Monday 15 April 2024

தேவையற்ற புறக்கணிப்பு!

பாலஸ்தீனிய - இஸ்ராயல் சண்டை பற்றி நாம் அறிவோம். இஸ்ராயேல்  ஒர் நியாயமற்ற  நாடு என்பது பற்றி இரு வேறு  கருத்துகள் இல்லை.  நீதி நியாயம் எல்லாம்  அவர்களிடம் எடுபடாது!  ஈவு இரக்கமற்ற ஓர்  இனம். சுருக்கமாக  அது போதும்.

ஆனால் அவர்களது தொழில் உலக அளவில் பரந்து விரிந்து கிடக்கின்றது.  பெருந்தொழில்களை எடுத்துக் கொண்டாலும் சரி சிறுதொழில்களை எடுத்துக் கொண்டாலும் சரி  அவர்கள் பங்கு இல்லாமல் எதுவும் இல்லை!  ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு பொருளில்  யூதர்களின் பங்கு இருக்கத்தான் செய்யும்.  நமக்கு அடையாளம் தெரியாதே தவிர அவர்களின் அடையாளம்  எங்கோ ஒளிந்து கொண்டு தான் இருக்கும்!

அவர்கள் நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கிறோம் என்று சொல்லி  புறக்கணித்தால் அது  நமக்குத்தான் தீங்காக முடியும்.  மேலும் அவர்கள் நேரடியாக வருவதில்லை. எல்லாமே மறைமுகமாகத்தான் இருக்கும்.

அவர்களின் துரித உணவுகளான  KFC, McDonald போன்ற உணவகங்களில் கை வைத்தால், ஒன்றை மறந்து விடாதீர்கள், அந்த உணவகங்களில் நமது உள்ளூர் நிறுவனங்களும்  பங்கு பெற்றிருக்கும். அந்த உணவகங்களை நடத்துபவர்களே மலேசியர்கள் தான். அதிலும் நமது மலாய் நண்பர்களின் பங்கும் அதிகமாகவே உள்ளன.

'புறக்கணியுங்கள்'  என்று மக்களைத் தூண்டிவிடுவது ஏற்கத்தக்கதல்ல. அதனை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்துவது முற்றிலும் வெறுக்கத்தக்கது.  இதனை இன்று செய்பவர்கள் நாளை உள்ளூர் நிறுவனத்தையும்  புறக்கணிப்பு செய்யலாம். ஏதோ சீன நிறுவனம் தானே என்று இன்று  சொல்லுபவர்கள்  நாளை மலாய் நிறுவனம்  அல்லது இந்திய நிறுவனம் போன்ற மலேசிய  நிறுவனங்களுக்கும்  இந்த கதி வரலாம். ப்றக்கணிப்பு செய்பவர்களுக்கு ஏதோ ஒரு காரணம் வேண்டும். அவ்வளவு தான். அதனை அரசியாலக்க வேண்டும்.

மக்களைத் தூண்டி விடுவதை விட  நீங்களே முடிவெடுங்கள்.  உங்களுக்கு வேண்டாம் என்றால் நிறுத்திவிடுங்கள்.  புறக்கணித்தால், மற்றவர்களைத் தூண்டினால்,  அந்த தொழிலை நம்பி பலநூறு குடும்பங்கள் வாழ்கின்றன  என்பதை மறந்து விடாதீர்கள். 

புறக்கணிப்பு வேண்டவே வேண்டாம்!

Sunday 14 April 2024

மீண்டும் ஆரம்பம்!

 

மீண்டும் ஆரம்பமாகிவிட்டன  மெட்ரிகுலேஷன்  மீதான விவாதங்கள்! வழக்கம் போல கல்வி அமைச்சு எதனையும்  கண்டு  கொள்ளப்போவதில்லை. 

கல்வி அமைச்சுக்கு என தனி சட்டதிட்டங்கள். அவர்கள் போக்கில் தான் அவர்கள் போவார்கள்.  நம்மை மதிக்க வேண்டும் என்கிற அவசியம் கூட  அவர்களுக்கு இல்லை.

முன்பு தேசிய முன்னணி ஆட்சியில்  1500 இடங்கள் ஒதுக்கப்பட்டன. பின்னர்  அது 2200 இடங்களாக  உயர்த்தப்பட்டன.  இவைகள் எல்லாம் பக்கத்தான் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு  அனைத்தும்  மறைந்துவிட்டன!  உண்மையைச் சொன்னால் ஆரம்பத்தில்  ஒதுக்கப்பட்ட  1500 இடங்கள் கூட இப்போது  இல்லை என்று சொல்லப்படுகிறது.

அதுவும் குறிப்பாக டாக்டர் மகாதிர், முகைதீன் யாசின்,  இஸ்மாயில் சப்ரி - இவர்கள் இடைக்காலத்தில்  பிரதமராக பதவி வகித்தபோது  1000 இடங்கள் கூட ஒதுக்கப்படவில்லை  என்பதாகக் குற்றச்சாட்டுகள்  உண்டு. அதனைக் கண்காணிக்க ஆளில்லையாம்!   அதனைக் கண்காணிக்கத்  தான்  கங்காணிகள் தேவைப்படுகிறார்கள்! கங்காணிகள் இல்லாமல்  நமது நாட்டில் எதுவும் அசையாது என்பது இப்போது புரியும்!

ஆமாம் இன்றைய நிலைமை என்ன?  அதே நிலைமை தான்.  புதிதாக ஒன்றுமில்லை!

