Thursday 24 March 2016

ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழணும்...!

திருமணம் புரியும் புதிய மணமக்களுக்கு பெரியவர்கள் சொல்லுகின்ற அனுபவ மொழி "ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழணும். அப்போது தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்."

    விட்டுக்கொடுப்பது என்பது தம்பதிகளுக்கு மட்டும் அல்ல. அனைவருக்குமே பொருந்தும். நாம் வெளியே போகிறோம். நாலு பேரோடு பழகுகிறோம். நாம் விட்டே கொடுக்க மாட்டோம் என்று நாம் முரண்டு பிடித்தால் நாலு பேரோடு சேர்ந்து நம்மால் வாழ முடியாது. சண்டை சச்சரவோடு தான் வாழ வேண்டி வரும். அதற்கு அடிதடி எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான், இந்த அடிதடிகளெல்லாம் நமக்கு அசிங்கம் என்று தெரிந்து தான் நாம் பல காரியங்களில் நாம் விட்டுக்கொடுத்துப் போகிறோம்.

   ஆனால் கணவன் மனைவி என்று வரும் போது இது 'நானா, நீயா' போட்டி மாதிரி! இதில் ஆணவம் இருக்கிறது; அகங்காரம் இருக்கிறது. யார் பெரியவர் என்னும் திமிர் இருக்கிறது. அதனால் தான் பெரியவர்கள், அனுபவம் உள்ளவர்கள் கணவன்-மனைவியர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்று காலாகாலமும் சொல்லி வருகின்றனர்.

  காலாகாலமும் என்று சொல்லும் போதே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வழி இல்லை என்பது தெளிவு. சரி, அதையும் விடுவோம்.

 இப்போது இந்த கணவன்-மனைவியர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பதில் ஏதேனும் விகிதாச்சாரம் இருக்கிறதா? ஏதாவது ஒரு கணக்கு இருக்க வேண்டும் அல்லவா? எனது ஆய்வின்படி(!) ஒரு விகிதாச்சாரத்தைச் சொல்லியிருக்கிறேன். அது சரியோ தவறோ, நீங்களோ ஒரு முடிவுக்கு வாருங்கள். கணவன்-மனைவியரைப் பொறுத்தவரை 90 விழுக்காடு, கணவன் மனைவிக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்; மனைவியர் 10 விழுக்காடு விட்டுக்கொடுத்தால் போதும். மிகவும் தன்னடக்கத்தோடு இதனை நான் சொல்லியிருக்கிறேன்! 

   இது சராசரியான குடும்பங்களுக்கான விகிதாச்சாரம். இதுவே குடிகாரக்கணவன் - அடிதடி கணவன் - ரௌடி கணவன் - இது போன்ற குடும்பங்கள் என்றால் அந்த விகிதாச்சாரத்தை அப்படியே திருப்பிப் போட்டுக் கொள்ளுங்கள். இங்கு மனைவிக்கு எந்தவித சுதந்திரமும் இல்லை!  

   இங்குச் சொல்லப்படுகின்ற சராசரி குடும்பங்கள் என்றால்..? நடுத்தர குடும்பங்கள். கண்ணியமான குடும்பங்கள், மரியாதைக்குரிய குடும்பங்கள், யோக்கியமான குடும்பங்கள் என்று இப்படி சொல்லிக்கொண்டே பொகலாம்!

விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பது பெரும்பாலும் இந்தக் குடும்பங்களுக்குத் தான் பொருந்தும்: தேவையும் கூட. இந்தக் குடும்பங்களுக்குத் தான் விட்டுக்கொடுத்து வாழ வேண்டிய கட்டாயம்.

விட்டுக்கொடுத்து வாழ்வது என்பது நல்ல பண்பு.எல்லாக் காலத்திலும், எல்லா மனிதர்களுடனும் நாம் விட்டுக்கொடுத்து தான் நமது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தையும் காட்டு என்பது கூட விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்னும் கருத்தைத் தான் வலியுறுத்துகின்றது. பொறுத்தவர் பூமி ஆள்வார் என்பார்கள். இதுவும் விட்டுக்கொடுத்து வாழ்வது தான்.

ஆக, விட்டுக்கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை. அதனை மனைவியிடம் கொஞ்சம் அதிகமாகவே விட்டுக்கொடுக்கலாமே. யார் யாருக்கோ விட்டுகொடுக்கும் போது, ந்ம்மோடு கூட வாழ்கின்ற மனைவிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம்.

 ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வோம்!

Saturday 19 March 2016

முழு அரசாங்கக் கல்வி கடன் உதவி!

SPM பரிட்சை முடிவுகள் வெளியாகிவிட்டன.. STPM பரிட்சை முடிவுகளும் வெளியாகிவிட்டன.

