள் கூட சமயங்களில்  பணம் இல்லையே என்று கையைப் பிசைந்து கொண்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் அந்த நேரம் மட்டுமே; அதன் பின்னர் அனைத்தும் சரியாகிவிடும்!

அது தான் வாழ்க்கை. பணம் வரும்; போகும்.நாமும் அதற்கு ஏற்றவாறு மாறிக் கொள்ள வேண்டுமே தவிர, நம்மை நாமே ஏழை என்று தாழ்த்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை! தலை குனிந்து - எதையோ இழந்துவிட்டது போல - கிழிந்த உடைகளோடு - மற்றவர்கள் நம்மைப் பார்த்து அசிங்கப்படும்  அளவுக்கு - நமக்கு நாமே இழிவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

'பணம் இல்லாவிட்டால் என்ன? நான் எனது கம்பீரத்தை மாற்றிக்கொள்ள முடியாது'  என்று உறுதியாக இருக்க வேண்டும்.

பாட்டாளித் தோழர்களிடமிருந்து துன் சம்பந்தனார் அவர்கள் பத்து பத்து வெள்ளியாக வசூல் செய்து "தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம்" என்னும் மாபெரும்  தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். அது மட்டுமல்லாது அவர் கட்டிய கூட்டுறவு மாளிகையும் தலைநகரில் இன்று தலை நிமிர்ந்து
நிற்கிறது. இன்றைய நிலையில் அது மட்டுமே இந்தியர்களின் சொத்து!

கையில் பணம் இல்லையென்றாலும் அவர் மனம் தளரவில்லை; தலை குனியவில்லை. ஓடி ஒளியவில்லை.'நாம் ஏழையும் இல்லை; கோழையும் இல்லை"  என்று பொங்கி எழுந்ததன் விளைவு தான் அந்தச் சாதனை!

நாம் ஏழைகளும்  அல்ல! கோழைகளும் அல்ல! சாதனையாளர்கள்!






கேள்வி-பதில் (3)



கேள்வி

தமிழ் மாநிலத்தை தமிழர் மட்டும் தான் ஆள வேண்டும் என்பது இனத் துவேஷம் இல்லையா?

பதில்

இதனையே மற்ற மாநிலங்களிலும் கேட்கலாம். ஆந்திராவை ஒர் தெலுங்கர் ஆளுவது, கேரளாவை ஒரு மலையாளி ஆளுவது, கர்நாடகாவை ஒர் கன்னடர் ஆளுவது - இவைகளெல்லாம் இனத்துவேஷம் தானே? அது இனத்துவேஷம் இல்லையென்றால் தமிழ் நாட்டை தமிழர் ஆளுவது இனத்துவேஷம் இல்லை.

இந்தியாவிலுள்ள அத்தனை மாநிலங்களும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த பூர்விகக்கூடியினரே ஆளுகின்றனர். தமிழர் நாட்டை  தமிழர் தான் ஆளுவது என்பது இனத்துவேஷம் அல்ல.

இத்தனை ஆண்டுகள் - சுமார் 50 ஆண்டுகளாக - திராவிடர்கள் தான் ஆளுகின்றனர். தமிழர்களால் செய்ய முடியாததை அப்படி என்ன அவர்கள் செய்து விட்டனர்? சும்மா, வெறும் பூஜ்யம் தான்!

செய்யாவிட்டால் கூடப் பரவாயில்லை. தமிழகத்துக்குத் துரோகம் செய்திருக்கிறார்கள்.

கச்சத் தீவை - ஏதோ ஒரு சினிமாப்படத்தை சன் தொலைக்காட்சிக்கு விற்றுத் தீர்த்தது போல - விற்றுத் தீர்த்துவிட்டார்கள்! யார் வீட்டு அப்பன் சொத்தை யார் விற்கிறார் பாருங்கள்.  உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது இது தானே?