சமீபத்தில் நாம் கேள்விப்பட்டபடி எஸ்.பி.எம். பரிட்சியில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற  200 இந்திய மாணவர்களுக்கு  இடமில்லை என்று கல்வி அமைச்சு கைவிரித்து விட்டதாம்!  ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  மெட்ரிகுலேஷன்  கல்வியின் நோக்கம் என்ன?  சீன, இந்திய மாணவர்களுடன் போட்டியிட  இயலாத  மலாய் மாணவர்களுக்காக  ஏற்படுத்தப்பட்டது தான்  மெட்ரிகுலேஷன் கல்வி.  அவர்கள் நோக்கம் சரியாகத்தான் இருக்கிறது.  நாம் தான் தகுதி குறைவான மாணவர்களுடன்  போட்டி இடுகிறோம்.  என்ன செய்ய?  அதிகத் தகுதிகளுடன்  இருப்பது நமது குற்றம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்!

ஒன்றே ஒன்றைப் பிடித்துத் தொங்குவதைவிட  இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.  உயர்கல்வியைப்பற்றி இந்திய   கல்வியாளர் பலர்   மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.  அவர்களை நாடுவது தான் சிறந்தது.  நாம் எதனையுமே நாடி, தேடிப் போவதில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம்  ஒன்றே ஒன்று மெட்ரிகுலேஷன்  மட்டும் தான்.   ஒன்றை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு புலம்பிக் கொண்டிருக்கிறோம்!  வழிகாட்டுதல் இல்லாத சமுதாயமாக இருக்கிறோம்.  இது கணினி  யுகம்.  தேடுங்கள். உங்களுக்கான ஆயிரம் செய்திகள்  கொட்டிக் கிடக்கின்றன.

சரி இனி  என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!

Saturday 13 April 2024

நான் ஒன்றுமே செய்யவில்லையா?

                                 நான் ஒன்றுமே செய்யவில்லையா? : பிரதமர்

"இந்திய சமுதாயத்திற்கு  நான் ஒன்றுமே செய்யவில்லையா?" என இந்தியர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பியிருக்கிறார்  பிரதமர் அன்வார் இப்ராகிம்.

ஆளுக்கு ஒன்றைச் சொல்வார்கள். அதுவும் அரசியல்வாதிளைப்பற்றி சொல்லவே வேண்டாம். 

நாம் அதை விடுவோம்.  நமக்கு முக்கிய குறைபாடு  ஒன்று உண்டு. கல்வியை எடுத்துக் கொள்வோம்.  முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்  செய்த மகா பெரிய காரியம் என்றால்  அது மெட்ரிகுலேஷன் கல்வி தான்.  அவருடைய காலத்தில் சுமார் 2500  இந்திய மாணவர்களுக்கு  வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.  அதனை ஓர் ஆதாரமாக  வைத்துத்  தான்  இன்று கேள்விகள்  எழுப்பப்படுகின்றன.

சென்ற ஆண்டு என்ன நடந்தது?  சுமார் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் தான்  மெட் ரிகுலேஷன் கல்வி பெற இந்திய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  அது மாபெரும் தோல்வி; இந்திய மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று சொல்லப்படுகிறது.

இதனை வைத்துப் பார்க்கும் போது இந்திய மாணவர்கள் கல்வி கற்பதில் பிரதமருக்கு அக்கறை இல்லையோ என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.  இந்த அளவுக்குக் குறைவான மாணவர்கள் என்றால் ....? பிரதமர் நிறைய செய்திருக்கிறார் என்று எப்படி  ஏற்றுக்கொள்வது?

இந்திய சமுதாயம் பின் தங்கிய சமுதாயம் என்பது பிரதமருக்குத் தெரியும்.  அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால் கல்வி ஒன்றே வழி என்பது பிரதமருக்கே தெரியும். ஆனால் அந்தக் கல்வியை மறுப்புதன் மூலம்  இந்திய சமுதாயத்தின் முன்னேற்றம் தடைபடும் என்பதும் பிரதமருக்குத் தெரியும்.  ஆனால் அவர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை  என்பது தான்  குற்றச்சாட்டு.

அவர் வந்த முதல் ஆண்டே ஆயிரம் மாணவர்களுக்கு மேல் தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றால்  அது மேல் நோக்கிப் போகவில்லை. அவரும் அது பற்றி வாய் திறக்கவில்லை! அப்படி என்றால்  அவர் இந்திய சமுதாயத்திற்கு நல்லது செய்வார்  என்கிற நம்பிக்கை இல்லாமற் போய்விட்டது என்பது தான் உண்மை.

மெட் ரிகுலேஷன் கல்வி ஓர் நீண்ட நாள் பிரச்சனை. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது பிரதமரின் கடமை.  ஆண்டுக்கு இத்தனை பேர் என்று ஒரு வரையறை  வகுத்துவிட்டால்  அதன்பின் யாரும் அது பற்றிப் பேசப்போவதில்லை.  ஆனால் நிலைமை அப்படி இல்லை.அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப  செயல்படுகிறார்கள் என்பது தான் பொதுவான கருத்து.

உங்களின் கணிப்புப்படி நீங்கள் எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் கல்வியில் கை வைக்கிறீர்களே  - அதனால் தான் ஒன்றும் செய்யவில்லை என்று  குற்றச்சாட்டு எழுகிறது! உங்களைப் போலவே எங்களுக்கும்  கல்வி முக்கியம் தான். அதைப் புரிந்து  கொள்ளுங்கள்>