நமது தமிழ்ப் பத்திரிக்கைகளில் கோலாகலமான விளம்பர யுத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன! தமிழ் இனத்தை எப்படி எல்லாம் ஏமாற்றி பணம் பண்ணலாம் என்று தனியார் கல்லூரிகள் திட்டங்கள் போட ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் இதே விளம்பரங்களைச் சீனப் பத்திரிக்கைகளிலோ, மலாய்ப்பத்திரிக்கைகளிலோ போட இந்தக் கல்லூரிகளுக்குத் துணிவில்லை! காரணம் ஏமாறுவதற்கென்றே பிறந்தவர்கள் தமிழர்கள் என்னும் முடிவிற்கு இவர்கள் வந்துவிட்டனர்.

இவைகளைக்  கல்லூரிகள் என்று சொல்லுவதே வெட்கக்கேடானது!  சும்மா ஒரு கடையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுவது. அதனை கொஞ்சம் மாற்றியமைத்து "நாங்கள் கல்லூரி நடத்துகிறோம்" என்று தமிழ்ப் பத்திரிக்கைகளில்  அறிக்கையிட்டு, ஏதோ, தாங்கள் தமிழ்ச் சமுதாயத்தைக் காப்பாற்ற வந்தவர்கள் போல காட்டிக் கொள்ளுகிறார்கள்!

இந்தக் கல்லூரிகளை நடத்துபவர்கள் வேறு யாருமல்ல. நமது அரசியல்வாதிகள் தான்! தமிழ்ச் சமுதாயத்தைக் காப்பாற்ற வந்த நமது அரசியல்வாதிகள் தான்! யாரோ ஒரு போலிக் கல்வியாளரை முன்னிறுத்தி இவர்கள் பின்னாலிருந்து அவர்களை இயக்கிக் கொண்டிருப்பார்கள்!

அந்த அரசியல்வாதிகள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களுடைய "கூலிப்படைகளை" அனுப்பி இந்திய மாணவர்களைச் சேர்ப்பதில் முழுக்கவனம் செலுத்துவார்கள். அவர்களிடம் எல்லாவிதமான வாக்குறுதிகளை இந்தத் தரகர்கள்  பணத்திற்காக அள்ளி அள்ளீ வழுங்குவார்கள். எல்லாம் வெற்று வாக்குறுதிகள்!

இதில் மிகவும் கவர்ச்சிகரமான விஷயம் என்னவெனில் "உங்கள் பையனுக்கு முழு அரசாங்க கடன் வசதி செய்து தருகிறோம். நீங்கள் உங்கள் கையிலிருந்து ஒரு காசும் போட வேண்டிய தேவையே இல்லை! இதில் உங்களுக்கு என்னா கஷ்டம்?"  இந்த வாக்குறுதியில் தான் பல பெற்றோர்கள் கவிழ்ந்து  விடுகிறார்கள்.

வெளி உலகம் தெரியாத மாணவர்கள். சினிமாவைப்பற்றி தெரிந்த அளவுக்கு தனது எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் அக்கறை இல்லாத  மாணவர்கள். பையன் வெளியே எங்கும் போனால் கெட்டுப்போவான்; இங்கேயே இருந்து படிக்கட்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள். இவைகள் எல்லாம் இந்தத் 'தீடீர் கல்லூரி நடத்துனர்களுக்கு' சாதகமான விஷயங்கள்!

ஒரு மாணவனைத் தங்களது கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ளும் வரை அத்தனை சர்க்கஸ் விளையாட்டுக்களையும் விளையாடிக் காட்டி அவனைச் சேர்த்துக் கொள்ளுவார்கள். அவன் சேர்ந்து,, சேர்ந்ததற்கானப் பாரங்களைப் பூர்த்தி செய்து,  சம்பந்தப்பட்ட அமைச்சுக்குக் கொண்டு சென்று, அந்த மாணவனுக்கானக் கல்வித் தொகை முழுவதுமாக அந்தக் கல்லூரிக்குக் கிடைத்துவிட்டால், ஐயகோ! அத்தோடு முடிந்தது அந்த மாணவனின் எதிர்காலம்! அப்படி என்ன தான் நடக்கும்?