இரண்டு கேரள  மீனவர்கள்  இத்தாலியக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்து கேரள அரசாங்கம்  பொங்கி எழுந்ததே! ஐநூறுக்கு மேற்பட்ட தமிழக மீனவன் செத்தானே ஏதாவது நடந்ததா? காரணம் அவன் தமிழன்;  எங்கள் திராவிடத் தலைவர்கள் சினிமா ஷூட்டிங் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அவர்களுக்கு நேரமில்லை! இவர்கள்  துரோகிகள் தானே!

இவர்கள் செய்தது தானே இனத் துவேஷம்!

இன்னும் பல!

தமிழ் மாநிலத்தைத் தமிழன் தான் ஆள வேண்டும் என்பதற்கு இந்தக் காரணங்களே போதும்.








Monday 11 April 2016

கேள்வி - பதில் (2)


கேள்வி

தமிழ் நாட்டை ஆளுவதற்கு சீமானுக்கு என்ன தகுதி என்று நினைக்கிறீர்கள்?


பதில்

கல்வி மட்டும் தான் தகுதி என்றால் அது அவரிடம் இருக்கிறது. பொருளாதாரம் படித்தவர். ஆனால் கல்வி மட்டுமே தகுதி என்றால் அது அரசியலுக்குத் தேவையில்லை என்பதே எனது கருத்து. அரசியலைப் பொறுத்தவரை தொண்டு தான் முதல் தகுதி.

கருணாநிதி பழந்தமிழ் இலக்கியங்களில் பயிற்சி பெற்றவர். அவர் படிக்காதவர் என்று சொல்ல முடியாது. ஜெயலலிதா ஆங்கிலக்கல்வி  வழி கல்வி பயின்றவர். படித்தவர்.

இந்த இருவர்களின் சாதனை என்ன? ஒருவர் சாராயக்கடைகளைத் திறந்தார். இன்னொருவர் இன்னும் அதனை அதிகப் படித்தினார். ஆனால் முன்னவர் காலத்தில் சாராய விற்பனை அதிகம்;  இப்போது சாராய வியாபாரம் குறைந்திருக்கிறது என்கிறார் பின்னவர்.

இப்போது இந்தத் தேர்தல் காலத்தில் 'நான் இன்னும் படிபடியாகக் குறைப்பேன்" என்று உறுதிமொழி அளிக்கிறார் பின்னவர்.சாராயக் கடைகளை இன்னும் அதிகம் திறந்துவிட்டு என் காலத்தில் சாராய விற்பனைக் குறைந்திருக்கிறது என்று தமிழ் மக்களுக்குக் கடுக்கன் போட்டுவிடுகிறார் அம்மையார்.

தமிழ் மாநிலத்தின் தாய் மொழியானத் தமிழை இருவருமே கூட்டுச் சேர்ந்து அழித்து விட்டனர்.

விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் எந்த வகையிலும் உயரவில்லை. தற்கொலைகள் தான் நிறைய நடந்திருக்கின்றன.

இவர்களின் கல்வித் தகுதி எதைச் சாதித்திருக்கிறது? ஊழல் தான் இவர்களின் சாதனை! இவர்களின் கல்வி ஊழக்குத் தான் துணை போயிருக்கிறது!

தொண்டு மட்டுமே சாதனைகள் புரியும். அந்தத் தொண்டு சீமானிடன் இருக்கிறது. அது பெருந்தலைவர் காமாரசருக்குப் பின்னர் சீமானிடம் இருப்பதே போதும்!

டாக்டர் ஸாகிர் நாய்க்




இஸ்லாமிய சமயச் சொற்பொழிவாளர் டாக்டர் ஸாகிர் நாய்க் அவர்களின் அண்மையில் நடபெறவிருந்த சமயச் சொற்பொழிவை  அரசாங்கம் ரத்து செய்திருக்கிறது என்று காவல் துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் அவர்களின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே.