1) அவர்கள் உறுதிமொழி அளித்தது போல பயிற்சிப் பெற்ற         விரிவுரையாளர்கள் அவர்களிடம் இல்லை.அங்குப்படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள்  தான் அவர்களது விரிவுரையாளர்கள்!
2) தரமானக் கல்வி கொடுக்கப்படாததால் மாணவர்களிடம் ஏற்படும் மந்தமானப் போக்கு.
3) கல்லூரி நிர்வாகத்துக்குப் புகார் செய்தால் எந்த அக்கறையும் அவர்கள் காட்டுவதில்லை.
4) மீறீப்பேசினால் 'நீ படித்தால் படி, படிக்காவிட்டால் போகலாம்!"
5) எங்கும் புகார் செய்ய வழியில்லை! அப்படிச் செய்தாலும் அதனைக் காது கொடுத்துக் கேட்க ஆளில்லை!
6) வேறு எங்கும் போய் படிக்க வழியில்லை. கல்விக்கடன் பூதாகரமாய் கண்முன்னே நின்று கொண்டிருக்கும்.
7) சகிப்புத்தனமை உள்ளவன் தன்னுடைய படிப்பு முடியும் வரை தொடருவான். அப்படியே  தனது கல்வியை முடித்தாலும் அரசாங்க சான்றிதழ் கிடைக்கும் என்பதற்கான  எந்த உறுதிமொழியும் இல்லை!
8) இடையே ஒரு மாணவன் 'புட்டுக்கிட்டு' போனாலும் வெளியே போய் தனது சொந்தப்பணத்தில் தான் படிக்க வேண்டும்.
9) ஆனாலும் அவன் எங்குப் போய் படித்தாலும் அவன் கடன்காரன் என்னும் எண்ணத்தை  மனத்திலே இறுத்திக்கொள்ள வேண்டும்.
10) உருப்படியான ஒரு கல்வியைக் கற்காமல் கடைசியில் கடன்காரன் என்னும் பெயர் தான் நிலைத்து நிற்கும்!

கடைசியாக ஒர் ஆலோசனை: முடிந்தவரை அரசாங்கக் கல்லூரிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்புக்கள் நிறையவே கொடுக்கப்படுகின்றன.

இணையத்தை  அலசுங்கள்; ஆராயுங்கள். இணயத்தளம் சினிமாவுக்கு மட்டும் அல்ல, கல்விக்கும் பயன்படுத்தலாம்!

வெற்றி நமதே!





Thursday 17 March 2016

மீண்டும் நமது ஆதிக்கம் மலர வேண்டும்!

ஒரு காலக்கட்டத்தில், அன்றைய மலேயாவில்,, பொருளாதார ரீதியில், தமிழரது  ஆதிக்கம் வலுப்பெற்றிருந்தது.

 1920 களில், நமது பொருளாதாரம்,   சிறப்பாக இருந்ததற்கான ஆதாரங்கள் நம்மிடம் இருக்கின்றன. குறிப்பாக நமது வணிகப் பரம்பரையினரான நாட்டுக்கோட்டை செட்டியார்கள், மற்றும் தமிழ் முஸ்லிம்கள் தென்கிழக்காசியப் பகுதிகளில் கொடிகட்டிப் பறந்தனர், குறிப்பாக இந்த இரு தமிழ் வணிகச் சமூகமும் தங்களது  வணிகத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தனர்.

பொருளாதாரம் உயர்ந்த இருந்த அந்தக் காலக் கட்டத்தில் நமது தமிழ் மொழியும் உய்ர்ந்து இருந்தது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவமும் இருந்தது.

நாம் தோட்டப்புறங்களில்  வாழ்ந்தோம். அதே சமயத்தில் பட்டணப்புறங்களில் வாழ்ந்த தமிழர்கள் நாட்டின் வளப்பத்திற்காக அளப்பரிய செவைகள் புரிந்தனர்.பொருளாதாரம் என்பது அவர்களது ஆதிக்கத்தில் தான் இருந்தது! அதில் வியப்பு ஒன்றும் இல்லை.

நமது சரித்திரத்தைப் பின் நோக்கிப் பார்த்தால் நாம் வியாபாரம் செய்ய வந்தவர்கள்  என்று சரித்திரம் குறிப்பிடுகிறது. ஆனால் பிற்காலத்தில் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியினால் நம்மைத்தடம் புரள வைத்தது ஆங்கில எகாதிபத்தியம்.

அந்தக் காலக் கட்டத்தில் மிகக் முறைந்த அளவிலேயே மேற்கத்திய வங்கிகள் இயங்கி வந்தன. அதுவும் சிங்கப்பூர், பினாங்கு, கோலாலம்பூர் போன்ற பெரிய - வளர்ந்து வருகின்ற பட்டணங்களில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினர். ஆனாலும் இப்போது போன்று கடன் கொடுப்பது, வாங்குவது எல்லாம் செயல்பாட்டில் இல்லை.

அந்தக்காலக் கட்டத்தில் தான் செட்டியார்கள் வங்கிகளாகச் செயல்பட்டனர். இன்று வங்கிகள் செய்கின்ற வேலைகளை அன்றே  அவர்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதில் முக்கியமானது கடன் கொடுப்பது தான். வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. ஆனால் செட்டியார்களுக்கு அதுவே தலையாயத் தொழில்.

அன்றும் சரி, இன்றும் சரி  சீனர்கள் தான் வங்கிகளை நல்ல முறையில் பயன்படுத்துபவர்கள். வங்கிகளிடம் கடன் கிடைக்காத சூழ்நிலையில்  செட்டியார்களிடம் கடன் வாங்கித்தான் சீனர்கள் தங்களது தொழிலை வளர்த்து வந்தனர்; வளர்ந்தும் விட்டனர். இன்று நாம் சீனர்கள் முன் கைகட்டி நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கிறோம்!  நமது வியாபாரிகளும் பலர் அவர்களிடம் கடன் வாங்கி தொழில் செய்தனர். ஆனால் வளர்ச்சி என்னவோ சீனர்களின் ஆக்கிரமிப்பில் வந்துவிட்டது!

காடுகள் சூழ்ந்த ஒரு நாட்டில் வெள்ளைக்காரர்கள் தங்களது முதலீடுகளைப் போடத் தயாராக இல்லாத சூழலில் 'திரைக்கடல் ஓடி திரவியம் தேடு' என்னும் தமிழரின் வாணிக வேட்கையை செயல்படுத்தியவர்கள் இந்த வணிகப் பரம்பையினர். இன்றும் அவர்கள் நடத்திய வாணிப மையங்கள் பல சிறிய, பெரிய நகரங்களில் அடையாளப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. அவர்கள் தங்களது தொழிலை நவீனப்படுத்தாதற்கு அரசியல் காரணங்கள் உண்டு. ஆனாலும் தொழிலை விட்டு அவர்கள் ஓடிவிடவில்லை. இருப்பினும் தமிழ் முஸ்லிம்கள் தங்களது தொழிலை நவீனப்படுத்தியது மட்டுமல்ல இன்றைய நிலையில் வாணிபத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றார்கள்! நமக்கும் அது பெருமை தானே!

ஆனாலும் இன்று தமிழர்கள் பல துறைகளிலே.பல்வேறு தொழில்களிலே வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர்.

மலேசியாவின் இரண்டாவது பெரிய கோடிஸ்வரரான ஆனந்தக்கிருஷ்ணன் உலகில் பல்வேறு நாடுகளில் பலவிதமானத் தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஆர்.கே.நாதன் போன்ற கோடிஸ்வரர்கள் வெளிநாடுகளில் பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டிக்கொண்டு தமிழர்களைத் தலைநிமிர வைக்கின்றனர். இன்று உள்நாட்டிலும் இப்போதைய நமது இளைஞர்கள் பலவித தொழில்களில் ஈடுபட்டிருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவைகள் அனைத்தும் அரசாங்க உதவியின்றி அமைதியாக நடைபெற்றிக்கொண்டிருக்கிறது. அரசாங்க உதவி இருந்தால் நமது நிலை எப்போதோ மாறி இருக்கும்.

ஒன்று மட்டும் நிச்சயம். நமது நிலை மாறி வருகிறது. அரசாங்க உதவி கிடைக்கிறதோ, கிடைக்கவில்லையோ நமது இளைஞர்கள் துணிந்து செயல்படுகின்றனர்.தொழில் துறையில் ஆழமாகக் கால் ஊன்றுகின்றனர். குறிப்பிட்டவர்கள் தான் வணிக சமூகம் என்னும் நிலையை மாற்றி அமைக்கின்றனர்.

அனைத்துத் தமிழர்களும் வணிகம் செய்ய வேண்டும்.நாம் வணிக சமுகமாக மாற வேண்டும். தடைகளைத் தகர்த்தெறிய வேண்டும். ஆயிரம் தடைகள் வரத்தான் செய்யும்.தடைகள் ஆயிரத்தையும் நொறுக்கித்தள்ள வேண்டும்.

தமிழர்கள் உயர்குடியைச் சேர்ந்தவர்கள். வரலாறு படைத்தவர்கள்.அடிமை வாழ்க்கை வாழ்ந்தவர்கள் அல்ல.

தாழ்ந்துவிட்டோம் என்னும் ஓலத்தை மாற்றியமைக்க வேண்டும். அது நம்மால் முடியும்; இன்றைய தலைமுறையினரால் முடியும்.

பொருளாதாரம் நமது கையில்! எப்போதுமே நமது கையில்!

மீண்டும் நமது ஆதிக்கத்தை மலர வைப்போம்! வெற்றி பெறுவோம்!