இன்னும் மலாக்காவில் நடைபெறவிருக்கிற நிகழ்ச்சியும் .ரத்து செய்யபடுவதாக அவர் அறிவித்திருக்கிறார். வரவேற்கிறோம்.

ஆனாலும் அவருடைய சொற்பொழிவுகளுக்கு அரசாங்கம் தடை செய்யவில்லை. எதுவும் மாறலாம். இந்த நிலையும் மாறலாம்.. காரணம் டாக்டர் ஸாகிர் அவர்களின் சொற்பொழிவுகள் நடைபெறு வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன.

இதில் தீவிரமாக இருப்பவர்கள் நமது இஸ்லாமிய தமிழ்ச் சகோதரர்கள் தான் என்பது வருத்தத்திற்குறியதே.

டாக்டர் ஸாகிர் இஸ்லாமின் பெருமைகளைப் பற்றி எத்தனை சொற்பொழிவுகள் வேண்டுமானாலும் ஆற்றலாம். அதனை யாரும் குறைச் சொல்லப் போவதில்லை. ஆனால் இந்து மதத்தைக் குறி வைத்துத்  தாக்குவது என்பது இவரைப் போன்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஏற்புடையதல்ல.

ஏற்கனவே - சில ஆண்டுகளுக்கு முன்னர் - இங்குள்ள இந்து மதத்தினர் இவரின் சொற்பொழிவுகளுக்குக் கொடுத்த எதிர்ப்பினை யாவரும் அறிவர்.

எனினும், இவரைத் தொடர்ந்து வர அனுமதிப்பதும் பிறகு இங்குள்ள இந்து மதத்தினர் அதனைத் தொடர்ந்து எதிர்ப்பதும் எந்த வகையிலும் நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.

தனது தாய் நாடான இந்தியாவில் செய்ய முடியாததை இங்கு வந்து செய்ய நினப்பது இஸ்லாமிய அறிஞரான டாக்டர் ஸாகிருக்கும் இது உகந்ததல்ல!

நாட்டின் அமைதி முக்கியம். அது தொடர எல்லாத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். வாழ்க மலேசிய!


Sunday 10 April 2016

கேள்வி-பதில் (1)



கேள்வி

தமிழ் நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கையில் புதிதாக "நாம் தமிழர் கட்சி" முளைத்திருக்கிறதே! ஏன்? நமது சீமானுக்கும் முதல்வர் ஆசை வந்து விட்டதோ?

பதில்

முதல்வர் ஆசை வர வேண்டும். ஒரு தமிழனுக்கு முதல்வர்  ஆசை வர வேண்டும். வரா  விட்டால் அவன் தமிழனில்லை. இது நாள் வரை அப்படி ஒரு ஆசை எந்த ஒரு தமிழனுக்கும் வரவில்லை. இனி மேலாவது அந்த ஆசை வர வேண்டும். பெருந்தலைவர் காமாராசருக்குப் பிறகு எந்த ஒரு தமிழனும் ஆட்சிக்கு வரவில்லை.

திராவிடக்கட்சிகள் எந்த ஒரு தமிழனையும் ஆட்சிக்கு வர விடவில்லை என்பது தான் உண்மை! கலைஞரை விட, ஜெயலலிதாவை விட நிரம்ப கற்றவர்கள், படித்தவர்கள் அவரவர் கட்சிகளில் இருந்தார்கள்; இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அவர்கள் வளர விடவில்லை. அவர்களைக்  காலில் விழ வைத்து வேடிக்கைப் பொருளாக ஆக்கினார்கள்!  மற்ற இனத்தவர்கள் நம்மைப் பார்த்து சிரிக்கும் நிலைக்குத் தமிழர்களைத் தள்ளினார்கள்.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்த் தலைவர்களும் வளரவில்லை; தமிழும் வளரவில்லை; தமிழ் நாடும் வளரவில்லை!