Wednesday 9 March 2016

விற்பனையாளர் ஜோ கிரார்ட் (JOE GIRAARD)

ஜோ கிரார்ட் என்னும் பெயரைக்  கேள்விபட்டிருக்கிறீரகளா? அநேகமாக  கார் விற்பனைத் துறையில் உள்ளவர்கள் கேள்விப் பட்டிருக்கலாம். அப்படி கார் விற்பனைத் துறையில் உள்ளவர்கள் கேள்விப் படவில்லை என்றால் அவர்கள் தோல்வியாளர்களே!

காரணம் தங்கள் துறையைச் சார்ந்த ஒருவரைபற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவில்ல என்றால் அவர் வெற்றியாளர் என்று எப்படி நாம் ஏற்றுக் கொள்ளுவது?

இருந்தாலும்,  தெரியாமலே இருப்பதைவிட இப்போதாவது தெரிந்து கொள்ள முயற்சி செய்தீர்களே, மிக்க நன்றி!

ஜோ கிரார்ட், கார் விற்பனைத் துறையில் ஒரு மாபெரும் புரட்சி செய்தவர்.. அவர் கார் விற்பனைத் துறையில் 15 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இந்த ஒய்வு என்பது கூட டாக்டரின் கட்டாயத்தினால் ஏற்பட்ட ஒன்று. ஆனாலும் அவருடைய 15 ஆண்டுகள் கடுமையான உழைப்பினால்  அவருடைய கை, கால்கள் எல்லாம் தளர்ந்து போய், தடுமாறும் நிலைமை அவருக்கு ஏற்பட்டு விட்டது. அதனால் டாக்டரின் ஆலோசனைப்படி விற்பனைத் துறையை அவரின் மகனிடம் ஒப்படைத்துவிட்டு இப்போது தன்முனைப்பு, கருத்தருங்கு  என்று பாதையை மாற்றிக்கொண்டார். இந்த 15ஆண்டுகளில் 13,001 கார்களை விற்பனைச் செய்தவர்.  ஒவ்வொரு மாதமும் சுமார் 160 கார்கள் வரை அவர் விற்பனைச் செய்திருக்கிறார்.. அவருடைய மிகச் சிறந்த ஆண்டு விற்பனை என்பது 1425 கார்கள் விற்பனைச் செய்தது தான்!  ஒரே நாளில் 18 கார்களை விற்பனை செய்தது தான்  அவருடைய இன்னொரு மிகப்பெரிய சாதனை!அவருடைய இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது. அவருடைய இந்தச் சாதனையை இதுவரை யாராலும் முறியடிக்கப் படவில்லை என்பதும் இன்னொரு சாதனை!

ஜோ கிரார்ட்  சேரிப்பகுதி ஒன்றில்   மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இத்தாலி வம்சாவளி அமரிக்கர். பொதுவாக அமரிக்கர்கள் இத்தாலியினரை மதிப்பதில்லை. அவர்கள் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள்.என்பன போன்ற அபிப்பிராயம் அவர்களிடம் உண்டு.

சிறு வயதிலேயே தந்தையின் மிகக் கடுமையானக் கண்டிப்பினால் அவருக்குப் பேசும் திறன் பாதித்து விட்டது.. திக்கித்திக்கிப் பேசுவார். அத்தோடு கல்வியில் நாட்டமில்லை.

அவர் செய்யாத வேலைகள்  இல்லை. இருபதுக்கும் மேற்பட்ட வேலைகள்!அத்தனையும் செய்து பார்த்து விட்டார்.அதில் திருட்டுத் தொழிலும் ஒன்று!  வீடுகள் கட்டி விற்பனை செய்தார். அங்கும் ஏமாற்றப் பட்டார். பணத்தை இழந்தார்.

கடைசியாக ஒன்றுக்கும் வழியில்லை. மனைவி, பிள்ளைகளுக்குச் சாப்பாடு இல்லை. அடுப்பில் பூனை படுத்துவிட்டது!

பேரூந்து ஒன்று வந்தது. அதில் ஏறினார். அது நின்ற இடத்தில் இறங்கினார். எதிரே ஒரு கார் விற்பனை நிலையம் ஒன்று கண்களுக்குத் தெரிந்தது. அங்குப் போய் தனக்கு வேலைக் கொடுக்கும் படி கெஞ்சினார். சாப்பாட்டுக்கு வழியில்லை என்று கெஞ்சினார். "சரி, செய். மற்ற விற்பனயாளர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்." என்று அங்கிருந்த மேலாளர் வாய்ப்புக் கொடுத்தார்.  இரவு நேரம் நெருங்கியதும் மற்ற விற்பனையாளர்கள் வீட்டுக்குப் போக கிளம்பி விட்டார்கள். அந்நேரம் பார்த்து தீடீரென  ஒருவர் வாகனம் ஒன்றை வாங்க வந்தார். அதனை வெற்றிகரமாக விற்பனைச் செய்தார் ஜோ.  அதுவே அவரின் முதல் விற்பனை! உடனேயே மேலாளரிடம் கொஞ்சம் சில்லறைகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சாப்பாடு வாங்கக் கிளம்பிவிட்டார் ஜோ.