இனி ஏன் திராவிடக் கட்சிகள் தமிழர்களை ஆள வேண்டும்?  தமிழர் தான் ஆள வேண்டும். அதற்கு "நாம் தமிழர் கட்சி" மட்டுமே தீர்வு.

"நாம் தமிழர் கட்சி" என்பது மறைந்த மாமேதை - தினத்தந்தி பத்திரிக்கையின் உரிமையாளாரான சி.பா.ஆதித்தனாரால் ஆரம்பித்து வைக்கப் பட்ட ஒரு கட்சி. அவரிடம் பண பலம் இருந்தாலும் படை பலம் இல்லை. அதனை இப்போது கையில் எடுத்திருக்கிறார் சீமான். அவர் வெற்றி பெறுவார் என்பதே நமது நம்பிக்கை. வெற்றி பெற வேண்டும்.

தமிழ் நாட்டை தமிழனே ஆட்சி செய்யட்டும்!

தமிழ்வாணனின்: "என் தலையாய பணி"

ஒரு மனிதனுடைய தீவிரமான ஆர்வம் எதுவாய் இருந்தாலும்,வாழ்க்கையில் அது நிறைவேறியே தீரும் என்பது இயற்கையின் சட்டம்.

 மக்களை அவர்களுடைய முன்னேற்றுத்துக்கு ஏற்ற வகையில் மேலும் மேலும் ஊக்குவித்துக் கொண்டிருப்பைதையே, என் வாழ்க்கையில் நான் என்னுடைய தலையாய பணியாகக் கடைப்பிடித்து வருகிறேன்.

 பிறரை அவமதிப்பவன், தானே அவமானத்திற்கு ஆளாகிறான். பிறரை மதித்து நடப்பவன், தானே மதிப்புக்கு உரியவன் ஆகிறான்.

 பிறரை ஊக்குவிப்பதன் மூலம் என்னால் எப்போதும் ஊக்கம் உடையவனான விளங்க முடிகிறது.

 நாம் பிறருக்குச் செய்யும் நன்மைகள் தாம் ஒன்றுக்குப் பத்தாய் நமக்குத் திருப்பி வருகின்றன

 நீங்கள் ஊக்கம் மிகுந்தவர்களாய் ஆக விரும்பினால் எல்லாரையும் ஊக்குவித்துக் கொண்டிருங்கள். அப்போது உங்களால் ஊக்குவிக்கப்படுபவர்களும் உயர்வு அடைவார்கள். நீங்களும் உயர்வு அடைவீர்கள்.

 ஊக்கம் ஒன்று தான் மனிதனுக்கு உயர்வை அளிக்கிறது,முன்னேற்றத்தைத் தருகிறது என்று அன்றைய திருவள்ளுவரிலிருந்து இன்றைய டேல் கார்னெகி வரையில் எல்லாரும் சொல்லுகிறார்கள்.  

 என்னுடைய எழுத்துக்களின் மூலம் என் வாசகர்களின் அவநம்பிக்கையைப் போக்குவதையே, வாழ்க்கையில் நான் என் தலையாய பணியாகக் கொண்டிருக்கிறேன்.

  நமக்கு ஏற்படுகின்ற ஏமாற்றங்கள் தான் நாம் முற்றிலும் புதிதான ஒரு வாழ்க்கையைத் தொடங்குவதற்கு,நமக்கு அடிகோலியாக அமைகின்றன. அந்த ஏமாற்றங்கள் ஏற்படாதிருந்தால், நாம் மீண்டும் செக்குமாடுகள் மாதிரிப் பழைய தடத்திலேயே சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருப்போம்.


என்னுடைய வாசகர்களை பல வகைகளிலும் இடையறாது ஊக்குவித்துக் கொண்டிருப்பதையே, நான் இறைவனுக்குச் செய்யும் திருத்தொண்டாக எண்ணிக்கொண்டிருக்கிறேன்!

வாழ்க ஊக்கம்! வளர்க நம்பிக்கை!
                                                                            
 துணிவே  துணை!
                                                                                                                                                    (குறிப்பு: தமிழ்வாணன் அவர்கள் எனது மானசீகக் குரு. அவரின் "என் தலையாய பணி" என்னும் கட்டுரையிலிருந்து இந்தப் பகுதிகள் எடுக்கப்பட்டன. எனது ஆரம்பம் எனது குருவாக இருக்க வேண்டும் என்பதால் இதனை நான் பயன் படுத்தியிருக்கிறேன்.)

Saturday 9 April 2016

"நாம் தமிழர்" என்னும் உணர்வு ஓங்க வேண்டும்!

"நாம் தமிழர்" என்னும் உணர்வு நமக்கு ஓங்க வேண்டும்.

சாதிய உணர்வுகளை நாம் அதிகமாக வளர்த்துக்கொண்டோமோ  என்று நினைக்கத் தோன்றுகிறது! வளர்த்துக் கொண்டதற்கான காரண காரியங்கள் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை!

தமிழர்கள் என்று ஏன் நம்மால் சொல்ல முடியவில்லை? எங்கே நாம் தவறுகள் புரிந்தோம்?

திராவிடக் கட்சிகள் நம்மை இப்படி ஒரு நிலைமைக்குக் கொண்டு வந்தனவா? திட்டம் போட்டு நம்மை சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக ஆக்கிவிட்டனரா நமது திராவிடத் தலைவர்கள்?

சொந்த மண்ணில் - மண்ணின் மைந்தராக இருந்த நாம் - தமிழராக இருந்த நாம் - எப்போது திராவிடர் ஆனோம்?

இதற்கு யார் காரணம்?

தெலுங்கு தேசத்தில் உள்ளவர்கள் தெலுங்கர்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ளவர்கள் கன்னடர்கள். கேரள தேசம் மலையாளிகள். அதென்ன? தமிழர் தேசத்தில் மட்டும் தமிழர் அல்லாத திராவிடர்கள்!

தமிழர் தேசத்தில் முப்பது விழுக்காடு தமிழர் அல்லாதார். அதில் வியப்பு ஒன்றுமில்லை. இந்தியக் குடிமகன் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வாழலாம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் பூர்விகக் குடியினரே மாநிலத்தை ஆளுகின்றனர் - தமிழ் நாட்டைத் தவிர! தமிழ் நாட்டில் மட்டும் திராவிடர்கள் தமிழ் மாநிலத்தைஆளுகின்றனர்!

ஆரியர்கள் சாதி அடிப்படையில் தமிழர்களைப் பிரித்து வைத்தனர் என்று நீண்ட காலம் நாம் சொல்லி வந்தோம்.ஆனால் அவர்கள் கூட தங்கள் பிழைப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ஆரியர்களின் பெயரைச் சொல்லி திராவிடத் தலைவர்கள் தான் இந்தச் சாதிப் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு தமிழர்களை எல்லாக் காலங்களிலும் தமிழர்களைப் பிரித்து வைத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனைத்  திராவிடத் தலைவர்கள் மிகவும் சாதுரியமாக ஆரியர்களின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்துகின்றனர்!

இவர்கள் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக சாதியை வைத்தே  பிழைப்பு நடத்தி நாம் தமிழர்கள் என்னும் உணர்வே இல்லாமல் செய்துவிட்டனர்.

இப்போது நாம் பழைய நிலைமைக்குத் திரும்ப வேண்டும். நாம் தமிழர் என்னும் உணர்வு ஓங்க வேண்டும்.

நாம்  தமிழர்! நாம் தமிழர்! நாம் தமிழர்!  சாதிய உணர்வுகளுக்குச் சாவு மணியடிப்போம்!

வாழ்க தமிழினம்! வெல்க தமிழினம்! நாம் தமிழர்! நாமே தமிழர்!