இது தான் ஜோ கிரார்ட் என்னும் மாபெரும்  கார் விற்பனையாளன் தொடங்கியக் கதை. அதன் பின்னர் நடந்தது எல்லாம் வெற்றி! வெற்றி வெற்றி! அதன் பின்னே அவர் போட்ட உழைப்பு! உழைப்பு! உழைப்பு! உழைப்புக்கு மிஞ்சியது எதுவுமில்லை.

ஆமாம்! அவருடைய மிகப்பெரிய சாதனை என்ன? அவர் சொல்லுகிறார்: "நான் சேரியிலிருந்து வந்தவன். அதுவும் ஏழை. இப்போது நான் இருக்கும் எனது வீடு கார் உற்பத்திச் செய்யும்  உலகின் மிகப்பெரிய பணக்காரரான FORD நிறுவனத்தின் தலைவர் இருக்கும் வீட்டின் அருகே இருக்கிறது. கார் விற்பனையாளனின்  வீடும், கார் முதலாளியின் வீடும் அருகே அருகே இருப்பது என்பது எனது பெரிய சாதனை தானே!" என்கிறார் ஜோ கிரார்ட்.

அது சாதனை தான்! ஒரு விற்பனையாளன் மனம் வைத்தால் எதையும் சாதிக்கலாம்!


Monday 7 March 2016

உணவகங்களின் நிரந்திர வாசகரா நீங்கள்.....?

பொதுவாக இந்திய உணவகங்களில் தங்களது வாடிக்கையாளர்களுக்காக தமிழ், மலாய் பத்திரிக்கைகளைப்  படிப்பதற்காகப் போடுகின்ற பழக்கம் உண்டு.

இதுவும் ஒரு வகையான விளம்பர யுக்தி தான்!

ஆனாலும் வியாபாரம் சூடு  பிடித்தவிட்ட உணவகங்கள் பத்திரிக்கைகளைத் தவிர்க்கவே விரும்புகின்றன. ஒரே காரணம்: வியாபாரம் நடக்கின்ற நேரத்தில் பத்திரிக்கைகளை வைத்துக் கொண்டு 'வெட்டிப்' பேச்சு பேசுபவர்களால் தங்களது வியாபாரம் பாதிக்கும் என்கிற காரணம் தான்!

நான்கு ஐந்து பேர் உட்கார்ந்து உணவு அருந்த கூடிய இடத்தில் ஒர் இரண்டு பேர் பத்திரிக்கையை வைத்துக் கொண்டு அரட்டை அடிப்பதை யார் விரும்புவர்?  1) மற்றவர்களுக்கு உட்கார இடமில்லை. 2) இவர்கள் பேசுவது மற்றவர்களுக்கு இடைஞ்சல்; சத்தம் போட்டுப் பேசுவார்கள்; இந்த உலகமே இவர்கள் கையில் அடக்கம் என்பது போன்று பேசிக் கொண்டிருப்பார்கள். 3) நான்கு நம்பரைப் பார்ப்பதற்காக அந்தப் பக்கத்தையே வைத்துக் கொண்டு மேலிருந்து கீழே வரை ஒவ்வொரு நம்பராகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்! லேசில் விட மாட்டார்கள்!

ஆள் இல்லாத நேரத்தில் நீங்கள் என்ன செய்தாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

உணவகங்களில் பத்திரிக்கைகள்  வைப்பது என்பது ஏதோ முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை ஆற அமர வாசிப்பதற்கு,  அது நூலகம் அல்ல.ஏதோ மேலோட்டமாக பார்த்துவிட்டு, படித்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான். முக்கிய செய்தி என்றால் ஒரு பத்திரிக்கயை சொந்த செலவில் வாங்கி வைத்துக் கொண்டு வீட்டில் சாவகாசமாகப் படிக்கலாமே!

இவர்கள் உணவகங்களிலாவது பத்திரிக்கைப் படிக்கிறார்களே என்பதே ஒரு மகிழ்ச்சியான விஷயம் தான். இல்லாவிட்டால் இவர்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லாமல் போய்விடும்!

ஆனாலும் பொது இடங்களில் கொஞ்சம்  நாகரீகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்  என்னும் பிரக்ஞை இல்லாதவர்களாக இருக்கிறார்களே, அது தான் வருத்தம் அளிக்கக் கூடிய ஒன்று.

வேறு யாரையும் படிக்க விடாமல் தங்களது கையிலேயே பத்திரிக்கையை வைத்துக் கொண்டிருப்பது!  தான் சாப்பிட்டு முடிக்கும் வரை தனது அக்குளில் பத்திரிக்கையை வைத்து திணித்துக் கொண்டிருப்பது!  கையில் பத்திரிக்கையை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே இருப்பது.

சரி! நாம் சாப்பிடுகிறோமே மற்றவர்களாவது படிக்கட்டும் என்னும் கொஞ்சம் கூட பொது நோக்கம் இல்லாமல் செயல்படுவது அநாகரீகம் அல்லவா!

நமக்கு எப்போதுமே பொது நோக்கம் என்று ஒன்று இருக்க வேண்டும். அது எல்லா  இடங்களிலும் இருக்க வேண்டும். அது உணவகங்களாக இருக்கலாம். அல்லது பிற இடங்களாக இருக்கலாம்.  மற்றவர்களுக்கு நாம் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்னும் எண்ணம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

உணவகத்தின் முன் - அது ஒரு சிறிய சந்து -  அந்த சந்தில் தான் அனைவரும் நடந்து செல்ல வேண்டும். அந்த சந்தில் சவடாலாக ஒரு இளைஞன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு பெண்ணிடம் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். அந்த சந்தில் நடப்பவர்கள் அனைவரும் தங்களது பாதையை மாற்றி செல்ல நேர்ந்தது. அந்த மோட்டார் சைக்கள் மக்கள் நடப்பதற்கு மகா பெரிய இடைஞ்சல். அவனோ அந்தப் பெண்ணோ எதைப் பற்றியும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை!

இப்படிப்பட்ட இளைஞர்களிடம் நாம் என்ன பொதுநலனை எதிர்பார்க்க முடியும்? பத்திரிக்கைகளை எடுத்தால் நாம் யாருக்கும் கொடுக்கப்போவதில்லை என்னும் மனோநிலையில் இருப்பவனிடம் நம்மால் பேச முடியுமா?

உணவகங்களில் பத்திரிக்கைகளை நாம் 'ஓசி' யில் படித்தாலும் அங்கும் ஒரு பொது நலம் இருக்க வேண்டும். அங்கும் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும். நாம் படிக்க முடியாத போது மற்றவர்கள் படிக்கட்டுமே என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவகங்களில் தனது வாடிக்கையாளர்கள் படித்துப் பயன்பெறட்டுமே என்னும் நோக்கில் பத்திரிக்கைகளை வாங்குகிறார்கள். அதனை நல்ல முறையில் பயன்படுத்தி, விட்டுக் கொடுத்து, நல்ல வாசர்களாக தொடருவோமே!

படிக்கும் பழக்கும் நல்ல பழக்கம். வீட்டில் படிக்க முடியாதவர்கள் ஏதோ இப்படி உணவகங்களில் படிக்கிறார்களே என்பது மகிழ்சியளிக்கும் செய்தி.

படியுங்கள்! உணவகங்களும் உங்களுக்கு உதவியாக இருக்கும்!









Friday 4 March 2016

தமிழக தேர்தல் ...... சும்மா ஒரு வேடிக்கை விளையாட்டு!

சமீபகாலமாக தமிழ்ப் பத்திரிக்கைகளின்  செய்திகளைப் படிக்கும் போது தீடீரென ஒர் எண்ணம்  மனதில் தோன்றியது.

வேறொன்றும் இல்லை. தமிழகத்தை ஆட்சி செய்வது என்பது  மிகவும் சிரமமான காரியமா அல்லது  மிக மிக எளிதான காரியமா?

ஏனோ தெரியவில்லை இது ஒரு மிக மிக எளிதான காரியம் என்றே எனக்குத் தோன்றுகிறது!  இப்படி ஒரு முடிவுக்கு நான் வரக் காரணம் வருகின்ற செய்திகளைப் படிக்கின்ற போது வேறு எண்ணங்கள் எதுவும் தோன்றவில்லை!

நான் வேறு இந்திய மாநிலங்களைப் பற்றிப் பேசவில்லை. அவைகளைப் பற்றி ஒன்றும் தெரியாத போது பேசாமல் இருப்பதே நல்லது. தமிழ் நாட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

தமிழ் நாட்டை ஆளுவதற்கு நீங்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்பதோ அல்லது சமகால தமிழ் இலக்கியங்களில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதோ அவசியமில்லாத ஒன்று.

அதே சமயத்தில் கிறித்துவ பள்ளிகளில் படித்து பெரிய ஆங்கில மேதையாகவோ அல்லது இந்தியாவிலேயே முதல் தர ஆங்கில அரசியல் பேச்சாளராகவோ இருக்க வேண்டும் என்னும் அவசியமுமில்லை!

காரணம் இந்தக் கல்வி தகுதிகள் எல்லாம் தமிழ் மாநிலத்தை ஆளுவதற்கு ஏற்ற தகுதிகள் இல்லை!

வெறும் மத்திய அரசுக்குக் கடிதம் போட்டு , கடிதம் எழுதி அரசாங்கத்தை நடத்துவதற்கு என்ன பெரிய தகுதி வேண்டியிருக்கிறது?  மத்திய அரசாங்கமே எல்லா மாநில முதலமைச்சர்களுக்கும் அவர்களின் கீழ் பணிபுரிய இவர்களை விட இன்னும் பெரிய படிப்பாளிகளை உதவியாளர்களாக வைத்திருக்கிறார்களே!

உண்மையில் இப்போதைய நிலையில் தமிழக முதலமைச்சர்களின் வேலை என்ன? ஏறக்குறைய அலுவலகங்களில் பணி புரியும் ஒரு அலுவலகப்பையனின் வேலை என்னவோ அதைத்தான் இவர்களும் செய்கிறார்கள்!  சான்றுக்குச் சில:

1) தமிழக மீனவர்கள் இலங்கைப்படையினரால் சுடப்பட்டார்கள்!
  நடவடிக்கை:  பிரதமர் மோடிக்குக் கண்டனக் கடிதம் முதலமைச்சர்       அனுப்பியிருக்கிறர்.

2) தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது     செய்யப்பட்டார்கள்!
  நடவடிக்கை: தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் அவசரக் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

3) தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கைப் படையினரால் கைப்பற்றப்பட்டன!
  நடவடிக்கை: இலங்கப்படையினரின் இந்த அத்துமீறல்களைக் கண்டித்து முதலமைச்சர் பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

4) சென்னையில் வரலாறு காணாத வெள்ளம்.
   நடவடிக்கை: பிரதமர் கொடுக்கும் 500 கோடி ருபாய் போதாது. பாதிப்பு அதிகம்.    1000 கோடி நிதி உதவிக்காக பிரதமர் மோடிக்குக் கடிதம்      அனுப்பியிருக்கிறோம்.

5) வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் அப்படியே இருக்கிறது. நாங்கள் இன்னும் வெள்ளத்திலேயே மிதந்து கொண்டிருக்கிறோம். எங்களையும் கொஞ்சம் கவனியுங்கள்!
நடவடிக்கை:  வெள்ளத்தினால் பெரும் பாதிப்பு ஒன்றுமில்லை! சென்னை  சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது!  சென்னையை சீர் செய்ய - நிதி உதவிக்காக - பிரதமர் மோடிக்கு மீண்டும் நினைவுறுத்திக் கடிதம் அனுப்பியிருக்கிறோம்!

6) காரைக்குடி கார் விபத்தில் இருவர் பலி!
நடவடிக்கை: முதலைமச்சர் நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் அவர்கள் குடும்பத்திற்குக் கொடுக்கப்படும்.

பொதுவாக தமிழகத்தில் இப்போதைய மிகக் கடுமையான பிரச்சனை என்றால் அது தமிழக மக்களின் தாகத்தை தீர்க்க கோட்டையிலிருந்து கொண்டே கோலாகலமாக ஆங்காங்கே முதல்தர சாராயக்கடைகளைத் திறந்து வைப்பது தான்!

இந்த ஒரு பணி தான் தாளம் தவறாமல் தமிழகத்தில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது! கள்ளுக்கடைகளைத் திறப்பதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. மக்கள் எங்குக் கூடுகிறார்களோ அங்குக் கள்ளுக்கடைகளைத் திறக்கலாம். உதாரணத்திற்கு: பள்ளிக்கூடம், கல்லூரிகள், கோவில்கள் போன்ற இடங்கள் விற்பனைக்கு ஏற்ற இடங்கள்.

தமிழகத்தை மிக எளிமையான முறையில் ஆட்சி செய்ய மேலே சொன்னவைகளைத் தெரிந்து வைத்திருந்தால் போதும்!

வருகின்ற தேர்தலில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். அப்படி ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இப்போது என்ன நடக்கிறதோ அது தான் மீண்டும் நடக்கும். தமிழகத்தை இந்தியாவின் முண்ணனி மாநிலமாகக் கொண்டு வர யாருக்கும் அக்கறை இல்லை. அது அவர்களுக்குத் தேவையும் இல்லை!

ஒரு வேளை தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சி ஏற்பட்டால் மாற்றங்கள் வரலாம்! வர வேண்டும் என்பதே நமது அவா!

இத்தனை ஆண்டுகள் தமிழர் ஆட்சியைப் பற்றி நாம் பேசியதில்லை. இப்போது தான் நாம் ஆரம்பித்திருக்கிறோம். இது தொடர வேண்டும். தமிழர் ஆட்சி மலர வேண்டும்! தமிழர் உயர வேண்டும்!